பதிவு செய்த நாள்
18
செப்
2012
11:09
கோபிசெட்டிபாளையம்: மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் குருவரெட்டியூர், பாலமலை அடிவாரம், சித்தி விநாயகர் கோவிலில், 108 சங்காபிஷேக வழிபாடு நடந்தது.அம்மாபேட்டை அருகே, குருவரெட்டியூர், பாலமலை அடிவாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது.நடப்பாண்டு பருவமழை தவறியதால் மழையின்றி கடும் வறட்சியும், விவசாயப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பாலமலை அடிவாரம் சித்தி விநாயகர் கோவிலில், சந்தைப்பேட்டை மனோகரன் தலைமையில், ஸ்வாமிக்கு, 108 சங்காபிஷேகம், மலர் அலங்காரம், வழிபாடு நடத்தப்பட்டது. மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் வெள்ளித்திருப்பூர் செல்வகுமார் குருக்கள் வேத மந்திரங்களை ஓதி, சிறப்பு பூஜையை நடத்தினார். இப்பகுதியினர் கூறுகையில், "பத்து ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு, குடிநீருக்கும், விவசாயப் பணிகளும் பாதிக்கப்பட்ட போது, இக்கோவிலில் நடந்த வழிபாடு பயனாக, அன்றிரவே பலத்த மழை பெய்து ஏரி, குளங்கள் நிரம்பின. தற்போதும், வழிபாடு நடத்தப்பட்டுள்ளது என்றனர்.குருவரெட்டியூர் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சிவநடராஜன், சந்தைபேட்டை ஆறுமுகம், செல்வராஜ், அம்மாசை, கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.