பதிவு செய்த நாள்
20
செப்
2012
10:09
திருப்புத்தூர்: பிள்ளையார்பட்டி, கற்பகவிநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா செப்.,19ல், தீர்த்தவாரி மற்றும் கொழுக்கட்டை படையலுடன் நிறைவு பெற்றது. சிவகங்கை, பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழா, செப்.,10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை வெள்ளி கேடகத்தில் சுவாமி வீதி உலா வந்தார். தொடர்ந்து தேரோட்டம், கஜமுகாசம்ஹாரம் நடந்தது.
தீர்த்தவாரி: விழாவின், 10ம் நாள் காலை 9.25 மணிக்கு, தங்க மூஷிக வாகனத்தில் விநாயகர், சண்டிகேஸ்வரர், அங்குசத்தேவர் ஆகியோர், கோவில் குளத்தில் எழுந்தருளினர். தலைமை சிவாச்சாரியார் பிச்சை குருக்கள் தலைமையில், அபிஷேகம் நடந்தது. பின், அங்குசத்தேவரை நீராட்டி தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.
மோதகம் படைப்பு: செப்.,19ம் தேதி பகல் யாகசாலையிலிருந்து புனித நீர் எடுத்து, மூலவருக்கு அபிஷேகம் செய்தனர். தங்க கவசத்துடன் விநாயகர் எழுந்தருளினார். பதினெட்டுபடி பச்சரிசியில் ஊறவைத்து, இடித்து, படி அரிசிக்கு ஒன்றேகால் படி வெல்லம் சேர்த்து, வேகவைத்த, "மெகா சைஸ் கொழுக்கட்டை பகல் 1.50 மணிக்கு மூலவருக்கு படையல் வைத்தனர். இரவு, பஞ்சமூர்த்தி உலாவுடன் விழா நிறைவடைந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நிர்வாக அறங்காவலர்கள் நா.லட்சுமணன் செட்டியார்,ச ச.சிதம்பரம் செட்டியார் ஏற்பாடுகளை செய்தனர்.