பதிவு செய்த நாள்
01
மே
2023
09:05
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் நேற்று பெருமாளுக்கு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.
பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் நேற்று காலை 9:30 மணிக்கு மூலவர் பரமஸ்சுவாமி, உற்சவர் சுந்தரராஜ பெருமாள், யாக மூர்த்தி உள்ளிட்டோருக்கு காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து மே 3 வரை காலை, மாலை யாக சாலை பூஜைகள் நடந்து, இரவு 7:00 மணிக்கு பெருமாள் புறப்பாடாகி சிறப்பு தீப ஆராதனைகள் நடக்கும்.
மே 4 காலை 9:00 மணிக்கு பெருமாள், கருப்பணசாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நிறைவடைந்து, நள்ளிரவு 2:00 மணிக்கு பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் பூ பல்லக்கில் எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்க உள்ளார்.
மே 5 காலை 9:00 மணிக்கு தல்லாகுளம் மண்டபத்திலிருந்து குதிரை வாகனத்தில் கள்ளழகர் அலங்காரமாகி ஆயிரக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் நீரை பீய்ச்சி அடித்து வரவேற்க வைகை ஆற்றில் இறங்குகிறார். அன்று மதியம் 1:30 மணிக்கு ஆயிரம் பொன் சப்பரத்திலும், தொடர்ந்து இரவு 12:00 மணிக்கு வண்டியூர் காக்கா தோப்பு பெருமாள் கோயிலை அடைகிறார்.
மே 6 இரவு 7:00 மணிக்கு பெருமாள் சேஷ வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனமும், தொடர்ந்து அன்று இரவு முழுவதும் தசாவதார திருக்கோலத்தில் அருள் பாலிக்க உள்ளார். மே 7, 8 ஆகிய இரண்டு நாட்கள் கருட வாகனத்திலும், ராஜாங்க திருக்கோலத்திலும் வைகை ஆற்றில் வலம் வருகிறார்.
மே 9 காலை 8:00 மணிக்கு வைகை ஆற்றில் இருந்து கள்ளழகர் திருகோலத்துடன் பூ பல்லக்கில் புறப்பாடாகி முக்கிய வீதிகளில் வலம் வந்து மாலை 5:00 மணிக்கு திருக்கோயிலை அடைவார். இன்று இரவு கண்ணாடி சேவை நடக்க உள்ளது. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர். மேலும் நேற்று காலை 11:00 மணிக்கு மாவட்ட எஸ்.பி., தங்கத்துரை தலைமையில், பரமக்குடி டி.எஸ்.பி., காந்தி உள்ளிட்ட அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
உள்ளூர் விடுமுறை: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் குதிரை வாகனத்தில் பரமக்குடி வைகை ஆற்றில் இறங்க உள்ளார். தொடர்ந்து மே 4 நள்ளிரவு முதல் மே 5 அதிகாலை வரை திருவிழா நடைபெறுவதையொட்டி பரமக்குடி வட்டத்திற்கு மட்டும் மே 5 அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக மே 20 அன்று சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் என, மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறை சட்டம் 1881 கீழ் வராது என்பதால் மே 5 அன்று பரமக்குடி வட்டத்தில் சார் நிலை கருவூலம் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அவசர அலுவல்கள் மட்டும் குறைந்தபட்ச பணியாளர்களுடன் செயல்படும்.