பிரான்மலை திருவிழாவில் முல்லைக்கு தேர் கொடுத்த வேள்பாரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மே 2023 09:05
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயில் சித்திரை தேரோட்டம் நாளை (மே 2) நடக்கிறது.
சங்க இலக்கிய புகழ் பெற்ற இக்கோவிலின் சித்திரை திருவிழா ஏப். 24ல் தொடங்கியது. ஏப். 28 ல் திருக்கல்யாணம் நடந்த நிலையில் நேற்று வள்ளல் பாரிவிழா நடந்தது. பாரம்பரிய முறைப்படி மன்னர் வேள்பாரி வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. வேட்டை முடிந்து திரும்பி வரும்போது சங்க இலக்கிய சம்பவத்தை நினைவுபடுத்தும் விதமாக முல்லைக்கு தேர் கொடுக்கும் வைபவம் நடந்தது. கோயில் நுழைவாயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த தேரில் முல்லைக்கொடியை குன்றக்குடி பொன்னம்பல அடிகள் படரவிட்டார். பிரான்மலை உமாபதி சிவாச்சாரியார் சிறப்பு வழிபாடு நடத்தினார். விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.ராம.அருணகிரி, கற்பூர சொக்கலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாளை மே 2ம் தேதி கோயிலின் திருத்தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 3:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருத்தேரில் எழுந்தருளுகின்றனர். அதிகாலை 5:30 மணிக்கு தேரோட்டம் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக வந்து மாலை 5:00 மணிக்கு நிலையை அடையும். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை குன்றக்குடி ஆதீனம், பிரான்மலை கிராமத்தார்கள் செய்து வருகின்றனர்.