பண்ருட்டி, : பண்ருட்டி அடுத்த மணம்தவிழ்ந்தபுத்துார் கிராமத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருமண தடுத்தாட் கொண்ட ஐதீக விழா நேற்று நடந்தது.
விழாவையொட்டி நேற்று மாலை 3:00 மணிக்கு மணம்தவிழ்ந்தபுத்துார் கிராமத்தில் இருந்து திருநாவலுாருக்கு மாப்பிள்ளை அழைப்பும், திருநாவலுார் சுந்தரமூர்த்தி சுவாமிகள் இல்லத்தில் இருந்து சுந்தரமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் , மாப்பிள்ளை புறப்பாடு செய்வித்தல் நடந்தது.
நேற்று இரவு 7: 15 மணிக்கு மணம்தவிழ்ந்தபுத்துார் எல்லையில் மாப்பிள்ளை வரவேற்பு மற்றும் பெண் வீட்டார் விருந்து நிகழ்ச்சி ஐதீக முறைப்படி நடந்தது. விழாவில் திருநாவலுாரில் இருந்து சுந்தரமூர்த்தி சுவாமிகள் உற்சவர் வீதியுலா நடந்தது. இன்று (26 ம்தேதி )அதிகாலை 4;30 மணியளவில் மணம் தவிழ்ந்த புத்துாரில் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு நடக்கும் திருமண விழாவில் சிவபெருமான் வேதியராக எழுந்தருளி ஒலை காட்டி சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருமணம் தடுத்தாட் கொண்ட நிகழ்வும், காலை 6:30 மணிக்கு மணம் தவிழ்ந்தபுத்துாரில் இருந்து திருவெண்ணைநல்லுார் (கிருபாபுரீஸ்வரர் கோவிலில்) வழக்காடு மன்றத்தில் வழக்கு உரைக்க நடைபயணம், மதியம் 1:00 மணிக்கு திருவெண்ணெய்நல்லுாரில் வழக்காடுதல், இறைவன் காட்சி கொடுத்தல், பித்தா பிறைசூடி பதிகம் பாடுதல் நிகழ்ச்சி நடக்கிறது.