கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி மந்தை பகவதியம்மன் மற்றும் சோலை ஆண்டவர் கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஏப்.2 பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்தனர். நேற்று சிவக்களம் பகுதியில் உள்ள பொய் சொல்லா மெய் அய்யணார் கோயிலில் இருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ள மந்தை பகவதியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்தும், மாவிளக்கு ஏற்றியும், பூத்தட்டு ஏந்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து கோயில் முன்பு பக்தர்கள் கிடா வெட்டி பொங்கல் வைத்தனர். பிறகு அன்னதானம் வழங்கப்பட்டது. கோயிலில் இருந்து பூசாரி கரகம் எடுத்து பாண்டாங்குடி பூசத்தாய் ஊருணியில் கரைக்கும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெற்றது. இத் திருவிழாவில் கொட்டாம்பட்டி, வலைச்சேரிபட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.