பதிவு செய்த நாள்
18
செப்
2012
11:09
கந்தர்வக்கோட்டை: முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் அலகு குத்தியும், கரும்புள்ளி, செம்புள்ளி குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டையில்,110 கிராமங்களுக்கு சொந்தமான முத்துமாரியம்மன் கோவிலில், முத்துப்பல்லக்கு திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி சுற்றுவட்டாரத்திலுள்ள பக்தர்கள் அதிகாலை, நான்கு மணிக்கு பங்கார ஓடை குளத்தில் நீராடி, கரும்புள்ளி, செம்புள்ளி குத்திக்கொண்டு, வேப்பிலையை கையில் ஏந்தியவாறு, ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, உடல் முழுவதும் அலகு குத்தி வழிபாடு நடத்தினர். நேற்று அதிகாலை, இரண்டு மணியளவில் முத்துப்பல்லாக்கில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில், ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதையொட்டி இன்னிசை நிகழ்ச்சி, பட்டிமன்றம், சொற்பொழிவு ஆகியவை நடந்தது. பாதுகாப்பு ஏற்பாட்டை கந்தர்வக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் போலீஸார் செய்திருந்தனர்.