பதிவு செய்த நாள்
26
செப்
2012
04:09
அகலிரு விசும்பிற் பாயிருள் பருகிப்
பகல்கான் றெழுதரு பல்கதிர்ப் பருதி
காய்சினந் திருகிய கடுந்திறல் வேனிற்
பாசிலை யொழித்த பராஅரைப் பாதிரி
வள்ளிதழ் மாமலர் வயிற்றிடை வகுத்தத 5
னுள்ளகம் புரையு மூட்டுறு பச்சைப்
பரியரைக் கமுகின் பாளையம் பசும்பூக்
கருவிருந் தன்ன கண்கூடு செறிதுளை
யுருக்கி யன்ன பொருத்துறு போர்வைச்
சுனைவறந் தன்ன விருடூங்கு வறுவாய்ப 10
பிறைபிறந் தன்ன பின்னேந்து கவைக்கடை
நெடும்பணைத் திரடோண் மடந்தை முன்கைக்
குறுந்தொடி யேய்க்கும் மெலிந்துவீங்கு திவவின்
மணிவார்ந் தன்ன மாயிரு மருப்பிற்
பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின் 15
றொடையமை கேள்வி யிடவயிற் றழீஇ
வெந்தெறற் கனலியொடு மதிவலந் திரிதருந்
தண்கடல் வரைப்பிற் றாங்குநர்ப் பெறாது
பொழிமழை துறந்த புகைவேய் குன்றத்துப்
பழுமரந் தேரும் பறவை போலக். 20
கல்லென் சுற்றமொடு கால்கிளர்ந்து திரிதரும்
புல்லென் யாக்கைப் புலவுவாய்ப் பாண!
பெருவறங் கூர்ந்த கானங் கல்லெனக்
கருவி வானந் துளிசொரிந் தாங்குப்
பழம்பசி கூர்ந்தவெம் மிரும்பே ரொக்கலொடு 25
வழங்கத் தவாஅப் பெருவள னேய்தி
வாலுளைப் புரவியொடு வயக்களிறு முகந்துகொண்
டியாமவ ணின்றும் வருதும் நீயிரு
மிருநிலங் கடந்த திருமறு மார்பின்
முந்நீர் வண்ணன் பிறங்கடை யந்நீர்த 30
திரைதரு மரபி னுரவோ னும்பல்
மலர்தலை யுலகத்து மன்னுயிர் காக்கும்
முரசுமுழங்கு தானை மூவ ருள்ளு
மிலங்குநீர்ப் பரப்பின் வளைமீக் கூறும்
வலம்புரி யன்ன வசைநீங்கு சிறப்பி 35
னல்லது கடிந்த வறம்புரி செங்கோற்
பல்வேற் றிரையற் படர்குவி ராயிற்
கேளவ னிலையே கெடுகநின் னவல
மத்தஞ் செல்வோ ரலறத் தாக்கிக்
கைப்பொருள் வெளவுங் களவேர் வாழ்க்கைக் 40
கொடியோ ரின்றவன் கடியுடை வியன்புல
முருமும் உரறா தரவுந் தப்பா
காட்டுமாவு முறுகண் செய்யா வேட்டாங்
கசைவுழி யசைஇ நசைவுழித் தங்கிச்
சென்மோ விரவல சிறக்கநின் னுள்ளங் 45
கொழுஞ்சூட் டருந்திய திருந்துநிலை யாரத்து
முழவி னன்ன முழுமர வுருளி
யெழூஉப்புணர்ந் தன்ன பரூஉக்கை நோன்பார்
மாரிக் குன்றம் மழைசுமந் தன்ன
வாரை வேய்ந்த வறைவாய்ச் சகடம் 50
வேழங் காவலர் குரம்பை யேய்ப்பக்
கோழி சேக்குங் கூடுடைப் புதவின்
முளையெயிற் றிரும்பிடி முழந்தா ளேய்க்குந்
துளையரைச் சீறுர றூங்கத் தூக்கி
நாடக மகளி ராடுகளத் தெடுத்த 55
விசிவீங் கின்னியங் கடுப்பல் கயிறுபிணித்துக்
காடி வைத்த கலனுடை மூக்கின்
மகவுடை மகடூஉப் பகடுபுறந் துரப்பக்
கோட்டிணர் வேம்பி னேட்டிலை மிடைந்த
படலைக் கண்ணிப் பரேரெறுழ்த் திணிதோண் 60
முடலை யாக்கை முழுவலி மாக்கள்
சிறுதுளைக் கொடுநுக நெறிபட நிரைத்த
பெருங்கயிற் றொழுகை மருங்கிற் காப்பச்
சில்பத வுணவின் கொள்ளை சாற்றிப்
பல்லெருத் துமணர் பதிபோகு நெடுநெறி 65
யெல்லிடைக் கழியுநர்க் கேம மாக
மலையவுங் கடலவு மாண்பயந் தரூஉ
மரும்பொரு ளருத்துந் திருந்துதொடை நோன்றா
ளடிபுதை யரண மெய்திப் படம்புக்குப்
பொருகணை தொலைச்சிய புண்டீர் மார்பின். 70
விரவுவரிக் கச்சின் வெண்கை யொள்வாள்
வரையூர் பாம்பிற் பூண்டுபுடை தூங்கச்
சுரிகை நுழைந்த சுற்றுவீங்கு செறிவுடைக்
கருவி லோச்சிய கண்ணக னெறுழ்த்தோட்
கடம்பமர் நெடுவே ளன்ன மீளி 75
யுடம்பிடித் தடக்கை யோடா வம்பலர்
தடவுநிலைப் பலவின் முழுமுதற் கொண்ட
சிறுசுளைப் பெரும்பழங் கடுப்ப மிரியற்
புணர்ப்பொறை தாங்கிய வடுவாழ் நோன்புறத்
தணர்ச்செவிக் கழுதைச் சாத்தொடு வழங்க 80
முல்குடைப் பெருவழிக் கவலை காக்கும்
வில்லுடை வைப்பின் வியன்காட் டியவி
னீளரை யிலவத் தலங்குசினை பயந்த
பூளையம் பசுங்காய் புடைவிரிந் தன்ன
வரிப்புற வணிலொடு கருப்பை யாடா 85
தியாற்றறல் புரையும் வெரிநுடைக் கொழுமடல்
வேற்றலை யன்ன வைந்நுதி நெடுந்தக
ரீத்திலை வேய்ந்த வெய்ப்புறக் குரம்பை
மான்றோற் பள்ளி மகவொடு முடங்கி
யீன்பிண வொழியப் போகி நோன்கா 90
ழிரும்புதலை யாத்த திருந்துகணை விழுக்கோ
லுளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி
யிருநிலக் கரம்பைப் படுநீ றாடி
நுண்பு லடக்கிய வெண்ப லெயிற்றியர்
பார்வை யாத்த பறைதாள் விளவி 95
னீழன் முன்றி னிலவுரற் பெய்து
குறுங்கா ழுலக்கை யோச்சி நெடுங்கிணற்று
வல்லூற் றுவரி தோண்டித் தொல்லை
முரவுவாய்க் குழிசி முரியடுப் பேற்றி
வாரா தட்ட வாடூன் புழுக்கல 100
வாடாத் தும்பை வயவர் பெருமக
னோடாத் தானை யொண்டொழிற் கழற்காற்
செவ்வரை நாடன் சென்னிய மெனினே
தெய்வ மடையிற் றேக்கிலைக் குவைஇநும்
பைதீர் கடும்பொடு பதமிகப் பெறுகுவிர் 105
மானடி பொறித்த மயங்கதர் மருங்கின்
வான்மடி பொழுதி னீர்நசைஇக் குழித்த
வகழ்சூழ் பயம்பி னகத்தொளித் தொடுங்கிப்
புகழா வாகைப் பூவி னன்ன
வளைமருப் பேனம் வரவுபார்த் திருக்க 110
மரைநாள் வேட்ட மழுங்கிற் பகனாட்
பகுவாய் ஞமலியொடு பைம்புத லெருக்கித்
தொகுவாய் வேலித் தொடர்வலை மாட்டி
முள்ளரைத் தாமரைப் புல்லிதழ் புரையு
நெடுஞ்செவிக் குறுமுயல் போக்கற வளைஇக் 115
கடுங்கட் கானவர் கடறுகூட் டுண்ணு
மருஞ்சுர மிறந்த வம்பர்ப் பருந்துபட
வொன்னாத் தெவ்வர் நடுங்க வோச்சி
வைந்நுதி மழுங்கிய புலவுவா யெஃகம்
வடிமணிப் பலகையொடு நிரைஇ முடிநாட 120
சாபஞ் சார்த்திய கணைதுஞ்சு வியனக
ரூகம் வேய்ந்த வுயர்நிலை வரைப்பின்
வரைத்தேன் புரையுங் கவைக்கடைப் புதையொடு
கடுந்துடி தூங்குங் கணைக்காற் பந்தர்த்
தொடர்நா யாத்த துன்னருங் கடிநகர 125
வாழ்முள் வேலிச் சூழ்மிளைப் படப்பைக்
கொடுநுகந் தழீஇய புதவிற் செந்நிலை
நெடுநுதி வயக்கழு நிரைத்த வாயிற்
கொடுவி லெயினக் குறும்பிற் சேப்பிற்
களர்வள ரீந்தின் காழ்கண் டன்ன 130
சுவல்விளை நெல்லின் செவ்வவிழ்ச் சொன்றி
ஞமலி தந்த மனவுச்சூ லுடும்பின்
வறைகால் யாத்தது வயின்றொறும் பெருகுவிர்
யானை தாக்கினு மரவுமேற் செலினு
நீனிற விசும்பின் வல்லேறு சிலைப்பினுஞ் 135
சூன்மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை
வலிக்கூட் டுணவின் வாட்குடிப் பிறந்த
புலிப்போத் தன்ன புல்லணற் காளை
சென்னா யன்ன கருவிற் சுற்றமொடு
கேளா மன்னர் கடிபுலம் புக்க 140
நாள்ஆ தந்து நறவுநொடை தொலைச்சி
யில்லடு கள்ளின் றோப்பி பருகி
மல்லல் மன்றத்து மதவிடை கெண்டி
மடிவாய்த் தண்ணுமை நடுவட் சிலைப்பச்
சிலைநவி லெறுழ்த்தோ ளோச்சி வலன்வளையூஉப் 145
பகல்மகிழ் தூங்குந் தூங்கா விருக்கை
முரண்டலை கழிந்த பின்றை மறிய
குளகுஅரை யாத்த குறுங்காற் குரம்பைச்
செற்றை வாயிற் செறிகழிக் கதவிற்
கற்றை வேய்ந்த கழித்தலைச் சாம்பி 150
னதளோன் றுஞ்சுங் காப்பி னுதள
நெடுந்தாம்பு தொடுத்த குறுந்தறி முன்றிற்
கொடுமுகத் துருவையொடு வெள்ளை சேக்கு
மிடுமுள் வேலி யெருப்படு வரைப்பி
னள்ளிருள் விடியற் புள்ளெழப் போகிப் 155
புலிக்குரன் மத்த மொலிப்ப வாங்கி
யாம்பி வான்முகை யன்ன கூம்புமுகி
ழுறையமை தீந்தயிர் கலக்கி நுரைதெரிந்து
புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட் டிரீஇ
நாண்மோர் மாறு நன்மா மேனிச் 160
சிறுகுழை துயல்வருங் காதிற் பணைத்தோட்
குறுநெறிக் கொண்ட கூந்த லாய்மக
ளளைவிலை யுணவிற் கிளையுட னருத்தி
நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளா
ளெருமை நல்லான் கருநாகு பெறூஉ 165
மடிவாய்க் கோவலர் குடிவயிற் சேப்பி
னிருங்கிளை ஞெண்டின் சிறுபார்ப் பன்ன
பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவிர்
தொடுதோன் மரீஇய வடுவாழ் நோனடி
விழுத்தண் டூன்றிய மழுத்தின் வன்கை 170
யுறிக்கா வூர்ந்த மறுப்படு மயிர்ச்சுவன்
மேம்பா லுரைத்த வோரி யோங்குமிசைக்
கோட்டவுங் கொடியவும் விரைஇக் காட்ட
பல்பூ மிடைந்த படலைக் கண்ணி
யொன்றம ருடுக்கைக் கூழா ரிடையன் 175
கன்றமர் நிரையொடு கானத் தல்கி
யந்நு ணவிர்புகை கமழக் கைம்முயன்று
ஞெலிகோற் கொண்ட பெருவிறல் ஞெகிழிச்
செந்தீத் தோட்ட கருந்துளைக் குழலி
னின்றீம் பாலை முனையிற் குமிழின் 180
புழற்கோட்டுத் தொடுத்த மரற்புரி நரம்பின்
வில்யா ழிசைக்கும் விரலெறி குறிஞ்சிப்
பல்காற் பறவை கிளைசெத் தோர்க்கும்
புல்லார் வியன்புலம் போகி முள்ளுடுத்
தெழுகா டோங்கிய தொழுவுடை வரைப்பிற் 185
பிடிக்கணத் தன்ன குதிருடை முன்றிற்
களிற்றுத்தாள் புரையுந் திரிமரப் பந்தர்க்
குறுஞ்சாட் டுருளையொடு கலப்பை சார்த்தி
நெடுஞ்சுவர் பறைந்த புகைசூழ் கொட்டிற்
பருவ வானத்துப் பாமழை கடுப்பக் 190
கருவை வேய்ந்த கவின்குடிச் சீறூர்
நெடுங்குரற் பூளைப் பூவி னன்ன
குறுந்தாள் வரகின் குறளவிழ்ச் சொன்றிப்
புகரிணர் வேங்கை வீகண் டன்ன
வவரை வான்புழுக் கட்டிப் பயில்வுற் 195
றின்சுவை மூரற் பெறுவிர் ஞாங்கர்க்
குடிநிறை வல்சிச் செஞ்சா லுழவர்
நடைநவில் பெரும்பகடு புதவிற் பூட்டிப்
பிடிவா யன்ன மடிவாய் நாஞ்சி
லுடுப்புமுக முழுக்கொழு மூழ்க வூன்றித 200
தொடுப்பெறிந் துழுத துளர்படு துடவை
யரிபுகு பொழுதி னிரியல் போகி
வண்ணக் கடம்பி னறுமல ரன்ன
வளரிளம் பிள்ளை தழீஇக் குறுங்காற்
கறையணற் குறும்பூழ் கட்சிச் சேக்கும் 205
வன்புல மிறந்த பின்றை மென்றோன்
மிதியுலைக் கொல்லன் முறிகொடிற் றன்ன
கவைத்தா ளலவ னளற்றளை சிதையப்
பைஞ்சாய் கொன்ற மண்படு மருப்பிற்
காரேறு பொருத கண்ணகன் செறுவி 210
னுழாஅ நுண்டொளி நிரவிய வினைஞர்
முடிநா றழுத்திய நெடுநீர்ச் செறுவிற்
களைஞர் தந்த கணைக்கா னெய்தற்
கட்கனழ் புதுப்பூ முனையின் முட்சினை
முகைசூழ் தகட்ட பிறழ்வாய் முள்ளிக் 215
கொடுங்கான் மாமலர் கொய்துகொண் டவண
பஞ்சாய்க் கோரை பல்லிற் சவட்டிப்
புணர்நார்ப் பெய்த புனைவின் கண்ணி
யீருடை யிருந்தலை யாரச் சூடிப்
பொன்காண் கட்டளை கடுப்பக் கண்பின் 220
புன்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பி
னிரும்புவடித் தன்ன மடியா மென்றோற்
கருங்கை வினைஞர் காதலஞ் சிறாஅற்
பழஞ்சோற் றமலை முனைஇ வரம்பிற்
புதுவை வேய்ந்த கவிகுடின் முன்றி 225
லவலெறி யுலக்கைப் பாடுவிறந் தயல
கொடுவாய்க் கிள்ளை படுபகை வெரூஉம்
நீங்கா யாணர் வாங்குகதிர்க் கழனிக்
கடுப்புடைப் பறவைச் சாதியன்ன
பைதற விளைந்த பெருஞ்செந் நெல்லின் 230
தூம்புடைத் திரடா டுமித்த வினைஞர்
பாம்புறை மருதி னோங்குசினை நீழற்
பலிபெறு வியன்கள மலிய வேற்றிக்
கணங்கொள் சுற்றமொடு கைபுணர்ந் தாடுந்
துணங்கையம் பூதந் துகிலுடுத் தவைபோற் 235
சிலம்பி வானூல் வலந்த மருங்கிற்
குழுமுநிலைப் போரின் முழுமுத றொலைச்சிப்
பகடூர் பிழிந்த பின்றைத் துகடப
வையுந் துரும்பு நீக்கிப் பைதறக்
குடகாற் றெறிந்த குப்பை வடபாற் 240
செம்பொன் மலையிற் சிறப்பத் தோன்றுந்
தண்பணை தழீஇய தளரா விருக்கைப்
பகட்டுஆ ஈன்ற கொடுநடைக் குழவிக்
கவைத்தாம்பு தொடுத்த காழூன் றல்கு
லேணி யெய்தா நீணெடு மார்பின் 245
முகடுதுமித் தடுக்கிய பழம்பல் லுணவிற்
குமரி மூத்த கூடோங்கு நல்லிற்
றச்சச் சிறாஅர் நச்சப் புனைந்த
வூரா நற்றே ருருட்டிய புதல்வர்
தளர்நடை வருத்தம் வீட வலர்முலைச் 250
செவிவிஅம் பெண்டிர்த் தழீஇப் பாலார்ந்
தமளித் துஞ்சு மழகுடை நல்லிற்
றொல்பசி யறியாத் துளங்கா விருக்கை
மல்லற் பேரூர் மடியின் மடியா
வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி 255
மனைவா ழளகின் வாட்டொடும் பெறுகுவிர்
மழைவிளை யாடுங் கழைவள ரடுக்கத்
தணங்குடை யாளி தாக்கலிற் பலவுடன்
கணஞ்சால் வேழங் கதழ்வுற் றாஅங்
கெந்திரஞ் சிலைக்குந் துங்சாக் கம்பல 260
விசய மடூஉம் புகைசூ ழாலைதொறுங்
கரும்பின் றீஞ்சாறு விரும்பினிர் மிசைமின்
வேழ நிரைத்து வெண்கோடு விரைஇத்
தாழை முடித்துத் தருப்பை வேய்ந்த
குறியிறைக் குரம்பைப் பறியுடை முன்றிற் 265
கொடுங்காற் புன்னைக் கோடுதுமித் தியற்றிய
பைங்காய் தூங்கும் பாய்மணற் பந்த
ரிளையரு முதியருங் கிளையுடன் துவன்றிப்
புலவுநுனைப் பகழியுஞ் சிலையு மானச்
செவ்வரிக் கயலொடு பச்சிறாப் பிறழும் 270
மையிருங் குட்டத்து மகவொடு வழங்கிக்
கோடை நீடினுங் குறைபட லறியாத்
தோடாழ் குளத்த கோடுகாத் திருக்குங்
கொடுமுடி வலைஞர் குடிவயிற் சேப்பி
னவையா வரிசி யங்களித் துழவை 275
மலர்வாய்ப் பிழாவிற் புலர வாற்றிப்
பாம்புறை புற்றிற் குரும்பி யேய்க்கும்
பூம்புற நல்லடை யளைஇத் தேம்பட
வெல்லையு மிரவு மிருமறை கழிப்பி
வல்வாய்ச் சாடியின் வழைச்சற விளைந்த 280
வெந்நீர ரரியல் விரலலை நறும்பிழி
தண்மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர்
பச்சூன் பெய்த கவல்பிணி பைந்தோற்
கோள்வல் பாண்மகன் றலைவலித் தியாத்த
நெடுங்கழைத் தூண்டி னடுங்கநாண் கொளீஇக் 285
கொடுவா யிரும்பின் மடிதலை புலம்பப்
பொதியிரை கதுவிய போழ்வாய் வாளை
நீர்நணிப் பிரம்பி னடுங்குநிழல் வெரூஉம்
நீத்துடை நெருங்கயந் தீப்பட மலர்ந்த
கடவு ளொண்பூ வடைத லோம்பி 290
யுறைகான் மாறிய வோங்குயர் நனந்தலை
யகலிரு வானத்துக் குறைவி லேய்ப்ப
வரக்கிதழ்க் குவளையொடு நீல நீடி
முரட்பூ மலிந்த முதுநீர்ப் பொய்கைக்
குறுந ரிட்ட கூம்புவிடு பன்மலர் 295
பெருநாள ளமையத்துப் பிணையினிர் கழிமின்
செழுங்கன் றியாத்த சிறுதாட் பந்தர்ப்
பைஞ்சேறு மெழுகிய படிவ நன்னகர்
மனையுறை கோழியொடு ஞமலி துன்னாது
வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும் 300
மறைகாப் பாள ருறைபதிச் சேப்பிற்
பெருநல் வானத்து வடவயின் விளங்குஞ்
சிறுமீன் புரையுங் கற்பி னறுநுதல் வளைக்கை
மகடூஉ வயினறிந் தட்ட சுடர்க்கடைப்
பறவைப் பெயர்ப்படு வத்தஞ் 305
சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்
துருப்புறு பசுங்காய்ப் போழொடு கறிகலந்து
கஞ்சக நறுமுறி யளை இப் பைந்துணர்
நெடுமரக் கொக்கின் னறுவடி விதிர்த்த
தகைமாண் காடியின் வகைபடப் பெறுகுவிர் 310
வண்ட லாயமொ டுண்டுறைத் தலைஇப்
புனலாடு மகளி ரிட்ட பொலங்குழை
யிரைதேர் மணிச்சிர லிரைசெத் தெறிந்தெனப்
புள்ளார் பெண்ணைப் புலம்புமடற் செல்லாது
கேள்வி யந்தண ரருங்கட னிறுத்த 315
வேள்வித் தூணத் தசைஇ யவன
ரோதிம விளக்கி னுயர்மிசைக் கொண்ட
வைகுறு மீனிற் பைபயத் தோன்றும்
நீர்ப்பெயற் றெல்லைப் போகிப் பாற்கேழ்
வாலுளைப் புரவியொடு வடவளந் தரூஉம் 320
நாவாய் சூழ்ந்த நளிநீர்ப் படப்பை
மாட மோங்கிய மணன்மலி மறுகிற்
பரதர் மலிந்த பல்வேறு தெருவிற்
சிலதர் காக்குஞ் சேணுயர் வரைப்பி
னெல்லுழு பகட்டொடு கறவை துன்னா 325
ஏழகத் தகரோ டெகினங் கொட்குங்
கூழுடை நல்லிற் கொடும்பூண் மகளிர்
கொன்றை மென்சினைப் பனிதவழ்பவை போற்
பைங்கா ழல்கு னுண்டுகி னுடங்க
மால்வரைச் சிலம்பின் மகிழ்சிறந் தாலும் 330
பீலி மஞ்ஞையி னியலிக் கால
தமனியப் பொற்சிலம் பொலிப்ப வுயர்நிலை
வான்றோய் மாடத்து வரிப்பந் தசைஇக்
கைபுனை குறுந்தொடி தத்தப் பைபய
முத்த வார்மணற் பொற்கழங் காடும் 335
பட்டின மருங்கி னசையின் முட்டில்
பைங்கொடி நுடங்கும் பலர்புகு வாயிற்
செம்பூத் தூய செதுக்குடை முன்றில்
கள்ளடு மகளிர் வள்ள நுடக்கிய
வார்ந்துகு சின்னீர் வழிந்த குழம்ப 340
னீர்ஞ்சே றாடிய விரும்பல் குட்டிப்
பன்மயிர்ப் பிணவொடு பாயம் போகாது
நென்மா வல்சி தீற்றிப் பன்னாட்
குழிநிறுத் தோம்பிய குறுந்தா ளேற்றைக்
கொழுநிணத் தடியொடு கூர்நறாப் பெறுகுவிர் 345
வான மூன்றிய மதலை போல
வேணி சாத்திய வேற்றருஞ் சென்னி
விண்பொர நிவந்த வேயா மாடத்
திரவின் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி
யுரவுநீ ரழுவத் தோடுகலங் கரையுந் 350
துறைபிறக் கொழியப் போகிக் கறையடிக்
குன்றுறழ் யானை மருங்கு லேய்க்கும்
வண்டோட்டுத் தெங்கின் வாடுமடல் வேய்ந்த
மஞ்சண் முன்றின் மணநாறு படப்பைத்
தண்டலை யுழவர் தனிமனைச் சேப்பிற் 355
றாழ்கோட் பலவின் சூழ்சுளைப் பெரும்பழம்
வீழி றாழைக் குழவித் தீம்நீர்க்
கவைமுலை யிரும்பிடிக் கவுண்மருப் பேய்க்குங்
குலைமுதிர் வாழைக் கூனி வெண்பழந்
திரளரைப் பெண்ணை நுங்கொடு பிறவுந் 360
தீம்பஃ றார முனையிற் சேம்பின்
முளைப்புற முதிர்கிழங் கார்குவிர் பகற்பெயன்
மழைவீழ்ந் தன்ன மாத்தாட் கமுகின்
புடைசூழ் தெங்கின் முப்புடைத் திரள்கா
யாறுசெல் வம்பலர் காய்பசி தீரச் 365
சோறடு குழிசி யிளக விழூஉம்
வீயா யாணர் வளங்கெழு பாக்கத்துப்
பன்மர நீளிடைப் போகி நன்னகர்
விண்டோய் மாடத்து விளங்குசுவ ருடுத்த
வாடா வள்ளியின் வளம்பல தரூஉம் 370
நாடுபல கழிந்த பின்றை நீடுகுலைக்
காந்தளஞ் சிலம்பிற் களிறுபடிந் தாங்குப்
பாம்பணைப் பள்ளி யமர்ந்தோ னாங்கண்
வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பர்க்
குறுங்காற் காஞ்சி சுற்றிய நெடுங்கொடிப் 375
பாசிலைக் குருகின் புன்புற வரிப்பூக்
காரகற் கூவியர் பாகொடு பிடித்த
விழைசூழ் வட்டம் பால்கலந் தவைபோ
னிழறாழ் வார்மண னீர்முகத் துறைப்பப்
புனல்கால் கழீஇய பொழிறொறுந் திரள்காற் 380
சோலைக் கமுகின் சூல்வயிற் றன்ன
நீலப் பைங்குடந் தொலைச்சி நாளும்
பெருமகி ழிருக்கை மரீஇச் சிறுகோட்டுக்
குழவித் திங்கட் கோணேர்ந் தாங்குச்
சுறவுவா யமைத்த சுரும்புசூழ் சுடர்நுத 385
னறவுபெயர்த் தமர்த்த நல்லெழின் மழைக்கண்
மடவரன் மகளிரொடு பகல்விளை யாடிப்
பெறற்கருந் தொல்சீர்த் துறக்க மேய்க்கும்
பொய்யா மரபிற் பூமலி பெருந்துறைச்
செவ்விகொள் பவரோ டசைஇ யவ்வயி 390
னருந்திறற் கடவுள் வாழ்த்திச் சிறிதுநுங்
கருங்கோட் டின்னிய மியக்கினிர் கழிமின்
காழோ ரிகழ்பதம் நோக்கிக் கீழ
நெடுங்கை யானை நெய்ம்மிதி கவளங்
கடுஞ்சூன் மந்தி கவருங் காவிற் 395
களிறுகத னடக்கிய வெளிறில் கந்திற்
றிண்டேர் குழித்த குண்டுநெடுந் தெருவிற்
படைதொலை பறியா மைந்துமலி பெரும்புகழ்க்
கடைகால் யாத்த பல்குடி கெழீஇக்
கொடையுங் கோளும் வழங்குநர்த் தடுத்த 400
வடையா வாயின் மிளைசூழ் படப்பை
நீனிற வுருவி னெடியோன் கொப்பூழ்
நான்முக வொருவற் பயந்த பல்லிதழ்த்
தாமரைப் பொகுட்டிற் காண்வரத் தோன்றிச்
சுடும ணோங்கிய நெடுநகர் வரைப்பி 405
னிழுமென் புள்ளி னீண்டுகிளைத் தொழுதிக்
கொழுமென் சினைய கோளி யுள்ளும்
பழமீக் கூறும் பலாஅப் போலப்
புலவுக் கடலுடுத்த வானஞ் சூடிய
மலர்தலை யுலகத் துள்ளும் பலர்தொழ 410
விழவுமேம் பட்ட பழவிறன் மூதூ
ரவ்வாய் வளர்பிறைச் சூடிச் செவ்வா
யந்தி வானத் தாடுமழை கடுப்ப
வெண்கோட் டிரும்பிணங் குருதி யீர்ப்ப
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தவியப் 415
பேரமர்க் கடந்த கொடுஞ்சி நெடுந்தே
ராராச் செருவி னைவர் போல
வடங்காத் தானையோ டுடன்றுமேல் வந்த
வொன்னாத் தெவ்வ ருலைவிடத் தார்த்துக்
கச்சி யோனே கைவண் டோன்ற 420
னச்சிச் சென்றோர்க் கேம மாகிய
வளியுந் தெறலு மெளிய வாகலின்
மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ்பட
நயந்தோர் தேஎம் நன்பொன் பூப்ப
நட்புக்கொளல் வேண்டி நயந்திசி னோருந் 425
துப்புக்கொளல் வேண்டிய துணையி லோருங்
கல்வீ ழருவி கடற்படர்ந் தாங்குப்
பல்வேறு வகையிற் பணிந்த மன்ன
ரிமையவ ருறையுஞ் சிமையச் செவ்வரை
வெண்டிரை கிழித்த விளங்குசுடர் நெடுங்கோட்டுப் 430
பொன்கொழித் திழிதரும் போக்கருங் கங்கைப்
பெருநீர் போகு மிரியன் மாக்க
ளொருமரப் பாணியிற் தூங்கி யாங்குத்
தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழீஇச்
செவ்வி பார்க்குஞ் செழுநகர் முற்றத்துப் 435
பெருங்கை யானைக் கொடுந்தொடி படுக்குங்
கருங்கைக் கொல்ல னிரும்புவிசைத் தெறிந்த
கூடத் திண்ணிசை வெரீஇ மாடத்
திறையுறை புறவின் செங்காற் சேவ
லின்றுயி லிரியும் பொன்றுஞ்சு வியனகர்க் 440
குணகடல் வரைப்பின் முந்நீர் நாப்பட்
பகல்செய் மண்டிலம் பாரித் தாங்கு
முறைவேண்டு நர்க்குங் குறைவேண்டு நர்க்கும்
வேண்டுப வேண்டுப வேண்டினர்க் கருளி
யிடைத்தெரிந் துணரு மிருடீர் காட்சிக் 445
கொடைக்கட னிறுத்த கூம்பா வுள்ளத்
துரும்பில் சுற்றமோ டிருந்தோற் குறுகிப்
பொறிவரிப் புகர்முகந் தாக்கிய வயமான்
கொடுவரிக் குருளை கொளவேட் டாங்குப்
புலவர் பூண்கட னாற்றிப் பகைவர். 450
கடிமதி லெறிந்து குடுமி கொள்ளும்
வென்றி யல்லது வினையுடம் படினு
மொன்றல் செல்லா வுரவுவாட் டடக்கைக்
கொண்டி யுண்டித் தொண்டையோர் மருக
மள்ளர் மள்ள மறவர் மறவ 455
செல்வர் செல்வ செருமேம் படுந
வெண்டிரைப் பரப்பிற் கடுஞ்சூர்க் கொன்ற
பைம்பூட் சேஎய் பயந்தமா மோட்டுத்
துணங்கையஞ் செல்விக் கணங்குநொடித் தாங்குத்
தண்டா வீகைநின் பெரும்பெய ரேத்தி 460
வந்தேன் பெரும வாழிய நெடிதென
விடனுடைப் பேரியாழ் முறையுளிக் கழிப்பிக்
கடனறி மரபிற் கைதொழூஉப் பழிச்சி
நின்னிலை தெரியா வளவை யந்நிலை
நாவலந் தண்பொழில் வீவின்று விளங்க 465
நில்லா வுலகத்து நிலைமை தூக்கி
யந்நிலை யணுகல் வேண்டி நின்னரைப்
பாசி யன்ன சிதர்வை நீக்கி
யாவி யன்ன அவிர்நூற் கலிங்க
மிரும்பே ரொக்கலொ டொருங்குட னுடீஇக 470
கொடுவாள் கதுவிய வடுவாழ் நோன்கை
வல்லோ னட்ட பல்லூன் கொழுங்குறை
யரிசெத் துணங்கிய பெருஞ்செந் நெல்லின்
தெரிகொ ளரிசித் திரணெடும் புழுக்க
லருங்கடித் தீஞ்சுவை யமுதொடு பிறவும் 475
விருப்புடை மரபிற் கரப்புடை யடிசின்
மீன்பூத் தன்ன வான்கலம் பரப்பி
மகமுறை மகமுறை நோக்கி முகனமர்ந்
தானா விருப்பிற் றானின் றூட்டி
மங்குல் வானத்துத் திங்க ளேய்க்கு 480
மாடுவண் டிமிரா வழல்தவிர் தாமரை
நீடிரும் பித்தை பொலியச் சூட்டி
யுரவுக்கடல் முகந்த பருவ வானத்துப்
பகற்பெயற் றுளியின் மின்னுநிமிர்ந் தாங்குப்
புனையிருங் கதுப்பகம் பொலியப் பொன்னின் 485
றொடையமை மாலை விறலியர் மலைய
நூலோர் புகழ்ந்த மாட்சிய மால்கடல்
வளைகண் டன்ன வாலுளைப் புரவி
துணைபுணர் தொழில நால்குடன் பூட்டி
யரித்தேர் நல்கியு மமையான் செருத்தொலைத 490
தொன்னாத் தெவ்வ ருலைவிடத் தொழித்த
விசும்புசெ லிவுளியொடு பசும்படை தரீஇ
யன்றே விடுக்குமவன் பரிசி லின்சீர்க்
கின்னர முரலு மணங்குடைச் சாரல்
மஞ்ஞை யாலு மரம்பயி லுறும்பிற் 495
கலைபாய்ந் துதிர்த்த மலர்வீழ் புறவின்
மந்தி சீக்கு மாதுஞ்சு முன்றிற்
செந்தீப் பேணிய முனிவர் வெண்கோட்டுக்
களிறுதரு விறகின் வேட்கு
மொளிறிலங் கருவிய மலைகிழ வோனே. 500
உரை
திணை: பாடாண்திணை. துறை: ஆற்றுப்படை
1-முதல், 22 வரையில் ஒரு தொடர்; இதன்கண் தொண்டைமான் இளந்திரையனிடத்தே பரிசில்பெற்று வரும் பெரும்பாணன் ஆற்றெதிர்ப்பட்ட பாணனை விளிக்குமாற்றானே வேனிற்காலத்தியல்பு யாழின் இயல்பு, பாணன் தன்மை முதலியன கூறப்படும்.
முதுவேனிற் பருவம்
1-3. அகலிருவிசும்பில்............... வேனில்
பொருள் : அகல் ஒரு விசும்பில். தன்னை ஒழிந்த நான்கு பூதமும் தன்னிடத்தே அகன்று விரிதற்குக் காரணமான பெரிய வானிடத்தே பாய், இருள பருகிய பகல் என்று எழுதரு பல்கதிர்ப் பருதி- தோன்றிப் பரந்த இருளை விழுங்கா நின்று மறைந்த பகற்பொழுதை உலகத்தே தோற்றுவித்து எழுதலைச் செய்யும் ஞாயிறு, காய் சினந் திருகிய கடுந்திறல் வேனில்-சுடுகின்ற வெகுளி முறுகிய கடிய வலியையுடைய முதுவேனிற் காலத்தே;
கருத்துரை : எப்பொருளும் அகன்று விரிதற்குக் காரணமான வானிடத்தே பரந்த இருளை விழுங்காநின்று பகற்பொழுதைத் தோற்றுவித்து எழுகின்ற ஞாயிறு சுடுகின்ற வெகுளி முறுகிய முதுவேனிற் காலத்தே என்பதாம்.
அகலவுரை : இயற்கைக் காட்சியின் இன்பத்தே பெரிதும் உளந்தோய்ந்த பணடைநாள் தமிழ்ப்புலவர் தஞ் செய்யுள் தொடக் கத்தே ஞாயிறு திங்கள் உலகம் கடல் வானம் முகில் மழை யாறு போன்ற பெரும்பொருள்களை அவையிற்றின் அழகுபுலப்படும்படி சொல்லோவியமாகத் தீட்டி இன்புறுத்தும் வழக்கமுடையர். இதனை இப்பத்துப் பாட்டின்கண் ஒவ்வொரு பாட்டுத் தொடக்கத்தேயும் காணலாம். ஆசிரியர் இளங்கோவடிகளாரும், தமதருமைக் கரப்பியத்தின் தொடக்கத்தே,
திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
என்று அழகான ஒளி மண்டலம் மழை முதலியவற்றோடே தோற்றுவாய் செய்தலும், மேலும் அக்காப்பியத்தின் உள்ளுறுப்புக்களாகிய காதைகளுள்ளும் பெரும்பாலனவற்றை இத்தகைய காட்சிகளோடே தொடங்குதலும் காணலாம். மணிமேகலைப் பெருங்காப்பியத்தினையும் தண்டமிழ் ஆசான் சாத்தனார்,
இளங்கதிர் ஞாயிறு எள்ளுந் தோற்றத்து
விளங்கொளி மேனி விரிசடை யாட்டி
பொன்றிகழ் நெடுவரை யுச்சித் தோன்றித்
தென்றிசைப் பெயர்ந்தவித் தீவத் தெய்வதம் (மணி.பதிகம்)
என, அழகிய கடவுட் காட்சியோடே தோற்றுவாய் செய்தலறிக. அவ்வாறே, ஆசிரியர் உருத்திரங்கண்ணனார் இப்பாட்டினை அகன்ற பெரிய விசும்பிடத்தே இருள் விழுங்கிப் பகல்பரப்பி எழா நின்ற பல்கதிர்ப் பருதிமண்டிலக் காட்சியோடு தோற்றுவாய் செய்தல் காண்க.
இனி, நுண்மா ணுழைபுலமுடைய நல்லிசைப் புலவர்கள், தம் செய்யுளின் தொடக்கத்தே கூறும் பொருள், அப்பாட்டுடைத் தலைவன் சிறப்பெல்லாம் குறிப்பாலே விளக்கும் உவமையாகும்படி அமைத்தல் பல பாட்டினுள்ளே கண்ட உண்மை. இப் பாட்டுடைத் தலைவனாகிய தொண்டைமான் இளந்திரையன் தெறலானும் அளியானும் ஞாயிற்று மண்டிலமே போன்று பகையிருள் கடிந்து அறவொளி பரப்பித் திகழ்ந்தவன் என்பதை அகலிரு விசும்பிற் பாயிருள் பருகிப் பகல்கான்று எழுதரும் பருதி எனக் குறிப்பானே உவமை கொள்ளும்படி அமைத்தனர் எனல் மிகையன்று. பொருநராற்றுப்படையில், பவ்வ மீமிசைப் பகற்கதிர் பரப்பி, வெவ்வெஞ் செல்வன் விசும்படர்ந் தாங்கு என ஞாயிற்றை வள்ளலுக்கு உவமை எடுத்தோதுதலும் காண்க.
செந்தமிழ்ச் சான்றோர் ஒரு நிகழ்ச்சியைக் கூறத் தொடங்கின் அந்நிகழ்ச்சிக்கேற்ற காலமும் இடமுமாகிய பிற ஏதுக்களையும் படைத்து மொழிவர். இதனைப் பாடல் சான்ற புலனெறி வழக்கம் என்ப. அகத்திணை ஒழுக்கங்கட் கேற்ற காலமும் இடனும் ஆராய்ந்து வகுத்துரைத்தாற் போன்று புறத்திணை பொழுக்கங்கட்கு வகுத்துக் கூறாவிடினும் புறத்திணையினும் நிகழ்ச்சிக்கேற்ற காலம் இடம் முதலியவற்றை மேற்கொண்டு கூறுதலை யாண்டும் காணலாம். ஈண்டு ஆற்றுப்படை என்னும் இத்துறையில், நல்குரவான் நலிவுற்றுப் பழுமரம் தேரும் பறவை மானப் புரவலரை நாடிச் செல்லும் பாணர் முதலியோர் நீரும் நிழலும் வறந்த முதுவேனிற் காலத்தே கொடுஞ்சுரத்தே ஆற்றெதிர்ப்பட்டனர் எனக் கூறுங்கால் அக்காலமும் அவ்விடமும் அவர் நல்குரவினை நன்கு விளக்கும் ஏதுக்களாதல் நுண்ணிதின் உணர்க. முதுவேனிலின் இறுதியிலே கார்ப்பருவம் வந்தெய்திப் பல்கதிர்ப் பருகி காய்சினந் திருகிய கடுந்திறல் வேனிலின் வெப்பத்தைத் தன் தலைப் பெயலாலே மாற்று மாறு போன்று இப்பரிசிலரும் நல்குரவின் வெப்பத்தோடே முதுவேனிலின் தாங்கொணாத வெப்பத்தே ஆறு சென்று இறுதியிலே காரினும் தண்ணியராய் அருள் வள்ளல்களைக் கண்டு அவர் தரும் பரிசில்வெள்ளத்தாலே எல்லா வெப்பமும் தணிந்து உளங்குளிர்தலும் காண்க.
இனி, அகல் இரு விசும்பு என்ற தொடர்க்கு அகன்ற பெரிய அல்லது கரிய வானம் என்பதே சாலுமாயினும், தன்னையொழித்த நான்கு பூதமும் தன்னிடத்தே அகன்று விரிவதற்குக் காரணமான வானம் என ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறும்பொருள் நுண்ணிதின் இன்பம் நல்குதலறிக. பாய்-பரந்த. பருகி - குடித்து; இல்லையாம்படி செய்து என்றவாறு. இருளையுண்டு பகலைச் சுரந்து என்றதன்கண் தீமையை உண்டு நன்மையைச் சுரந்தென்றாங்கு நயம் தோன்றுதல் காண்க. காய்சினம் : வினைத்தொகை. காய்தல் - சுட்டெரித்தல். திருகுதல் - முறுகுதல். கடுந்திறல் வேனில் என்றது, முதுவேனிற் பருவத்தினும் கொடிய இறுதிப் பருவம் என்றவாறு. இத்தகைய வெம்மை மிக்க முதிர்வேனிலையும் பொருட்டாகக் கொள்ளாமல் புரவலர்த்தேடிப் புறப்பட விடுத்த இவன் நல்குரவு, இம் முதிர்வேனிலையும் காட்டில் வெப்பமுடைத்து என்பது கருத்து.
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பா டரிது (குறள் : 1048)
என்றார் பொய்யாமொழியாரும்.
யாழ்
4-16 : பாசிலை ...................... தழீஇ
பொருள் : பாசிலை ஒழித்த பராஅரைப் பாதிரி - பின்பனிக் காலத்தே பசிய இலையினையுதிர்த்த பரிய தாளினையுடைய பாதிரியினது, வள் இதழ் மா மலர் வயிற்றிடை வகுத்ததன் உள்ளகம் புரையும் ஊட்டுறு பச்சை - பெரிய இதழை யுடைத்தாகிய வண்டுகளையுடைய பூவினது கிழிக்கப்பட்ட உட்புறத்தை ஒக்கும் நிறமூட்டுதலுற்ற தோலினையும், பரியரைக் கமுகின் பாளையம் பசும்பூக் கரு இருந்தன்ன கண்கூடு செறிதுளை - பரிய தாளினையுடைய கமுகினது பாளையாகிய அழகினையுடைய பசிய பூ விரியாமற் கருவாயிருந்தாலொத்த இரண்டு கண்ணும் கூடின செறிந்த துளை, உருக்கியன்ன பொருத்துறு போர்வை - உருக்கி ஒன்றாக வார்த்தாற் போன்ற தோல்களின் வேறுபாடு தெரியாமல் இசைத்தலுறும் போர்வையினையும், சுனை வறந்தன்ன இருள் தூங்கு வறுவாய் - சுனை வற்றி உள் இருண்டாலொத்த இருள் செறிந்த உண்ணாக்கினையில்லாத வாயினையும், பிறை பிறந்தன்ன பின் ஏந்து கவைக்கடை - முதற் பிறை பிறந்து ஏந்தியிருந்தாற் போன்ற பின்பு ஏந்தியிருக்கின்ற கவைத்தலையுடைய கடையினையும், நெடும்பணைத் திரள் தோள் மடந்தை முன் கைக் குறுந்தொடி ஏய்க்கும் மெலிந்து வீங்கு திவவின் - மூங்கிலை ஒத்த திரண்ட தோளினையுடைய மகளுடைய முன் கையில் குறிய தொடியை ஒக்கும் நெகிழ வேண்டிய வழி நெகிழ்ந்தும் இறுக வேண்டியவழி இறுகியும் உள்ள வார்க்கட்டினையும், மணி வார்ந்தன்ன மா இரு மருப்பின் - நீலமணி ஒழுகினா லொத்த கருமை நிறத்தையுடைய பெரிய தண்டினையும் உடைய, பொன் வார்ந்தன்ன புரியடங்கு நரம்பின் தொடையமை கேள்வி - பொன் கம்பியாய் ஒழுகினாலொத்த முறுக்கடங்கின நரம்பின் கட்டமைந்த யாழை; இடவயின் தழீஇ - இடத்தோளின் பக்கத்தே அணைத்து;
கருத்துரை : பசிய இலையினை உதிர்த்த பரிய அடியினையுடைய பாதிரியினது பெரிய இதழையுடைய வண்டுமொய்க்கின்ற பூவினைக் கிழித்த அதன் உள்ளிடத்தை ஒத்த நிறமுடைய தோலினையும், பரிய அரையினையுடைய கமுகினது பாளையாகிய அழகிய பசியபூ விரியாமற் கருவாயிருந்தாலொத்த இரண்டு கண்ணும் கூடின செறிந்த துளையினையும், உருக்கி ஒன்றாக வார்த்தாற் போன்ற தோல்களின் வேறுபாடு தோன்றாமல் இயைத்த தோலினையும், சுனை வற்றி இருண்டாற் போன்ற இருள் செறிந்த வறுவாயினையும் பிறை தோன்றி ஏந்தியிருந்தாற் போன்ற பின்பு ஏந்தியிருக்கின்ற சுவையினையுடைய கடையினையும், நெடிய மூங்கிலை ஒத்த திரண்ட தோளினையுடைய மகளின் முன் கையிடத்தே செறித்த குறிய வளையலை ஒத்த வார்க்கட்டினையும், நீல மணி ஒழுகினாற் போன்ற கருநிறமுடைய பெரிய தண்டினையும், பொன் கம்பி போன்ற முறுக்கடங்கின் நரம்பின் தொடையினையுமுடைய யாழினை இடப்பக்கத்தே அணைத்து, என்பதாம்.
அகலவுரை : முதுவேனிற் பருவத்தே யாழை இடப்பக்கத்தே அணைத்தென்க. போர்வையினையும் வாயினையும் கடையினையும் திவவினையும் உடைய யாழெனக் கூட்டுக. பாதிரிப் பூவின் உள்ளகம், சிவப்பு நிறமுடைத்தாகலானும் மிக்க மென்மையுடையதாகலானும் ஈண்டுத் தோலுக்கு உவமையாக எடுக்கப்பட்டது. பச்சை - தோல். பச்சை ஈண்டு நிறமன்று. தோல் என்பதற்குப் பாதிரிப்பூவின் உள்ளக நிறத்தை உவமை கூறினார். கானக் குமிழின் கனி நிறங் கடுப்பப் புகழ்வினைப் பொலிந்த பச்சை (225-26) எனச் சிறுபாணாற்றுப்படையினும், புதுவது புனைந்த பொன்போற் பச்சை (28) என மலைபடுகடாத்தினும், விளக்கழலுருவின் விசியுறு பச்சை (5) எனப் பொருநராற்றுப் படையினும், இங்ஙனமே பச்சை நிறமன்மைக்கு வேறு வேறு நிறவுவமைகள் எடுத்தோதுதல் காண்க. ஊட்டுறு - நிறமூட்டப் பெற்ற.
பரியரை - பருத்த அடிமரம். கருவிருந்தன்ன - விரியாமல் கருவாகப் பாளையினுள்ளே அடங்கியிருந்தாலொத்த என்க. இப்பாளையிற் கருவைப் பிரித்துக்காணின், கருக்கள் அடுக்கிச் செறியப்பட்டு அவற்றூடே சிறிய துளைகள் உடைமையும் காணலாம். உருக்கி வார்த்தாற் போன்ற தையல் என்றது, தோலின் துன்னர் தொழிற்றிறந் தெரித்தோதியவாறு. வாய் என்னும் பெயர்க்கேற்பத் தொழிலின்மையின் வறுவாய் என்றார் எனினுமாம். அண்ணா வில்லா அமைவரு வறுவாய் என்பார் பொருநராற்றுப்படையில், சுனை நீர் வறந்துழி அகத்தே இருண்டிருக்குமாறு போல இருண்டிருக்கும் வாய் என்க. பிறை பிறந்தன்ன - பிறை தோன்றினாற்போன்ற என்க. பிறையின் இருமுனை போன்று கவைத்தலையுடைய கடை என்க. இது நரம்பேற்றற் பொருட்டு யானைக்கோட்டால் பிறை வடிவாகச் செய்த ஒரு யாழுறுப்பு. மகளிர் முன்கையிற் செறிந்த வளையல் வார்க்கட்டிற்கு உவமை. அம்முன்கை யாழின் தண்டிற்கு உவமையாதலின், அது தானும் அழகிய முன்கை என்பார். நெடும்பணைத்திரள்தோள் மடந்தை முன்கை என உவமையைச் சிறப்பித்தோதினார் : என்னை? திரண்ட தோளிற் கேற்ப முன்கையும் இருத்தல் இயல்பாகலின், மாயோன் முன்கை ஆய்தொடி கடுக்கும், கண்கூ டிருக்கைத் திண்பிணித் திவவின் (14-15) எனப் பொருநராற்றுப்படையினும் கூறுதல் காண்க.
இனி, மெலிந்து வீங்கு திவவின் என்றதற்கு நெகிழவேண்டுயிடத்து நெகிழ்ந்து இறுகவேண்டியவிடத்து இறுகிய வார்க்கட்டு என்றனர் நச்சினார்க்கினியர் இதற்கு ஒலியால் மெலிந்து வரவரப் பெருகிய வார்க்கட்டு என்பாருமுளர். இவர்கள் அவிழ்ந்து வீங்கு திவவின் எனவரும் சிறுபாணாற்றுப்படைத் தொடர் தாங்கூறும் பொருளோடியையாமையான் அதன்கண் அவிழ்ந்து, என்பதனை அமிழ்ந்து என்று திருத்துவர். இறந்துபோன யாழின் இயல்பினை யாம் நன்கு அறிந்து கூறுதலருமைபாகலின், இங்ஙனம் பாடந்திருத்திப் பொருள்கோடல் சாலாதென்க. மருப்பு - யாழ்க்கோடு. இது கரிய நிறமுடைத்தாகலின் மணி வார்ந்தன்ன மாயிரு மருப்பென்றார். நரம்பு தன்கட் புரிகள் உடைத்தாயினும் அவை நன்கு இயைந்து இருத்தற்குப் பொன் கம்பியை உவமை கூறினார். அடங்குபுரி நரம்பென்பர் (227) சிறுபாணாற்றுப்படையில். சுகிர்புரி நரம்பென்பர் (22) மலைபடு கடாத்து. தொடை-தொடுத்தல்.
இனி, இவ்வியாழ் தானும், நால்வகைத்தாய் ஐம்பத்தோருறுப்புக்களையுடைய தென்ப. இவற்றின் பெயர், பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் என்பன இவை நாலும் பெரும்பான்மைய; சிறுபான்மையான் வருவன பிறவுமுள; என்னை?
பேரியாழ் பின்னும் மகரஞ் சகோடமுடன்
சீர்பொலியும் செங்கோடு செப்பினார் - தார்பொலிந்து
மன்னுந் திருமார்ப வண்கூடற் கோமானே
பின்னு முளவே பிற (சிலப். 3: 26. உரைமேற்)
என்றும், அவற்றுள் தந்திரி கரமென்பது நரம்பு துவக்குதற்குத் தகைப்பொழிய இருசாண் நால்விரல் நீளமாகக் குறுக்கிடத்துச் சேர்த்தும் ஐம்பத்தோருறுப்பு, (சிலப்-13:107) என்றும் வரும் அடியார்க்கு நல்லார் உரை கண்டுணர்க. ஈண்டுக் கூறப்படும் பேரியாழ் இருபத்தொரு நரம்புடைத்தென்ப. இதனை,
ஒன்று மிருபதும் ஒன்பதும் பத்துடனே
நின்றபதி னான்கும் பின்னேழும் - குன்றாத
நால்வகை யாழிற்கும் நன்னரம்பு சொன்முறையே
மேல்வகை நூலோர் விதி (சிலப்.3: 26,உரைமேற்.)
எனவரும் வெண்பாவானறிக.
கேள்வி : யாழிற்கு ஆகுபெயர் என்க.
நல்லெழின் மடந்தை நல்லெழில் காட்டி
அல்லியம் பங்கயத் தயனினிது படைத்த
தெய்வஞ் சான்ற தீஞ்சுவை நல்யாழ்
மெய்பெற வணங்கி மேலொடு கீழ்புணர்த்
திருகையின் வாங்கி இடவயின் இரீஇ (சிலப்.8: 23-9 அடி - உரைமேற்.)
என்றோதுபவாகலான், இடவயிற் றழீஇ என்றார். யாழ் வாசிப்போர்க்கு அதன்கண்ணுள்ள ஆர்வமுடைமை தோன்றத் தழீஇ என்றார்.
பாணன் தன்மை
17-22 : வெந்தெறல் .................... பாண
பொருள் : வெந்தெறல் கனலியொடு மதிவலந் திரிதரும் - வெய்ய தெறுதற் றொழிலையுடைய ஞாயிற்றோடே திங்களும் வலமாகத் திரிதலைச் செய்யும், தண்கடல் வரைப்பில் தாங்குநர்ப் பெறாது -குளிர்ந்த கடல் சூழ்ந்த உலகில் நின்னைப் புரப்பாரைப் பெறாமல், பொழி மழை துறந்த புகை வேய் குன்றத்து - பெய்கின்ற மழை துறத்தலாலே நிலத்தின்கண் எழுந்த ஆவி சூழ்ந்த மலையிடத்தே, பழுமரம் தேரும் பறவைபோல - பழுத்த மரத்தைத் தேடித் திரியும் பறவைகளைப்போல, கல்லென் சுற்றமொடு கால்கிளர்ந்து திரிதரும் - பசி மிகுதியால் அழுகின்ற சுற்றத்துடனே ஓரிடத்திராமல் பயனின்றி ஓடித்திரிதலைச் செய்யும், புல்லென் யாக்கைப் புலவுவாய்ப் பாண-பொலி வழிந்த வடிவினையும் கற்ற கல்வியை வெறுத்துக் கூறுகின்ற வாயினையும் உடைய பாணனே!
கருத்துரை : ஞாயிறும் திங்களும் வலம் வருதலையுடைய குளிர்ந்த கடல் சூழ்ந்த உலகில், நின்னைப் புரப்பாரைப் பெறாமல் மழை வறந்தமையாலே ஆவியெழுகின்ற மலையின்கண் பழுத்த மரத்தை நாடித் திரியும் பறவைபோன்று, அழுகை ஒலியையுடைய சுற்றத்தோடே பயமின்றி ஓடித்திரிதலைச் செய்யும் பொலிவற்ற யாக்கையினையும் கற்ற கல்வியை வெறுத்துப்பேசுகின்ற வாயையும் உடைய பாணனே என்பதாம்.
அகலவுரை : தெறல் - ஈண்டுச் சுடுதற் றொழின்மேனின்றது. அம்முதுவேனிலின் கொடுமை நினைந்தானாகலின் வெந்தெறற் கனலி என்றான். முன்னும் கடுந்தெறல் வேனில் என்றமை காண்க. தண் கடல் வரைப்பென்றது இகழ்ச்சிக் குறிப்பு. தண்கடல் வரைப்புடைத்தாயினும் தன்கண் தாங்குநர் அரியராயது என்றவாறு. பொழிமழை துறந்த புகைவேய் குன்றம், வள்ளலார்கள் இல்லையான வச்சையர் நிறைந்த உலகிற்கு உவமை என்க. புகை நல்குரவிற்கு உவமை. அத்தகைய குன்றத்தே பழுமரம் அரிதாகலின் தேரும் என்றார், தேர்தல் - ஆராய்தல்.
பழுமரம் வள்ளல்களுக்கு உவமை. பறவை : பரிசிலர்க்குவமை. நீயிரும், கனிபொழி கானம் கிளையொ டுணீஇய, துனைபறை நிவக்கும். புள்ளின மான, (53-5) என மலைபடுகடாத்தினும், பழுமர முள்ளிய பறவையின் எனப் பொருநராற்றுப் படையினும், வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி, (47) எனப் புறத்தினும் பிற சான்றோரும் பழுமரந்தேரும் பறவையோடு பரிசிலரை ஒப்புவித்தல் காண்க. ஆசிரியர் திருவள்ளுவனார் வண்மையுடையோரைப் பழுமரத்தோடு உவமித்தலை,
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றாற் செல்வம்
நயனுடை யான்கட் படின் (குறள் - 216)
என ஓதுமாற்றான் உணர்க. பறவையாயின் சிறகினாற் பறக்கும். நீயிர் அதுவுமன்றிக் காலாலேயே திரிவீர் என்றிரங்கிக் கால்கிளர்ந்து திரிதரும் என்றான். திரிதரும் என்றது, பயனின்றி வீணாகத் திரிகின்ற என்றபடி. நல்குரவென்னும் நசையின் மெய்ப்பாடுகள் நன்கு உடலிலே தோன்றுதலால் புல்லென் யாக்கை என்றான். புலவுவாய்ப்பாண என்றதற்குப் புலானாறும் வாயையுடைய பாணனே எனப் பொருள் கொள்ளல் யார்க்கும் எளிதே யாயினும், கற்றகல்வியை வெறுத்துரைக்கும் பாணனே என நுண்பொருள் கண்டுணர்த்திய நச்சினார்க்கினியர் ஆற்றல் போற்றற்பாலதாம். பாண் : அண்மை விளி. இங்ஙனம் பொருள் காண்டற்கேதுவாவது கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது சில் செவித்தாகிய கேள்வி நொந்து நொந்து ஈங்கெவன் செய்தியோ பாண! எனவரும் (புறம்) பண்டையிலக்கிய உணர்ச்சியே யாதல் அவர் குறிப்பான் உணர்க.
தொண்டைமான் இளந்திரையன்பாற் பரிசில்பெற்றுவரும் பாணன் தன்மை
24-28 : பெருவறங் கூர்ந்த .................. வருதும்
பொருள் : பெருவறம் கூர்ந்த கானம் - பெரிய வற்கடமிக்க காட்டில், கல்லெனக் கருவி வானம் துளி சொரிந்தாங்கு - வாழும் உயிர்கள் மகிழ்ந்து கல்லென்று ஆரவாரிக்கும்படி தொகுதியை யுடைய முகில் மழையைச் சொரிந்தாற் போன்று, பழம் பசி கூர்ந்த எம் இரும்பேர் ஒக்கலொடு - தொன்றுதொட்ட பசிமிக்க எம்முடைய கரிய பெரிய சுற்றத்தோடே, வழங்கத் தவாஅப் பெருவளன் எய்தி -யாங்கள் பிறருக்குக் கொடுக்கவும் மாளாத பெரிய செல்வத்தைப் பெற்று, வாலுளைப் புரவியொடு வயக் களிறு முகந்து கொண்டு யாம் அவணின்றும் வருதும் - வெள்ளிய தலையாட்டத்தை யுடைய குதிரையோடு வலியினையுடைய யானைகளையும் வாரிக்கொண்டு யாம் அவன் ஊரினின்றும் வாராநின்றேம்.
கருத்துரை : பெரிய வற்கடம் மிக்க காட்டகத்தே ஆரவாரம் உண்டாகும்படி முகில் ஞெரேலென மழை பொழிந்தாற்போன்று தொன்றுதொட்டுப் பழம்பசியாலே வருந்திய எம்முடைய பெரிய சுற்றத்தாரோடு யாம் பிறர்க்குத் கொடுக்கக் கொடுக்கக் குறையாத அளவிறந்த செல்வத்தை அவ் வள்ளல் வழங்குதலாலே பெற்று மேலும் ஒப்பனை செய்யப்பட்ட குதிரைகளையும் யானைகளையும் வாரிக் கொண்டு அவ் வள்ளலின் ஊரினின்று யாம் இப்போது வாரா நின்றோம், என்பதாம்.
அகலவுரை : பெருவறம் - கொடிய வற்கடம் (பஞ்சம்) : கூர்தல் - மிகுதல். கானம் வானத்தை நோக்கியே வாழ்வது ஆதலின், அதனை, உவமையாக எடுத்தார். பரிசிலர் வள்ளலையே நோக்கி வாழும் இயல்பினர் ஆதல்பற்றி என்க. வறங்கூர்ந்த கானம் நல்கூர்ந்த பாணர்க்கு உவமை. கானம் கல்லென என்றது, காட்டில் வாழ்வன ஆரவாரம் செய்யும்படி என்றவாறு. இனி, கல்லெனத் துளிசொரிந்தாங்கெனினுமாம். நெடிது காலம் தாங்குநர்ப் பெறாமையான் நல்குரவு மிக்குப் பசியாலுழந்து கிடந்தேம் என்பான், பழம்பசி கூர்ந்த எம் இரும்பேரொக்கலொடு என்றான். நின்னினும் மிக்க சுற்றமுடையேன் என்பான் இரும்பேரொக்கல் என்றான்.
இப்போதோ அவ்வள்ளல் வழங்கிய பொருள்கள் யாங்களும் எத்துணையும் பிறர்க்கு வழங்கினும் குறையாது ஆதலின், இரவலராய்ச் சென்றேம் புரவலராய் மீண்டும் வருகின்றேம் என்பான், வழங்கத் தவாஅப்பெருவளன் எய்தி என்றான் : வள்ளல்கள் போன்றே கலைதேர் வாழ்க்கைப் பரிசிலரும் தாம் பொருள் பெற்றுழி வல்லாங்கு வாழ்தும் என, அவற்றைப் போற்றாமல் பிறர்க்கு வழங்கும் பண்புடையாராதலை,
வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி
நெடிய என்னாது சுரம்பல கடந்து
வடியா நாவின் வல்லாங்குப் பாடிப்
பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி
ஓம்பாது உண்டு கூம்பாது வீசி
வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கை (புறம்:74)
என்றும்,
நின்னயந் துறைநர்க்கும் நீநயந் துறைநர்க்கும்
பன்மாண் கற்பின்நின் கிளைமுத லோர்க்கும்
கடும்பின் கடும்பிசி தீர யாழநின்
நெடுங்குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும்
இன்னோர்க் கென்னாது என்னொடுஞ் சூழாது
வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்
எல்லார்க்கும் கொடுமதி மனைகிழ வோயே
பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்துவேற் குமணன் நல்கிய வளனே! (புறம் : 163)
என்றும் வருவனவற்றால் அறிக. நின் வறுமை தீரும்படி யானே பொருள் வழங்குவன். ஆயினும் நின்னோடொத்த பரிசிலன்பாற் பரிசில் கொள்ளல் வரிசைக்கு வருந்தும் நினக்குத் தகவன்றாதலன் என்னைப் போன்று பெருவளனெய்திவரும் பொருட்டு உன்னை அவ் வள்ளலிடத்தே ஆற்றுப்படுத்துவல் என்பது கருத்து. அவன் என்றது, இவ்வுலகத்தே பழுமரம் தேரும் பறவைபோலக் கால்கிளர்ந்து திரிந்தும் காண்டற்குரிய அவ்வள்ளல் ஊரினின்றும் என்பதுபட நின்றது. எனவே, இப்போது கச்சியோனே கைவண் தோன்றல் நீ சென்று காண்டற்கு இது நல்ல செவ்வி என்றானுமாயிற்று.
வேனிற்காலத்தே கேள்வி யிடவயிற் றழீஇத் தாங்குநர்ப் பெறாது திரிதரும் பாண! பெருவளன் எய்திப் பரி களிறு முகந்துகொண்டு யாம் அவணின்றும் வருதும் என, இத் தொடரை இயைத்துக் கொள்க. இனி, 25-நீயிரும் என்பது தொடங்கி, 45 - சிறக்க நின்உள்ளம் என்னுந் துணையும் ஒரு தொடர்; இதன்கண், அவ் வள்ளலின் மாண்பும் அவன்றன் சிறப்பும் பிறவும் கூறப்படும்.
தொண்டைமாண் இளந்திரையனின் மாண்பு
28-38 : நீயிரும் .............. கெடுக நின்னவலம்
பொருள் : நீயிரும் - நீங்களும், இருநிலம் கடந்த திருமறு மார்பின் முந்நீர்வண்ணன் பிறங்கடை - பெரிய நிலத்தை அளந்துகொண்ட திருவாகிய மறுவையணிந்த கடல்போலும் நிறத்தையுடையவன் பின்னிடத்தோனாய் அந் நீர் திரைதரு மரபின் உரவோன் உம்பல் - அக் கடலின் திரைகொணர்ந்து ஏறவிட்ட முறைமையினையுடைய சோழன் குடியிற்பிறந்தோனாகிய, மலர்தலை யுலகத்து மன்னுயிர் காக்கும் முரசு முழங்குதானை மூவருள்ளும் - அகன்ற இடத்தையுடைய உலகத்தில் நிலைபெற்ற உயிர்களைப் புரக்கும் முரசு முழங்குகின்ற நாற்படையினையும் உடைய சேர சோழ பாண்டியர் என்னும் மூவரிலும், இலங்கு நீர்ப்பரப்பின் வளை மீக்கூறும வலம்புரியன்ன வசைநீங்கு சிறப்பின் - விளங்குகின்ற நீரையுடைய கடலிடத்துப் பிறந்த சங்கில் மேலாக உலகம் கூறாநின்ற வலம் புரிச்சங்கை யொத்த குற்றந் தீர்ந்த தலைமையினையும், அல்லது கடிந்த அறம்புரி செங்கோல் - மறத்தைப் போக்கின அறத்தை விரும்பின செங்கோலையும், பல்வேல் திரையற் படர்குவிராயின் - பல வேற்படையினையும் உடைய தொண்டைமானிளந்திரையன் பாற் சேறலை எண்ணுவீராயின், கேள் அவன் நிலையே - அத் திரையவள்ளலின் தன்மையை யான் கூறுவேன் கேட்பாயாக! கெடுக நின் அவலம் - கேட்டமாத்திரையானே நின் மனக்கவற்சி கெட்டொழிவதாக!
கருத்துரை : நீங்களும், பெரிய நிலத்தை அளந்து கொண்டவனும் திருமகளாகிய மறுவினை அணிந்த மார்பை உடையானும் கடல் வண்ணனுமாகிய திருமால் மரபினனாய், அக் கடற்றிரையாலே கரை சேர்க்கப்பட்ட சோழமன்னன் மரபினனாய்ப் பெரிய உலகத்தே நிலைபெற்று வாழும் உயிர்களைப் புரக்கும் சேர சோழ பாண்டியர் ஆகிய மூவரினும் வைத்துக் கடலிலே பிறந்த சங்குகளிலே வலம்புரிச் சங்கையே உலகம் புகழுமாறுபோலப் புகழப்பட்டவனாய், மறம் போக்கி அறத்தை நிலைநிறுத்திய செங்கோலையும் பலவாகிய வேற்படையையும் உடையனாய் விளங்கும் தொண்டைமானிளந்திரையன் பாற் சேறலை எண்ணுவீராயின், அவன் தன்மையை யான் கூறுகின்றேன் கேட்பாயாக! கேட்ட மாத்திரையே உன் நல்கூரின்னல் ஒழிவதாக! என்பதாம்.
அகலவுரை : நீயிரும் திரையற் படர்குவிராயிற் கேள் அவன் நிலை எனக் கூட்டுக. இருநிலம் கடந்த திருமறு மார்பின் முந்நீர்வண்ணன் என்றது, திருமாலை. திருமால் மாவலிபாற் சென்று மூவடி மண்ணிரந்து பெற்று இவ்வுலகத்தை ஒரே அடியில் அளந்துகொண்டான் என்பது புராணகதை. இதனை, மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகை முடியத், தாவிய சேவடி சேப்ப என்னும் சிலப்பதிகாரத்தினும், திருமால் சமயத்தோர் நூலுள்ளும் காண்க. திரு-திருமகள். திருமகளை மார்பில் அணிந்துள்ளவன் என்றபடி, பிறங்கடை - பின் வந்தோன், மரபினன் என்றவாறு.
முந்நீர் என்று முன்னர்க் கூறியதனால் அந்நீர் எனச் சுட்டினார். அந்நீர் - அம் முந்நீராகிய கடல். திரைதரு மரபின் உரவோன் என்றது, நாகப்பட்டினத்துச் சோழன் பிலத்துவாரத்தால் நாகலோகத்தே சென்று நாககன்னிகையைப் புணர்ந்த காலத்து அவள் யான் பெற்ற புதல்வனை என் செய்வேன் என்றபொழுது, தொண்டையை அடையாளமாகக் கட்டிக் கடலிலே விடஅவன் வந்து கரையேறின், அவற்கு யான் அரசவுரிமை எய்துவித்து நாடாட்சி கொடுப்பலென்று அவன் கூற அவளும் புதல்வனை அங்ஙனம் வரவிடத் திரை தருதலின் திரையன் என்று பெயர் பெற்ற கதை கூறினார், என்பர் ஆசிரியர் நச்சினார்க்கினியர்.
இனித் திரையன் என்பதற்கு இவ்வரலாற்றினை ஒவ்வாராய்க் கடல் தந்த மரபினன் எனக் கூறி ரா இராகவையங்கார் அவர்கள் தொண்டைமானிளந்திரையன் சோழர் குடியிற் பிறந்தவன் அல்லன் என்றும் பல்லவவேந்தர் மரபினன் என்றும் அதற்குச் சான்றுகள் பல காட்டித் தம் ஆராய்ச்சி நூலுட் கூறியுள்ளார். இவற்றை யாம் இப் பெரும்பாணாற்றுப்படை பாட்டுடைத் தலைவன் வரலாற்றில் விரியக் காட்டியுள்ளேம் ஆதலின் ஆண்டுக் காண்க. ஈண்டுரைப்பிற் பெருகும்.
இனி ஈண்டுத் திருமால் மரபினன் என்றது, இராமன் குலத்தே பிறந்தோன் என்பதாக நச்சினார்க்கினியர் கொள்வர். இருநிலங் கடந்த திருமறு மார்பின் முந்நீர் வண்ணனை ஈண்டுப் புலவர் எடுத்தோதியது திருமால் நின்ற வடவேங்கடம் அவன் நாட்டதாகலானும் இளந்திரையன் திருமால்பாற் பேரன்புடையனாகலானும் என்க. உம்பல் - வழித்தோன்றல். புலவர், தமிழரசர் மூவரையும் நினைத்துழி அவர்தம் சிறப்பெல்லாம் தோன்ற மலர்தலை யுலகத்து மன்னுயிர் காக்கும் முரசு முழங்குதானை மூவர் என்றோதுதல் காண்க. மன்னுயிர் காத்தல் - அவர்தம் அளிச்சிறப்பினையும், முரசு முழங்குதானை யுடைமை அவர்தம் தெறற் சிறப்பினையும் காட்டும் குறிப்பேதுக்களாதலறிக. மூவர் என்றது ஈண்டுச் சிறப்பால் சேர சோழ பாண்டியர்களைக் குறித்து நின்றது. மூவருள்ளும் என ஈண்டு ஆசிரியர் உருத்திரங் கண்ணனார் இளந்திரையனை இம்முக்குடியுள் வைத்து ஒரு குடியினனாதலைத் தெரித்தோதுதல் காண்க.
ஒத்த கடலிலே தோன்றினும் ஏனைச் சங்குகளினும் வலம்புரிச் சங்கு சிறந்தாற்போன்று சேர சோழ பாண்டியர் என்னும் மூவேந்தர் குடியாகிய ஒத்த தமிழ்க்குடியிலே பிறந்த மன்னர் பலருள்ளும் இவன் சிறப்புடையன் என்றவாறு. அல்லது - ஈண்டு அரசறகாகாதென ஆன்றோர்களால் விலக்கப்பட்ட தீவினைகளும் குடிமக்கள் செய்யும் தீவினைகளுமாம்; அல்லது சாதியொருமை. அறம் - ஈண்டு அரசியலறமும் குடிமக்கள் அறமும் என்க. செங்கோல் அளியுடைமைக்கும் பல்வேல் தெறலுடைமைக்கும் அறிகுறிகளாக எடுத்தோதினர். திரையன் - தொண்டைமானிளந்திரையன், படர்தல் - நினைத்தல். படர்குவிராயின் என, எதிர்வந்தோர் அனைவரையும் உளப்படுத்திப் பன்மையாற் கூறிப் பின்னர் அப்பாணர் தலைவனை நோக்கிக் கூறுகின்றானாகலின், கேள் என ஒருமையாலுரைத்தான் என்க. அவன் நிலை கேட்டலுமே, நின்னெஞ்சில் இனிப் பொருள்பெறுதல் திண்ணம் என்னும் எண்ணந்தோன்றலும் அவ்வழி வறுமைத்துயர் அகலுதலும் உறுதியேயாகலின் கெடுக நின் அவலம் என எதிர்மறையானே வாழ்த்தினான் என்க.
தொண்டைமான் நாட்டின் அறப்பண்பாடு
39-45 : அத்தம் .................. நின்உள்ளம்
பொருள் : அத்தம் செல்வோர் அலறத் தாக்கி - வழிப்போவாரைக் கதறும்படி வெட்டி, கைப்பொருள் வெளவுங் களவு ஏர் வாழ்க்கைக் கொடியோர் இன்று அவன் கடியுடை வியன்புலம் - அவர்கள் கையிலுள்ள பொருளைக் கைக்கொள்ளும் களவே உழவுபோலும் இல்வாழ்க்கைத் தொழிலாகவுடைய கொடுமையையுடையோரைத் தன்பால் இலதாம் அவ்வள்ளலின் காவலையுடைய அகன்றநாடு, உருமும் உரறாது - மேலும் அந்நாட்டகத்தே இடியேறும் இடியாது, அரவும் தப்பா - பாம்புகளும் கொல்லுதலைச் செய்யா, காட்டுமாவும் உறுகண் செய்யா - காட்டிடத்துப் புலி முதலியனவும் வருத்தம் செய்யமாட்டா ஆதலானே, வேட்டாங்கு அசைவுழி அசைஇ நசைவுழித் தங்கி - நீ விரும்பியபடியே இளைத்தவிடத்தே இளைப்பாறித் தங்கவேண்டும் என்று விரும்பியவிடத்தே தங்கி, சென்மோ இரவல சிறக்க நின் உள்ளம் - செல்வாயாக! இரத்தல் தொழில் வல்லோனே நின் நெஞ்சம் சிறப்புறுவதாக!
கருத்துரை : வழிச் செல்வோர் அலறும்படி வெட்டி அவர்களுடைய கைப்பொருளைக் கவருகின்ற களவினை ஏர்த்தொழில் போன்று தம் வாழ்க்கைக்குத் தொழிலாகக் கொண்டுள்ள கொடுமையோரை அந்நாடு உடையதன்று; மேலும், இடியும் அவன் நாட்டில் இடித்து இடுக்கண் செய்யாது; பாம்புகள் கொல்லமாட்டா; காட்டுவிலங்குகள் நலியமாட்டா; ஆதலானே, அவ்வறந்திகழ் நாட்டில் நீ விரும்பியவிடத்தே அஞ்சாதிருந்து இளைப்பாறி நின்னை விரும்பியோரிடத்தே தங்கிப் போகக் கடவாய், உன் நெஞ்சம் இன்புற்றுச் சிறப்பதாக என்பதாம்.
அகலவுரை : அத்தம் - வழி. அறையும் பொறையும் ஆரிடை மயக்கமும், நிறைநீர் வேலியு முறைபடக்கிடந்தவிந், நெடும்பேரத்தம் நீந்திச் சென்று (சிலப் . 11: 68-70) என்புழியும், அஃதப்பொருட்டாதல் காண்க. அலற -அஞ்சி ஓலமிட. தம்மைக் கண்டவுடன் அஞ்சி அலறுவாரையும் இரங்காது தாக்கி என்றவாறு. கைப்பொருள் - அவர் பால் உள்ள பொருள். வெளவும்: கவர்கின்ற. ஏர்த்தொழில் வாழ்க்கைக்குப் பயனாக மேற்கொள்ளுவது போன்று இவர் களவுத்தொழிலை மேற்கொண்டு அதனாலேயே உயிர் வாழ்வோர் என்றவாறு. பிறர் பொருள் கவர்தலோடன்றி அவரையும் அலறத் தாக்குவோராகலின் கொடியோர் என்றார். அவன் புலம் கொடியோரை இன்று என்க. இனிக் கொடியோர் தன் நிலவரைப்பின் இல்லாமை அவன் அவர்களைக் கண்டு ஒறுத்துவிட்டமையாலன்று. அவனது கடவுட்டன்மை வாய்ந்த செங்கோலின் மாட்சியாலே அந்நிலத்தே களவு முதலியன செய்யும் கொடியோர் இலராயினர் என்பார். அக்கடவுட்டன்மை யுடைமைக்குச் சான்று மேலே கூறுகின்றார் என்க. அஃது அவன்நாட்டில் உருமு முதலியனவும் உறுகண் செய்யா என்பதாம். உறங்குமாயினும் மன்னவன் றன்னொளி கறங்கு தெண்டிரை வையகங் காக்குமால் (248) என்றார். சீவகசிந்தாமணியினும். கடியுடை வியன்புலம் என்றது, அகன்று கிடப்பினும் யாண்டும் அவன் அருளாட்சியின் காவல் நிலவுகின்ற தென்பதுபட நின்றது.
இவ்வடிகளோடே,
கோள்வ லுளியமும் கொடும்புற் றகழா
வாள்வரி வேங்கையு மான்கண மறலா
அரவும் சூரும் இரைதேர் முதலையும்
உருமும் சார்ந்தவர்க் குறுகண் செய்யா
செங்கோற் றென்னவர் காக்கும் நாடு (சிலப்.13:5-9.)
எனவரும் சிலப்பதிகாரப் பகுதியை ஒப்புக்காண்க. இவ்வடிகட்கு அடியார்க்கு நல்லார் கூறிய விளக்கவுரையாவது :
இவற்றான் இவனாணையும் ஐவகை நிலத்திற்கு உரிமையும் கூறினார் என்பதாம். இவ்விளக்கவுரையும் ஈண்டு ஏற்ற பெற்றி ஆராய்ந்து கொள்க. இதனால், அவன் நாட்டில் நீயிர் ஆறு செல்லுங்கால் ஒரு சிறிதும் அஞ்சாதே செல்லக் கடவீர் என அறிவுறுத்தப்பட்டமை காண்க. உரும் - இடியேறு. உரறுதல்-முழங்குதல்: இடித்தற்கு ஆகுபெயராகக் கொள்க. தப்புதல்-கொல்லுதல். ஆளன் றென்று வாளிற்றப்பார், (புறம்-74-2) மைந்துடை வாளிற் றப்பிய வண்ணமும் (மணி-பதிகம்) வாளிற்றப்பிய வல்வினை, (மணி - 21:60) என்புழியும் அஃதப்பொருட்டாதல் உணர்க. அசைவுழி - இளைத்தவிடத்தே; அசைஇ - இளைப்பாறி. நசைவுழி - நும்மை விரும்பியவிடத்தே. எனவே நீயிர் செல்லும் வழியில் நும்மை விரும்புவார் பலருளர் என்றவாறாயிற்று. சென்மோ : வியங்கோள். மோ : முன்னிலையசை. முன்னர்க் கெடுகநின் அவலம் என எதிர்மறை முகத்தான் வாழ்த்தியவன் ஈண்டும் அவன் நலனெய்துதலில் தனக்குள்ள ஆர்வந்தோன்ற உடன்பாட்டானே சிறக்க என வாழ்த்தினன் என்க. நீயிரும், முந்நீர்வண்ணன் பிறங்கடை உம்பல் திரையற் படர்குவீராயின் கேள்! நின் அவலம் கெடுக! கொடியோர் இன்று அவன் வியன்புலம், ஆதலானே அசைஇத் தங்கிச் சென்மோ இரவல நின் உள்ளம் சிறக்க! என இத்தொடரை அணுக இயைத்துக் கொள்க.
இனி, 46-முதல், 65 - வரை ஒருதொடர்.
உமணர் சகடம்
46-50 : கொழுஞ்சூட்டருந்திய ............. சகடம்
பொருள் : கொழுஞ் சூட்டு அருந்திய திருந்து நிலை ஆரத்து முழவின் அன்ன முழுமர உருளி - கொழுவிய வட்டைகளாலே விழுங்கப்பட்டுத் திருந்திய நிலையினையுடைய ஆரத்தையுடைய மத்தளம் போன்று முழுமரத்தாலே சடைந்த உருளியினையும், எழுஉப் புணர்ந்தன்ன பரூஉக்கை நோன்பார் - இரண்டு கணைய மரங்களைச் சேர்த்தாலொத்த பருத்த கைகளையுடைய வலிய பாரையும், மாரிக் குன்றம் மழை சுமந்தன்ன - மழைக்காலத்தே மலை முகிலைச் சுமந்தாற் போன்று, ஆசை வேய்ந்த அறைவாய்ச் சகடம் - தேர்த்தாளிப பாய் வேய்ந்த செல்லும் வழியை அறுத்தலையுடைய சகடம்.
கருத்துரை : கொழுவிய வட்டையிலே செருகப்பட்டுத் திருந்திய நிலையினையுடைய ஆரத்தையுடைய மத்தளம் போன்று, முழுமரத்திலே கடையப்பெற்ற உருளினையும், கணைய மரங்களை யிணைத்தாற் போன்ற பரிய கைகளையுடைய வலிய பாரினையும். கார்ப்பருவத்தே மலை, முகில் வேய்ந்திருப்பது போன்று கரிய தேர்த்தாளிப் பாயால் வேயப்பட்டதுமாகிய, வழியை அறுத்துச் செல்லுதலையுடைய சகடம் என்பதாம்.
அகலவுரை : ஆர்வை வேய்ந்த என்றும் பாடம். இப்பாடத்திற்கு நிறைந்த வரகு வைக்கோலாலே வேய்ந்த எனப் பொருள் கூறுக ஆர்+வை, எருதுண்ணும் வைக்கோலுமாம். பாலைநிலத்திடையேயும் கொண்டு போயினர் என்க. சூடு-வட்டை: உருளையின் மேற்சூடென்க. இவ் வட்டையிற்றுளை செய்து ஆர்கள் செருகப்பட்டிருத்தலால், சூட்டு அருந்திய ஆரம் என்றார். அருந்துதல் - உண்ணல். ஆர்கள் திருத்தமுற நிற்றலே உருளைக்குச் சிறப்பாகலின் திருந்து நிலை ஆரம் என்றார். பரூஉக்கை - பரிய கைமரம்; பார்கோக்கும் சட்டம்.
பார் - பழுமரம். மாரிக் குன்றம் -மாரிக் காலத்துக் குன்றம் என்க. குன்றம் மாரி மழை சுமந்தன்ன என மாறிக் கூட்டினுமமையும். ஆரை - தேர், தாளிப்பனை யோலையாற் செய்த பாய் என்ப. அறைவாய் - அறைத்துச் செல்லும் வாயையுடைய எனினுமாம். வாய்அறை சகடம் என மாறி வழியை அறுத்துச் செல்லும் சகடம் எனினுமாம். சகடம் வண்டி.
உமண மகளிர் வண்டி ஓட்டுதல்
51-58 : வேழம் .................. துரப்ப
பொருள் : வேழம் காவலர் குரம்பை ஏய்ப்பக் கோழி சேக்கும் கூடுடைப் புதவின் - யானையைப் புனத்திற் றின்னாமல் காக்கின்ற தொழிலையுடையார் இதண் மேலே கட்டின குடிலை ஒப்பச் சிறுகக் கட்டின கோழி கிடக்கும் கூட்டையுடைத் தாகிய குடிலின் வாயிலிலே, முளை எயிற்று இரும்பிடி முழந்தாள் ஏய்க்கும் துளை அரைச் சீறுரல் தூங்கத் தூக்கி - மூங்கில் முளைபோலும் கொம்பினையுடைய கரிய பிடியினது முழந்தாளை ஒக்கும் துளையைத் தன்னிடத்தேயுடைய சிறிய உரலை அசையும்படி தூக்கி, நாடக மகளிர் ஆடுகளத்து எடுத்த விசி வீங்கு இன்னியம் கடுப்பக் களிறு பிணித்து - நாடகம் ஆடும் மகளிர் ஆடுங்களத்தே கொண்டுவந்த வாராற் பிணித்தல் இறுகின இனிய முழவை ஒப்பக் கயிற்றாலே வரிந்து, காடி வைத்த கலனுடை மூக்கின் - காடி வைத்த மிடாவினையுடைய மூக்கணை மீதிருந்து, மகவுடை மகடூஉப் பகடு புறந் துரப்ப - குழவியைக் கைக்கொண்ட மகள் எருத்தை முதுகிலே அடிப்ப;
கருத்துரை : புனத்தே யானை தின்னாமற் காவல் செய்வோர் இதண் மேலே கட்டிய குடிலை ஒப்பச் சிறுகக் கட்டின, கோழிகிடக்கும் கூட்டினையுடைத்தாகிய குடிலின் வாயிலிலே, மூங்கில் முளை போலும் கொம்பினையுடைய பெண்யானையின் முழந்தாளை ஒத்ததும், துளையிடப்பட்ட அரையை உடையதுமாகிய சிறிய உரலை அசையும் படிதூக்கிக் கூத்தாடுகின்ற மகளிர் கூத்தாடும் களத்திலே கொணர்ந்த வாராலலே இறுக்கிக் கட்டப்பட்ட மத்தளத்தை ஒப்பக் கயிற்றாலே வரிந்து, காடி வைக்கப்பட்ட மிடாவினையுடைய மூக்கணை மீது இருந்து குழவியையுடைய மகள் சகடம் பூண்ட எருதின் முதுகிலே அடிப்ப என்பதாம்.
அகலவுரை : வேழங்காவலர் என்றதனை, சினங்காத்தல் (குறள் 205) என்புழிப்போல வேழம் வாராமற் காத்தல் எனக் கொள்க. குரம்பை-குடில். இலைவேய் குரம்பை (310) என்றார் மதுரைக் காஞ்சியினும். தினைப்புனத்தில் யானை வாராமற் காக்கும் காவலர் இதன்மேலே கட்டிய சிறுகுடில். ஈண்டுச் சகடத்தின் மேல் கட்டப்பட்ட கோழிக் கூட்டிற்கு உவமை என்க. சேக்கும் - தங்கும் தூதுணம் புறவொடு துச்சிற் சேக்கும் (பட்டினப்-58) என்புழியும் சேக்கும் தங்கும் என்னும் பொருட்டாதல் காண்க. புதவு-வாயில், அக் கோழிக் கூட்டின் வாயில் என்க. முளை-மூங்கின் முளை. முளை எயிறு : வினைத்தொகை எனினுமாம். இரும் பிடி - கரிய பெண் யானை. முழந்தாள் - முழங்கால். ஏய்க்கும் : உவமவுருபு. துளையரை -துளையை யுடைய உரலின் நடுவிடம். உரலின் நடுவிடத்தே துளைத்து அதில் கயிறிட்டுச் சகடத்தே கோழிக்கூட்டின் வாயிலிலே தூங்கவிட்டிருந்தார் என்றவாறு. இவ்வுரலை உமணர்கள் தங்குமிடங்களிலே நெல் முதலியன குத்துதற்கு உடன் கொடுபோயினர் என்க. கயிற்றால் வரிந்த காடிமிடாவிற்கு இன்னியம் உவமை. காடி-புளியங்காய், நெல்லிக்காய் முதலியன ஊறவிட்டு வைத்தது என்பர் நச்சினார்க்கினியர். மேலும், நெய்யென்பாருமுளர்; இனிப் பாரிற் கழுத்தான விடத்தே வைத்த மிடா என்றுமாம் என்பர். கலன்-மிடா. மூக்கு - சகடத்தின் முன்னர் நுகத்தடி பிணிக்கப்பட்ட மரம். இக்காலத்தும் இதனை மூக்கணை என்றே வழங்குதலறிக. மகவு-குழவி. மகடூஉ - மகள். உமண மகளிர் சகடத்தின் மூக்கணையிலிருந்து எருதுகளைத் தூண்டி ஓட்டும் வழக்க முண்மையும் அறிக. பகடு-எருது. புறந் துரத்தல் - முதுகிலடித்து ஓட்டல்.
உமணரும் உப்புச் சகடமும்
59-66 : கோட்டிணர் .............. ஏமமாக
பொருள் : கோட்டிணர் வேம்பின் ஏட்டிலை மிடைந்த - கொம்பிடத்தே பூங்கொத்தையுடைய வேம்பினது மேன்மையையுடைய இலையை இடையிடையே கட்டப்பட்ட, படலைக் கண்ணிப் பரேர் எறுழ்த் திணிதோள் முடலையாக்கை முழுவலி மாக்கள் - தழைவிரவின மாலையையும் பரிய அழகினையும் வலியினையும் உடைத்தாகிய இறுகின தோளினையும் முறுக்குண்ட உடம்பினையும் நிரம்பிய மெய்வலியினையும் உடைய மாக்கள், சிறுதுளைக் கொடுநுகம் நெறிபட நிரைத்த பெருங்கயிற்று ஒழுகை - சிறிய துளையினையுடைய கொடிய நுகத்தின் கண்ணே எருதுகள் ஒரு வழிப்படுமாறு நிரலே கட்டின பெரிய கயிற்றையுடையன வாகிய சகட ஒழுங்கினை, மருங்கிற் காப்ப-எருதுகள் திருகாமலும் அச்சுமுறியாமலும் பக்கத்தே காத்துச் செல்ல, சில்பதவுணவின் கொள்ளை சாற்றி -உப்பாகிய உணவினது விலையைக் கூறி, பல் எருத்து உமணர் பதிபோகு நெடுநெறி - பலவாகிய எருதுகளையுடைய உப்புவாணிகர் ஊர்கள் தோறும் செல்லா நின்ற நெடிய வழி, எல்லிடை கழியுநர்க்கு ஏமமாக - பகற்போது வழிப்போவார்க்குப் பாதுகாவலாகவும்.
கருத்துரை : கொம்பிடத்தே பூங்கொத்தையுடைய வேம்பினது தழையினை இடையே இடையே கட்டப்பட்ட, பிற தழையும், விரவின படலை மாலையையும், பரிய அழகிய வலி நிரம்பிய திண்ணிய தோளினையும், நிரம்பிய மெய்வலியினையும், உடைய மாக்கள் சிறிய துளையை யுடைய கொடிய நுகத்திலே பெரிய கயிற்றாலே எருதுகளைப் பிணித்த உப்புச் சகடங்களைப் பக்கத்தே நின்று பாதுகாத்து வரவும், உப்பினது விலையை எதிர்வருவார்க்குக் கூறவும், இவ்வாறாக உப்பு வணிகர் ஊர் தொறும் செல்லாநின்ற நெடியவழி பகற்பொழுதிலே போவார்க்குப் பாதுகாவலாக அமையவும், என்பதாம்.
அகலவுரை : கோடு - மரக்கொம்பு. இணர் - கொத்து. ஏடு - எடுப்பு; மேன்மை. வேப்பிலை கடிப்பகை யாகலானும், இவ் வேப்பிலையைத் தாம் பாண்டி நாட்டினர் என்றற்கு அடையாளமாக ஏனைத் தழைகளோடு மிடைந்தமையானும் மேம்பாடு கூறினர் என்க. படலைக் கண்ணி - தழைவிரவித் தொடுத்த மாலை. தாமரைக் கொழுமுறியினையும் அதன் மலரினையும் குவளையையும் கழுநீர் மலரினையும் பச்சிலையுடனே கலந்து தொடுத்த படலை மாலை என்பர் ஆசிரியர் இளங்கோவடிகளார். இதனை,
தாமரைக் கொழுமுறித் தாதுபடு செழுமலர்க்
காமரு குவளைக் கழுநீர் மாமலர்ப்
பைந்தளிர்ப்படலை (சிலப். 4: 39-41)
என்பதனான் அறிக. ஈண்டு உமணர் இப்படலையிற் சேராத வேம்பினை அடையாளப் பூவாகக் கருதிச் சூடினர் என்பார் வேறாக விதந்தோதினார் என்க. எனவே, இவ்வுமணர் கொற்கையுமணர் என்றவாறு. இவ்வேம்பின் இலையை மகடூஉவுடன் இயைப்பர் நச்சினார்க்கினியர். பருமை+ஏர், பரேர் எனப் புணர்ந்தது. படலைக்கண்ணி அம்மாக்கள் மனமகிழ்ச்சியைக் குறித்தது. சாகாடு மணல் முதலிய விடங்களில் அழுந்தும் போது தள்ளுதலானும் உப்புமூடையை ஏற்றுதலானும் நன்கு பயிற்சி பெற்றுப் பருமையும் அழகும் வலியும் திண்மையும் உடையவாகிய தோள் என்க. அத்தோட்கேற்ற உடம்பு கூறுவார் முழுவலி மாக்கள் என்றார். முழுவலி- நிரம்பிய வலி. தந்தொழிலன்றிப் பிறிது கல்லாதார் என்பார் மாக்கள் என்றார். படலைக்கண்ணிப் பரேரெறுழ்த்திணிதோள், முடலையாக்கை முழுவலிமாக்கள் - என்னும் இவ்விரண்டடிகளும், நெடுநல்வாடையினும் 31-32ஆம் அடிகளாக அமைந்திருத்தல் அறிக. இவ்வடிகள் மானிட உடலின் சிறந்த சொல்லோவியமாதல் உணர்க. கொடுநுகம் என்றது உருண்டை நுகம் என்றவாறு. வளைந்த நுகம் அன்று. நிரைத்த - நிரல்படக் கட்டிய. ஒழுகை - சகடவொழுங்கு; நோன்பகட்டுமணர் ஒழுகை. என்றார், சிறுபாணாற்றுப்படையினும். இடப்படும் உணவிற்குச் சிறிதாக இடப்படுதலான் உப்பினைச் சில்பதவுணவு என்றார். கொள்ளைசாற்றி - விலை கூறி. சகடங்களிலே பூட்டிய எருதுகள் இளைத்தவழி மாற்றிப் பூட்டற் பொருட்டு வேறு எருதுகளையும் உடன்கொண்டு போவார் என்பார், பல்லெருத்துமணர் என்றார். பகடு பலபரப்பி, உமணுயிர்த் திறந்த வொழுக லடுப்பின் என்றார் அகத்தினும் (159 . பதபோகு-வேற்றூர்களுக்குச் செல்கின்ற, நெடுநெறி - நீண்டசாலை; இதனாற் பண்டைக்காலத்தும் ஒரு நாட்டிலிருந்து பிறநாட்டிற்குச் செல்லும் பெரிய சாலைகள் இருந்தமை உணர்க.
உமணர் கல்லென்னும் ஆரவாரத்தோடே எருதுகளை உரப்பியும் ஒருவரோடொருவர் சொல்லாடியும் கூட்டமாகவும் போதலானே அவரோடு செல்வார்க்கு ஆறலைப்போரின் அச்சமின்றாகலின், நெடுநெறி ஏமம் ஆக என்றார். ஏமம் - பாதுகாவல். இனி இத்தொடரினைச் சகடம் தூக்கி மூக்கில் மகடூஉத் துரப்ப, மாக்கள் காப்பச் சாற்றி உமணர் பதிபோகு நெடு நெறி ஏமமாக, என அணுக இயைத்துக் கொள்க. இனி 67-முதல் 81-வரை ஒரு தொடர்; இதன்கண், கழுதைச் சாத்தும் பிற வணிகர் தன்மையும் கூறப்படும்.
வம்பலர்
67-76 : மலையவும் ................ வம்பலர்
பொருள் : மலையவும் கடலவும் மாண்பயம் தரூஉம் அரும் பொருள் அருத்தம் - மலைமயில் உள்ளனவும் கடலில் உள்ளனவுமாகிய மாட்சிமையுடைய பயனைக் கொடுத்துப் பெறுதற்கரிய பொருளைப் பெற்றுத் தஞ்சுற்றத்தாரை நுகரப்பண்ணும், திருந்து தொடை நோன் தாள் - திருந்திய தொடுத்த வினையின் கண் அசைவில்லா வலிய முயற்சியினையும், அடி புதை அரணம் எய்தி-அடியை மறைக்கின்ற செருப்பைக் கோத்து, படம் - புக்கு - மெய்ப்பை யிட்டு, பொருகணை தொலைச்சிய புண் தீர் மார்பின் - ஆறலைப்போர் எய்த கணைகளின் வலியைத் தொலைத்த அவ்வம்பு பட்ட புண்கள் தீர்ந்த மார்பினையும், விரவுவரிக் கச்சின் வெண்கை ஒள்வாள் - மார்பிடத்தே விரவின கச்சின்கண் வெள்ளிய கைப்பிடியையுடைய ஒள்ளிய வாள், வரையூர் பாம்பிற் பூண்டு புடைதூங்க - மலையிடத்தே ஊர்கின்ற பாம்புபோலப் பூணப்பட்டு ஒருபக்கத்தே தூங்காநிற்ப, சுரிகை நுழைந்த சுற்று வீங்கு செறிவுடை கருவில் ஓச்சிய கண் அகன் எறுழ்த்தோள் - உடை வாள் செருகப்பட்ட கட்டு இறுகிய உடையினையும் கரிய வில் வன்மையை அகற்றிய இடமகன்ற வலியினையுடைய தோளினையும், கடம்பு அமர் நெடுவேள் அன்ன மீளி - கடம்பிடத்தே இருந்த நெடிய முருகனை ஒத்த மீளிமையையும், உடம்பிடித் தடக்கை - வேலினையுடைய பெரிய கையினையும் உடைய, ஓடா வம்பலர் - பிறக்கிடாத வம்பலர்.
கருத்துரை : மலையில் உள்ளனவும் கடலின் உள்ளனவுமாகிய மாண்புடைய பயனைக் கொடுத்துப் பெறுதற்கரிய பொருளைப் பெற்றுத் தம் சுற்றத்தாரை நுகரப்பண்ணும், திருந்தியதாகத் தொடுத்த வினையின் கண் அசைவில்லாத வலிய முயற்சியையும், அடிமறையும்படி செருப்பைக் கோத்த அடியினையும் மெய்ப்பையிட்ட உடலினையும், ஆறலைப் போர் எய்த அம்பின் வலியைத் தொலைத்த மார்பினையும், மார்பிடத்தே விரவின கச்சின்கண் வெள்ளிய கைப்பிடியை உடைய ஒள்ளிய வாளினை மலையில் ஊரும் பாம்பென்னுமாறு பூண்டு ஒரு பக்கத்தே தூங்கா நிற்ப, உடைவாள் செருகப்பட்டு இறுகிய உடையினையும், ஆறலைப்போர் வில்லின் வலி தொலைத்த வலிய தோளினையும், கடம்பின்கண் அமர்ந்த முருகனை ஒத்த மீளிமையையும் வேலேந்திய கையினையுமுடைய பிறக்கிடாத வம்பலர் என்பதாம்.
அகலவுரை : மலைய - மலையிலே உள்ள பண்டம். கடல - கடலிலே உள்ள பண்டம்.
மலைப்பஃ றாரமும் கடற்பஃ றாரமும்
வளந்தலை மயங்கிய துளங்குகல விருக்கை
என்றார் சிலப்பதிகாரத்தும். மலையிலுள்ளன - மணி பொன் சந்தன முதலியன. கடலினுள்ளன - முத்தும் பவழமும் சங்கும் பிறவுமாம். மாண்பயம் - மாட்சிமைப்பட்ட பொருள்கள். பயம் : ஆகுபெயர். பயம் தரும் என்றது - அப்பொருள்களுக்கு விலையாகத் தரப்பட்ட என்க. அரும் பொருள்-அரிய உணவுப் பொருள். அருந்தும் என்ற வினையால் உணவுப் பொருள் என்பது பெற்றாம். அருத்தும் - தம் சுற்றத்தாரை ஊட்டும் என்றவாறு. இங்ஙனம் கூறாது நச்சினார்க்கினியர் மலையவும் கடலவுமாகிய பொருளை உலகத்தாரை நுகரப்பண்ணும் என்றார்.
திருந்து தொடை - திருத்தியதாகத் தொடங்கிய செயல் என்க. நோன்றாள் - வலிய முயற்சி. இதற்கு நச்சினார்க்கினியர், வலிய கால் என்பர். அடிபுதை அரணம் - காலை மூடிய செருப்பு. காலை மூடாத செருப்பின் வேறெனல் தெரிய அடிபுதையரணம் என்றார். அரணம் எய்தி - என்பதற்கு அரணத்தால் நடந்து எனினுமாம்; படம் - மெய்ப்பை; சட்டை. படம்புகு மிலேச்சர் என முல்லைப்பாட்டினும் வருதல் காண்க. பொருகணை - ஈண்டு ஆறலை கள்வரால் எய்யப்பட்ட கணை என்க. அதன் வலி தொலைச்சிய என்றது, இவர் வலியராய் வேறு படையுமுடையராயிருந்து ஆறலை கள்வர் தம்மேல் அம்பு விடாமைக்குக் காரணமாதல் பற்றிக் கணையின் வலி பயன்படாமை கூறியவாறு.
விரவுவரிக் கச்சு என்றதனை, வரிவிரவிய கச்சென மாறிக் கோடலுமாம். இவ் வரிவிரவிய கச்சு, மார்பிடத்தே கிடத்தற்கு மலையிடத்தே பாம்பூர்தல் உவமை என்க. இக் கச்சில் வாளைக் கோத்து ஒரு புறத்தே தூங்கவிட்டு என்க. வெண்கை - வெள்ளிய கைப்பிடி. யானைக் கோட்டாலியற்றிய பிடி என்க. சுரிகை - உடைவாள். பத்திரம் என்பர் நச்சினார்க்கினியர். உடைவாளைச் செருகினமையால், உடைச் சுற்று இறுகிற்றென்க. செறிய நன்குஉடுத்த உடை என்பர் செறிவுடை என்றார். கருவிலோச்சிய என்றதற்குப் பொருகணை தொலைச்சிய என்றதற்குரைத்தாங் குரைத்துக் கொள்க. ஓச்சுதல் - அகற்றுதல்; வண்டோச்சி என்புழியும் அஃதப் பொருட்டாத லறிக. கண்ணகன் எறுழ்த் தோளுடையராதலின் வில்லையுடைய ஆறலை கள்வர் இவரை அஞ்சி அணுகார் என்பது கருத்து.
மீளி - மீளிமை : அஃதாவது மீட்கும் தன்மை. இவர்கள் வணிகராகலின் மீளிமை இன்றியமையாமை அறிக. மீளி என்றதற்குக் கூற்றுவனை ஒத்த, என்றனர் நச்சினார்க்கினியர். முருகன் அசுரரிடத்திருந்து தேவர்களையும் அவர் தம் உடைமைகளையும் மீட்டமையால் நெடுவேளன்ன மீளி என்றார். உடம்பிடி - வேல். போர் நேர்ந்துழி ஊறஞ்சி ஓடாத் தறுகண்மையுடையார் என்பார் ஓடா வம்பலர் என்றார். வம்பலர் - வழப்போவார். இஃதிப்பொருட்டாதலை வம்பலர் பல்கி வழியும் வளம்பட என்னும் சிலப்பதிகாரத்து (வேட்டுவவரி-21)க்கு வழிப்போவார் மிக்கு என, அடியார்க்கு நல்லார் உரை கூறுதலானும் உணர்க.
கழுதைச் சாத்து
77-82 : தடவுநிலைப் பலவின் ................. வியன் காட்டியவின்
பொருள் : தடவு நிலைப் பலவின் முழு முதற் கொண்ட சிறுசுளைப் பெரும்பழம் கடுப்ப - வளைந்த நிலைமையினையுடைய பலாமரத்தின் அடிப்பகுதியிலே குலைகொண்ட சிலவாகிய சுளையினையுடைய பெரிய பழத்தை ஒப்ப, மிரியல் புணர்ப் பொறை தாங்கிய - மிளகினது ஒத்த கனமாகச் சேர்ந்த சுமையைத் தாங்கிய, வடுஆழ் நோன்புறத்து அணர்ச் செவிக் கழுதைச் சாத்தொடு வழங்கும் - வடு அழுந்தின வலியினை யுடைய முதுகினையும் எடுத்த செவியினையும் உடைய கழுதை களையுடைய திரளோடே செல்கின்ற, உல்கு உடைப் பெருவழிக் கவலை காக்கும் -சுங்கம் கொள்ளுதலையுடைய பெரிய வழிகளிற் கவர்த்த வழியைப் பாதுகாக்கின்ற, வில்லுடை வைப்பின் வியன்காட்டு இயவின் - விற்படையிருக்கின்ற ஊர்களையுடைய அகன்ற காட்டுவழிகளில்.
கருத்துரை : வளைந்து நிற்றலையுடைய பலாமரத்தின் அடியிலே குலைகொண்டு இருமருங்கும் தூங்கும் சிறிய சுளையினையுடைய பரிய பழங்களைப் போன்று, மிளகினை ஒத்த எடையுடையனவாகப் பொதிந்த சுமைகளை இருபுறமுமிட்ட வடுவழுந்திய வலிய முதுகினை யுடையனவும், எடுத்த செவியினையுடையனவுமாகிய கழுதைகளையுடைய திரளோடே செல்கின்ற சுங்கங் கொள்ளுதலையுடைய பெரிய வழிகளிலே கவர்த்த விடத்தே பாதுகாத்தலைச் செய்யும் விற்படை இருக்கின்ற ஊரினையுடைய காட்டுவழியில் என்பதாம்.
அகலவுரை : கழுதையின் முதுகிற் கிடக்கும் பொதிக்கு அடிவளைந்த பலாவின்கண் தூங்கும் பழம் உவமை. தடவு -வளைவு. இங்ஙனம் கூறாது தடவு-பெருமை எனக் கூறினர் நச்சினார்க்கினியர். கழுதையின் முதுகிற்கு உவமை கொள்ளல் வேண்டியே வளைந்த பலாவினைக் கூறினார். தடவு என்னும் சொற்கு வளைவு என்னும் பொருளுண்மையை, தடவென் கிளவி கோட்டமும் செய்யும் (உரி - 23) என்னும் தொல்காப்பியத்தானும் அறிக. முழு முதல் -பரிய அடிமரம். கொண்ட குலை கொண்டுள்ள. சிறு சுளை என்றது, ஈண்டு எண்ணல் அளவையாற் சிறிய சுளை என்றவாறு. எனவே, பரிய சுளை யிடைமையிற், சில சுளைகளை உடைய பழம் என்க. சிறுசுளைப் பெரும்பழம் என்புழி முரண்தோன்றிச் செய்யுளின்பம் மிகுதலுணர்க. மிரியல் - மிளகு. இஃதிப் பொருட்டாதலைச் சூடாமணி நிகண்டினும் (4:47) காண்க. கழுதையின் முதுகிற் போடப்படும் சுமை இருதலையும் எடையில் ஒத்திருத்தல் வேண்டுமாகலின் அங்ஙனம் சமஞ் செய்து புணர்த்திய சுமை என்பார் புணர்ப்பொறை என்றார்.
வடு-பல காலும் பொதி சுமத்தலாலுண்டான தழும்பு. சுமந்து சுமந்து வலியேறிய முதுகென்பார், நோன்புறம் என்றார். நோன்புறம் - வலியுடைய முதுகு. பொறைதாங்கிய வடுவாழ் நோன்புறத்து அணர்ச் செவிக் கழுதை, என்னும் தொடர், பொதிக்கழுதையின் சொல் லோவியமாய்ப் பொருள் புலப்படுத்துமாறு காண்க. அணர்ச்செவி - அணந்த காது; நிமிர்ந்து நிற்றலையுடைய காது; கழுதையின் காது அங்ஙனம் நிற்றல் இயல்பு. சாத்து - திரள்: வம்பலர் கழுதைச் சாத்தொடு வழங்கும் உல்குடைப் பெருவழி என்க.
உல்கு-சுங்கப்பொருள். இதனாற் பண்டைக் காலத்தே ஒரு நாட்டின் பொருள் மற்றொரு நாட்டிற் புகுதுங்கால் வழிகளிலே மன்னர்கள் சுங்கங் கொண்ட வழக்கம் உண்மை உணர்க.
வேலாழி வியன்றெருவின்
நல்லிறைவன் பொருள்காக்கும்
தொல்லிசைத் தொழின் மாக்கள்
காய்சினத்த கதிர்ச்செல்வன்
தேர்பூண்ட மாஅபோல
வைகறொறும் அசைவின்றி
உல்கு செய (பட்டினப் : 119-125.)
என இவ்வாசிரியரே பட்டினப்பாலையிலும் சுங்கமுண்மை கூறல் காண்க.
உறுபொருளும் உல்கு பொருளுந்தன் னொன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள் (குறள் - 759)
என்னும் திருக்குறளினும் உல்குண்மை கூறப்படுதல் காண்க. உல்கு கொள்ளுமிடமாகலின் ஆண்டுக் காவல் இன்றியமையாதாயிற்று. அவ்விடங்களிலே அரசர்கள் விற்படையினை இருத்திக் காவல் செய்வர் என்பதும், வில்லுடைவைப்பின் இருத்திக் காவல் செய்வர் என்பதும், வில்லுடைவைப்பின் வியன்காட்டியவு என்பதனான் அறிக. வைப்பு : ஊர். வம்பலர் சாத்தொடு வழங்கும் உல்குடைப் பெருவழியில் வில்லுடைவைப்பின் காட்டு இயவு எனக் கூட்டுக. இனி, 83-நீளரையிலவம், என்பது தொடங்கி 105 - பதமிகப் பெறுகுவிர் என்னுந்துணையும் ஒரு தொடர். இதன்கண் : எயினர் இயல்பும் அவரில்லத்தே ஆக்கும் உண்டியின் இயல்பும் அவர்தம் வண்மையும் பிறவும் கூறப்படும்.
எயினர் குரம்பையின் தன்மை
83-88 : நீளரை யிலவத்து .............. குரம்பை
பொருள் : நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த - நீண்ட தாளினையுடைய இலவமரத்தினது அசைகின்ற கொம்பு காய்த்த, பூளை அம் பசுங்காய் புடை விரிந்தன்ன வரிப் புறஅணிலொடு - பஞ்சினையுடைய அழகிய பசிய காயினது முதுகு விரிந்து பஞ்சு தோன்றினாலொத்த வரியை முதுகிலே உடைய அணிலோடே, கருப்பை ஆடாது - எலியும் திரியாதபடி, யாற்று அறல் புரையும் வெரிந் உடைக் கொழுமடல் - யாற்றினது அறலை ஒக்கும் முதுகினை உடையதும் கொழுவிய மடலினை யுடையதும் ஆகிய, வேற்றலை முனையை ஒத்த கூர்மையையுடைய முனையினையுடைய ஈந்தினுடைய இலையாலே வேயப்பட்ட நெடிய மேட்டினையும், எய்புறக் குரம்பை - எய்ப் பன்றியின் முதுகுபோலும் புறத்தினையும் உடைய குடிலின்கண்.
கருத்துரை : நீண்ட அடியினையுடைய இலவமரத்தின் அசைகின்ற கொம்புகள் காய்த்த பஞ்சினையுடைய அழகிய பசிய காய், முதிர்ந்து முதுகிலே விரிந்து பஞ்சு தோன்றினாற் போன்ற வரியை முதுகிலே உடைய அணிலோடே எலியும் திரியாதபடி, யாற்றின் அறலையொத்த முதுகினையும், கொழுவிய மடலினையும் உடையதும், வேல்போலும் நுனி பொருந்தியதுமாகிய ஈந்தின் இலையாலே வேயப்பட்ட நெடிய முகட்டையும், எய்ப்பன்றியின் முதுகுபோன்ற புறத்தினையும் உடைய குடிலின்கண் என்பதாம்.
அகலவுரை : இலவமரத்தின் சிறப்பியல்பு நீண்ட அடிமரத்தை உடைமையாதல் உணர்க. நீள் அரை - நீண்ட அடிமரம். அலங்கு சினை - அசைகின்ற கொம்பு. பயந்த காய்த்த. பூளை - பஞ்சு. அம் பசுங்காய் - அழகிய பசிய காய். முதிர்ந்து என ஒருசொல் வருவித்துரைக்க. என்னை? பசுங்காய் விரிதலின்மையின். புடை - பக்கம். அணிலின் வரியுடைய முதுகிற்குப் புறம் விரிந்து பஞ்சு தோன்றும் இலவங்காயை உவமையாக எடுத்துக் கூறுதலின் அருமையுணர்ந்தின் புறுக. இவ்வுவமையின் அருமையை உணர்ந்து பிற்றை நாள் திருத்தக்க தேவரும்,
தோன்றுபூ விலவத் தங்கட் டொகையணி லனைய பைங்காய்
கான்றமென் பஞ்சி (சீவகசிந்-1701)
என ஓதுதல் காண்க.
கருப்பை - எலி, அணிலும் எலியும் திரியாதபடி முள்ளிலையால் வேயப்பட்ட என்க. யாற்றறல் - ஈந்தின் புறத்திற்குச் சிறந்த உவமையாதல் உணர்க. வெரிந்-முதுகு. வேற்றலை - வேலின் நுனி. இஃது ஈந்திலைக்குவமை. கருவி நுதிகொள் நெறியிலை யீந்து என்றார், கல்லாடத்தினும். நெடுந்தகர் - நெடிய மேடு. இதனை மேட்டு நிலம் என்று கொண்டனர். அங்ஙனம் கூறலினும் குடிலின் மேடு (முகடு) எனக்கோடல் சிறந்ததாதலுணர்க. ஈந்திலை-ஈந்தின் ஓலை. இதனை,
இலையே தளிரே என்னும் தொல்காப்பியச் சூத்திரத்திற்குப் பேராசிரியர், மற்றுப் பிறப்பு முறையால் தளிர் முற்கூறாது இலைமுற் கூறியதென்னை எனின், புல்லினுள் ஒருசாரன இலையெனவும் பூவெனவும் படுமென அதிகாரங் கோடற்கென்க. அவை,
ஈத்திலை வேய்ந்த எய்ப்புறக் குரம்பை
எனவும், ஆம்பலிலை தாமரைஇலை எனவும் வரும். இன்னும் இவ்விலேசானே புல்லிற்குரியன மரத்திற்கு வருவனவும் கொள்க என உரை கூறுமாற்றான் புல்லிற்கு இலை வந்தமையை அமைத்துக் கொள்க. எய்-முட்பன்றி. இதன் முதுகு குடிலின் புறத்திற்கு (கூரைக்கு) உவமை என்க. அணிலொடு கருப்பை யாடாது ஈத்திலை வேய்ந்த குரம்பையின் கண் எனக் கூட்டுக.
எயிற்றியர் செயல்
89-97 : மான்றோல் ............... உலக்கையோச்சி
பொருள் : மான் தோல் பள்ளி மகவொடு முடங்கி ஈன்பிண ஒழியப் போகி - மான் தோலாகிய படுக்கையிலே பிள்ளையோடு முடங்கிக்கிடக்கும் பிள்ளையை ஈன்ற எயிற்றி ஒழிய ஏனையோர் போய், நோன்காழ் இரும்புதலை யாத்த திருந்து கணை விழுக்கோல் உளிவாய்ச் சுரையின மிளிர மிண்டி - பூண்தலையிலே கட்டப்பட்ட திருந்திய திரட்சியினையுடைய சீரிய கோலினையுடைய உளிபோலும் வாயையுடைய பாரைகளாலே கட்டிகள் கீழ்மேலாகப் புரளும்படி குத்தி, இருநிலக் கரம்பைப் படுநீறாடி - கரிய நிலமாகிய கரம்பை நிலத்தில் உண்டாகின்ற புழுதியை அளைந்து, நுண்புல் அடக்கிய வெண்பல் எயிற்றியர் - மெல்லிய புல்லரிசியை வாரியெடுத்துக்கொண்ட வெள்ளிய பல்லையுடைய எயின்குடியிற் பிறந்த மகளிர், பார்வை யாத்த பறைதாள் விளவின் நீழல் முன்றில் - பார்வைமான் கட்டி நின்ற தேய்ந்த தாளினையுடைய விளவினது நிழலையுடைய முற்றத்திடத்தே, நிலவுரல் பெய்து குறுங்காழ் உலக்கை ஓச்சி - தோண்டின நிலவுரலிலே அப்புல்லரிசியைப் பெய்து குறிய வயிரமாகிய உலக்கையாலே குற்றி,
கருத்துரை : மான்றோற் படுக்கையிலே பிள்ளையோடு முடங்கிக் கிடக்கும் ஈன்ற எயிற்றியை ஒழிய ஒழிந்தோரெல்லாம் போய், பூண்கட்டிய சீரிய கோல் செருகப்பட்ட உளிபோலும் வாயையுடைய பாரைகளாலே கரிய கரம்புநிலத்தைக் குத்திக் கிளறிப் புழுதியை அளைந்து நுண்ணிய புல்லரிசியினை வாரிக்கொண்ட வெள்ளிய பல்லை யுடைய எயினர் மகளிர், பார்வைமான் கட்டிநின்ற தேய்ந்த தாளினையுடைய விளவின் நீழலையுடைய தம் முற்றத்தே தோண்டப்பட்ட நிலவுரலிலே அப் புல்லரிசியைச் சொரிந்து குறிய வயிரமேறிய உலக்கையால் குற்றி என்பதாம்.
அகலவுரை : மான்தோற்பள்ளி - மான்தோலாகிய படுக்கை. இதனாற் பண்டைநாளில் மான்றோலைப் படுக்கையாகப் பயன்படுத்தும் வழக்கம் உண்மையுணர்க. சீறூர் மரையத ளிற்றங்கு கங்குற் சிறுதுயிலே (398) என்பது திருச்சிற்றம்பலக் கோவை. வரியதட் படுத்த சேக்கைத் தெரியிழை (58:4) என அகத்தினும், இலைவேய் குரம்பை உழையதட்பள்ளி (310) என மதுரைக் காஞ்சியினும் வருதல் காண்க. நோன்காழ் - வலிய வயிரம். ஈன்பிண : வினைத்தொகை. ஈன்பிண : பெயர் மாத்திரையாய் நின்றது, முடங்கி என்றமையால் அண்மையில் மகவீன்ற பிண என்க: பிணவு - பெண். பெண்ணும் பிணாவு மக்கட்குரிய (தொல்-மர-61) என்பதோத்தாகலின் பிணா என்றது ஈண்டு உயர்திணைப் பெண்பால் குறித்து நின்றது. பிணா என்னும் சொல்,
குறியதன் இறுதிச் சினைகெட உகரம்
அறிய வருதல் செய்யுளுள் உரித்தே (தொல்.உயிர்மயங் - 32)
என்னும் விதியால் இறுதிச் சினை கெட்டுப் பிண என உகரம் பெறாது நின்றது.
ஈன் பிண வொழியப் போகி என்றது, அவள் போகமாட்டாமையால் ஒழிய எல்லாரும் போய் என்றவாறு. நோன்காழ் விழுக்கோல், இரும்புதலையாத்த விழுக்கோல், திருந்துகணை விழுக்கோல் எனத் தனித்தனி கூட்டுக. நோன்காழ் - வலியுடைய வயிரம். இரும்பு - பூணிரும்பு. கணை - திரட்சி. முன்னோன் வாங்கிய கடுவிசைக் கணைக் கோல், (மலைபடு 380) என்புழியும், கணை, இப்பொருட்டாதலறிக. விழுக்கோல் - சீரிய கோல்: என்றது ஆச்சா கருங்காலி முதலிய சீரிய மரத்தின் கோல் என்றவாறு. இஃது உளிவாய்ப் பாரையின் பிடிஎன்க. ஒருபக்கம் உளிபோன்ற வாயையும் ஒருபக்கம் விழுக்கோல் செருகும் சுரையையும் உடைய பாரை என்க. சுரை - ஈண்டுப் பாரைக்கு ஆகுபெயர் என்க. சுரை, குழைச்சு. மிளிர - கீழ்மேலாகக் கிளம்ப என்றவாறு. மிண்டுதல் - குத்துதல். நுண்புல் - மெல்லிய புல்லரிசி. மிகவிளைந்து உதிர்ந்த புல்லை எறும்பிழுத்துச் சேரவிட்டு வைத்த இடமறிந்து எடுத்தல் அந்நிலப்பண்பு என்பர் நச்சினார்க்கினியர். எனவே எறும்புப் புற்றைப் பாரையாற் குத்திக் கிளறி ஆண்டு எறும்பு சேர்த்து வைத்த புல்லரிசியை வாரிக்கொண்டு வந்துண்ணல் எயிற்றியர் வழக்கமாதலறிக. இங்ஙனம் எளிதிற் புல்லரிசி கிடைத்தவுடன் அவர்கள் மகிழ்வராதலின் அம் மகிழ்ச்சி தோன்ற வெண்பல் எயிற்றியர் என்றார். எயிற்றியர் - எயினர் மகளிர்.
பார்வை -பார்வைமான்; மானைக் காட்டி மானைப் பிடித்தற் பொருட்டு வளர்க்கப்பட்ட மான் என்க. பார்வை : ஆகுபெயர். மான் முதலியவற்றைக் கயிறிட்டுக் கட்டுதலால் முன்றிலில் நின்ற விளவின் தாள் தேய்ந்திருத்தலின் பறைதாள் விளவு என்றார். விளா - விளவு என இறுதிச்சினை கெட்டு உகரமேற்று நின்றது. புலவர்கள் பொருள்களைக் கூர்ந்து நோக்கி அவற்றைக் கண்டாங்குக் கற்பார்க்குப் புலப்படுத்துமாற்றைப் பறைதாள் விளவென்றதனால் உணர்க.
பார்வை யாத்த பறைதாள் விளவின் நீழல் முன்றில் என்ற தொடர் ஓரினிய எயிற்றியர் குடிலின் சொல்லோவியமாகிப் பொருள் புலப்பாடு செய்தல் காண்க. முன்றில்-முற்றம். நிலவுரல்-நிலத்தே குழிக்கப்பட்ட வுரல். நிலவுரலிற் குற்றுதற்கு குற்றுலக்கையே தகுதியாதல் பற்றிக் குறுங்காழுலக்கை கூறினர். ஓச்சி - குற்றி.
எயிற்றியரின் விருந்தோம்பற் சிறப்பு
97-105 : நெடுங்கிணற்று .............. பெறுகுவிர்
பொருள் : நெடுங்கிணற்று வல் ஊற்று உவரி தோண்டி - ஆழ்ந்த கிணற்றில் சில்லூற்றாகிய உவரி நீரை முகந்துகொண்டு, தொல்லை முரவுவாய்க் குழிசி முரி அடுப்பு ஏற்றி - பழைய விளிம்பற்ற வாயையுடைய பானையிலே வார்த்த உலையை முரிந்த அடுப்பிலே ஏற்றி, வாராது அட்ட வாடூன் புழுக்கல் - அரியாது சமைத்த கருவாட்டை வெஞ்சனமாகவுடைய சோற்றை, வாடாதும்பை வயவர் பெருமகன் - கெடாத தும்பை சூடின போரைவல்ல மறவருடைய தலைவனாகிய, ஓடாத்தானை ஒண் தொழிற் கழற்கால் செவ்வரை நாடன் - முதுகிடாத படையினை யுடைய ஒள்ளிய தொழில்களை யுடைத்தாகிய வீரக்கழல் அணிந்த செவ்விய மலைநாட்டையுடையவனுடைய, சென்னியம் எனினே - பாணச்சாதியேம் என்று கூறுவீராயின், தெய்வ மடையின் தேக்கு இலை குவைஇ - தெய்வங்களுக்குச் சேர இட்டுவைத்த பலிபோலத் தேக்கின் இலையிலே குவிக்கையினாலே, நும் பைதீர் கடும்பொடு - நும்முடைய பசுமைதீர்ந்த சுற்றத்தோடே, பதம் மிகப் பெறுகுவிர் - அவ்வுணவினை மிகப் பெறாநிற்பீர்.
கருத்துரை : ஆழ்ந்த கிணற்றிலே சில்லூற்றாகிய உவர் நீரை முகந்துகொண்டு, பழைய முரவுவாய்ப் பானையிலே வார்த்த உலையை முரிந்த அடுப்பிலேற்றி, அரியாது சமைத்த சோற்றைக் கருவாட்டோடே, கெடாத தும்பை சூடின போர்த்தொழில் வல்ல வீரர் தலைவனும் பிறக்கிடாத படையையுடையவனும் வீரக்கழல் அணிந்தவனும் மலைநாட்டை யுடையவனுமாகிய தொண்டைமான் இளந்திரையனுடைய பாணச் சாதியேம் யாங்கள் என்று நீயிர் கூறுவீராயின் அவர்கள் தெய்வத்திற்குப் பலியிடுமாறுபோலத் தேக்கிலையிலே குவிக்கையாலே பசுமைதீர்ந்த சுற்றத்தோடே அவ்வுணவினை நிரம்பப் பெறுவீர்கள் என்பதாம்.
அகலவுரை : நெடுமை - ஈண்டு ஆழமுடைமை குறித்து நின்றது. வல்லூற்று என்றது, அரிதிற் சிறிதே ஊறும் ஊற்று என்றவாறு. உவரி என்றது, அது தானும் நன்னீரன்று உவர்ப்பு நீர் என்றவாறு. அவ்வுவர்ப்பு நீரும் கொள்ளுங்காற் புதிது புதிதாகத் தோண்டிக் கொள்வது என்பார் தோண்டி என்றார், தோண்டுதல் தோண்டி முகத்தல் என்னும் பொருட்டென்க.
தொல்லை-பழைய. முரவுவாய் - விளிம்பு உடைந்துபோன வாய். இதனை ஒறுவாய்ப் போன பானை என்பர் நச்சினார்க்கினியர்; அஃது அவர் காலத்து வழக்குப் போலும். இக்காலத்தார் மூளிப் பானை என்று வழங்குப. முரவு - கரடுமுரடு. விளிம்பு போய்க் கரடுமுரடான வாயுடைய பழம்பானை என்றவாறு. பரல்நிலத்தை முரம்பு என்னும் வழக்குண்மை உணர்க.
குழிசி-பானை. முரி அடுப்பு - கொம்மை உடைந்த அடுப்பு. வார்தல் அரிசியைத் தண்ணீரிற் பெய்து கழுவி அரித்தெடுத்தல். வாராதட்ட என்றது அங்ஙனம் கழுவாது உலைநீரிற் பெய்தாக்கிய என்றவாறு. வாடூன்-கருவாடு. கருவாட்டோடு கூடிய சோறென்க. வாடாத்தும்பை என்றது பொன்னாற் செய்த தும்பைப் பூ என்றவாறு, புரையோர்க்குத் தொடுத்த பொலம்பூந்தும்பை (737) என்றார் மதுரைக்காஞ்சியினும். தும்பையாவது,
மைந்து பொருளாக வந்த வேந்தனைச்
சென்றுதலை அழிக்கும் சிறப்பிற் றென்ப (தொல்.புறத்-15)
எனவே தொண்டைமானிளந்திரையன் மைந்து பொருளாக வந்த வேந்தனைச் சென்று தலையழிக்கும் சிறப்பினையுடைய மறவரை மிகவுடையன் என்றாராயிற்று. இனி ரா. இராகவையங்கார் அவர்கள் வாடாத்தும்பை என்றது துரோணம் என்னும் பொருட்டு. இதனால் தொண்டைமானிளந்திரையன் துரோணர் மரபினன் என்றவாறாயிற்று, எனத் தம் ஆராய்ச்சி நூலுட் கூறியுள்ளார். அது பொருந்தாமை பாட்டுடைத்தலைவன் வரலாற்றிற் காட்டினாம், ஆண்டுக் காண்க.
வயவர் - மறவர். பெருமகன். தலைவன். ஒண்டொழில் - விளக்கமுடைய தொழில். செவ்வரை - செவ்விய மலை. திருவேங்கடமலையை யுள்ளிட்ட மலைநாடு என்பார் செவ்வரை என்றார். தெய்வம் நிற்றலின் திருவேங்கடம் செவ்வரை எனப்பட்டதென்க. சென்னியம் - பாண் சாதியேம்: தன்மைப் பன்மை. சென்னியம் என்றதுணையானே நும்மைத்தெய்வம் போல் மதித்துப் போற்றுவர் என்பார், தெய்வமடையின் குவைஇ என்றார். அவர் கிணற்றில் நீர் பெரிதும் ஊறலில்லை எனினும், அவர் நெஞ்சில் மிக்க அன்பூறும் தன்மையர் என்றபடி. பை - பசுமை. ஈண்டுச் செல்வச் செழிப்பு என்க. கடும்பு-சுற்றம். கடும்போடு என்றது நீயிர் எவ்வளவு பேராயினும் அனைவர்க்கும் இடுவர் என்றவாறு. பதம் - உண்டி: ஈண்டு வாடூனும் புழுக்கலும் என்க.
இனி, 85-105 - இத்தொடரை, குரம்பையில் பிணவொழியப் போகி, மிண்டி, நீராடிப் புல் அடங்கிய எயிற்றியர், நீழன் முன்றிலில் உரற்பெய்து ஓச்சி, உவரித் தோண்டிக் குழிசி அடுப்பேற்றி, அட்ட வாடூன் புழுக்கலை, நாடன், சென்னியம் எனின், குவிக்கையாலே மிகப் பெறுகுவீர் என இயைத்துக் கொள்க. இனி 106-மானடி, என்பது தொடங்கி, 133-வயின்றொறும் பெறுகுவிர் என்னுந் துணையும் ஒரு தொடர்: இதன்கண் கானவர் செயலும், அவர் வாழும் அருஞ்சுரத்தியல்பும், எயினக் குறும்பும் எயினர் இயல்பும் பிறவும் கூறப்படும்.
இரவின்கட் கானவர் பன்றி வேட்டையாடுதல்
106-111 : மானடி .................. வேட்டம்அழுங்கின்
பொருள் : மான் அடி பொறித்த மயங்கு அதர் மருங்கின் - மானினது அடிச்சுவடு அழுந்திக்கிடக்கின்ற மயங்குதற்குக் காரணமான வழிகளின் பக்கத்திலே, வான்மடி பொழுதில் நீர் நசைஇக் குழித்த அகழ் சூழ் பயம்பின் அகத்து-மழை பெய்தலைத் தவிர்ந்த காலத்தே நீரை விரும்பித் தோண்டிய பள்ளங்களைச் சூழ்ந்த மூடுகுழிகளின் அகத்தே, ஒளித்து ஒடுங்கி - மறைந்து ஒதுங்கி; புகழா வாகைப் பூவின் அன்ன வளைமருப்பு ஏனம் வரவு பார்த்திருக்கும் - அகத்திப் பூவினை ஒத்த வளைந்த கொம்பினையுடைய பன்றியினுடைய நீருண்ணவரும் வரவினைப் பார்த்திராநின்ற, அரைநாள் வேட்டம் அழுங்கின் - நடுவியாமத்து வேட்டையை ஒழிந்தார்களாயின்,
கருத்துரை : மான்களின் அடிச்சுவடு பதிந்து கிடக்கும் மயங்குதற்குக் காரணமான வழிகளின் பக்கத்தே, மழை வறந்த காலத்தே நீர் பெறும் பொருட்டு அகழப்பட்ட குழிகளினைச் சூழப் பறித்த மூடுகுழிகளின் அகத்தே மறைந்தொடுங்கி, அகத்திப் பூப்போன்ற வளைந்த மருப்பினையுடைய பன்றிகள் நீருண்ணவரும் வருகையைப் பார்த்திரா நின்ற நடுவியாமத்துப் பன்றி வேட்டையை ஆடாதொழியின் என்பதாம்.
அகலவுரை : மயங்குமான் என மாறிக் கூட்டி நீரின்மையின் மயங்கித் திரியும் மான், எனக் கூறினர் நச்சினார்க்கினியர். அடி பொறித்த - அடிச்சுவடழுந்தப்பட்ட. அதர் - வழி மானடியின்றி மக்களடியின்மையால் ஆறு செல்வோர் வழியோ! அன்றோ என மயங்குதற்குக் காரணமான வழி என்க. மருங்கு-பக்கம். வான் : முகிலுக்கு ஆகுபெயர். மடிபொழுது : வினைத்தொகை. மடிதல் - தொழில் செய்யாதிருத்தல் : எனவே முகில் பெய்யாதிருக்கும் வற்கடகாலத்தில் என்றவாறு. நீர் நசைஇ - நீரைவிரும்பி.
குழித்த அகழ் - தோண்டிய குழி. அகழப்படுதலின் அகழ் என்பது பெயராயிற்று. நீர் வறந்த காலத்தும் நீர் பெறுதற் பொருட்டு அகழ்ந்த குழி எனவே, அதன்கண் நீருண்மை பெற்றாம். யாண்டும் நீர் பெறாதே அந்நீரை விரும்பிப் பருகவரும் பன்றியைக் கொல்லற்பொருட்டு, அதனைச் சூழக் குழிதோண்டி அதனுட் புகுந்து கொண்டு மேலே குழியை மூடிவிடுவர் என்க. அதனைக் குழியென்றறி யாதே வீழ்ந்த பன்றியை ஆண்டே கொல்வர். இதனை,
சேணோன் அகழ்ந்த மடிவாய்ப் பயம்பின்
வீழ்முகக் கேழல் அட்ட பூசல் (மலைபடு : 294-5)
எனவரும் மலைபடுகடாத்தினும் காண்க. பயம்பு - குழி. புகழா வாகை அகத்திக்கு வெளிப்படை. வாகையாயிற் புகழப்படும் என்பது கருத்து. வாகை வெற்றிப் புகழ்க்கு அடையாளப் பூவாதல் அறிக. கடவுள் வாகை என்றார் பதிற்றுப் பத்தினும் (66.) அகத்திப்பூ பன்றியின் வளைந்த கொம்பிற்கு உவமை குழியில் மறைபவன் பன்றி வீழ இடம் விட்டு அக்குழியுள்ளும் ஒரு புறத்தே ஒடுங்கவேண்டுதலில் ஒளித்தென்றொழியாது ஒடுங்கி என்றார். வரவு பார்த்திருக்கும் என்றதனால் இவ்வாறு இருந்து பன்றி வேட்டை செய்வர் அது செய்யாதொழிந்த பொழுதென்க. அழுங்கல் - செய்யாதொழிதல். அரைநாள் ஈண்டு நள்ளிரவின் மேற்று. என்னை? பகற்பொழுதினைப் பிற்கூறலான். இனி அரைநாள் - இரவு எனினுமாம்.
குறுமுயல் வேட்டம்
111-117 : பகல்நாள் ................ அம்பர்
பொருள் : பகல் நாள் - எஞ்சிய அரைநாளிலே, பகுவாய் ஞமலியொடு பைம்புதல் எருக்கி - அங்காந்த வாயையுடைய நாய்களுடனே பசிய தூறுகளை அடித்து, தொகுவாய் வேலித் தொடர் வலைமாட்டி குவிந்த இடத்தையுடைய வேலியிடத்தே ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட வலைகளை மாட்டி, முள்அரைத் தாமரைப் புல்லிதழ் புரையும் நெடுஞ்செவிக் குறுமுயல் போக்கு அற வளைஇ - முள்ளைத் தண்டிலேயுடைய தாமரையினது புறவிதழை ஒக்கும் நெடிய செவியினையுடைய குறிய முயல்களைப் புறம் போகவிடாமல் வலையினகத்தே வளைத்துப் பிடித்து, கடுங்கண் கானவர் கடறு கூட்டுண்ணும் - தறுகண்மையுடைய காட்டில் வாழ்வோர் அக்காட்டிடத்தே கூடித்தின்னா நின்ற, அருஞ்சுரம் இறந்த அம்பர் - இவ்வரிய பாலை நிலத்தைக் கடந்ததன் பின்னர்த்தாகிய அவ்விடத்தே.
கருத்துரை : மற்றை அரைநாளிலே, பிளந்தவாயினையுடைய வேட்டை நாய்களோடே பசிய தூறுகளை அடித்துக் குவிந்த இடத்தையுடைய வேலியில் தொடர்வலைகளைக் கட்டித் தாமரையின் புறவிதழ் போன்ற நெடிய செவியினையுடைய குறுமுயல்களை அவ்வலையகத்தே வளைத்துப் பிடித்துக் கானவர் அக்காட்டிடத்தே கூடித்தின்னாநின்ற நீரரிய பாலைக் கடுஞ்சுரத்தைக் கடந்து, அப்பாலைக்கு அப்பாலாகிய நிலத்தே என்பதாம்.
அகலவுரை : பகனாள் ஞமலியொடு புதல் எருக்கி வலைமாட்டிமுயல் வளைஇக் கானவர் கூட்டுண்ணும் சுரம் என்க. பகல் - பகுத்தல்; அரைநாள் என்றவாறு. இனிப் பகலாகிய நாளுமாம். வேட்டை நாய்கள் எப்போதும் சிறிது அங்காந்த வாயுடன் இருத்தல் இயல்பாகலின் பகுவாய் ஞமலி என்றார். வேட்டை நாய்க்கு வாயேசிறந்த கருவியாதல் பற்றி வாயை அடைகொடுத்துக் கூறினார். ஞமலி - நாய். பைம்புதல் - பசிய குறுந்தூறு. எருக்குதல் - கோலால் அடித்து அலைத்தல். அப்புதலில் மறைந்து வாழும் முயல் புறப்படும் பொருட்டு எருக்கினர் என்க. தொகுவாய்வேலி - குவிந்த இடத்தின்கண் உள்ள வேலி. ஏனையிடங்களில் முயல் புறம் போகாதவாறு அடைத்து ஓரிடத்தே மட்டும் முயல்கள் வெளிப்பட வழிவிட்டு அவ்வழியில் வலைமாட்டி என்க. அவ் வழியையே குவிவாய் என்றதென்க. தாமரையின் புறவிதழ் முயலின் செவிக்கு ஏற்ற உவமையாதல் அறிக. புல்லிதழ்-புறவிதழ். நெடுஞ்செவிக் குறுமுயல் என்றதொடர் செய்யுளின்ப மிக்க சொல்லோவிய மாதலுணர்க. போக்கற - தப்பிப் போகாதவாறு. வளைஇ - வளைத்துப்பிடித்தென்க. இங்ஙனம் வேட்டமாடுதலாற் கடுங்கட் கானவர் என்றார். கடறு - காடு. கூட்டுணல்-கூடியுண்ணல். அருஞ்சுரம் - நீர் அரிதாகிய பாலை. கடத்தற் கரிய பாலையுமாம். அம்பர் - அப்பால்: உம்பர் இம்பர் என்றாற் போன்ற ஒரு சொல்.
கொடுவில் எயினர் குறும்பு
117-121 : பருந்து ................. வியனகர்
பொருள் : பருந்துபட ஒன்னாத் தெவ்வர் நடுங்க ஓச்சி - ஊன் தின்றற்குப் பருந்துகள் வந்து படியுமாறு பொருந்தாத பகைவர் அஞ்சக் குத்தி, வை நுதி மழுங்கிய புலவுவாய் எஃகம் வடி மணிப் பலகையொடு நிரைஇ - கூரிய முனை மழுங்கின புலானாறும் வாயையுடைய வேலை வடித்த மணிகட்டின பலகைகளோடே நிரைத்து வைத்து, முடிநாண் சாபம் சார்த்திய கணை துஞ்சு வியனகர் - தலையிலே முடிந்த நாணையுடைய வில்லைச் சார்த்திவைத்த அம்பு தங்கும் அகற்சியையுடைய வீடுகளையும்,
கருத்துரை : ஊன்தின்னும் பொருட்டுப் பருந்துகள் வந்து படியும் படியும் தம்மொடு பொருந்தாத பகைவர் அஞ்சும்படியும் குத்திக் கூரிய முனை மழுங்கிய புலானாறும் வாயையுடைய வேல்களை வடித்த மணி கட்டின பலகைகளோடே நிரல்பட வைத்துத் தலையிலே முடிந்த நாணையுடைய விற்களைச் சார்த்தி வைத்த, அம்புக் கட்டுகள் கிடக்கும் அகன்ற வீடுகள் என்பதாம்.
அகலவுரை : பருந்துகள் ஊன்தின்னற்குப் போர்க்களத்திலே வந்து படிதல் இயல்பு. பொருந்தாத் தெவ்வர் இருந்தலை துமியப் பருந்து படக் கிடக்கும் ஒள்வார் மறவர், (488-9) என்றார், மலைபடுகடாத்தினும், ஒன்னாத் தெவ்வர் - பொருந்தாத பகைவர். குத்துதலாலே வைந்நுதி மழுங்கிய என ஏதுவாக்குக. அவ்வே, பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து, கொற்றுறைக் குற்றில மாதோ, (புறம்.95.) என்றார் பிறரும்.
ஓச்சி - எறிந்து; குத்தி என்றபடி. வைநுதி - கூர்மையுடைய முனை, வையே கூர்மை, (உரி -91) என்பது தொல்காப்பியம். புலவுதல் - புலானாறுதல். எஃகம்-வேல். வடிமணி; வினைத்தொகை, பலகை-கேடகம்: கிடுகு. நிரைஇ நிரைத்துவைத்து. படிநாண் - வினைத்தொகை சாபம் -வில்; வடமொழி வாளாகிடத்தலின் கணை துஞ்சும் என்றார். வியனகர் - அகன்றவீடு. வியலென் கிளவி அகலப்பொருட்டே, (உரி-66) என்பர் தொல்காப்பியனார்.
இதுவுமது
122-133 : ஊகம் .............. பெறுகுவிர்
பொருள் : ஊகம் வேய்ந்த உயர்நிலை வரைப்பின் - ஊகம் புல்லாலே வேய்ந்த உயர்ந்த நிலைமையினையுடைய மதிலையும், வரைத் தேன்புரையும் கவைக்கடைப் புதையொடு - மலையிற் றேனிறாலை ஒக்கும் குதையினையுடைத்தாகிய அடியினையுடைய அம்புக் கட்டுகளுடனே, கடுந்துடி தூங்கும் கணைக்காற் பந்தர் - ஓசை கடிய துடியும் தூங்கும் திரண்ட காலையுடைய பந்தரினையும், தொடர் நாய் யாத்த துன்னரும் கடிநகர் - சங்கிலிகளாலே நாயைக் கட்டிவைத்துள்ள கிட்டுதற்கரிய காவலையுடைய வீட்டினையும், வாழ்முள்வேலி சூழ் மிளை படப்பை - உயிர்வாழ்கின்ற முள்ளையுடைய வேலியினையும், அதனைச் சூழ்ந்த காவற் காட்டினை உடைய பக்கத்தினையும், கொடுநுகம் கழீஇய புதவின் உருண்ட கணையமரம் ஏறட்ட ஒட்டுக்கதவினையும், செந்நிலை நெடுநுதி வயக்கழு நிரைத்த வாயில் - செவ்வே நிற்கின்ற நிலையினையும் நெடிய முனையினையுமுடைய வலியையுடைய கழுக்களை நிரைத்த ஊர்வாயிலையும் உடைய, கொடு வில் எயினக் குறும்பிற் சேப்பின் - கொடிய வில்லையுடைய எயினருடைய அரணிலே சென்று தங்கின், களர் வளர் ஈந்தின் காழ் கண்டன்ன கவல் விளை நெல்லின் செவ் அவிழ்ச் சொன்றி - களர் நிலத்தே வளர்ந்த ஈந்தினது விதையைக் கண்டாற் போன்ற மேட்டுநிலத்தே விளைந்த நெல்லினது சிவந்த அவிழாகிய சோற்றை, ஞமலி தந்த மனவு சூல் உடும்பின் வறை கால் யாத்தது - நாய்கடித்துக் கொணர்ந்த அக்குமணிபோலும் முட்டைகளையுடைய உடும்பினது பொரியலாலே மறைத்ததனை, வயின்தொறும் பெறுகுவிர் - மனைகள்தோறும் பெறுவீர்கள்;
கருத்துரை : ஊகம் புல்லாலே வேயப்பட்ட உயர்ந்த நிலைமையினையுடைய மதிலையும், மலையிற் றேனிறாலை ஒக்கும் குதையினையுடைய அம்புக் கட்டினையும், கடிதாக ஒலிக்கும் துடிகள் தொங்குகின்ற திரண்ட காலையுடைய பந்தரினையும், சங்கிலியால் நாய்களைக் கட்டி வைத்துள்ள கிட்டுதற்கரிய காவலமைந்த வீடுகளையும், உயிர்வாழ் முள்வேலியையும் அதனைச் சூழ்ந்த காவல்காட்டினை உடைய பக்கத்தினையும், உருண்ட கணைய மரமிட்ட ஒட்டுக் கதவினையும், செவ்வே நிற்கின்ற நெடிய முனையினையுடைய வலிய கழுக்களை நிரைத்த ஊர்வாயிலையும் உடைய, கொடிய வில்லையுடைய எயினர் அரண்களிலே சென்று தங்குவீராயின், ஈந்தின் விதைபோன்ற சிவந்த அவிழாகிய சோற்றை நாய்கள் கடித்துக் கொணர்ந்த அக்குமணி போன்ற முட்டையினையுடைய உடும்பின் பொரியலாலே மறைக்கப்பட்டதனை மனைகள்தோறும் பெறுகுவீர் என்பதாம்.
அகலவுரை : ஊகம் - ஒருவகைப்புல். மதிலின்றலையிலே ஊகம்புல் வேயப்பட்டிருத்தலால் அம்மதில் மண்மதிலாதல் உணர்க. வரைப்பு - மதில். தேன்-தேனடை. இஃது அம்புக் கட்டிற்கு உவமை. மலையிடத்தே தூங்கும் தேனிறால் போன்ற புதை என்க. புதை - அம்புக்கட்டு. சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற் பட்டுப்பா டூன்றுங் களிறு (குறள் - 597) என்புழியும் புதை அப் பொருட்டாதல் அறிக.
கவைக் கடை, கடைக்கவை என மாறுக; அடியிலே கவருடைய என்க. துடியின் குரல் கேட்டற்கு வல்லோசைத்தாதலின், கடுந்துடி என்றார். துடி-ஒரு தோற்கருவி. கணை - திரட்சி. பந்தரிலே துடி கட்டித் தூங்கும் என்க. தொடர் நாய் என்றதற்குத் தன் தலைவனைத் தொடர்ந்து செல்லும் நட்புடைய நாய் எனினுமாம். யாத்த - கட்டிய. எயினர் வேட்டைநாய்களைத் தாம் வேட்டம் செல்லாதபோது வீட்டிலே கட்டி வைப்பர் என்க. துன்னுதல்-நெருங்குதல். கடி - காவல். நகர்- வீடு. முட்செடிகளையும் மரங்களையும் உயிருடையவாக வளர்த்து அவற்றாலாக்கிய வேலி என்பார். வாழ்முள்வேலி என்றார். இனி இவ்வாழ் முள்வேலியே அன்றி முள்ளை வெட்டிக் கொணர்ந்து கட்டும் வேலியும் உளதாகலின், இஃதஃதன்று, வாழ்முள்வேலி என்றார். இதனின் வேறாகிய வேலியை, இடுமுள் வேலி எருப்படு வரைப்பு (154.) என இவ்வாசிரியரே பின்னர் ஓதுதல் அறிக.
மிளை - காவற்காடு. படப்பை - பக்கம். கொடுநுகம் - திரண்ட கணைய மரம்; ஈண்டுக் கொடுமை உருட்சியின்கண் வளைவைக் குறித்து நின்றதென்க. தழீஇய-போகட்ட; அணைத்த. புதவு - ஒட்டுக்கதவு. செந்நிலை -செவ்விய நிலை; செங்குத்தாக நிற்கும் நிலை என்றவாறு. கழுமரம், நேரே நிற்றலால், செந்நிலைக் கழு என்றார். பகைவரைக் குத்துதற்குக் கழுவைத்தார் என்பர் நச்சினார்க்கினியர். கொடுவில்-கொலைத்தொழில் செய்தற்குரிய கொடுமையுடைய வில்லென்க; வளைந்த வில்லுமாம். எயினர் - பாலைநில மாக்கள். இவர்கள் பாலைநிலத்துச் சிற்றரசர்கள் என்க. குறும்பு - அரண். அருங்குறும் பெறிந்த கானவர் உவகை (மலைபடு-318) என்புழியும் அஃதப் பொருட்டாதலறிக. சேப்பின் - தங்குவீராயின். களர் - களர்நிலம். காழ் - விதை. சுவல் - மேட்டுநிலம். பாலையாகலின் மேட்டு நிலம் கூறினார். மேட்டுநிலத்தே விளைந்த நெற்சோறு பரியதாகவும் செந்நிறமுடைத்தாகவும் இருத்தற்கு ஈந்தின் விதை உவமை என்க. செவ்வவிழ் சிவந்த சோற்றுப் பருக்கை. சொன்றி - சோறு. ஞமலி - நாய். நாய் வேட்டையாடிக் கொணர்ந்த உடும்பு என்க. உடும்பின் முட்டைக்கு மனவு உவமை. மனவு-அக்குமணி; மனாவனைய மென்சூன் மனவுடும்பு (278) என்றார், சிந்தாமணியினும், சொன்றிவறைகால் யாத்ததனைப் பெறுகுவீர் என்க. பொரியலால் மறைக்கப்பட்ட சோற்றினைப் பெறுவீர் என்றவாறு. இது பொரிக்கறியின் மிகுதி கூறியவாறு. வறை - பொரிக்கறி. வயின், ஈண்டு மனை என்க.
இனி, இத்தொடரினை அதர் மருங்கின் பயம்பின் ஒடுங்கி என் வரவு பார்த்திருக்கும் வேட்டம் அழுங்கில், பகனாள் எருக்கி, வலைமாட்டிக் குறுமுயல் வளைஇக் கானவர் கூட்டுண்ணும் அருஞ்சுரம் இறந்த அம்பர் ஓச்சி, நிரைஇ, சார்த்திய நகரும், வரைப்பும், பந்தரும் உடைய நகரும், படைப்பையும் புதவும் கழுநிரைத்த வாயிலும் உடைய எயினக் குறும்பிற் சேப்பின் சொன்றி வறைகால் யாத்ததனை மனைதோறும் பெருகுவீர் என அணுகக் கொண்டு காண்க. இனி, 134 -யானை, என்பது முதல் 168 - பெறுகுவீர் என்னும் துணையும் ஒருதொடர். இதன்கண் குறிஞ்சியின் இயல்பும் முல்லையின் இயல்பும் ஆண்டுவாழ்வோர் செய்திகளும் பிறவும் கூறப்படும்.
வாட்குடிப்பிறந்த மறவனின் மாண்பு
134-138 : யானை ................ காளை
பொருள் : யானை தாக்கினும் அரவு மேற் செலினும் - களிற்று யானை தன்னைத் தாக்க வந்தாலும் பாம்பு தன் மேலே ஊர்ந்து சென்றாலும், நீல் நிற விசும்பின் வல்லேறு சிலைப்பினும் - நீல நிறத்தையுடைய முகிலிடத்தே வலிய உருமேறு இடித்தாலும், சூல் மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை - சூற்கொண்ட மகளும் அவற்றிற்கு அஞ்சி மீளாத மறத்தைப் பூண்ட வாழ்க்கையினையும், வலிக் கூட்டுணவின் - தமது வலியாற் கொள்ளை கொண்டுண்ணும் உணவினையுமுடைய, வாள் குடிப்பிறந்த புலிப் போத்தன்ன புல்லணல் காளை வாட் டொழிலே செய்யும் குடியிற் பிறந்த புலியினது போத்தை ஒத்த புல்லென்ற தாடியையுடைய அந்நிலத்துத் தலைவன்;
கருத்துரை : களிற்றியானை தன்னைத் தாக்கவரினும், தன்மேலே பாம்பு ஊர்ந்து செல்லினும், முகில் இடியை இடிப்பினும் இவற்றிற்குங் கூடச் சூல்கொண்ட மகள் அஞ்சி மீளாத மறம்பூண்ட வாழ்க்கையினையும், தமது வலியானே பகைவரைக் கொள்ளை கொண்டுண்ணும் உணவினையும் உடைய, வாட்டொழிலே செய்யும் குடியிற் பிறந்த புலிப் போத்துப் போன்ற புல்லிய தாடியை உடைய அந்நிலத்துத் தலைவன் என்பதாம்.
அகலவுரை : எத்தகையோரும் அஞ்சுதற்குரிய விடத்தும், அஞ்சும் இயல்புடைய மகளிரும் அஞ்சார் என மறக்குடியின் தறுகண்மையை இருமடியுயர்த்தோதிய நுணுக்கம் உணர்க. அச்சம் பிறத்தற்குரிய நிலைக்களனை,
அணங்கே விலங்கே கள்வர்தம் மிறைஎனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே (தொல்.மெய்ப்பாட்.8)
என்ப. இவற்றுள், அணங்கென்பன பேயும் பூதமும் பாம்பும் ஈறாகிய பதினெண் கணனும் நிரய பாலரும் அணங்குதற் றொழிலுடைய சவந்தின் பெண்டிர் முதலாயினாரும் உருமிசைத் தொடக்கத்தனவும், என விளக்கங்கூறி,
யானை தாக்கினும் அரவுமேற் செலினும்
நீனிற விசும்பின் வல்லேறு சிலைப்பினும்
சூல்மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை
என்பதனுள் அணங்கும் விலங்கும் பொருளாக அச்சம் பிறத்தல் இயல்பென்பது கூறியவாறாயிற்று என்பர் பேராசிரியர்.
வள்ளெயிற் றரிமா வாள்வரி வேங்கை
முள்ளெயிற் றரவே முழங்கழற் செந்தீ
ஈற்றா மதமா ஏக பாதம்
கூற்றங் கோண்மா குன்றுறை யசுணம் (தொல்.பொருள்.மெய்ப்: 1.மேற்கோள்)
என அச்சப் பொருள்களைத் தொகுத்தோதியவாறு காண்க. நிலவளனுக்கேற்ப விதையும் வளமுடைத்தாம் என்னும் முறை பற்றிச் சூல்கொண்ட மகளும் அஞ்சாள் என விதந்தோதினர். எனவே, தறுகண்மை அக்குடி மறவர்க்குக் கருவிலே உண்டாய திருவென்றாராயிற்று. வல்லேறு - வலிய இடி. மறந்தின்னூஉ வரையுதிர்க்கும், நரையுருமின் ஏறு (62-63) என்றார் மதுரைக்காஞ்சியினும். சிலைத்தல் - முழங்குதல் - ஈண்டு இடித்தற்கு ஆகுபெயராய் நின்றது. சூழ்மகள் - கருக்கொண்ட பெண். மறம் - தறுகண்மை. தறுகண்மையையே அணியாக அணிவர் என்று நயந்தோன்றுமாறுணர்க. வாட்குடி - வாட்டொழிலையே செய்யும் குடி. புலிப்போத்து - ஆண் புலி.
பெற்றம் எருமை புலிமரை புல்வாய்
மற்றிவை எல்லாம் போத்தெனப் படுமே (தொல்.மரபு.41)
என்னும் நூற்பாவானே ஆண் புலியைப் போத்தென்னும் மரபுண்மையறிக. இச்சூத்திரத்திற்குப் பேராசிரியர் இவ்வடியையே எடுத்துக் காட்டினர். புல்லணல் - புற்கென்ற தாடி. இதனான் மிக்கிளைமை கூறினார். என்னை? இருங்கவி னில்லாப் பெரும்புன் றாடிக், கடுங்கண் மறவர் (அகம்-297) என்றோதுபவாகலான்.
மறவர் செயல்
136-147 : செல்நாய் ................. பின்றை
பொருள் : செல் நாய் அன்ன கருவில் சுற்றமொடு கேளா மன்னர் கடிபுலம் புக்கு - தான் குறித்த விலங்கின் மேலே செல்கின்ற நாய் அதனைத் தப்பாமற் கொள்ளுமாறு போன்று குறித்தது கொள்ளும் கொடிய வில்லையுடைய காவலாளருடனே தன் சொற் கேளாத பகை மன்னருடைய காவலமைந்த நிலத்தே சென்று, நாளா தந்து நறவு நொடை தொலைச்சி - விடியற்காலத்தே அவர்கள் ஆன்களைப் பற்றிக் கொணர்ந்து அவற்றைக் கள்ளுக்கு விலையாகப் போக்கி, இல் லடுகள் இன்தோப்பி பருகி - அதன் பின்னர்த் தமது இல்லிலே சமைத்த கள்ளுக்களில் இனிதாகிய நெல்லாற் செய்த கள்ளையுண்டு, மல்லல் மன்றத்து மதவிடை கெண்டி - வளப்பத்தினையுடைய மன்றிலே வலியையுடைய ஏற்றை அறுத்துத் தின்று, மடிவாய்த் தண்ணுமை நடுவட் சிலைப்ப - தோலைமடித்துப் போர்த்த வாயையுடைய மத்தளம் தங்களுக்கு நடுவே முழங்காநிற்ப, சிலை நவில் எறுழ்த்தோள் ஓச்சி வலன் வளையூஉ - வில்லுப் பயின்ற வலியையுடைய இடத்தோளை எடுத்து வலப்பக்கத்திலே வளைந்து, பகல் மகிழ் தூங்கும் தூங்கா இருக்கை - பகற்பொழுதிலே மகிழ்ச்சியுடனே ஆடுகின்ற மடிந்திராமைக்குக் காரணமான குடியிருப்பினையுடைய, முரண்தலை கழிந்த பின்றை - பொருதலையுடைய இடத்தினைக் கடந்த பின்னர்;
கருத்துரை : வேட்டைமேற் செல்லும் நாய்போன்று குறித்தது கொள்ளும் காவலாளரோடே, பகைமன்னருடைய காவலமைந்த நிலத்திலே சென்று விடியற்காலத்தே அவர்கள் ஆன்களைக் கவர்ந்து கொணர்ந்து பழைய கள்விலையாகிய கடனை அவ் வாவினைக் கொடுத்துத் தீர்த்த பின்னர், வளப்பமுடைய மன்றத்தில் ஏற்றை அறுத்துண்டு தங்கள் நடுவே மத்தளம் முழங்கா நிற்ப விற்பயிற்சியாலே வலிமிக்க இடத்தோளை உயர எடுத்து, வலப்புறத்தே வளைந்து பகற் பொழுதிலே ஆடிக்களிக்கின்ற மடியில்லாத குடியிருப்பினையுடைய பொருதலையுடைய இடத்தைக் கடந்த பின்னர் என்பதாம்.
அகலவுரை : செல் நாய் அன்ன சுற்றம் என்றதற்குத் தன் தலைவனைப் பின் தொடர்ந்து செல்லும் நாய்போன்ற சுற்றம் எனினுமாம்;
நாயகர்க்கு நாய்கள்போல் நட்பிற் பிறழாது
கூஉய்க் குழாஅ முடன் கொட்கும் - ஆய்படை
பன்றி யனையர் பகைவேந்தர் ஆங்கவர்
சென்றெவன் செய்வர் செரு (தொல்.உவம.37.பேர்.மேற்)
எனவரும் உவமையைக் காட்டிப் பேராசிரியரும், உயர்ந்த உவமையன்றாயினும் பொன்மாலையும் பூமாலையும் போலப் பொலிவு செய்தலின், இத்தகைய உவமையும் சிறந்த உவமையேயாம் என்பர். செல் நாய் ஈண்டுக் குறித்தது கோடற்கும் தலைவன்பால் பிறழாத அன்புடைமைக்கும் உவமை என்க. கருவில்-கருமை ஈண்டுக் கொடுமையின் மேற்று. சுற்றம் - காவற் சுற்றத்தார். தம் ஏவல் கேளாத பகை மன்னர் என்க. கடிபுலம் - காவலமைந்த நிலம். காவலமைந்த நிலத்தும் அஞ்சாமற் புகுந்தென்றவாறு. நாள் - நாட்காலை. நாளாதந்து இரவிலே சென்று ஆக்கவர்ந்து விடியற்காலத்தே கொணர்ந்தென்று ஆகவர்தற்றொழிலில் தடையுண்ணாமை கூறியவாறு. நறவு நொடை - கள்ளுண்டமையால் உண்டான பழைய கடன். கள்ளுக்கு ஆன் கொடுத்தலால் ஆவின் பாலினும் இவர்க்குக் கள்ளே சிறப்புடைத்தாதலறிக. கள் விலைக்கு ஆன்கொடுக்கும் வழக்கத்தை,
அறாஅ நிலைச்சாடி ஆடுறு தேறன்
மறாஅல் மழைத்தடங் கண்ணி - பொறாஅன்
கடுங்கண் மறவன் கழல்புனைந்தான் காலை
நெடுங்கடைய நேரார் நிரை (புறப்.வெண்.2)
வெங்கட்கு வீசும் விலையாகும் - செங்கட்
செருச்சிலையா மன்னர் செருமுனையிற் சீறி
வரிச்சிலையாற் றந்த வளம் (புறப். வெண்.66)
என்றும்,
முருந்தே ரிளநகை காணாய்நின் னையர்
கரந்தை யலறக் கவர்த்த இனநிரைகள்
கள்விலை யாட்டிநல் வேல்தெரி கானவன்
புள்வாய்ப்புச் சொன்னகணி முன்றி னிறைந்தன (சிலப்.வேட்டுவ-16)
என்றும் பிறசான்றோர் கூறுமாற்றானும் அறிக. ஈண்டுக் குறிஞ்சிநிலத் தலைவன் புறவொழுக்கம் கூறலின் குறிஞ்சித் திணைக்குப் புறனாகிய வெட்சித்திணை கூறிய நுணுக்கம் உணர்க. என்னை?
வெட்சி தானே குறிஞ்சியது புறனே (தொல்.புறத்-1)
என்றும்,
வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின்
ஆதந் தோம்பன் மேவற் றாகும் (தொல்.புறத்-2)
என்றும், ஓதுபவாகலான் என்க.
பனை முதலியவற்றின் கள்ளின் வேறாதல் காட்டுவார் இல்லடு கள் என்றார். இல் அடு கள் - வீட்டிலே சமைக்கப்பட்ட கள். தோப்பி - நெல்லாற் சமைத்த கள். இஃது ஏனைக் கள்ளினும் இனிதாதல் பற்றி இன்தோப்பி என்றார். தோப்பிக் கள்ளொடும் துரூஉப்பலி கொடுக்கும் (அகம்-35.9) என்றும், பாப்புக் கடுப்பன்ன தோப்பி (அகம்-34.8) என்றும், துழந்தடு கள்ளின் தோப்பியுண் டயர்ந்து (மணி - 7:71) என்றும், பிறசான்றோரும் கூறுதல் காண்க. மல்லல் - வளம். மல்லல் வளனே (உரி-7) என்பது தொல்காப்பியம்; மதவிடை - வலிய ஆட்டுக்கிடாய். விடை ஆண்பாற் பெயராக வருதலை ஏறும் ஏற்றையும் என்னும் தொல்காப்பிய மரபியற் சூத்திரத்துப் பிறவும் என்றமையானே அமைக்கவென்பர் பேராசிரியர் கெண்டி - தின்று. நறவும் தொடுமின் விடையும் வீழ்மின் (புறம் - 292-1) என்றார் பிறரும். மடிவாய் - தோலை மடித்துப் போர்த்த வாய். தண்ணுமை-மத்தளம், சிலைப்ப-முழங்க. நவிலுதல்-பெரிதும் பயிற்சி செய்தல். வினைநவின்ற பேர்யானை (மதுரைக்-47) என்புழியும் அஃதப் பொருட்டாதலறிக. இதனால் தொழிற் பயிற்சி உடலில் வலியேற்றும் என்னும் உண்மையைப் பண்டு அறிந்திருந்தமையறிக. சிலை நவிலுதலால் எறுழ் உண்டாய தோள் என ஏதுவாக்குக. சிலைநவில் தோள் என்றதனால் இடத்தோள் என்பதாயிற்று. மேலும் வலன் வளைஇ என வருதலறிக. எனவே இடத்தோளை உயர எடுத்து வலப்பக்கத்தே வளைந்து ஆடுங்கூத்தென்றவாறு. இரவுக்காலத்தே ஆன் கொணர்ந்து பகற்காலத்தே உண்டு ஆடி மகிழும் இருக்கை என்க. வீரர் இருக்கையாதலான் முரண்தலை என்றார். முரண்தலை - விறற்களமாகிய இடம். இத்தகைய இடத்தைக் கடந்த பின்னர் என்க. இனி முல்லைநிலம் கூறுகின்றார்.
கோவலர் இருக்கை
147-154 : மறிய .................... வரைப்பின்
பொருள் : மறிய குளகு அரையாத்த குறுங்கால் குரம்பை - ஆட்டுமறிகள் நின்று தின்னும்பொருட்டு அவற்றிற்குரிய தழைகளைத் தம்மிடத்தே கட்டின குறிய கால்களையுடைய குடிலினது, செற்றை வாயில் - சிறு தூற்றையுடைய வாயிலையும், செறி கழிக் கதவின் - செறிக்கப்பட்ட கழிகளையுடைய கதவினையும், கற்றை வேய்ந்த கழித்தலைச் சாம்பின் அதளோன் துஞ்சும் காப்பின் - வரகுக்கற்றையாலே வேயப்பட்ட கழிகளைத் தலையிலேயுடைய சேக்கையின்கண் தோற்பாயலிலே தங்குவோன் வதியும் காவலிடத்தையும், உதள நெடுந்தாம்பு தொடுத்த குறுந்தறி முன்றில்-கிடாயினது நெடிய தாம்புகள் கட்டப்பட்ட குறிய முளைகளையும் உடைய முற்றத்தே, கொடுமுகத் துருவையொடு வெள்ளை சேக்கும் - வளைந்த முகத்தினையுடைய செம்மறியாட்டோடே வெள்ளாடும் கிடக்கும், இடுமுள் வேலி எருப்படு வரைப்பின் - கட்டு முள்ளினாலாகிய வேலியினையுடைய எரு மிகுகின்ற ஊரிடத்தே;
கருத்துரை : ஆடுகள் தின்னும்பொருட்டுத் தாம்பால் தழைகளைக் கட்டின குறிய காலையுடைய குடிலினது சிறு தூற்றையுடைய வாயிலையும், கழியாற் செறித்துக் கட்டப்பட்ட கதவினையும் வரகுக் கற்றையாலே வேயப்பட்ட கழிகளைத் தலையிலேயுடைய சேக்கையின்கண் தோற்பாயலையுடையோன் தங்கும் காவலிடத்தையும் கிடாய்களைக் கட்டிய நெடிய தாம்புகளைத் தொடுத்த குறிய முளைகளையுமுடைய முற்றத்தின்கண் செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் கிடக்கும் கட்டு முள்வேலியையுடைய எரு மிகுதியாக உண்டாகின்ற ஊரிடத்தே என்பதாம்.
அகலவுரை : மறிய - மறியினுடைய: ஆறாவதன் பன்மையுருபு. குளகு-தழை. மறிகளினுடைய இரையாகிய குளகு என்க. ஆடுகள் தின்னும்பொருட்டுக் குடிலின் கால்களிலே தழைகளைக் கட்டுதலை இன்றும் காணலாம். தழைகளைத் தரையிற் போகட்டால் அவை மண் படிதலும் யாடுகளால் மிதித்துக் கெடுக்கப்படுதலும் உண்மையின் கால்களிற் கட்டுவர் என்க. அரை-காலின் நடுப்பகுதி. குரம்பை - குடில். குறுங்காற் குரம்பை என்றதனாற் சிறுகுடில் என்க. செற்றை - குறுந்தூறு. செறிகழிக் கதவு என்றது படல் என்றவாறு. கற்றை - வரகுவைக்கோற் கற்றை. இவ் வைக்கோலால் குடிலை வேய்தல் இன்றும் உளது. கழித்தலை - கழியைத் தலையிலே உடைய சாம்பு - சேக்கை. இது கழிகளாலே கட்டப்பட்ட சிறிய குடில். இதனை ஆடுகள் கிடக்குமிடந்தோறும் கொண்டுசெல்வர். அச் சேக்கையின் அகத்தே உடலில் உறுத்தாமைப் பொருட்டுத் தோற்பாயல் விரித்துப் படுக்கும் இடையனை அதளோன் என்றார். துஞ்சும் என்றதற்கு, துயில்கொள்ளும் முதியோன், என்றார் நச்சினார்க்கினியர். நீதி துஞ்சும் என்புழிப்போலத் தங்கும் எனவே காவல் என்றதற்கு ஏற்புடைத்தாதலறிக. துஞ்சும் என்றது வேறு தொழிலின்றித் தங்கும் என்றவாறு. உதளதாம்பு என்றதனை மறியகுளகு என்றாற் போலக் கொள்க. உதள் - ஆட்டுக்கிடாய். அஃதப் பொருட்டாதலை,
மோத்தையும் தகரும் உதளும் அப்பரும்
யாத்த எனப் யாட்டின் கண்ணே
என்னும் தொல்காப்பிய மரபியற் சூத்திரத்தானும் உணர்க. நெடுந்தாம்பு என்றது பல தாம்புகளை நிரல்படத் தொடுத்த தாம்பு என்றவாறு. இதனைத் தாமணி என ஆசிரியர் நச்சினார்க்கினியர் காலந் தொடங்கி இற்றைநாள் வரையும் வழங்குகின்றனர். தாம்பணி என்றது தாமணி என மருவிற்றுப்போலும் செம்மறியாட்டின் முகம் வளைவுடைத்தாதலும் வெள்ளாட்டின் முகம் அங்ஙனம் இன்மையும் நோக்கி உணர்க. துருவை - செம்மறியாடு. வெள்ளை - வெள்ளாடு. இது மங்கலவழக்கு. கிடாய்களைத் தாமணியில் யாத்துப் பெண்ணாடுகளை வாளா கிடக்கவிடுதல் ஆயர்கள் வழக்கம் ஆதலை இன்றும் காணலாம். 126 ஆம் அடியில் வாழ்முள்வேலி கூறியவர் ஈண்டு அதனின் வேறாகிய இடுமுள்வேலி கூறுதலறிக. ஆட்டுக்கிடை கிடத்தலாற் கழனிக்கு எரு மிகப்படுதல் கூறினார். வரைப்பு - ஊர்.
கோவலர் மகளிரின் செயல்
155-162 : நள்ளிருள் ................. ஆய்மகள்
பொருள் : நள்ளிருள் விடியல் புள் எழப் போகி - செறிந்த இருள் போகின்ற விடியற்காலத்தே பறவைகள் துயிலெழாநிற்ப எழுந்து தன் தொழிலிடத்தே சென்று, புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி - புலியினது முழக்கம்போன்ற முழக்கத்தையுடைய மத்தினை ஆரவாரிக்கும்படி கயிற்றை வலித்து, ஆம்பிவால் முகில்அன்ன கூம்பு முகை உறை அமை தீந்தயிர் கலக்கி - குடைக்காளானுடைய வெள்ளிய முகைகளை ஒத்த குவிந்த முகைகளையுடைய உறையினாலே இறுகத் தோய்ந்த இனிய தயிரைக் கடைந்து, நுரை தெரிந்து - வெண்ணெயை எடுத்து, புகர் வாய்க் குழிசி பூஞ் சுமட்டு இரீஇ-தயிர் புள்ளியாகத் தெறித்த வாயையுடைய மோர்ப்பானையை மெல்லிய சுமட்டின் மேற்றலையிலே வைத்துச் சென்று, நாள் மோர் மாறும் - புதிய மோரை விற்கும், நல் மா மேனி - நன்றாகிய மாமை நிறத்தையுடைய மேனியையும், சிறு குழை துயல்வருங் காதின் - தாளுருவி என்னும் அணிகலன் அசையாநின்ற காதினையும், பணைத்தோள் - மூங்கில் போன்ற தோளினையும் குறு நெறிக் கொண்ட கூந்தல் - குறிதாகிய அறலைத் தன்னிடத்தே கொண்ட மயிரினையும் உடைய, ஆய்மகள் - ஆய்ச்சாதியிற் பிறந்த மகள்;
கருத்துரை : செறிந்த இருள் புலருகின்ற விடியலிலே பறவைகள் எழும்போதே எழுந்து தன் கடமைமேற் சென்று, புலிபோலும் முழக்கத்தையுடைய மத்தினை ஆரவாரிக்கும்படி கயிற்றை வலித்து, குடைக்காளானின் முகிழ்போலும் முகிழையுடைய உறையிட்டு இறுகிய தயிரைக் கடைந்து, தலையின்மேலே மெல்லிய சுமட்டின்கண் அம் மோர்ப்பானையை ஏற்றிச்சென்று, புதிய மோரை விற்கும் நல்லமாமை நிறமுடையவளும், சிறிய குழை அசையும் காதையுடையவளும் மூங்கில்போன்ற தோளையுடையவளும் குறிய அறல்பட்ட கூந்தலையுடையவளும் ஆகிய இடையர் மகள் என்பதாம்.
அகலவுரை : இப்பகுதியிலே தயிர்கடைந்து சுமட்டில் அப்பானையை ஏற்றி மோர் விற்கும் ஓர் அழகிய ஆய்மகளின் உயிர் ஓவியத்தை மனக் கண்ணாற் கண்டு இன்புறலாம். நள்ளிருள் விடியல் என்றது, வைகறையாமத்தை என்க. அப்பொழுது பறவைகள் துயிலெழுந்து இன்னிசை பாடுதலின் புள்ளெழப்போகி என்றார். போகி-ஈண்டுத் தன் கடமைமேற் சென்றென்க. மேலும் இச் சொல்லை இரீஇ என்னும் சொற்பின் இயைத்துச் சென்றென்க. தயிர் கடையும் முழக்கம் புலிமுழக்கம் போறலை, கடையலங் குரல வாள்வரி உழுவை, (அகம்.277-5) இரும்புலிக் கிரிந்த கருங்கட் செந்நாகு, நாட்டயிர் கடைகுரல் கேட்டொறும் வெரூஉம் (தொல்-அகத்.41 மேற்.) கடைதயிர் குரல வேங்கை (சீவக-2717) என வருவனவற்றானும் உணர்க.
மத்தம் -தயிர்கடை மத்து. வாங்குதல் - கயிற்றை மாறிமாறி வலித்தல். ஆம்பி - காளான். ஆம்பிபூப்ப என்புழியும் காண்க. குடைக்காளானுடைய முகை, இறுகத் தோய்ந்த தயிரின்கண் முகிழுக்கு மிகமிகப் பொருந்திய உவமையாதல் கண்டின்புறுக. இங்ஙனம், பொருந்த உவமை கண்டோதல் நுண்மாணுழை புலனுடைய நல்லிசைப் புலவர்க்கே இயன்றதாகும். இவ் வுவமையின் அருமை தெரிந்த கம்பநாடர் இதனை,
பொழிந்த மாநிலம் புற்றரக் குமட்டிய புனிற்றா
எழுந்த ஆம்பிகள் இடறின செறிதயிற் ஏய்த்த (கம்ப.கார்கா.47)
எனத் தமது காவியத்துள்ளும் போற்றி அமைத்துக் கோடல் அறிக. உறை-உறைதற்பொருட்டுக் காய்ச்சிய பாலிலிடும் மோர். இதனைப் பிரை என்றும் வழங்குப. நன்கு பாலைக் காய்ச்சி இறுகத் தோய்த்த தயிர் சிறிது இனிப்புக் கலந்து இனிதாதல்பற்றித் தீந்தயிர் என்றார். நுரை தெரிதல் என்பதற்கு நுரையாலே பதம் தெரிந்து எனினுமாம். புகர்வாய்க் குழிசி - தயிர் கடையுங்காற் சிதறிப் புள்ளிகளாகப் படிந்த வாயையுடைய பானை. பூஞ்சுமடு என்பர் நச்சினார்க்கினியர். இரீஇ-இருத்தி. நாண்மோர் - நாட்காலையில் விற்கும் மோருமாம். மா-மாமை நிறம். குழை என்பதனைத் தாளுருவி என்னும் அணிகலன் என்பர் நச்சினார்க்கினியர். துயல்வருதல் - அசைதல். குறுநெறி - அணித்தாக அணித்தாக அறல்படுதல். ஆய்மகள் - இடைச்சி.
இதுவுமது
163-168 : அளைவிலை ................. பெறுகுவீர்
பொருள் : அளைவிலையுணவிற் கிளையுடன் அருத்தி - மோர் விற்றதனாலுண்டாகிய நெல் முதலியவற்றாலே சுற்றத்தார் எல்லோரையும் உண்ணப்பண்ணி, நெய் விலைக் கட்டிப் பசுப்பொன் கொள்ளாள் - பின்பு தான் நெய்யை விற்கின்ற விலைக்குக் கட்டியாகிய பசும்பொன்னை வாங்காளாய், எருமை நல் ஆன் கருநாகு பெறூஉம் - அவ் விலைக்கு எருமையினையும் நல்ல ஆன்களையும் அவையிற்றின் கருவாகிய கன்றுகளையும் வாங்காநின்ற, மடிவாய்க் கோவலர் குடிவயின் சேப்பின் - சீழ்க்கை பிடித்தலாலே மடித்த வாயையுடைய இடையர் குடியிருப்பிலே தங்குவீராயின், இருங்கிளை ஞெண்டின் சிறு பார்ப்பு அன்ன பசுந்தினை மூரல் - பெரிய சுற்றமாகிய நண்டினது சிறிய பார்ப்பை ஒத்த பசிய தினையரிசியாலாக்கின சிலுத்த சோற்றை, பாலொடும் பெறுகுவிர் - பாலோடே பெறாநிற்பீர்;
கருத்துரை : மோர் விற்றதனாலுண்டான நெல் முதலிய உணவாலே தன் சுற்றத்தார் எல்லாரையும் உண்ணச்செய்து, பின்பு தான் நெய் விற்ற விலைக்குக் கட்டிப் பசும்பொன்னையும் விரும்பிக் கொள்ளாது, எருமையும் நல்ல ஆன்களையும், அவற்றின் கன்றுகளையுமே கொள்ளுகின்ற மடிவாய்க்கோவலருடைய குடியிருப்பை அடைவீராயின், ஆண்டு நண்டின் பார்ப்பை ஒத்த பசிய தினையாலாக்கிய சிலுத்த சோற்றைப் பாலோடே அவர்கள் தருதலாலே பெறுவீர் என்பதாம்.
அகலவுரை : அளை - மோர். அளைவிலை யுணவின் ஆய்ச்சியர் (சிலப்.16-3) என்றார் இளங்கோவடிகளாரும். உணவு -நென் முதலிய கூலங்கள். இதனால் ஆயர்குடியின் இல்லறச் சிறப்பு ஓதுகின்றார். நள்ளிருள் விடியலின் எழுந்து இவ்வாறு தொழில் செய்து ஈட்டிய உணவினைக் கிளைமுதல் அருத்தி என்றதும், பின்னரும் தினைச் சோற்றைப் பாலோடு இரவலர்க்கு வழங்குதல்கூறலும், சிறந்த இல்லறமாதல் உணர்க. அருத்தும் வினை மகளிர்க் குரித்தாகலின் ஆய்மகள் மேற்றாக உரைத்தார். தான் வருந்திக் கிளைஞரையும் விருந்தினரையும் ஆர்த்தினள் என்றதன் மாண்புணர்க. நெய்விலைக்குக் கட்டிப் பசும்பொன் பெறாது எருமை முதலியன கொள்ளுதல் அவர்தம் குடிக்குப் பொருளாக அமைவன அவையேயாகலான், பொன்னினும் அவற்றையே மதிப்பர் என்பதுபட நின்றது.
இனி, நெய் விலைக்கு அட்டி எனக் கண்ணழித்து நெய்யை விலைக்கு வார்த்து எனக் கோடலுமாம். எருமையும் நல்லானும் கருநாகும் என்க. கருநாகு - கருவாகிய கன்றென்க. கரிய எருமை நாகு என்பர் நச்சினார்க்கினியர். நல் என்னும் அடையை எருமைக்கும் இயைத்து நல்ல எருமையையும் என்க. நன்மை - ஈண்டு நல்ல சாதியின் மேற்று. இடையர் தம் ஆடுகளில் வந்து விழும் நரி முதலியவற்றை உரப்புதற்கு அடிக்கடி சீழ்க்கை பிடித்தலாலே மடித்த வாயையுடைமையின் மடிவாய்க் கோவலர் என்றார். இடையன் மடிவிடு வீளை கடிது சென்றிசைப்ப (அகம் : 274- 8-9) என்றும், நாத்தலை மடிவிளிக் கூத்தொடு துயல்வர (சிந்தா - 120) என்றும், பிறரும் ஓதுதலறிக. நண்டுப்பார்ப்புச் சிலிர்த்த தினைச்சோற்றிற்கு உவமை. நண்டின் ஒரே கருவில் எண்ணிறந்த பார்ப்புகள் உண்மையின் இருங்கிளைப் பார்ப்பு என்றார். இருமை - பெருமையின் மேற்று. மூரல் - சோறு.
இருந்தோம்பி இவ்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு (குறள் - 81)
என்பவாகலான், இறுதியாக அவ்விடையர் குடியின் விருந்தோம்பற் சிறப்பைப் பாலொடு பசுந்தினைச் சோற்றை வழங்குமாற்றால் விளக்கினார். இனி, இத் தொடரைக் காளை சுற்றமொடு புக்கு ஆதந்து நொடை தொலைச்சி, தோப்பி பருகி, விடைகெண்டி, வளையூஉத் தூங்கும் இருக்கை, கழிந்த பின்றை, குரம்பையின் காப்பின் முன்றிலில் துருவையொடு வெள்ளை சேக்கும் வரைப்பின் போகி, வாங்கித் தெரிந்து இரீஇ மாறும் ஆய்மகள், அருத்தி பொன் கொள்ளாள் எருமை முதலியன பெறூஉம் கோவலர் குடிவயிற் சேப்பின் மூரல் பாலொடும் பெறுகுவீர் என அணுகக் கொள்க.
இனி, 169-முதல் 195-வரை ஒருதொடர்.
முல்லைநிலத்து உழுதுண்பார் சேரிகள்
இடையன் இயல்பு
169-175 : தொடுதோல் .................... இடையன்
பொருள் : தொடுதோல் மரீஇய வடுவாழ் நோன் அடி - செருப்பு விடாமற் கிடந்த வடுவழுந்தின வலிய அடியினையும், விழுத்தண்டு ஊன்றிய மழுத்தின் வன்கை - பசுக்களுக்கு வருத்தஞ் செய்யும் தடியை ஊன்றின கோடரித் தழும்பிருந்த வலிய கையினையும், உறிக்கா வூர்ந்த மறுப்படு மயிர்ச்சுவல்-இரண்டு தலைகளினும் உறியினையுடைய காக்கள் மேலே இருந்ததனால் உண்டாகிய தழும்புமிக்க மயிரெழுந்த தோட்கட்டினையும், மேம்பால் உரைத்த ஓரி - ஏனைப் பாலினும் மேன்மையுடைய ஆன்பாலைத் தடவிய மயிரினையும், ஓங்கு மிசைக் கோட்டவும் கொடியவும் - உயர்கின்ற உச்சியையுடைய கொம்புகளில் உள்ளனவும் கொடிகளில் உள்ளனவுமாகிய, காட்ட பல்பூ விரைஇ மிடைந்த படலைக்கண்ணி - காட்டிடத்துப் பல்வேறு பூக்களையும் கலந்து நெருங்கிய கலம்பகமாகிய மாலையினையும், ஒன்று அமர் உடுக்கை - ஒன்றாய்ப் பொருந்தின உடையினையுமுடைய, கூழ்ஆர் இடையன் - பாற்சோற்றை உண்ணுகின்ற இடைமகன்;
கருத்துரை : செருப்பு விடாமற் கிடந்ததனால் வடுவழுந்தின வலிய அடியினையும், ஆன்களுக்கு வருத்தஞ் செய்யும் கோலை ஊன்றிய கோடரித் தழும்பிருந்த வலிய கையினையும், இருதலைகளினும் உறிகளையுடைய காக்கள் மேலே இருந்ததனால் உண்டாகிய தழும்பு மிக்க மயிரெழுந்த தோட்கட்டினையும் மேன்மையுடைய ஆன்பாலைத் தடவிய மயிரினையும், உயர்ந்த கொம்புகளிடத்தும் கொடிகளிடத்தும் மலர்ந்த காட்டுப்பூப் பலவற்றையும் கலந்து நெருங்கிய கலம்பகமாகிய மாலையினையும், ஒற்றை ஆடையினையும் உடைய பாற்சோற்றை உண்ணும் இடையன் என்பதாம்.
அகலவுரை : முன்னர், (155-165) ஆய்மகளைச் சொல்லோவியமாக்கிக் காட்டிய புலவர் ஈண்டு ஆயனை அங்ஙனம் காட்டுதல் காண்க.
தொடுதோல் - செருப்பு, இஃது அடியை மூடியதன்று, அடியை மூடும் செருப்பினை அடிபுதையரணம் என (69) கீழ்க் கூறிப் போந்தமை அறிக. அடிபுதை அரணம் அணிவார் தமிழ் நாட்டாரல்லாத பிறநாட்டு வம்பலர் ஆதலும் காண்க. எப்பொழுதும் தொடுதோலுடையர் ஆதலின் மரீஇய என்றார். மரீஇய-பொருந்திய. வடு-தொடு தோலழுந்திய தழும்பு. முட்களையுடைய காட்டினும் பரலினுமே வழங்குவோராகலின் தொடுதோல் இடையர்க்குச் சிறப்பாக வேண்டியதாயிற்று. நோன்அடி-வலிய அடி. விழுத்தண்டு என்பதன்கண் விழுமம் என்னும் உரிச்சொல் ஈண்டு வருத்தம் என்னும் பொருளின் மேனின்றது விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (உரி-55) என்பர் தொல்காப்பியனார். கொடுங்கோற் கோவலர் (நெடுநல்-3) எனப் பிறரும் கோவலர் கோலுக்குக் கொடுமையே கூறுதல் காண்க.
மழு கோடரி, பலகாலும் பரிய மரங்களை வெட்டி முறித்தலின் தழும்பும் வலிமையும் உடைய கை என்க. தொழிற் பயிற்சியால் உறுப்புக்கள் வலிமை பெறும் என்பதனை ஈண்டும் காண்க. உறி-காமரத்தின் இருதலையினும் தூங்கும் உறிகள் என்க. உறிக்கா - இரண்டாவதும் பயனும் தொக்க தொகை. கா இடையன் தோளில் ஏறிச் செல்லுதலால் ஊர்ந்த என அதன் தொழிலாகக் கூறினார். காச்சுமந்த என்பது கருத்து. மறு - தழும்பு. காப் பலகாலும் காவுதலானே தழும்பு கிடக்கும் என்றவாறு. இடையர்கள் தங்கள் புல்லினங்கட்கு மேயல் தேடி வேற்றுப்புலம் செல்லுந்தோறும் தங்கள் உடைமைகளைக் காவிலிட்டுக் காவிப் போதல் வழக்கம் என்க. சுவல்-தோள். மேம்பால் என்றதற்கு எருமை ஆடு முதலியவற்றின் பாலினும் மேன்மையுடைய ஆன்பால் என்க. இதற்கு, எல்லா மணமும் பொருந்தும் பசுக்கறந்த பால் என்பர் நச்சினார்க்கினியர். மேம் மேவும் எனக் கொண்டார் அவர். மேவுதல் -பொருந்துதல். ஆதலான் மேதக. என்புழிப்போலவே மேன்மையுமாகலான் யாங் கூறியதே சிறத்தலறிக. ரா.இராகவையங்கார் அவர்கள் மேம்பால் என்பதனை வேம்பால் எனப் பாடந்திருத்தி விரும்பும் பால் என்பர். இங்ஙனம் பாடந்திருத்தல் அடாத செயல் என்க.
கொட்ட-கொம்பினுள்ளன கொடிய - கொடியினுள்ளன. கோட்டுப் பூவும் கொடிப்பூவும் என்றவாறு. பல்வேறு பூக்களையும் கொய்து கலம்பக மாலை கட்டி அணிவர் என்றது, அவ்விடையர் வாழ்க்கைக் கண் அவர்கட்குள்ள மகிழ்ச்சியைக் காட்டும் குறிப்பேதுவாக நின்றது. காச்சுமத்தலும் ஒன்றுடுத்தலும் ஆன் ஓம்பலும் எல்லாம் அவர்கட்கு மகிழ்ச்சியாகவே உள்ளன என்க. கூழ்-பாற்சோறு. இனி இவர் ஈண்டுக் காட்டிய இடைமகன் ஓவியத்தோடே,
கடைகோற் சிறுதீ யடைய மாட்டித்
திண்கா லுறியன் பானையன் அகலன்
நுண்பஃ றுவலை பொருதிற நனைப்பத்
தண்டுகா லூன்றிய தனிநிலை இடையன் (274:5.8)
என்னும் அகப்பாடலையும் நினைவு கூர்க. ஒன்றமர் உடுக்கை என்றது, இன்றியமையாத ஒற்றை ஆடையிலேயே அமைதிகொள்ளும் இயல்புடையனாய் இரண்டாவதொன்றனை விரும்பாதவன் என்பதுபட நின்றது. இப்பண்பு இன்ப வாழ்க்கைக்குச் சிறந்த ஏதுவாம். பெற்ற சிறுகப் பெறாத பெரிதுள்ளும் சிற்றுயிர்களாகிய எம்மனோர் இவ்விடைமகன் அமைதியை நன்கு கற்றல் வேண்டும்.
அவ்விடைமகனின் அக அழகு
176-184 : கன்று .................... போகி
பொருள் : கன்று அமர் நிரையொடு கானத்து அல்கி- கன்றுகளை விரும்பும் ஆனிரைகளோடே காட்டிலே தங்கி, அம்நுண் அவிர் புகை கமழக் கைமுயன்று ஞெலி கோல்கொண்ட பெருவிறல் ஞெகிழி செந்தீத் தோட்ட - அழகிய நுண்ணியதாய் விளங்கும் புகை முற்படப் பிறக்கும்படி கையாலே கடைந்து படுத்த கோலிடத்தே உண்டாக்கிக் கொண்ட பெரிய வெற்றியை யுடைய கடைக்கொள்ளியாலே துளையிட்ட, கருந்துகளைக் குழலின்-கரிய துளையினையுடைய குழலால் எழுப்பின, இன் தீம் பாலை முனையின் மிகவும் இனிய பாலை என்கின்ற பண்ணைத் தான் வெறுக்கின், குமிழின் புழற் கோட்டுத் தொடுத்த மரற் புரி நரம்பின் வில்யாழ் இசைக்கும் - குமிழினது உட்பொய்யாகிய கொம்பிடத்தே வளைத்துக் கட்டின மரலின் கயிறாகிய நரம்பினையுடைய வில்லாகிய யாழ் இசையாநின்ற, விரல் எறி குறிஞ்சி விரலாலே எறிந்து எழீஇய குறிஞ்சியென்னும் பண்ணை, பல்காற் பறவை கிளை செத்து ஓர்க்கும் - பல கால்களை யுடைய வண்டுகள் தம் சுற்றத்தின் ஓசையாகக் கருதிச் செவி கொடுத்துக் கேளாநின்ற, புல் ஆர் வியன் புலம் போகி - புல்லு நிறைந்த அகற்சியையுடைய நிலத்தைக் கடந்துபோய்;
கருத்துரை : கன்றுகளைப் பெரிதும் விரும்புகின்ற பசுத் திரளோடே காட்டிலே தங்கி அழகிய நுண்புகை கமழும்படி ஞெலிகோலிடத்தே கையாலே கடைந்துகொண்ட கடைக் கொள்ளியாலே துளையிடப்பட்ட குழலை ஊதி எழுப்பின பாலை என்னும் பண்ணை நுகர்ந்து அதனை வெறுத்தபொழுது குமிழினது உட்டுளைபொருந்திய கோட்டை வளைத்துக் கட்டின மரலின் கயிறாகிய நரம்பையுடைய வில்லாகிய யாழிலே குறிஞ்சிப் பண்ணை விரலாலே தெறித்து எழுப்ப அதனைத் தம் சுற்றத்தின் ஒலியாகக் கருதி வண்டுகள் செவிகொடுத்துக் கேட்கும் புல்லுநிறைந்த அகன்ற முல்லை நிலத்தைக் கடந்து அப்பாற் சென்று, என்பதாம்.
அகலவுரை : கன்றின்பால் அன்புடைய உயிரினங்களில் ஆன் தலை சிறந்ததாதல் பற்றிக் கன்றமர் நிரை என்றார். அமர்தல்- விரும்புதல். அமர்தல் - பொருந்துதல் என்று கூறினர் நச்சினார்க்கினியர். கானம் - காடு. அல்கி-தங்கி. இனி இடையனின் உள்ள மகிழ்ச்சியைக் காட்டும் செயல்களை எடுத்துக் கூறுகின்றார். புகை கமழ்தல் என்றது தீக்கடையும் பொழுது தீத்தோன்று முன்னர் மணக்கும் புகை மணத்தை, கட்புலனாகாதிருந்து பின்னர்க் கட்புலனாகத் தடித்து விளங்குதலின் அம் நுண் அவிர் புகை என்றார். ஞெலிகோல் - தீக்கடையப்படுங் கோல், ஞெகிழி - தீக் கடையுங் கோல் என்க. ஏனைக் கோல்களுக்கு ஏலாமையால் தீக்கடை கோலைப் பெருவிறல் ஞெகிழி என்றார். பெருவிறல் - தன் செயலில் வெற்றியுடைத்தாதல். ஈண்டுத் தீத் தோன்றப் பண்ணல் வெற்றி என்க.
தோட்ட - துளைத்த, கடைக் கொள்ளியாலே மூங்கிற் குழலைத் துளைத்தலின், துளை கருந்துளை எனப்பட்டது. குழல் - வேய்ங்குழல். குழல் மூங்கிலிற் செய்வதே உத்தமம் என்ப. இனிக் குழலில் துளையிடும் அளவு வருமாறு :
அளவு இருபது விரல், இதிலே தூம்பு முகத்தின் இரண்டு நீக்கி முதல் வாய்விட்டு, இம்முதல் வாய்க்கு ஏழங்குலம் விட்டு வளை வாயினும் இரண்டு நீக்கி, நடுவின் நின்ற ஒன்பது விரலினும் எட்டுத் துளையிடப்படும். இவற்றுள் ஒன்று முத்திரை என்று கழித்து நீக்கி நின்ற ஏழினும் ஏழு விரல் வைத்து ஊதப்படும். துளைகளின் இடைப்பரப்பு ஒரு விரலகலம் கொள்ளப்படும். (சிலப்-3:26. உரை) எனவரும் அடியார்க்கு நல்லார் உரையான் அறிக. பாலை - ஒருவகைப் பண். பண்ணாகலான் இன்றீம்பாலை என ஏற்ற அடைகொடுத்து இயம்பினார். இன்றீம்பாலை என்றது மிகவும் இனிமையுடைய பாலைப் பண் என்றவாறு.
மனம் அடிக்கடி மாறும் இயல்புடைத்தாகலின், இன்றீம்பாலைப் பண்ணையும் முனைதல் கூறினார். இனி, யாழ் கூறுகின்றார். உட்டுளை பொருந்திய தண்டு யாழுக்கு இன்றியமையாமையால் குமிழங் கோட்டில் மரல் கயிற்றை நரம்பாகக் கொண்டு யாழ் செய்துகொண்டு என்றபடி. இவ்வியாழ் வில்வடிவிற்றாதலான் வில்யாழ் என்றார். யாழ் விரலாலே தெறிக்கப் படுதலால் விரல் எறி குறிஞ்சி என்றார். குறிஞ்சி - ஒரு பண் : பாலைப் பண்ணை வெறுத்துழி யாழில் குறிஞ்சிப் பண்ணை எழீஇ இன்புற்றான் என்க. பல்காற் பறவை என்றது, வண்டிற்கு வெளிப்படை கூறியவாறு.
இனி,
நண்டுந் தும்பியும் நான்கறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
என்னும் சூத்திரத்து ஆசிரியர் தொல்காப்பியனார் வண்டுகட்குச் செவியறிவில்லை என்றோதுபவாகலின் ஈண்டு வண்டு இசையோர்க்கும் எனச் செவியறிவுடையனவாகக் கூறுதல் குற்றமாம் பிறவெனின் அற்றன்று. நண்டுந் தும்பியும் என்ற சூத்திரத்தே பெரும்பான்மைபற்றித் தும்பி நான்கறிவிற்று என்றாரேனும் தும்பியுள்ளும் ஒரு சாரன் கேள்வியறிவுடைய என்றற் கன்றே தும்பியை நண்டிற்குப் பின்னாக ஐயறிவுயிரோடே சாரவைத் தோதியதூஉம் என்க. இதனால் வண்டுகளில் நான்கறிவினவும் ஐயறிவுடையனவும் உள என்றவாறாயிற்று. வண்டுகள் செவியுடையனவாதல் கருதியன்றே பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த, தாதுண்பறவை பேதுறல் அஞ்சி, மணிநா வார்த்த மாண்வினைத் தேரன் (அகம்-4) என்றும், பல்காற் பறவை கிளை செத்தோர்க்கும் என்றும் சான்றோர் செய்யுள் செய்வாராயினர் என்க.
ஆனிரைகட்கு இன்றியமையாத புன்னிறைந்த நிலம் என்பார் புல்லார் புலம் என்றார்; இனிப் புல்லை ஆன்முதலியன மேய்கின்ற நிலம் எனினுமாம். இதன்கண் ஆனிரை யோம்பும் இடையர் தன்மை கூறி இனி அவருள்ளும் உழுதுண்பார் இயல்பு கூறுகின்றார்.
உழுதுண்ணும் முல்லைநிலமாக்கள் உறையும் சீறூர்மாண்பு
184-191 : முள்ளுடுத்து ................. சீறூர்
பொருள் : முள் உடுத்து எழுகாடு ஓங்கிய தொழுவுடை வரைப்பின் - முள்ளுத் தன்னிடத்தே சூழ்ந்து எழுகின்ற விடத்தே தொடரி முதலிய காடுகள் சூழ வளர்ந்த தொழுக்களை யுடைய நிலத்தின்கண், பிடிக்கணத்து அன்ன குதிர் உடைமுன்றில் - பிடித்திரள் நின்றாற் போன்று வரகு முதலியன நிறைத்து நிற்கும் குதிர்களையுடைய முன்றிலையும், களிற்றுத்தாள் புரையும் திரிமரப் பந்தர்-யானையினது காலை ஒக்கும் வரகு திரிகை நட்டு நிற்கும் பந்தரினையும், குறுஞ் சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி நெடுஞ் சுவர் பறைந்த புகையும் கொட்டில் - குறிய சகடத்தின் உருளையோடே கலப்பையையும் சார்த்தி வைக்கப்பட்டமையாலே நெடிய சுவரிடத்தே தேய்ந்த புகை சூழ்ந்த கொட்டிலினையும் உடைய, பருவவானத்துப் பா மழை கடுப்பக் கருவை வேய்ந்த கவின் குடிச் சீறூர் - மாரிக்காலத்தை உடைய விசும்பிடத்தே பரவிய முகிலை ஒப்ப வரகுவைக்கோலாலே வேய்ந்த அழகினையுடைய குடியிருப்பினையுடைய சிறிய ஊர்களிலே;
கருத்துரை : முள்ளுடைய விடத்தே தொடரி முதலிய காடுகள் சூழ வளர்ந்த தொழுக்களையுடைய நிலத்தின்கண்ணே, பெண் யானைகள் நின்றாற் போன்று குதிர்கள் நிற்கும் முற்றத்தையும், யானையின் காலைப் போன்ற வரகு திரிகை நட்டு நிற்கும் பந்தரினையும், குறிய சகட்டுருளைகளோடே கலப்பையையும் சார்த்தியதாலே நெடிய சுவர் தேய்ந்த புகை சூழ்ந்த கொட்டில்களையும், கார்காலத்தே விசும்பிடத்தே பரவிய முகில்கள் போன்ற வரகு வைக்கோலால் வேயப்பட்ட அழகிய குடியிருப்பினையுமுடைய சிறிய ஊர்களிலே என்பதாம்.
அகலவுரை : முள்ளுடைய உயிர் வேலியிட்டு ஆன்முதலியன மேயாமற் றடைசெய்தலின் புல் முதலியன ஓங்கி வளர்ந்த காடென்பார் முள்ளுடுத்து எழுகாடு என்றார். முள்-முள்ளுடைய மரங்கள் செடிகள் முதலியன; விடத்தே தொடரி போன்றன என்க. இதனைப் படைத்தலைவர் இருப் பென்பர் நச்சினார்க்கினியர். தொழு - ஆன்முதலியன கட்டும் கொட்டில் பிடிக்கணம் - பெண்யானைத் திரள். இது முன்றிலில் நிற்கும் வரகு நிறைந்த குதிர்கட்கு உவமை. இதனால் அந்நிலத்தே உணவுப் பொருள் மிகுதி கூறினார்.
குதிர்கள் நிறைந்த வரகினைத் திரித்தல் வேண்டி முன்றில் தொறும் திரிகைமரம் நிற்றல் கூறினார். இதற்கு யானைக்கால் உவமை என்க. இத் திரிகைமரம் பந்தரின் கீழே நடப்பட்டுள்ளன. குறுஞ்சாடு-சிறிய வண்டி. வரகு முதலியன வளைந்து விட்டமையாலே சகட்டுருளைகளும் கலப்பைகளும் சுவரிற் சார்த்தப்பட்டன என்க. அவை சார்த்தப்படுதல் சுவர் பறைதற்கு ஏதுவாதலுணர்க. பறைதல்-தேய்தல்; முன்னர்ப் பறைதாள் விளவின் (95) என இச்சொல் இப்பொருளில் வழங்கப்பட்டமை யறிக. புகைசூழ் கொட்டில் என்றதனால் கலப்பை முதலிய கருவிகள் வைக்கப்பட்ட கொட்டிலே அட்டிலாதல் கூறினார். மேலே கூறுகின்ற கருவை வேய்ந்த கவின்குடி இவர்கள் தங்குமில்லங்கள் போலும். அதனானன்றோ அவற்றைக் கவின்குடி என்றார். கருவை-கரிய வரகு வைக்கோல். பற்பல விடங்களினும் உள்ள கரிய வைக்கோல் வேய்ந்த கவின்குடிகள் கார்காலத்து விசும்பிலே முகில்கள் பரந்து தோன்றுமாறு போலத் தோன்றும் என்ற உவமையின் அழகையும் உணர்க. வரைப்புல் முன்றிலையும் கொட்டிலையும் கவின் குடியையும் உடைய சீறூரில் என்க. இனி, இச் சீறூர் வாழ்வார் விருந்தோம்பற் சிறப்புரைக்கின்றார்.
இதுவுமது
192-196 : நெடுங்குரல் ....................... பெறுகுவீர்
பொருள் : நெடுங் குரல் பூளைப் பூவின் அன்ன -நெடிய கொத்தினையுடைய சிறு பூளையினது பூவை யொத்த, குறுந்தாள் வரகின் குறள் அவிழ்ச் சொன்றி-குறிய தாளினையுடைய வரகினது சிறிய பருக்கைகளாகிய சோற்றை, புகர் இணர் வேங்கை வீ கண்டன்ன - நிறத்தையுடைய கொத்தினையுடைய வேங்கைப் பூவைக் கண்டாலொத்த, அவரை வான் புழுக்கு அட்டி - அவரை விதையினது நன்றாகிய பருப்பை மிக விட்டு, பயில்வுற்று இன் சுவை மூரல் பெறுகுவிர் - துழாவுதலாலே இனிய சுவையுடைத்தாகிய மூரலோடே பெறாநிற்பீர்;
கருத்துரை : நெடுங் கொத்தையுடைய பூளைப்பூப் போன்ற வரகினது சிறிய அவிழாகிய சோற்றை, வேங்கைப்பூவை ஒத்த அவரை விதையின் பருப்பை மிகவிட்டுத் துழாவுதலாலே இன்சுவைத்தாகிய மூரலோடே பெறுகுவிர் என்பதாம்.
அகலவுரை : குரல் - கொத்து. சிறு பூளைப்பூ. வரகுச் சோற்றிற்கு உவமை. நெடுங்குரல் குறுந்தாள் என்பவற்றில் முரண்தோன்றிச் செய்யுளின்பம் மிகுதல் உணர்க. வரகு-நெற்பயிர் போன்று ஓங்கி வளராமையின் குறுந்தாள் வரகு என்றார். வேங்கைப்பூ, அவரைப் பருப்பாலாகிய சோற்றிற்கு உவமை. மூரல் என்றது, இப் பருப்புச் சோற்றினை, புழுக்கு - புழுங்க வெந்தது. இதனைக் கும்மாயமுமாம்; பருப்புச் சோறும் என்ப என்பர் நச்சினார்க்கினியர். பயில்வுறுதல்-நன்கு துழாவுதல்.
169-முதல் 196-வரை கிடந்த இத் தொடர் :
இடையன் அல்கிக் குழலின் பாலை முனையின் வில் யாழ் இசைக்கும் குறிஞ்சியைப் பல்காற் பறவை ஓர்க்கும் புலம் போகி, தொழுவுடை வரைப்பில் முன்றிலையும் பந்தரையும் கொட்டிலையும் உடைய கவின்குடிச் சீறூரில் வரகின் சொன்றி அவரை மூரலொடு பெறுகுவிர் என இயைத்துக் கொள்க. இனி 196-ஞாங்கர் என்பது தொடங்கி, 256-மனைவாழ் அளவின் வாட்டொடும் பெறுகுவிர் என்னுந் துணையும் ஒரு தொடர். இதன்கண், வன்புலங் கடந்த பின்னர் மருதநிலத்தின் பெருவளனும் ஆண்டு வாழ்வோர் தொழில் முதலியனவும் அவர்தம் விருந்தோம்பற் சிறப்பும் பிறவும் கூறப்படும்.
வன்னிலம்
196-206 : ஞாங்கர் ...................... பின்றை
பொருள் : ஞாங்கர் - அந்நிலத்துக்கு மேல், குடிநிறை வல்சிச் செஞ்சால் உழவர் - அக் குடியிருப்பு நிறைந்த உணவினையுடைய செவ்விய சாலாக உழுகின்ற உழவுத் தொழிலையுடையோர், நடைநவில் பெரும்பகடு புதவில் பூட்டி - உழவுத்தொழிலிலே நன்கு நடந்து பயின்ற பெரிய எருதுகளை முற்றத்தே நுகத்தைப் பூட்டிக்கொண்டு சென்று, பிடிவாய் அன்ன மடிவாய் நாஞ்சில் உடுப்பு முக முழுக் கொழு மூழ்க ஊன்றி பிடியினது வாயை யொத்த வளைந்த வாயையுடைய கலப்பையினுடைய உடும்பினது முகத்தை ஒத்த பெருங்கொழு மறைய அமுக்கி, தொடுப்பு எறிந்து உழுத துளர்படு துடவை - முற்பட வளைய வுழுது விதைத்த பின்னர் இடையே உழுத களைகளைக் களைக்கொட்டுச் செத்திய தோட்டத்தை, அரிபுகு பொழுதில் -அறுக்கும் பருவம் வருங்காலத்தே, இரியல் போகி-அவர்கள் ஆரவாரத்திற்கஞ்சி அவ்விடத்தினின்றும் கெடுதற் றன்மையுடையவாய்ச் சென்று, வண்ணக் கடம்பின் நறுமலர் அன்ன வளர் இளம் பிள்ளை தழீஇ - வெள்ளிய நிறத்தையுடைய கடம்பினது நறு நாற்றத்தையுடைய பூவை ஒத்த வளரும் பிள்ளைகள் மிகவும் பறத்தலாற்றாதவற்றையும் தழீஇக் கொண்டு, குறுங்கால் கறையணல் குறும்பூழ் - அதன்கண் தங்கும் குறுங்காலினையும் கரிய கழுத்தினையும் உடைய குறும்பூழ், கட்சி சேக்கும் வன்புலம் இறந்த பின்றை- காட்டிலே தங்காநின்ற முல்லைநிலத்தைக் கடந்துபோன பின்பு;
கருத்துரை : அந்நிலத்திற்கு அப்பால் தங்குடியிருப்பு நிறைந்த உணவினையுடைய செவ்விய சாலாக உழுகின்ற உழவர்கள், உழவுத் தொழிலிலே நன்கு நடைபயின்ற பெரிய எருதுகளை வீட்டின் வாயிலிலேயே நுகத்திற் பூட்டிக்கொண்டு சென்று பிடியானையின் வாயை யொத்த வளைந்த வாயையுடைய கலப்பையை உடும்பு முகம் போன்ற முழுக் கொழு மறையும்படி அமுக்கி முற்பட வளைய உழுது விதைத்த பின்னரும் உழுத களைகளைக் களைக்கொட்டாலே களையப்பட்ட தோட்டத்தை அறுக்கும் பருவம் வருங்காலத்தே அவர்கள் ஆரவாரத்திற்கு அஞ்சி அவ்விடத்தினின்றும் கெடுதற்றன்மையுடையவாய்ச் சென்று வெண்கடம்பின் நறிய மலரை ஒத்த பறக்கலாற்றாத இளங் குஞ்சுகளையும் கூட்டிக்கொண்டு குறிய காலையும் கரிய கழுத்தையும் உடைய குறும்பூழ் காட்டிடத்தே தங்குதற்குக் காரணமான வன்னிலத்தைக் கடந்த பின்னர் என்பதாம்.
அகலவுரை : வல்சி - உணவு. வீடு நிறைந்த உணவுப்பொருளுடையார் என்பார், குடிநிறை வல்சி உழவர் என்றார். வல்சி குடிநிறைதற்கு ஏதுக் கூறுவார், செஞ்சால் உழவர் என்றார். சால் - உழவர்கள் ஒரு முறை உழுதலை ஒரு சாலுழவு என்றும் இருமுறை உழுதலை இருசாலுழவு என்றும் வழங்குவர், எனவே செஞ்சால் என்றது பலசாலுழவு என்றவாறு.
உழவின்கண் இரண்டெருதுகளும் ஓடாமலும் மெல்லப் போகாமலும் ஒத்து நடத்தலே சிறப்பு ஆகலின், அத்தகை நன்னடை பயின்ற எருதுகள் என்பார், நடைநவில் பகடு என்றார். சிறிய எருதுகளின் உழவாலே நிலம் நன்கு பண்படாதாகலின் பெரும்பகடு என்றார். பகடு - எருது. புதவு : ஈண்டு முன்றிலுக்கு ஆகுபெயர். எருதுகளை முன்றிலிடத்தே நுகம்பூட்டிக் கொண்டு செல்வார் என்றவாறு. எனவே நிலம் குடியிருப்பின் அணித்தாதல் குறித்தாராயிற்று. பிடிவாய் - பெண் யானையின் வாய். இது கலப்பைக்கு உவமை. வேழம் வறனுழு நாஞ்சில்போன் மருப்பூன்றி நிலஞ் சேர (கலி.8:4-5) என்றும், யானைத் தூம்புடைத் தடக்கை வாயொடு துமிந்து, நாஞ்சி லொப்ப நிலமிசைப் புரள, (புறம்.19:9-11) என்றும், வெள்ளி வெண்ணாஞ்சிலான் ஞாலம் உழுவனபோல் எல்லாக் களிறும் நிலஞ் சேர்ந்த (களவழி - 40) என்றும் பிற சான்றோரும் கூறுதல் காண்க.
உடும்பு முகம் : உடுப்புமுகம் என மென்றொடர் வன்றொடராயிற்று. உடும்பு முகம் - கொழுவிற்கு உவமை. உடுப்புமுகமுழுக் கொழு மூழ்க ஊன்றி என்றது ஆழவுழுதற் சிறப்புக் கூறியவாறு. அகல உழுவதை ஆழவுழு, என்பது பழமொழி தொடுப்பெறிதல் - கலப்பையால் வளைய உழுது வித்துதல். துளர் -களைக்கொட்டு. துடவை - தோட்டம். அரி-அரிதற் செவ்வி. இரியல் போதல் - கெட்டோடுதல்.
வண்ணக் கடம்பின் நறுமலர் அன்ன
வளரிளம் பிள்ளை தழீஇக் குறுங்காற்
கறையணற் குறும்பூழ் கட்சி சேக்கும்
என்னும் அடிகள் பார்ப்போடு குறும்பூழை வரைந்த இயலோவிய மாதல் அறிக. வண்ணக் கடம்பு - வெண்கடம்பு. வெண் கடம்பின் நறுமலர் குறும்பூழ்ப் பார்ப்புகட்கு உவமை. பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற் றிளமை (தொல்.மர-4) என்பதோத்தாகலான் பிள்ளை என்றார். கட்சி - காடு. வேற்றூர்க் கட்சியுட் காரி கடிய குரலிசைத்துக் காட்டும் போலும் (சிலப்.வேட்டு-13) என்புழியும், கட்சி காடென்னும் பொருட்டாதலறிக. ஈண்டு உழவர் ஆரவாரத்தை வெரீஇக் குறும்பூழ் கட்சிசேக்கும் என்றாற் போன்றே இவ்வாசிரியர் பட்டினப்பாலையில்,
தவப்பள்ளித் தாழ்காவின்
அவிர்சடை முனிவர் அங்கி வேட்கும்
ஆவுதி நறும்புகை முனைஇக் குயிறம்
மாயிரும் பெடையோ டிரியல் போகிப்
பூதங் காக்கும் புகலருங் கடிநகர்த்
தூதுணம் புறவொடு துச்சிற் சேக்கும் (53-8)
என இனிதின் ஓதுதல் காண்க. வன்புலம் - குறிஞ்சியும் முல்லையும் என்க. ஈண்டு முல்லை நிலத்தின்மேற்று. மென்புலம், மருதமும் நெய்தலுமாம். இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளைக்கும் பெருவிறல் மூதூர் இனிக் கூறுகின்றார்.
உழவர் செயலும் மாண்பும்
206-214 : மென்றோல் .................. முனையின்
பொருள் : மென்றோல் மிதி உலைக்கொல்லன் முறி கொடிறு அன்ன - மெத்தென்ற துருத்தியை அமுக்கி ஊதுகின்ற உலையிற் கொற்றொழில் செய்கின்றவனுடைய முறிந்த கொடிற்றை ஒத்த, கவைதாள் அலவன் அளற்று அளை சிதைய - கவர்த்த காலை யுடைய ஞெண்டினது சேற்றின்கண் உண்டாகிய முழை கெடும் படி, பைஞ் சாய் கொன்ற மண்படு மருப்பிற் காரேறு பொருத கண் அகன் செறுவில் - பசிய கோரையை அடியிலே குத்தி எடுத்த மண்கிடக்கின்ற கொம்பினையுடைய கரிய ஆனேறுகள் தம்மிற் பொருத இடமகன்ற செய்யின்கண், உழா நுண் தொளி நிரவிய வினைஞர் - தம்மால் உழப்படாத அந்த நுண்ணிய சேற்றை ஒக்க மிதித்த உழவர், முடி நாறு அழுத்திய நெடுநீர்ச் செறுவில் - முடியாக வீசிய நாற்றை நட்ட நெடிய நீரையுடைய செய்யினிடத்தே, களைஞர் தந்த கணைக்கால் நெய்தல் கள்கமழ் புதுப்பூ முனையின் - களை பறிப்போர் பறித்து ஏறட்ட திரண்ட தாளினையுடைய நெய்தலினது தேன்நாறுகின்ற புதிய பூவை வெறுத்தாராயின்.
கருத்துரை : கொல்லனுடைய கொடிற்றை ஒத்த கவர்த்த காலையுடைய நண்டின் வளைகள் சிதையும்படி, பசிய கோரையைக் குத்திக் கோட்டு மண்கொண்ட காரேறுகள், தம்முட் போரிட்டமையாலே சேறாகிய வயலின்கண் அந்தச் சேற்றைச் சமம்பட மிதித்த உழவர்கள் முடிநாற்றை நட்ட வயலின்கண் களைபறிப்போர் பறித்துக் போகட்ட திரண்ட தாளையுடைய தேனாறும் நெய்தற் புதுப்பூவைச் சூடி அதனை வெறுப்பாராயின் என்பதாம்.
அகலவுரை : மென்றோல் : கொல்லன் துருத்திக்கு ஆகுபெயர். காலாலே மிதித்துக் துருத்தியை ஊதச் செய்தலை இன்றும் காணலாம் முறி கொடிறு: வினைத்தொகை. இதனைக் கொறடு என்று இக்காலத்தே வழங்குப. இது நண்டின் கவைக்காலுக்கு உவமை. அலவன்-நண்டு. அளற்றளை - சேற்றின் கண்ணவாகிய வளைகள். பைஞ்சாய்-பசிய கோரை. பசிய கோரையைக் குத்தியதனால் மண்படு மருப்பு என்க. கோட்டுமண் கொண்ட என்றவாறு.
காரேறு என்றதனைக் கரிய (எருமைக்) கடாக்கள் என்றார், நச்சினார்க்கினியர். கோட்டு மண் கொள்ளல் கடாக்களுக் கியல் பன்மையறிக. காரேறு - கரிய ஆனேறு. கரிதாதல் பெரும்பான்மை. காரி கதனஞ்சான் (சிலப்.ஆய்ச்-9) என்றார் இளங்கோவடிகளாரும். காரேறு பொருதமையால் உழாதே நுண்டொளியாகிய செறுவை உழவர் சமஞ்செய்தனர் என்க. முடி - நாற்றுமுடி. வினைஞர் - ஈண்டு உழவர். தொளி -சேறு. உழா நுண்டொளி உள்புக்கழுந்திய, (10:120) என்றார் சிலப்பதிகாரத்தினும், மருதநிலமாகலின் நெடுநீர்ச் செறு என்றார். செறு - வயல்.
களைஞர் - களைபறிப்போர். தந்த என்றது வரம்பிலே பறித்து ஏறட்ட என்றவாறு. முனையின் வெறுத்தற்குக் காரணம் அவர் மனமே யன்றிப் பூவின் குறையன்று என்பார், கட்கமழ் புதுப்பூ என்றார். நுகர்பொருள்களிற் குறையில்லாத போதும் நுகர்ந்தபின்னர் அவற்றை வெறுத்தல் மனத்தினியல் பென்க. புதுப்பூ - அன்றலர்ந்த பூ.
இதுவுமது
214-223 : முட்சினை ...................... சிறாஅர்
பொருள் : முள் சினை முகை சூழ் தகட்ட பிறழ்வாய் முள்ளிக் கொடுங்கால் மாமலர் கொய்து கொண்டு - முள்ளையுடைய கொம்புகளையுடைய அரும்புகள் சூழ்ந்த இதழ்களை யுடையவாகிய மறிந்த வாயையுடைய முள்ளியின் வளைந்த காம்பினையுடைய கரிய பூவைப் பறித்துக்கொண்டு, அவண் பஞ்சாய்க் கோரை பல்லிற் சவட்டிப் புணர் நார்ப் பெய்த புனைவு இன கண்ணி-அந்நிலத்திலுண்டாகிய தண்டானாகிய கோரையைப் பல்லாலே மென்றுமென்று கிழித்து முடிந்த நாராற் கட்டின புனைதற்கு இனிதாகிய மாலையை, ஈர் உடை இருதலை ஆரச் சூடி - ஈருடைத்தாகிய கரிய தலைநிறையும்படி சூடி, பொன் காண் கட்டளை கடுப்ப - பொன்னையுரைத்து மாற்றுக், காணும் உரைகல்லை ஒப்ப, கண்பின் புன்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பின்-கண்பினது புல்லிய காயிற் றோன்றின தாதை அக்காயை முறித்து அடித்துக்கொண்ட மார்பினையும் இரும்பு வடித்தன்னமடியா மென்றோல் - இரும்பைத் தகடாக்கினாலொத்த திரையாத மெல்லிய தோலினையும் உடைய, கருங்கை வினைஞர் காதல் அம்சிறாஅர்-வலிய கையாற் றொழில் செய்வாருடைய விரும்புதற்குக் காரணமான அழகினையுடைய சிறுபிள்ளைகள்;
கருத்துரை : பின்னர், முள்ளையுடையதும் அரும்புகள் சூழப்பட்டதும் ஆகிய முள்ளியினது மறிந்த வாயையும் வளைந்த காம்பினையுமுடைய கரிய மலரைப் பறித்துக்கொண்டு, பசிய கோரையைப் பறித்து மென்று மென்று கிழித்து முடிந்த நாராலே தொடுக்கப்பட்ட, புனைதற்கினிய மாலையைத் தலைநிறையும்படி சூடிக்கொண்டு, மேலும் கண்பினது காயை முறித்து அதன் சுண்ணத்தைத் தம் மார்பிலே, பொன்னுரை காணும் உரைகற்போற் றோன்றும்படி அடித்து அப்பிக் கொண்டு வரும், இரும்பைத் தகடாக்கினாற் போன்ற திரைதலில்லாத மெல்லிய தோலையுடையராகிய உழவருடைய அழகிய பிள்ளைகள் என்பதாம்.
அகலவுரை : புதுப்பூ முனையின் முள்ளி மாமலர் சூடும் சிறார் என்க. சூடி என்பதனைச் சூடும் எனத் திரித்துக் கொள்க. முட்சினை முகைசூழ் முள்ளித் தகட்ட பிறழ்வாய்க் கொடுங்கான் மாமலர் என மாறிக் கூட்டுக. இத்தொடர் முள்ளியின் ஓவியமாதல் உணர்க. தகடு-இதழ். முள்ளி மலரின் வாய் மடிந்திருத்தலாற் பிறழ்வாய் என்றார். மாமலர் - கரிய மலர்; பெரிய மலருமாம். முள்ளி மலரைப் பறித்துக் கோரையை மென்று நார்கிழித்து முடிந்து அந்நாராலே தொடுத்த மாலை என்க. முள்ளி மலர் மென்மையும் அழகு முடைத்தாகலின், புனைவின் கண்ணி என்றார்; புனைதற் கினிதாகிய கண்ணி என்றவாறு. கண்ணி - தலையிற் சூடும் மாலை. இதனை,
கண்ணி கார்நறுங் கொன்றை காமர்
வண்ண மார்பிற் றாருங் கொன்றை (புறம்.1)
என்புழித் திருமுடிமேற் சூடப்படுவது கண்ணி என்றும், திருமார்பிற் றரிப்பது தார் என்றும் ஓதியவாற்றான் உணர்க. பஞ்சாய்க் கோரை, கோரை வகையில் ஒன்று. இதனைத் தண்டான் கோரை என்பர் நச்சினார்க்கினியர். சவட்டுதல்-சிதைத்தல். தலை நன்கு பேணப்படாமை கூறுவார் ஈருடை இருந்தலை என்றார். ஈர் - பேனின் முட்டை அல்லது குஞ்சு. ஈரும் பேனும் இருந்திறை கூடி என்றார் பிறரும். ஆர-நிறைய. கருங்கை-வலிய தொழில் செய்யும் கை. உலகோம்பும் தொழிலாகலின் வலிய தொழில் என உழவைச் சிறப்பித்தார். காதலஞ்சிறார் - காதலுக்குக் காரணமான அழகிய சிறுவர் என்க.
224-231 : பழஞ்சோற்றமலை ...................... வினைஞர்
பொருள் : பழஞ்சோற்று அமலை முனையில் - பழைய சோற்றினது கட்டியை வெறுப்பின், வரம்பின் புது வை வேய்ந்த கவிகுடி முன்றில் - வரம்பிடத்தே புதிய வைக்கோலாலே வேய்ந்த கவிந்த குடிலினுடைய முற்றத்தே, அவல் எறி உலக்கைப் பாடு விறந்து - அவலை யிடிக்கும் உலக்கையினது ஓசை செறிகையினாலே, அயல கொடுவாய்க் கிள்ளை படு பகை வெரூஉம் - அதற்கு அயலிடத்தனவாகிய வளைந்த வாயையுடைய கிளிகள் தமக்குண்டாகின்ற பகையாகக் கருதி அஞ்சும், நீங்காயாணர் வாங்கு கதிர்க் கழனி - இடையறாத புதுவருவாயினை யுடைய வளையுங் கதிரினையுடைத்தாகிய கழனியிடத்து, கடுப்பு உடைப் பறவைச் சாதியன்ன - எறியப்பட்டார்க்குக் கடுக்கும் தன்மையைக் கொடுத்தலையுடைய குளவித் திரளை ஒத்த, பைது அற விளைந்த பெருஞ் செந்நெல்லின் - பசுமையறும்படி முற்றின பெரிய செந்நெல்லினுடைய, தூம்புடைத் திரள்தாள் துமித்த வினைஞர் - உள்ளுப் பொய்யை உடைத்தாகிய திரண்ட தாளை அறுத்த தொழில் செய்வார்;
கருத்துரை : (சிறார்) பழைய சோற்றை வெறுப்பின் வளமிக்கதும் வயல் வரம்பிடத்தே புதிய வைக்கோலாலே வேயப்பட்டதும் ஆகிய குவிந்த குடிலினுடைய முற்றத்தே அவலெறிகின்ற உலக்கையின் ஓசை செறிதலாலே, அதற்கு அயலிடத்தனவாகிய வளைந்த வாயையுடைய கிளிகள் தமக்குண்டான பகையென்று கருதி அஞ்சாநின்ற இடையறாத புது வருவாயினையுடைய வளைந்த கதிரையுடைய கழனியிடத்தே எறியப்பட்டார்க்குக் கடுக்குந் தன்மையைக் கொடுக்கின்ற குளவித்திரளை ஒத்த பசுமையற முற்றிய பெரிய செந்நெல்லினுடைய உட்கூடுடைய திரண்டதாளை அறுத்த உழவர்கள் என்பதாம்.
அகலவுரை : பிள்ளைகள் பழஞ்சோற்றமலையை வெறுத்து அவலெறிய அவ்வோசையைக் கிளி வெரூஉம் என்க. பழஞ்சோற்றமலை. பழைய சோறாகிய கட்டி. முளைஇ-வெறுத்து. காதலஞ் சிறார் புதுப்பூ முனையின் முள்ளிமலர்க் கண்ணி சூடிப் பழஞ் சோற்று அமலை முனையின் கவிமுடி முன்றிலில் அவலெறியும் உலக்கைப் பாடு கிளி வெரூஉம் என்றவாறு. புதுவை - புதிய வைக்கோல். மருத நிலமாக்கள் தம் குடிலை வைக்கோலாலே வேய்தலை இன்றுங் காணலாம். மருத நிலத்தே வயல் வரம்புகளிலேயே உழவர் குடில்கள் அமைத்து வாழ்தலையும் இன்றுங் காணலாம். அவலெறி உலக்கைப்பாடு - அவலிடிக்கும் உலக்கை ஓசை எறிதல் - இடித்தல். பாடு - ஓசை. விறந்து செறிந்து. விறத்தலால் வெரூஉம் என ஏதுவாக்குக. விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே (உரி-49) என்னும் தொல்காப்பியத்தால் அஃதப் பொருட்டாதலறிக. நெற் குற்றும் ஒலியினும் அவலிடிக்கும் ஒலி வன்மையுடைத்தாதல் அறிக. பாசவலிடித்த பெருங்காழுலக்கைக் கடிதிடி வெரீஇய கமம்சூல் வெண் குருகு (அகம்.141:18-9) எனப் பிறரும் ஓதுதல் காண்க. படுபகை - உண்டாகின்ற பகை என்க.
வெரூஉம் - அஞ்சுகின்ற, அஞ்சுதற்குக் காரணமான கழனி என முடித்திடுக. கோடையினும் விளைதல் பற்றி நீங்கா யாணர் என்றார்; யாணர் - புதுவருவாய். புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி, (உரி-81) என்பது தொல்காப்பியம். வாங்குகதிர் - வளைந்த கதிர்: வாங்கு கதிர், கழனி வளத்தைக் காட்டும் குறிப்பேது வென்க - பறவை ஈண்டுச் செங்குளவி. இது பரிய செந்நெல்லிற்கு உவமை - குளவி என்றற்குக் கடுப்புடைக் பறவை என்றார். செங்குளவி கொட்டினால் பெரிதும் கடுப்புண்டாம் என்ப. தூம்பு - உட்டுளை. தூம்புடைத் திரள் தாள் என்றது, அக் கழனிகளின் செழிப்புடைமைக் காட்டி நின்றது, துமித்தல் - அறுத்தல். வினைஞர் - ஈண்டு உழவர் என்க. வினைஞர் எறிந்த குப்பை என இயையும்.
மருதநிலத்தின் விளைபொருட்சிறப்பு
232-242 : பாம்பு ...................... இருக்கை
பொருள் : பாம்பு உறை மருதின் ஓங்கு சினை நீழல் - பாம்பு கிடக்கின்ற மருதினது உயர்ந்த கொம்பால் உண்டாகிய நிழலிலே, பலிபெறு வியன் களம் மலிய ஏற்றி - பிச்சை பெறுதற் கிடமான அகன்ற களங்களிலே மிகவும் நிறையப் போராக உயர்த்தி, கணங்கொள் சுற்றமொடு கைபுணர்ந்து ஆடும் துணங்கை அம் பூதம் துகில் உடுத்தவைபோல் - திரட்சி கொண்ட தம் சுற்றத்தோடே ஒழுங்காகச் செறிந்துநின்று ஆடாநின்ற துணங்கைக் கூத்தையுடைய அழகிய பூதங்கள் வெள்ளிய துகிலை உடுத்து நின்றவை போல, சிலம்பி வால்நூல் வலந்த மருங்கின் - சிலந்தியினது வெள்ளிய நூல் சூழ்ந்த பக்கத்தினையுடைய, குழுமு நிலைப்போரின் முழுமுதல் தொலைச்சி - பலவாகத் திரண்ட தன்மையையுடைய போர்களினுடைய பெரிய அடியை வாங்கி விரித்து, பகடு ஊர்பு இழிந்த பின்றை - கடாவிட்டுப் போன பின்பு, துகள் தப வையும் துரும்பும் நீக்கி குற்றமறும்படி வைக்கோலையும் கூளத்தையும் அதனிடத்துநின்று நீக்கி, பைது அற - ஈரம் உலரா நிற்க, குடகாற்று எறிந்த குப்பை - மேல் காற்றாலே கையால் தூவித் தூற்றின நெற்பொலி, வடபால் செம்பொன் மலையிற் சிறப்பத்தோன்றும் - வடதிசைக்கண் உளதாகிய மேருவாகிய மலையினும் மாண்புடையதாகத் தோன்றுதற்குக் காரணமான, தண்பணை தழீஇய தளரா இருக்கை - மருத நிலம் சூழ்ந்த அசையாத குடியிருப்புக்களில்;
கருத்துரை : பாம்புகள் கிடக்கின்ற மருதமரத்தின் நிழலிடத்தே பிச்சை பெறுதற்கிடனாகிய அகன்ற களங்கள் நிறையும்படி போராகக் குவித்துத் திரளாகிய பூதங்கள் வெள்ளிய துகிலுடுத்து நின்றாற் போன்ற சிலந்தியின் நூல் பின்னப்பட்டு நின்ற அப்போர்களை, வாங்கிவிட்டுக் கடாவடித்துப் பின்னர், நெல்லின்கட் குற்றமறும்படி வைக்கோல் கூளம் முதலியவற்றைப் போக்கி, அவை உலர்ந்த பின்னர்க் கோடைக் காற்றிலே தூற்றிக் குவித்த நெற்பொலிகள் வடக்கண் உள்ள செம்பொன் மலையினும் சிறப்பத்தோன்றா நின்ற மருதநிலம் சூழ்ந்த அசையாத குடியிருப்புக்களில் என்பதாம்.
அகலவுரை : வங்குகளையுடைய முதுமரமென்பார், பாம்புறை மருதின் என்றார். களத்தின்கண் நெல்லை எலி தின்னாமைக்குப் பாம்பு காவலாதல் அறிக. ஓங்குசினை என்றது, நில வளம் தெரித்தவாறு. பலி-ஈண்டுக் களப்பிச்சை என்க. களத்தின்கண் இரவலர்க்குப் பிச்சை வழங்குதல் உழவர்களின் வழக்கம். நெற்பொலிதிகழ் களத்தே சென்று உழவர்களைப் பொருநர் முதலியோர் பாடுதலும் அவர்கட்கு நெல்லை வழங்குதலும் தமிழகத்தின் தொன்றுதொட்டு வந்த வழக்கமாம். இதனை, களவழி வாழ்த்தென்று துறைப்படுத்துத் தண் பணை வயலுழவனைத் தெண்கிணைவன் திருந்துபுகழ் கிளந்தன்று எனக் கொளுக்கூறி,
பகடுவாழ் கென்று பனிவயலு ளாமை
அகடுபோ லங்கட் டடாரித் - துகடுடைத்துக்
குன்றுபோற் போர்விற் குரிசில் வளம்பாட
இன்றுபோம் எங்கட் கிடர் (புற.வெ.மா.189)
எனப் புறப்பொருள் வெண்பாமாலையில் வரலாறு காட்டலானும்,
அரிந்துகால் குவித்தோர் அரிகடா வுறுத்த
பெருஞ்செய்ந் நெல்லின் முகவைப் பாட்டும்
தெண்கிணைப் பொருநர் செருக்குடன் எடுத்த
மண்கணை முழவின் மகிழிசை யோதையும் (சிலப்.நாடு: 136-9)
என, இளங்கோவடிகளார் களவழிபாடும் இரவலர் உண்மை கூறலானும்.
எறிதரும் அரியின் சும்மை எடுத்துவான் இட்ட போர்கள்
குறிகளும் போற்றிக் கொள்வார் கொன்றநெற் குவைகள் செய்வார்
வறியவர்க் குதவி மிக்க விருந்துண மனையின் உய்ப்பான்
நெறிகளும் புதையப் பண்டி நிறைத்துமண் ணெளிய வூர்வார் (கம்பரா,நாட்டுப்-21)
எனக் கம்பநாடரும் இத் தமிழர் வழக்கத்தை வடவர்க் கேற்றி வழங்கலானும்,
இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர் (குறள் - 1035)
எனத் திருவள்ளுவப் பெருந்தகையார் உழவரின் வண்மையைப் போற்றிக் கூறலானும் உணர்க. இனி, பலிபெறு களம் என்றதற்கு, ஆண்டுறையும் தெய்வங்கள் பலிபெறுகின்ற களம், என்பர் நச்சினார்க்கினியர். இரட்டுற மொழிதல் என்னும் உத்தியால் இப்பொருளையும் தழீஇக் கொள்க. வியன் களம் என்றது விளைவின் பெருக்கம் குறித்து நின்றது. வியம், அகலம். அகன்ற களமும் நிறையும்படி குவித்தென்றமை காண்க.
இனிப் போர்களின் மேலே சிலந்தியின் வெண்ணூல் யாண்டும் பின்னப்பட்டுக் கிடத்தலால், அவை பூதங்கள் வெண்டுகிலுடுத்து நின்றாற் போன்றன என்ற உவமையின் அழகை உணர்க. போர்கள் பல கூடி நிற்றலால் கணங்கொள் பூதம் என்றார். கணம் - கூட்டம். கை-ஒழுங்கு. துணங்கை - ஒருவகைக் கூத்து. அது, முடக்கிய இருகை பழுப்புடை யொற்றித், துடக்கிய நடையது துணங்கை யாகும் (சிலப். 5:70. மேற்) என்றோதப்படுதலான், ஈண்டு கைபுணர்ந்தாடும் என்றதற்கு, கைகோத்தாடும் எனல் கூடாமையுணர்க. கை புணர்ந்து என்றதற்குப் பழுவோடே கைகளை ஒற்றி எனப் பொருள் கூறின் நன்கு பொருந்துவதாம்.
பூதம் பதினெண் வகைக் கணங்களுள் ஒன்று காதம் நான்கும் கடுங்குரல் எடுத்துப் பூதம் புடைத்துண்ணும் பூதசதுக்கமும் (சிலப்.5-133-4) என்றார் பிறரும். சிலம்பி வானூல் வலந்தமை, கள்வாரிலாமை காட்டும் குறிப்பேதுவாதலறிக. வை - வைக்கோல். துரும்பு - கூளம். குடகாற்று - மேற்றிசைக் கோடைக்காற்று. குப்பை - குவியல். செம்பொன் மலை - பெருமைக்கும் நிறத்திற்கும் செந்நெற் குவியலுக்கும் உவமை. செந்நெல் உண்பொருளாய்ச் சிறத்தலின் உண்ணப்படாத செம்பொன்னினும் சிறப்பத் தோன்றும் என்றார். தண்பணை - மருதநிலம். தளர்தல் - வறுமை முதலியவற்றால் குடி ஓட எண்ணுதல். ஈண்டுச் செந்நெல் செம்பொன் மலை போன்று குவிதலானே அங்கு வாழ்வோர் குடியோடக் கனவிலும் கருத வேண்டாமையின் தளரா இருக்கை என்றார்.
உழவரின் இல்லச்சிறப்பு
243-247 : பகட்டா ................. நல்லில்
பொருள் : பகட்டு ஆ ஈன்ற கொடுநடைக் குழவி கவைத் தாம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல் - எருதுகளோடு கூடிய பசுக்கள் ஈன்ற வளைந்த அடிகளையுடைய கன்றுகளைக் கட்டின தாமணியாகிய நெடிய தாம்புகள் கட்டிக்கிடக்கின்ற தறிகள் நட்ட பக்கத்தினையும் ஏணி எய்தா நீள் நெடுமார்பின் - ஏணிக்கும் எட்டாத மிக நெடிய வடிவினையும், முகடு துமித்து அடுக்கிய பழம் பல்லுணவின் - தலையைத் திறந்து உள்ளே சொரியப்பட்ட பழையவாகிய பல நெல்லினையும் உடைய, குமரி மூத்த கூடு ஓங்கு நல்இல் - அழியாத் தன்மையனவாய் முதிர்ந்த கூடுகள் உயர்ந்து நின்ற நல்ல இல்லங்களையும்;
கருத்துரை : எருதோடு கூடிய ஆன்கள் ஈன்ற வளைந்த காலையுடைய கன்றுகள் கட்டப்பட்ட தாமணியாகிய நெடுந்தாம்புகள் கட்டின முளைகள் நடப்பட்ட பக்கத்தினையும், ஏணிக்கு எட்டாத நெடிய வடிவினையும், தலையைத் திறந்து சொரியப்பட்ட பழைய நெல்லாகிய உணவினையும் உடையவாய்க் கன்னிமையோடே முதிர்ந்த நெற்கூடுகள் உயர்ந்து நின்ற நல்ல இல்லங்களையும் என்பதாம்.
அகலவுரை : உழவர் செல்வங்களிற் பகடு தலைசிறந்ததாகலின் பகட்டா என்றார். பகட்டோடே கூடிய ஆன் என்க. நல்லானோடு பகடோம்பியும் (201) என இவ்வாசிரியரே பட்டினப்பாலையினும் கொடுமேழி நசையுழவரைச் சிறப்பித்தல் காண்க. இளைய ஆன்கன்றின் கால்கள் உறுதியாய் நிற்பனவாகாமல் வளைந்திருக்கும் இயல்புடையன ஆதலை அவையிற்றை நோக்கி உணர்க. நடை, கால்: ஆகுபெயர். செவ்விதின் நடவாது வளைந்து நடக்கும் கன்று எனினுமாம்.
குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை (தொல்.மர.19)
ஆவும் எருமையும் அவைசொலப் படுமே (தொல்.மர.20)
என்பதோத்தாகலான், ஆன்கன்றைக் குழவி என்றார்; இவரே, மோட்டெருமை முழுக்குழவி, எனப் பட்டினப்பாலையினும் கூறுதல் காண்க.
கவை-கழுத்திற் கட்டுதற்குரிய இரட்டைக் கயிறு. காழூன்று அல்குல் நீணெடுமார்பு பழம்பல்லுணவு முதலியன உடைய குமரிமூத்த கூடென்றதன்கண் குமரி என்றதற் கேற்ற அடையாய் இவை அமைந்த நயம் உணர்க. மார்பு என்றது, கூட்டின் இடைப் பகுதிக்கு மேற்பட்டதும் தலைப்பகுதிக்குக் கீழுள்ளதுமாகிய பகுதியை என்க. அல்குல் - பக்கம். குமரி மூத்தல் என்றது, பயன்படாது காலங்கழிதல் என்னும் பொருட்டு. ஒருகன்னி மணப்பருவம் பெற்றும் கணவனைப் பெறாதே வீணே முதியவள் ஆய் விடுதலை குமரி மூத்தல் என்ப.
அமரர்கோன் ஆணையின் அருந்துவோர்ப் பெறாது
குமரி மூத்தவென் பாத்திரம் (மணி-76-7)
என மணிமேகலையினும் கூறப்பட்டமை காண்க :
அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று (குறள் - 1007)
என, வள்ளுவனாரும் குமரி மூத்தமை கூறுதல் காண்க. மேன்மேலும் புதிய வருவாய் வந்து நிரம்பலானே, கூடுகள் குமரி மூத்தவாயின என்க. பல்லுணவு என்றது, பலவகையான நெல் என்றவாறு. குமரிமூத்த கூடென்றலால் வச்சையர் இல்லமோ என்றையுறாமைப் பொருட்டு விருந்தோம்பற் சிறப்புடைய இல் என்பார், நல் இல் என்றார். என்னை? இல்லிற்கு ஒன்றாக உயர்ந்த நன்மை விருந்தோம்பலே ஆகலான். இனி, மேலும் அவ்வுழவர் மனையின் மாண்பினை, மக்களானும் மனையாட்டியரானும் சிறப்பிக்கின்றார்.
உழவரின் மக்கட்சிறப்பு
248-252 : தச்சச் சிறாஅர் ................ நல்லில்
பொருள் : தச்சச் சிறாஅர் நச்சப் புனைந்த - தச்சர்களின் பிள்ளைகளும் விரும்பும்படி அழகிதாய்ப் பண்ணின, ஊரா நற்றோர் உருட்டிய புதல்வர் - ஏறி ஊரப்படாத நல்ல சிறு தேரை உருட்டிக்கொண்டு திரிந்த பிள்ளைகள், தளர் நடை வருத்தம் வீட-தமது தளர் நடையானே உண்டான வருத்தம் தம்மை விட்டு நீங்கும்படி, அலர் முலைச் செவிலி அம் பெண்டிர்த் தழீஇப் பால் ஆர்ந்து - பால் சுரந்த முலையினையுடைய செவிலித் தாயராகிய அழகினையுடைய மகளிரைத் தழுவிக்கொண்டு பாலை நிரம்ப உண்டு, அமளித் துஞ்சும் அழகுடை நல்லில் - தமது படுக்கையிலே துயில்கொள்ளும் அழகையுடைத்தாகிய நல்ல இல்லினையும்;
கருத்துரை : தச்சர்களின் பிள்ளைகளும் விரும்பும்படி புனைந்ந நல்ல சிறு தேர்களை உருட்டித் திரிந்த சிறார்கள், அங்ஙனம் தளர்நடையிட்டுத் திரிந்த தம் வருத்தம் அகலும்படி பால் சுரந்த முலையினையுடைய செவிலித் தாயரைத் தழுவிப் பாலை நிறைய உண்டு தமது படுக்கையிலே நன்கு துயில் கொள்ளும் அழகையுடையனவாகிய நல்ல இல்லங்களையும் என்றவாறு.
அகலவுரை : செம்பொன் மலையிற் சிறப்பத்தோன்றும் நெற்குவியலும் பகடும் ஆனும் அதன் கொடுங்காற் குழவியும் குமரிமூத்த பழம்பல் உணவின் நெற்கூடும் இன்னோரன்ன பிறவுமாகிய படைப்புப் பல படைத்துப் பலரோண்ணும் உடைப் பெருஞ் செல்வமெல்லாம் ஒருங்கியைந்தும், தளர்நடைவருத்தம் வீடப் பாலார்ந்து அமளித் துஞ்சும் இச்சிறாஅரை இல்வழி என்னாம்? ஆகலின் இவ்வுழவர் வாழ்க்கையின் அழகை முழுதுற எடுத்துக் காட்டுவார், புதல்வர் பாலார்ந்து அமளித் துஞ்சும் அழகுடை நல்லில் என்றார். இவர் தமது பட்டினப்பாலையினும் மகளிர் கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை மேற் றளர் நடைகொண்டு சிறுதேர் உருட்டும் செல்வக் காதலஞ்சிறாரைக் காட்டினர் ஆண்டுத் தேருருட்டிய சிறாஅரும் தம் தளர்நடை வருத்தம் வீட அலர்முலைச் செவிலியம் பெண்டிர்த் தழீஇப் பாலார்ந்து அமளித்துஞ்சி இல்லிற்கு அழகு செய்திருப்பர் என்பதும் இதனால் உணர்வோம். இளஞ்சிறார்கள், நன்கு உடல் வருந்தத் தேருருட்டி ஆடலும் பின்னர் வயிறாரப் பாலுண்ணலும் நன்கு துயில் கோடலும் வேண்டும் என இதனால் இவர் குறித்தலறிக.
இல்லிற்கு அழகு இவ்விளஞ்சிறாரே என்பதனை,
மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு (குறள் - 90)
என்னும் தமிழ் மறையானும்,
பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனுமற்
றென்னுடைய ரேனும் உடையரோ - இன்னடிசில்
புக்களையும் தாமரைக்கைப் பூநாறும் செய்யவாய்
மக்களையிங் கில்லா தவர் (நளவெண்பா)
என்னும் புகழேந்தியார் பொன்மொழியானும்,
பொறையிலா அறிவு போகப் புணர்விலா இளமை மேவத்
துறையிலா வனச வாவி துகிலிலாக் கோலத் தூய்மை
நறையிலா மாலை கல்வி நலமிலாப் புலமை நன்னர்ச்
சிறையிலா நகரம் போலும் சேயிலாச் செல்வம் அன்றே
என்னும் வளையாபதிச் செய்யுளானும் உணர்க.
தச்சர் சிறுதேர் செய்யும் தொழிலுடையராகலின், அவர் புதல்வர் நாளும் தேர்பல கண்டு கண்டு வெறுத்து அவற்றை விரும்பாதவர் ஆவர். புதியவற்றையே பெரிதும் விரும்புதல் புதல்வர் தன்மை. தச்சச்சிறாரும் விரும்புமாறு பேரழகுடையதாக இயற்றப்பட்ட தேர் என்றார். தச்சச்சிறார் நச்சப் புனைந்த என்றார். சிறாஅரும் என்பதன் உயர்வுசிறப்பும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. இதற்குத் தச்சருடைய சிறுவர் பிறர் விரும்பும்படி செய்த தேர் என்று நச்சினார்க்கினியர் கூறுவர். தச்சப் பிள்ளைகள் தமக்குரிய தச்சுத் தொழிலை நச்சுதலாற் புனைந்த என்பாருமுளர், ஏற்பது ஆராய்ந்து கொள்க. ஊரா நற்றேர் என்றது, விளையாட்டுக்குரிய சிறிய தேர் என்றவாறு. அலர் முலை - பால் சுரந்த முலை. செவ்வச் சிறப்புக் கூறுவார், செவிலியர் பாலூட்டல் கூறினார். செவிலி-செவிலியர்: பன்மைக் கண் ஒருமை மயங்கிற்று. அமளி என்றதனாற் பஞ்சணை யாதல் கொள்க. துஞ்சும் - துயில்கின்ற. கூடோங்கு நல்லில் ஆதலோடன்றிச் சிறார் அமளித்துஞ்சும் அழகும் உடைய நல்லில் என்க. நல்லில்லையுடைய இருக்கை என இயையும்.
உழவர் விருந்தோம்பற் சிறப்பு
253-256 : தொல்பசி ................. பெறுகுவிர்
பொருள் : தொல்பசி அறியாத் துளங்கா இருக்கை மல்லல் பேரூர் மடியின் - ஏனைநாட்டிற்கு இயல்பாகிய பழைய மிடியை அறியாத அசையாத குடியிருப்பினை உடைய வளன் மிக்க பெரிய ஊரின்கண்ணே தங்குவீராயின்; மடியா வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி - தொழிலொழிந்திராத உழவர் தந் தாளாற் றந்த வெள்ளிய நெற்சோற்றை, மனைவாழ் அளகின் வாட்டொடு பெறுகுவிர் - மனையின்கண்ணே வாழும் கோழிப் பெடையினாற் சமைத்த பொரியலோடு பெறுகுவிர்;
கருத்துரை : ஏனைநாட்டிற்கு இயல்பாகிய பழைய வறுமையை அறிந்திராத அசையாத குடியிருப்பினை உடைய வளப்பமிக்க பெரிய ஊரிடத்தே தங்குவீராயின், தொழிலிற் சோம்பியிராத அவ்வுழவர்கள் தந் தாளாற்றித் தந்த வெள்ளிய நெற்சோற்றை அவர்தம் மனையிடத்தே வாழும் கோழிப் பெடையினாற் சமைத்த பொரியலோடே பெறுவீர் என்பதாம்.
அகலவுரை : தொல்பசி - தொன்று தொட்டு வறுமையால் வந்த பழம் பசி. பழம்பசி கூர்ந்தவெம் இரும்பே ரொக்கல் என முன்னும் கூறுதல் அறிக. துளங்கா இருக்கை - அசையாத குடியிருப்பு; இதற்குத் (42) தளரா விருக்கை என்புழி உரைத்தாங் குரைத்துக் கொள்க. தொல்பசி யறியாமை. துளங்காமைக்குக் குறிப்பேதுவாதல் காண்க. மல்லல் - வளம். மடியின் - தங்கின். மடியா-சோம்பியிராத மடியின் மடியா என்றதன்கண் செய்யுளின்பம் உணர்க. வினைஞர், ஈண்டு உழவுத் தொழில் செய்வோர் என்றபடி. தந்த, தம் தாளாற்றித் தந்த என்க.
தாளாற்றித் தந்த பொருள்எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு (குறள் - 212)
என்னும் அருமைத் திருக்குறளை ஈண்டு நினைவுகூர்க. வெண்ணெல் - வெள்ளிய சம்பாநெல். வல்சி-சோறு. உழவர் தம்பால் வந்த விருந்தினரைச் சிறப்பாக ஓம்ப வேண்டும் என்று கருதும் பொழுதுதான் மனைக்கண் வாழும் கோழியைச் சமைப்பவராவார் எனவே, நும்மைப் பெரிதும் ஆர்வத்தோடே ஓம்புவார் என்பதுபட. மனைவா ழளகின் வாட்டொடும் பெறுகுவிர் என்றார். வாட்டு-பொரிக்கறி. அளகு - பெட்டைக் கோழி.
கோழி கூகை யாயிரண் டல்லவை
சூழும் காலை அளகெனல் அமையா (தொல்.மர.55)
என்பது தொல்காப்பியம். இனி, 206- மென்றோல் என்பது தொடங்கி 253- பெறுகுவிர் என்னுந் துணையும் கிடந்த இத்தொடரை :
காதலஞ் சிறாஅர் புதுப் பூ முனையின் முள்ளிமலர் கொய்து கொண்டு, கோரை சவட்டிப் புனை கண்ணி, ஆரச்சூடிச் சோற்றமலை முனைஇ, அவல் எறியா நின்ற உலக்கைப் பாடு விறந்து, கிள்ளை வெரூஉம் கழனித் தாள் துமித்த வினைஞர் நீழல் களம் மலிய வேற்றிப் போரின் முதல் தொலைச்சி, இழிந்த பின்றை நீக்கி அற எறிந்த குப்பை மலையிற் றோன்றும் இருக்கை, மேலும் கூடோங்கும் நல்லில்லும் சிறார் துஞ்சும் நல்லில்லும் உடைய, இருக்கைப் பேரூர் மடியின் நெல் வல்சி அளகின் வாட்டொடு பெறுகுவிர் என முடிக்க.
இனி 257-மழை விளையாடும் என்பது தொடங்கி, 282- தளர்தலும் பெறுகுவிர் என்னுந் துணையும் ஒரு தொடர் : இதன்கண் மருத நிலத்தினின்றும் போகுழி வழிக்கண் உள்ள கரும்பாலையின் சிறப்புக்களும், நெய்தனிலம் புக்க பின்னர் ஆண்டு வாழ்வார் இயல்பும், அவர்தம் விருந்தோம்பற் சிறப்பும் பிறவும் கூறப்படும்.
எந்திரம் சிலைக்கும் துஞ்சாக் கம்பலை
257-262 : மழை .................. மிசைமின்
பொருள் : மழை விளையாடும் கழைவளர் அடுக்கத்து - முகில்கள் விளையாடித் திரியாநின்ற மூங்கில் வளர்கின்ற பக்கமலையிலே, அணங்குடையாளி தாக்கலில் - தம்மை வருத்துதலை யுடைய யாளி தாக்குகையினாலே, பல உடன் கணம் சால் வேழம் கதழ்வுற்றாங்கு - பலவும் கூடித் திரட்சியமைந்த யானைகள் கலங்கிக் கதறினாற்போன்று, எந்திரம் சிலைக்கும் துஞ்சாக் கம்பலை - ஆலை ஆரவாரிக்கின்ற மாறாத ஓசையையுடைய, விசயம் அடூஉம் புகைசூழ் ஆலைதொறும் - கருப்பஞ்சாற்றைக் கட்டியாகக் காய்ச்சும் புகைசூழ்ந்த கொட்டில் தோறும், கரும்பின் தீஞ்சாறு விரும்பினிர் மிசைமின் - கரும்பினது இனிய சாற்றை விருப்பமுடையீர் பருகுமின்;
கருத்துரை : முகில்கள் விளையாடாநின்ற மூங்கில் வளரும் பக்க மலையிலே யாளியாற் றாக்குண்ட யானைத்திரள்கள் கலங்கிக் கதறினாற் போன்று ஆலை ஆரவாரிக்கும் மாறாத ஓசையையுடைய கருப்பஞ் சாற்றைக் காய்ச்சும் புகைசூழ்ந்த கொட்டில்கடோறும் நும்மில் விருப்பமுடையீர் விரும்பியாங்கு கரும்பின் இனிய சாற்றைப் பருகுமின் என்பதாம்.
அகலவுரை : மழை விளையாடுதல் - மழை பொழிதல் என்க. தன் தொழிலால் தனக்கொரு பயன் கருதாமையின் முகில் பொழிதலை விளையாடும் என்றார். கழை-மூங்கில் : அடுக்கம் - பக்கமலை. மழை விளையாடுங் குன்று (குறுந்-108-1) என்றார் பிறரும். அணங்கு - வருத்தம். பிறவுயிர்களை வருத்துதலையுடைய யாளி என்றவாறு. மலைச்சாரலிலே யாளியாற் றாக்குண்டபோது யானைக் கூட்டம் கலங்கிக் கதறும் ஆரவாரம். எண்ணிறந்த ஆலைகளும் ஒருங்கே ஆடுதலால் எழுந்த ஆரவாரத்திற்கு உவமை என்க. ஆலையின் ஒலி யானையின் ஒலிபோறல் இயல்பு. இவ்வாரவார மிகுதி கூறும் வாயிலாய் அந்நாட்டின்கட் கருப்பாலை மிகுதி கூறினமை காண்க. பட்டினப்பாலையின்கண்,
கார்க்கரும்பின் கமழாலைத்
தீத்தெறுவின் கவின்பாடி
நீர்ச்செறிவின் நீணெய்தற்
பூச்சாம்பும் புலம் (பட்டினப். 9-12)
என்னுமாற்றால் ஆலையின் மிகுதி கூறுதல் காண்க.
விசயம் - கருப்பஞ்சாறு ; கட்டியுமாம்; சருக்கரையுமாம்.
அயிருருப் புற்ற ஆடமை விசயம் (மதுரைக் - 625)
விசயங் கொழித்த பூழி யன்ன (மலைபடு - 444)
என்புழியும் அஃதப் பொருட்டாதல் காண்க, நும்முள் விரும்பினீர் உளீராயின் மிசைமின் என்க. இதற்குக் கரும்பினது இனிய சாற்றை முற்படக் குடித்துப் பின்னர் அக்கரும்பின் கட்டியைத் தின்பீராக என்றார், நச்சினார்க்கினியர். மிசைதற்றொழில் ஈண்டுப் பருகல் என்னும் பொருட்டாய் நின்றது ஆண்டுள்ளார் தருவர் ஆகலின், மிசைமின் என்னாது விரும்பினர் மிசைமின் என்றதனால் ஆண்டுச் செல்வார்க் கெல்லாம் அவர் வழங்குதல் கூறாமலே அமைதல் காண்க.
கொடுமுடி வலைஞர் குடிச்சிறப்பு
263-274 : வேழநிரைத்து .................. சேப்பின்
பொருள் : வேழம் நிரைத்து வெண்கோடு விரைஇத் தாழை முடித்துத் தருப்பை வேய்ந்த குறி யிறைக் குரம்பை - வேழக்கோலை நிரல்படச் சார்த்தி வெள்ளிய மாக் கொம்புகளை இடையிடையே கலந்து தாழை நாராலே யாத்துத் தருப்பைப் புல்லாலே வேயப்பட்ட குறிய இறப்பையுடைய குடிலினுடைய பறியுடை முன்றில் - மீனை வாரி யெடுக்கும் பறிகளையுடைய முற்றத்தினிடப்பட்ட, கொடூங்காற் புன்னைக் கோடு துமித்து இயற்றிய பைங்காய் தூங்கும் பாய் மணல் பந்தர் - வளைந்த காலையுடைய புனைகளின் கொம்புகளை வெட்டியிட்ட பசிய காய்கள் நாலும் பரந்த மணலையுடைய பந்தரிலே, இளைஞரும் முதியரும் கிளையுடன் துவன்றி - ஆண்டாலே இளையவர்களும் முதிர்ந்தவர்களும் சுற்றத்துடனே நிறைந்திருந்து பின்னர், புலவு நுனைப் பகழியும் சிலையும் மானச் செவ்வரிக் கயலொடு பச்சிறாப் பிறழும் - புலால் நாறும் முனையினையுடைய அம்பையும் வில்லையும் ஒப்பச் சிவந்த வரியினையுடைய கயல்களோடே பசிய இறாப்பிறழாநின்ற, மையிருங் குட்டத்து மகவொடு வழங்கி - கருமையுடைய பெரிய ஆழ்ந்த குளங்களைப் பிள்ளைகளோடே உலாவி மீனைப் பிடித்து, கோடை நீடினும் குறைபடல் அறியாத் தோள் தாழ் குளத்த கோடு காத்திருக்குங் - கோடைக்காலம் நீட்டித்து நின்றதாயினும் வற்றுதலை அறியாத கையை மேலே கூப்பி நீர் நிலை காட்டுங் காலத்துக் கையமிழ்ந்தும் குளங்களினுடைய கரையைக் காத்திருக்கும், கொடுமுடி வலைஞர் குடிவயின் சேப்பின் - வளைந்த முடிகளையுடைய வலையால் மீன் பிடிப்போருடைய குடியிருப்பிலே தங்குவீராயின்;
கருத்துரை : வேழக் கோலை நிரைத்து, வெள்ளிய மரக்கொம்புகளை இடையிடையே கலந்து, தாழை நாராலே கட்டித் தருப்பைப் புல்லாலே வேயப்பட்ட குறிய இறப்பையுடைய குடிலினது மீன்வாருகின்ற பறியை உடைய முற்றத்தின்கண் வளைந்த காலையுடைய புன்னையின் கொம்பை வெட்டி இயற்றிய பசிய காய்கள் தூங்குகின்ற பந்தரிலே இளைஞரும் முதிர்ந்தவரும் சுற்றத்தோடே கூடியிருந்து, பின்னர், பகழியையும் வில்லையும் ஒத்த, கயலும் இறாமீனும் பிறழாநின்ற கரிய பெரிய குளத்திலே மக்களொடு உலாவி மீனைப்பிடித்து, கோடைக் காலம் நீண்டதாயினும் வற்றாத நீர்நிலை காட்டுவார் கூம்பிய கைகள் அமிழாநின்ற நீரினையுடைய குளக்கரைகளைக் காவல் செய்திருக்கின்ற கொடிய முடியினையுடைய வலைஞரின் குடியிருப்பிலே தங்குவீராயின் என்பதாம்.
அகலவுரை : வேழக்கோல்-பேய்க் கருப்பந்தட்டை; கொறுக் கைச்சியுமாம்; மூங்கிற்கோல் எனினுமாம். வெண்கோடு - வெள்ளிய மரக் கொம்பு. வேழம் - புல் இனத்த தாகலின் உறுதியாயிருத்தற்கு இடையிடையே வெண்கோடு விரவினர் என்க. வெண்கோடு, வஞ்சி மரமும் காஞ்சி மரமுமாகிய வெள்ளிய கொம்பு என்பர் நச்சினார்க்கினியர். தாழை -நாருக்கு ஆகுபெயர். முடித்து என்பது, முடிதந்து என்பதன் விகாரம் என்பர் நச்சினார்க்கினியர். தருப்பை - நாணற்புல். குறியிறை - குறுகிய இறப்பு. பறி மீன் பிடிக்கும் கருவி. புன்னையின் அடிப்பகுதி வளைந்திருத்தல் இயல்பு ஆகலின், கொடுங்காற் புன்னை என்றார். புன்னை - நெய்தனிலத்து மரம். துமித்து - வெட்டி. பைங்காய்-அப் பந்தரின்கண் படர்ந்த சுரை, பாகல், புடோல் முதலியவற்றின் பசிய காய் என்க. பாய் மணல் - பரவிய மணல். ஆண்டால் இளையாரும் முதியாரும் என்க. சுற்றம் -பெண்டிரும் மகவுகளும் என்க. இனி உறவினராய் வந்தோருடன் கூடி எனினுமாம். பச்சிறா-பசிய இறாமீன். பகழி-அம்பு. செவ்வரிக் கயல், குருதியாற் சிவந்த அம்பு போன்ற தென்றும், இறாமீன், விற்போன்ற தென்றும் நிரனிறையாகக் கொள்க. இறவுக் கலித்துப் பூட்டறு வில்லிற் கூட்டுமுதற் றெறிக்கும் (அகம்.69:1-2) என்றும், முடங்கிறவு பூட்டுறற வில்லேய்க்கும் (திணைமாலை, 131) என்றும், பூட்டுச்சிலை யிறவினொடு (சீவக,178) என்றும், இறாமீனை வில்லோடு பல சான்றோரும் ஒப்பித்தல் அறிக. இதனால், இறாஅ வன்சிலையர் (274) என வரும் மலைபடுகடாத்திற்கும், முறியாத வன்சிலை என்றன்றி இறாப் போன்ற வன்சிலை எனப் பொருள் கோடலும் பொருந்துமாறறிக.
புலவுநுனைப் பகழி என்றதற்கேற்பச் செவ்வரிக்கயல் எனப்பொருளும் அடையடுத்து வந்தமையறிக. இதனை, இரட்டைக் கிளவியும் இரட்டை வழித்தே (தொல்.உவம.22) என்னும் சூத்திரத்தானே அறிக. மையிருங்குட்டம் என்றது, கரிய பெரிய ஆழமான குளம் என்றவாறு. சிறந்த, குளத்தினியல்களைத் தொகுத்துக் கூறியவாறுணர்க. மகவொடு வழங்கும் என்றது, மீன் பிடி தொழில் அவர்தம் குடித்தொழில் ஆதலால் குலவிச்சை கல்லாமற் பாகம் படுமாதலின் சிறாஅரும் மீன் பிடிப்பர் என்றவாறாம். வழங்குதல் - ஈண்டு மீன் பிடித்தற் றொழின் மேனின்றது.
கோடை நீடினும் குறைபடலறியாத் தோள் தாழ் குளம், நெய்தனிலமாக்களால் உண்ணீர் பெறற் பொருட்டுத் தோண்டிப் பேணப்பட்டு வரும் குளம் என்க. உண்ணீராகலின் களவில் மீன் பிடித்துக் கலக்காமைக்குக் கோடுகாத்திருப்பர் என்க. கோடைக்காலத்துத் தோள்தாழ் குளம் என்றது, அதன் நீர்வளம் கூறியவாறு. தோள் தாழ்தலாவது, நீர் நிலை அளப்போர் கைகளை மேலே கூப்பி முழுகுங்கால் அவர்கள் கைகளும் நீரில் அழும் அளவிற்றாயிருத்தல். கோடு - குளக்கரை. வலைஞர் - வலையால் மீன் பிடிப்பவராகிய பரதவர் என்க. சேப்பின் - தங்கின்.
நெய்தனிலமாக்கள் விருந்தோம்பற் சிறப்பு
275-282 : அவையா அரிசி ............... பெறுகுவிர்
பொருள் : அவையா அரிசி அம் களித் துழவை - குற்றாத கொழியல் அரிசியை அழகினையுடைய களியாகத் துழாவியட்ட கூழை, மலர்வாய்ப் பிழாவில் புலர ஆற்றி - அகன்ற வாயையுடைய தட்டுப் பிழாவில் உலரும்படி ஆற்றி, பாம்பு உறை புற்றிற் குறும்பி ஏய்க்கும் - பாம்பு கிடக்கின்ற புற்றின்கட் புற்றாம் பழஞ் சோற்றை ஒக்கும், பூம்புற நல்லடை அளைஇ - பொலிவு பெற்ற புறத்தினையுடைய நல்ல முளையை யிடித்துச் சேர அதனை அதிலே கலந்து, தேம்பட எல்லையும் இரவும் இருமுறை கழிப்பி - இனிமை மிகும் பொருட்டுப் பகலும் இரவும் இருமுறை போக்கி, வல்வாய்ச் சாடியின் வழைச்சு அற விளைந்த - வலிய வாயினை யுடைய சாடியின் கண்ணே இளமையறும்படி முற்றின, வெந்நீர் அரியல் விரல் அலை நறும்பிழி - வெந்நீரின்கண் வேகவைத்து நெய்யரியால் வடிகட்டி விரலால் அலைத்துப் பிழிந்த நறிய கள்ளை, தண்மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர் - பச்சை மீனைச் சுட்டதனோடே பசியாற் றளர்ந்தவிடத்தே பெறுவீர்;
கருத்துரை : குற்றாத கொழியலரிசியை அழகிய களியாகத் துழாவியட்ட கூழை, மலர்ந்த வாயையுடைய தட்டுப் பிழாவிலே யிட்டு உலரும் படி ஆற்றிப் பாம்பு கிடக்கும் புற்றின்கட் கிடக்கும் புற்றாம் பழஞ் சோற்றைப் போன்று பொலிவு பெற்ற புறத்தையுடைய நல்ல முளையை இடித்துச் சேர அதனை அதிலே கலந்து, அஃதினிமை பெறும்படி இரண்டு பகலும் இரண்டு இரவும் கழித்து வலிய வாயினையுடைய சாடியின் கண்ணேயிட்டு, வெந்நீரின் வேகவைத்து நெய்யரியாலே வடிக்கட்டி, விரலாலே அலைத்துப் பிழியப்பட்ட நறிய கள்ளைப் பச்சைமீன் சூட்டோடே தளர்ந்துழிப் பெறாநிற்பீர் என்பதாம்.
அகலவுரை : அவைத்தல் - குற்றுதல். அவையா - குற்றாத, தீங்கரும்பு நல்லுலக்கையாகச் செழுமுத்தம், பூங்காஞ்சி நீழ லவைப்பார், (சிலப்.29-26) எனச் சிலப்பதிகாரத்தும், இரும்பு முகந்தேய்த்த அவைப்புமாண் அரிசி (164) எனச் சிறுபாணாற்றுப்படையினும், அவைப்புமா ணரிசி (194-3) என அகத்தினும், அஃதப்பொருட்டாதலறிக. துழவை - கூழ். துழாவிச் சமைத்தலால் துழவை எனப்பட்டது. கட்கினிமையும் கூறுவார் அங்களித் துழவை என்றார். பிழா ஒருவகைத் தட்டம். உடனே வெம்மை ஆற வேண்டலின் மலர்வாய்ப் பிழாவின் என்றார். மலர்வாய் : வினைத்தொகை; அகன்ற வாயென்க. குறும்பி - புற்றின்கண் உள்ள புற்றாம் பழஞ்சோறு. புற்றத் தீர்ம்புறத் திறுத்த குறும்பு (அகம்.18:1-2.) என்றார் பிறரும். ஏய்க்கும் : உவமவுருபு. பூம்புறம் - பொலிவுடைய புறம்.
அடைமுளை, நெல்லடை என்றும் பாடம். இதற்கு நெல்லினது முளை என்க. அளைஇ - கலந்து தேம்பட - இனிமையுண்டாதற் பொருட்டு. இரண்டு பகலும் இரண்டு இரவும் அரியாமல் வைத்தால் அக்கள் இனிமை பெறும் என்பது கருத்து. எல்லை - பகல் எல்லையும் இரவும் இருமுறை செல்லக் கழித்தென்க. வெப்பம் பொறுத்தல் வேண்டுதலால் வல்வாய்ச் சாடி என்றார்; சாடி - தாழி. வழைச்சு - இளங்கள் நாற்றம். வழைச்சறு சாடிமட்டு அயின்று (சீவக சிந்தா - 1614) என்புழியும், அஃதப் பொருட்டாதல் காண்க. அரியல் - அரிக்கப்படுதலால் அரியலாயிற்று. விரலால் அலைத்துப் பிழியப்படுதலால் பிழி என்பது பெயராயிற்று. தண்மீன் - பச்சைமீன். சூடு - சுட்ட தசை. வலைஞர் குடிவயிற் சேப்பின் நறும்பிழி மீன் சூட்டொடும் பெறுகுவிர் என்க. இனி, 283- பச்சூன் என்பது தொடங்கி, 296-கழிமின் என்னுந் துணையும் ஒரு தொடர்.
கடவுள் ஒண்பூ
283-290 : பச்சூன் ............... ஓம்பி
பொருள் : பச்சூன் பெய்த சுவல்பிணி பைந்தோல் - செவ்வியான இறைச்சியிட்டு வைத்த தோளிடத்தே கோத்து நாற்றின பசிய தோலினையுடைய, கோள்வல் பாண்மகன் - மீனைத் தப்பாமற் பிடிக்கவல்ல பாண்சாதியிற் பிறந்தவனுடைய, தலைவலித்து யாத்த நெடுங்கழைத் தூண்டில் நடுங்க - தலையிலே வலித்துக் கட்டின நெடிய மூங்கிற் கோலாகிய தூண்டில் நடுங்கும்படியும், நாண் கொளீஇ கொடுவாய் இரும்பின் மடிதலை புலம்ப - கயிற்றிலே கொளுவப்பட்ட வளைந்த வாயினையுடைய தூண்டிலினது மடித்ததலை இரையின்றித் தனிக்கும்படியும், பொதியிரை கதுவிய போழ் வாய் வாளை - அத் தூண்டிலிரும்பு மறையப் பொதிந்த இரையைக் கவ்வி அகப்படாதுபோன அங்காந்த வாயையுடைய வாளைமீன், நீர் நணிப் பிரம்பின் நடுங்குநிழல் வெரூஉம்-நீர்க்கு அணித்தாய் நின்ற பிரம்பினது காற்றாலசையும் நிழலை நீரிற் கண்டு அஞ்சாநின்ற நீத்துடை நெடுங்கயம் தீப்பட மலர்ந்த கடவுள் ஒண்பூ அடைதல் ஓம்பி -நீந்துதற்குக் காரணமான பெருக்கினையுடைய நெடிய குளத்தின்கண் நெருப்பின்றன்மை யுண்டாகப் பூத்த கடவுள் விரும்புதற்குரிய ஒள்ளிய தாமரைப் பூவைப் பறித்துச் சூடுதலைச் செய்யாது பாதுகாத்து;
கருத்துரை : பச்சிறைச்சியிட்டுத் தோளிடத்தே கோத்து நாற்றின பசிய தோற்பையையுடையவனும் மீனைத் தப்பாமற் பிடித்தலில் வல்லவனும் ஆகிய பாண்குடியிற் பிறந்தவனுடைய தலையிடத்தே வலித்துக் கட்டின நெடிய மூங்கிலாகிய தூண்டிற்கோல் நடுங்கும்படியும், வளைந்த வாயினையுடைய தூண்டிற் பொன்னின் மடித்ததலை இரையின்றித் தனிக்கும்படியும், அதனைப் பொதிந்த இரையைக் கவ்விக் கொண்டு அகப்படாதுபோன அங்காந்த வாயினையுடைய வாளைமீன் நீரின் அணித்தே நின்று காற்றாலே அசைகின்ற பிரம்பினது நிழலை நீரிற் கண்டு அஞ்சாநின்ற நீந்துதற்குக் காரணமான பெருக்கினையுடைய நெடிய குளத்திலே நெருப்பின் றன்மை தோன்றப் பூத்த கடவுள் விரும்புதற்குரிய ஒள்ளிய தாமரைப் பூவினைப் பறித்துச் சூடுதலைச் செய்யாதே பாதுகாத்து என்பதாம்.
அகலவுரை : பசுமை + ஊன்-பச்சூன் எனப் புணர்ந்தது. இவ்வூன் தூண்டிற் பொன்னிற் கோத்து வைத்தற்பொருட்டுத் தோற்பையிலிட்டுத் தோளிலே தூங்க விட்டிருப்பர் என்க. சுவல்-தோள். கோள்வல் - மீனைத் தப்பாமற் பிடித்தலில் வல்லமையுடைய. கோள்வல் பாண்மகன் தூண்டிலினும் இரை கவ்வி அகப்படாதொழிந்தமை கூறினார். அவ்வாளைமீனின் பெருமை தெரிதல் வேண்டி. பாண்மகன்-பாணர்குடியிற் பிறந்தோன். பாணர்கள் மீன்பிடிக்கும் வழக்கமுடையோர் என்பதனை மீன் சீவும் பாண்சேரி (269) என்னும் மதுரைக் காஞ்சியானும் அறிக.
வலித்து யாத்தல் -இறுக்கிக் கட்டுதல். கரையினின்று நீரிலே எறிதலால் தூண்டிற்கோல் நெடிய கோல் ஆதல் வேண்டிற்று. கழை-மூங்கில். கொளீஇ என்பதனைக் கொளுவப்பட்ட எனத் திரித்துக் கொள்க. கொடுவாயிரும்பு - வளைந்த வாயினையுடைய தூண்டிலாகிய இரும்பு; இஃது இரும்பாற் செய்யப்படும். இதன் நுனி மீண்டும் உட்புறமாக மடித்திருத்தலான் மடிதலை என்றார். புலம்ப - இரையின்றித் தனித்துவிடும்படி, புலம்பே தனிமை (உரி-33) என்பது தொல்காப்பியம் நடுங்கவும், புலம்பவும் கதுவிய என்க. மிகப்பரிய வாளையினைத் தூண்டிலிரும்பு கவ்விக் கொள்ளமாட்டாமையான் அகப்படாது இரையைக் கவ்விப் போயிற் றென்க. பின்னர் நடுங்க என்றதனால் தூண்டிற் பொன்னின் பிடிப்பிலிருந்து பெரிதும் முயன்று வீடு பெற்றமை புலனாம். வாளையின் வாய் ஏனை மீனின் வாயினும் பெரிதாகவும் பிளவுபட்டதாகவும் இருத்தல் இயல்பு.
நீரின் நணித்தாகப் பிரம்பு படர்ந்திருத்தல் கூறியதும் குளத்தை நீத்துடை நெடுங்குளம் என்றதும், அந்நாட்டின் நீர்வள நிலவளங்களைக் குறிப்பாற் கூறியவாறாம். பிரம்பு காற்றான் அசைதலின் அதன் நிழலும் நடுங்குவதாயிற்று. தூண்டிலிடுவோரும் தந்தூண்டிற் கோலை அசைத்தலுடையர் ஆகலின் பிரம்பின் நடுங்கு நிழலைத் தூண்டிற் கோலின் நிழல் எனக் கருதி வாளைமீன் வெருவிற் றென்க.
தூண்டிலிரும்பை மூடியிடுதலால் பொதியிரை என்றார். பொதிதல்-அகத்திட்டு மூடுதல். புண்வைத்து மூடார் பொதிந்து (நீதிநெறி - 56) என்புழியும் அஃதப் பொருட்டாதல் அறிக. நெடுங்கயம் தீப்பட மலர்ந்த என்புழி, வியப்புச்சுவை தோன்றுதல் காண்க.
நிரைநெ டுங்கய நீரிடை நெருப்பெழுந் தனைய
விரைநெ கிழ்ந்தசெங் கமலமென் பொய்கை (பெரிய - உருத்திர.5)
எனச் சேக்கிழாரடிகளும் இதனை விரித்தோதுதல் காண்க மேலும் சுடர்த் தாமரை (மதுரைக் - 249) என்றும், விளக்கி னன்ன சுடர்விடு தாமரை, (நற்-310-1) என்றும், எரியகைந் தன்ன தாமரை, (அகம்.119-1) என்றும் பிற சான்றோரும் கூறுதல் காண்க. கடவுள் ஒண்பூ-தெய்வங்கள் விரும்புதற்குரிய பூ. பரிய மலர்களைத் தெய்வங்கள் விரும்பி அவற்றின்கண் வீற்றிருக்கும் என்றும் ஆதலான் அத்தகைய மலரைக் கண்டின்புறலாமன்றிச் சூடி இன்புறக் கருதிப் பறித்தல் கூடாதென்றும், அங்ஙனம் பறித்துச் சூடின் அத்தெய்வங்கள் தீங்கியற்றும் என்றும் பண்டைநாள் தமிழ்மக்கள் கருதினர் ஆதலின், அத்தகைய கடவுள் மலரைப் பறியாதே பாதுகாமின் எனச் செவியறிவுறுத்தினான் என்க. இதனை,
நிரையிதழ்க் குவளை கடிவீ தொடினும்
வரையர மகளிர் இருக்கை காணினும்
உயிர்செல வெம்பிப் பனித்தலும் உரியிர் (மலைபடு.189-91)
என்னும் மலைபடு கடாத்தினும் காண்க. ரா இராகவையங்கார் அவர்கள் இங்கு அந்தணர் அகத்துப்புக வேண்டுதலால் அவரைப்போற் சூடக்கருதாமை குறித்தார் என்பதும் ஒன்று என்றும், ஆடுவண்டிமிரா அழலவிர் தாமரை திரையனாற் சூட்டப் பெறுவாயாகலின் என்பதும் ஆம். இஃதும் ஒரு நயம் என்பர்.
சூடத்தகும் பூ
291-296 : உறைகான்மாறிய ................. கழிமின்
பொருள் : உறை கால் மாறிய ஓங்கு உயர் நனந்தலை அகலிரு வானத்துக் குறைவில் ஏய்ப்ப - துளிகாலுதலை ஒழிந்த ஓங்கி உயர்ந்த பரந்த இடத்தையுடைத்தாகிய எப்பொருளும் தன்கண் தோன்றி அகலுதற்குக் காரணமான பெரிய வானத்திடத்தே தோன்றும் குறைவில்லாகிய இந்திரவில்லை ஒப்ப அரக்கு இதழ் குவளையொடு நீலம் நீடி - சாதிலிங்கம் போன்ற இதழையுடைய குவளைப் பூவோடே நீலப்பூவும் வளர்ந்து, முரட்பூ மலிந்த முதுநீர்ப் பொய்கை - ஒன்றற் கொன்று நிறம் மாறுபடுதலையுடைய ஏனைப் பூக்களும் மிக்க முதிய நீரையுடைத்தாகிய பொய்கைகளிடத்தே, குறுநர் இட்ட கூம்புவிடு பன்மலர் - பூப்பறிப்பார் நுங்களுக்கிட்ட குவிதல் நெகிழ்ந்த பல பூக்களையும், பெருநாள் அமையத்துப் பிணையினிர் கழிமின் - பெரிதாகிய நாட்காலத்தே சூடிப்போமின்;
கருத்துரை : துளித்தலொழிந்த ஓங்கி உயர்ந்து பரந்த இடத்தையுடைத்தாகிய ஏனைப் பொருள்கள் தோன்றிவிரிதற்குக் காரணமான கரிய விண்ணிடத்தே தோன்றும், குறைவில்லாகிய இந்திரவிற் போன்றுசெங்குவளைப் பூவும், நீலப்பூவும் ஒன்றனோடு ஒன்று மாறுபட்ட வேறு பன்னிறப் பூக்களும் மிக்க முதிய நீரையுடைய பொய்கைகளிலே பூப்பறிப்போர் நுங்களுக்கு வழங்கிய பூக்களைச் சூடிக்கொண்டு போமின் என்பதாம்.
அகலவுரை : கடவுள் ஒண்பூ அடைதல் ஓம்பிக் குறுநர் இட்ட கூம்புவிடு பன்மலர் பிணையினிர் கழிமின் என்க. கலைவாணனாதலின் அழகுணர்ச்சி மிக்கவனாய்ப் பூச்சூடிச் சேறலையும் பொருளாக எடுத்துப் புகல்கின்றான், இங்ஙனமே மலைபடுகடாத்தினும்,
தேம்பட மலர்ந்து மராஅமெல் லிணரும்
உம்பல் அகைத்த வொண்முறி யாவும்
தளிரொடு மிடைந்த காமரு கண்ணி
திரங்குமர னாரிற் பொலியச் சூடி
முரம்புகண் உடைந்த நடவை தண்ணென
உண்டனிர் ஆடிக் கொண்டனிர் கழிமின் (428-33)
என்று, ஆற்றுப்படுத்துவோன் கூத்தனைப் பூச்சூடிச் சேறற்குச் செவியறிவுறுத்தலை உணர்க. வானத்தையும் அதன்கண் இந்திரவில்லையும் முதுநீர்ப் பொய்கைக்கும், அதன்கண் பன்னிற மலர்கள் தோன்றும் காட்சிக்கும் உவமையாகக் கருதிய நல்லிசைப் புலவர் உளத்தே அவ்வானத்தின் அழகெல்லாம் தோன்றுதலான், அவற்றை எஞ்சாது கூறுவாராயினர். மழை பொழியுங்காலத்தே வில் தோன்றாமையான் உறை கான்மாறிய விசும்பு என்றார். கால் மாறுதல் என்பதனை ஒரு சொல் விழுக்காடாகக் கொண்டு உறைத்த லொழிந்த விசும் பெனினுமாம். உறைகால்-துளி காலுதலை எனினுமாம், உறை-துளி. வானம் மனம் சென்று கதுவமாட்டாதபடி உயர்ந்திருத்தலால் ஓங்குயர் விசும்பு என்றார். நனந்தலை - என்றது. விசும்பின் அகலப்பரப்பை என்க. மேலும் எல்லாப் பொருளும் அதன் கண்ணே தோன்றி விரிதலான், அகல் விசும் பென்றார். இரு விசும்பு என்றது, முகில் சூழ்தலானே கரிதாகிய விசும்பு என்றவாறு.
நாண் இன்மையாற் குறை வில் என வானவில்லைக் கூறினார். இனி வான வில் சில செவ்விகளில் ஓரிடத்தே ஒருபகுதி தோன்றி மற்றோரிடத்தே ஒரு பகுதி தோன்றாமலும் இடையிடையே இற்றுப் போயும் காணப்படுதல் இயல்பாகலின், குறை வில் என்றார் எனினுமாம்.
இனி, ஈண்டுக் குறைவில் என்றது, எசுர் வேத தாருண முதற் பிரசினத்துள்ள ஐந்தாம் அந்வாக முதற் பஞ்சாதியில், இந்திரவில் உண்டான வரலாறு கூறியவிடத்து, அது முதலில் உருத்திரன் வில்லென்றும், உருத்திரன் அவ்வில்லை வளைத்துத் தரையிலூன்றி நின்று அக்கினியும் இந்திரனும் பவமானனும் தன்னை எதிர்க்க வல்லாரில்லை என்று நெடுமொழி கூறியதாகக் கேட்டு இந்திரன் பொறாது வம்ரி (கரையான்) ஆகி அவ்வில்லை அடியறுக்க, அது கிளம்பி அவ்வுருத்திரன் தலையோடு வானத்துப் போய் நின்ற தென்றும் பின்னர் தேப்ரவர்க்கியம் என்னும் வேள்வி செய்து உருத்திரனைத் தலையுடையனாக்கினார் என்றம் கூறும். இதனால் இவ்வில் நாணற்ற குறைவில்லாக வழங்கப்பட்டதென்றுணரலாம். இது வேதகதை யாகலான் அதனை அறிந்த அந்தணராகிய உருத்திரங் கண்ணர் இவ்வரலாறு கருதி இங்ஙனம் ஆண்டனர் என்பது பொருந்தும், என, ரா. இராகவையங்கார் அவர்கள் கூறியுள்ளார்கள். இயற்கையிலேயே குறைவில்லாகிய வானவில்லை இவ்வரலாறு நினைந்து குறைவில் என்றார் என எண்ணுதல் எவ்வாறாயினும், உயரிய வேதத்தின் தன்மை இதனால் நன்கு விளங்குதலான் இதனை ஈண்டெடுத்துக் காட்டினாம்.
முரண், நிறவேற்றுமை. குறுநர் - பூப்பறிப்போர். அவர் நுமக்கு வழங்குவர் ஆகலின் என்க. பெருநாள் - ஞாயிறு தோன்றும் விடியற்காலம். மேலே அந்தணர் சேரி கூறுதலான் அவர் வைகறையிலே நீராடுதலுண்மையின் பெருநாளமையத்தும் பூப்பறிப்பா ராயினர் என்க. பிணையினிர் - பிணைந்து; சூடி: முற்றெச்சம். 297-செழுங்கன்று என்பது தொடங்கி, 310-பெறுகுவிர் என்னுந் துணையும் ஒருதொடர்; இதன்கண் அந்தணர் இருக்கையின் இயல்பும் அவர்தம் உண்டியின் இயல்பும் விருந்தோம்பற் சிறப்பும் பிறவும் கூறப்படும்.
அந்தணர் இல்லத்தின் அமைதி
297-301 : செழுங்கன்று ............... செப்பின்
பொருள் : செழுங் கன்று யாத்த சிறுதாள் பந்தர் - வளவிய கன்றைக் கட்டின சிறிய கால்களையுடைய பந்தரினையும், பைஞ் சேறு மெழுகிய படிவ நன்னகர் - ஆப்பியான் மெழுகிய வழிபடுந் தெய்வங்களையுடைய நன்றாகிய அகங்களையும், மனையுறை கோழியொடு ஞமலி துன்னாது - மனைகளிலே தங்கும் கோழிகளுடனே நாயும் சேராமல், வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும் - வளைந்த வாயினையுடைய கிளிக்கு வேதத்தின் ஓசையைக் கற்பிக்கும், மறை காப்பாளர் உறைபதிச் சேப்பின் - வேதத்தைக் காத்தற் றொழிலைச் செய்வார் இருக்கின்ற ஊரிடத்தே தங்குவீராயின்;
கருத்துரை : வளவிய கன்றுகளைப் பிணித்துள்ள சிறிய கால்களையுடைய பந்தரினையும், சாணத்தால் மெழுகப்பட்ட வழிபடுந் தெய்வங்களையுடைய நன்றாகிய இல்லங்களையும் உடைய கோழியும், நாயும் சேரா தனவாய்க் கிளிகளுக்கு வேதத்தின் ஓசையைக் கற்பிக்கும் வேதவொழுக்கத்தைப் பாதுகாத்தற் றொழிலைச் செய்யும் அந்தணர் உறைகின்ற ஊரிடத்தே தங்குவீராயின் என்பதாம்.
அகலவுரை : எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுவார் அந்தணர் ஆதல் தோன்ற அவர் இல்லத்துக் கன்றின் செழிப்பினை விதந்தோதினார். ஆன் கன்றும் எருமைக் கன்றும் இரண்டும் கோடல் வேண்டிப் பொதுவிற் கன்றென் றோதினார். கன்றின் செழுமை கூறவே ஆனின் செழுமையும் கூறியவாறாயிற்று. கன்றுகள் வயிறாரப் பாலுண்ணவிட்டோம்புதல் செழுங்கன்றென்றமையால் போந்த பொருளாயிற்று. ஆன் முதலியவற்றின் பாலை மிகக் கறந்து கொண்டு கன்றை மெலிய விடுதல் அல்லது சாகவிடுதல் பெரும்பாவம் என்க. இதனை,
கன்றுயிர் ஓய்ந்துகக் கறந்து பாலுண்டோன் .................. உறுநர கென்னதாகவே, (கம்ப-பள்ளியடைப்.104) எனப் பிறர் கூறுமாற்றானும் உணர்க. நாயும் கோழியும் அந்தணர் தீண்டத் தகாதன என்ப. இதனை, பார்ப்பாரிற் கோழியும் நாயும் புகலின்னா, (இன்னா 3) என்பதனானும் உணர்க. இடையறாது வேதமோதுதற் றொழிலுடையார் என்பதனை அவர் வீட்டுக் கிளிக்கும் மறை பயிற்றுமாற்றால் கூறினார். மறைகாப்பாளர் என்றது, மறை யோதுதலையும் அது விதித்தாங்கு ஒழுகுதலையும் என்க. என்னை? ஒழுக்கமில்வழி ஓதுதலாற் பயனின்மையின். இதனை,
மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் (குறள் - 13:4)
என்றும்,
மாதவத் தொழுகலம் மறைகள் யாவையும்
ஓதலம் ஓதுவார்க் குதவ லாற்றலம்
மூதெரி வளர்க்கிலம் முறையி னீங்கினேம்
ஆதலின் அந்தண ரேயும் ஆகிலேம் (கம்ப.அகத்-14)
என்றும், ஓதலினும் ஒழுக்கத்தையே சிறந்ததாகச் சான்றோர் கூறலானும் உணர்க. சேப்பின் - தங்குவீராயின். இனி, அவ்வந்தணர் இல்லத்து உணவியல்பு கூறுகின்றார்.
அந்தணர் விருந்தோம்பற்சிறப்பு
302-310 : பெருநல்வானத்து .................... பெறுகுவிர்
பொருள் : பெருநல் வானத்து வடவயின் விளங்கும் சிறுமீன் புரையும் கற்பின் - பெரிய நன்றாகிய விசும்பிடத்தே வடதிசைக்கண் நின்று விளங்காநின்ற அருந்ததியை ஒக்கும் கற்பினையும், நறுநுதல் வளைக்கை மகடூஉ - நறிய நுதலையும் வளையலை உடைய கையினையும் உடைய பார்ப்பனி, வயின் அறிந்து அட்ட - பதமறிந்து ஆக்கிய, சுடர்க்கடைப் பறவைப் பெயர்ப்படு வத்தம் - ஞாயிறுபட்ட காலத்தே பறவையினது பெயரைப் பெற்ற நெற்சோற்றினையும், சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்து உருப்புறு பசுங்காய்ப் போழொடு - சிவந்த பசுவினது நறிய மோரின்கண் எடுத்த வெண்ணெயிலே கிடந்து வெந்ததனால் வெம்மையுறுகின்ற கொம்மட்டி மாதுளையினுடைய பசிய காயினது வகிரோடும், கறிகலந்து - மிளகுப் பொடி கலக்கப்பட்டு, கஞ்சக நறுமுறி அளைஇ - கருவேம்பினது நறிய இலை அளாவப்பட்டு, பைந்துணர் நெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த தகைமாண் காடியின் - பசிய கொத்துக்களையுடைய நெடிய மரமாகிய மாவினது நறிய வடுவினைப் பலவாகப் போகட்ட அழகு மாட்சிமைப்பட்ட ஊறுகறியினோடும், வகைபடப் பெறுகுவிர் - இன்னோரன்ன பல கூறுகளுண்டாகப் பெறாநிற்பீர்;
கருத்துரை : பெரிய நன்றாகிய வானத்தின்கண் வடதிசையிலே நின்று விளங்காநின்ற அருந்ததியை ஒக்கும் கற்பினையும், நறிய நுதலினையும், வளையலை அணிந்த கையினையும் உடைய பார்ப்பனி, செவ்வி அறிந்து சமைத்த பறவைப் பெயர் பெற்ற நெற்சோற்றையும், சேதாவின் நறிய மோரின்கண் எடுத்த வெண்ணெயிலே வெந்த கொம்மட்டி மாதுளையின் வகிரினையும், மிளகுப்பொடி கலக்கப்பட்டுக் கருவேப்பிலை அளாவப்பட்டு நெடிய மாவின் வடு பலவாகப் போகட்ட அழகுமிக்க ஊறுகறியினையும் இன்னோரன்ன பலகூறுகளுண்டாக அந்திப் பொழுதிலே பெறுவீர் என்பதாம்.
அகலவுரை : ஞாயிறு முதலிய சுடர்த்திரள் வழங்கலின் பெரு நல்வானம் என்றார் வானத்தும் வடதிசை சிறந்ததாகலின் வடவயின் என எடுத்துக்காட்டினர். இருடி மண்டிலத்தை ஒட்டிச் சிறியதாக விளங்கலின், சிறு மீன் என்றார். சிறுமீன் - அருந்ததி மீன். இம்மீன் வதிட்ட முனிவனின் மனைவி என்றும் கற்பில் ஒப்பற்றவள் என்றும் கூறுப.
தீதிலா வடமீனின் திறம் இவள் திறம் (சிலப்.மங்கல-27)
என்றும்,
வாத்துச் சாலி யொருமீன் தகையாளை (சிலப்.மங்-51-1)
என்றும்,
அருந்ததி அனைய கற்பின் (ஐங்-442)
என்றும்,
வடமீன்போல் தொழுதேத்த வயங்கிய கற்பினாள் (கலி.2-21)
என்றும்,
வடமீன் புரையும் மடமொழி யரிவை (புறம் 122.8.6)
என்றும்,
வடமீன் கற்பின் மனையுறை மகளிர் (சிலப் 9: 229) என்றும் இச்சிறு மீனைச் சான்றோர் பலரும் கற்புடைமகளிர்க்கு உவமை எடுத்தோதுதல் அறிக. அருந்ததிமீன் உருவிற் சிறிதாகலின் சிறுமீன் என்றார். ஆலத்தின் உடுக்கள் காட்டி அருந்ததி காட்டுவார் போல் (கைவல்யம்) என்பதனாலும், தூலாருந்ததி நியாயம் என்பதனாலும் அது சிறுமீன் ஆதலறிக. புரையும்: உவம உருபு. கற்பென்னும் பெண்மைக்குரிய அகத்தழகை இவ்வுவமையானும், புற அழகினை நறுநுதல் என்றதனானும், செயற்கை யழகை வளைக்கை மகடூஉ என்றதனாலும் எடுத்துக் கூறினார். அகப்புற அழகுகளாகிய இயற்கையழகும் அணி முதலியவற்றாலாகிய செயற்கையழகும் மகளிர்க்கு இன்றியமையாமை யுணர்க.
உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும்
செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று (தொல்.கள.22)
என்பதோத்தாகலான் கற்பினை முதற்கட் கூறினார்.
வயினறிந்து அட்ட என்றது, இடன் அறிந்து ஆக்கிய என்றவாறு. ஈண்டு இடன் பொழுதின் மேற்று. சிறுகாலை அட்டில் புகாதாள் அரும்பிணி அட்டதனை உண்டியுதவாதாள் இல்வாழ் பேய் (நாலடி-3: 63) என்பவாகலான் வயினறிதல் இன்றியமையாதாயிற்று. வயின் என்றதற்குப் பதமறிந்து என்பர், நச்சினார்க்கினியர். அட்டவத்தம், என்க. அட்ட என்பதனைப் பெயராக்கி அட்டனவற்றை என்றும், என்றது பாற்சோறு பருப்புச்சோறு முதலியவற்றை என்றும், நச்சினார்க்கினியர் கூறுவர். வத்தம் - நெல். பறவைப் பெயர்ப்படுவத்தம் என்றது, கருடன் சம்பா என்னும் பெயருடைய நெல் என்றவாறு. சுடர்க்கடை - மாலைக்காலம். சுடர்க் கடை என்பதனை ஒளிபொருந்திய கடையையுடைய கருடன் சம்பா நெல் என, நெற்கேற்றுதல் சாலப் பொருந்தும். அந்நெல் அங்ஙனமிருத்தல் காண்டலால் என்க.
இனி ஆசிரியர் நச்சினார்க்கினியர் பறவைப் பெயர்ப்படு வத்தம் என்றது, இராசான்னம் என்னும் பெயர் பெறுகின்ற நெல் லென்றவாறு. ஆகுதி பண்ணுதற்கு இந்த நெல்லுச் சோறே சிறந்த தென்று இதனைக் கூறினார். இனி மின்மினி நெல்லென்பாரு முளர்; இப்பெயர் வழக்கின்மையும் ஆகுதிக்குச் சிறவாமையும் உணர்க என்று கூறியுள்ளார். இவ்வுரையின் கண் இராசான்னம் என்றது சாரசான்னம் என்றிருத்தல் வேண்டும் என்றும் அஃது ஏடெழுதினோராற் பிழைபட்டு இராசான்னம் என்றிருக்கிறது என்றும் ரா.இரா.அவர்கள் குறித்துள்ளார்கள். சாரசம் - ஆறுதிங்கள் நீரினின்று விளையும் நெல்லென்க.
சேதா - செவ்விய ஆவுமாம். மாதுளத்துருப்புறு பசுங்காய் என்னும் தொடரை, உருப்புறு மாதுளம் பசுங்காய் என மாறுக. உருப்பு - வெம்மை. எனவே வெந்து வெம்மையுற்ற காய் என்றவாறு. வெயிலுருப் புற்ற அயிலுருப் பனைய வாகி (சிறுபாண் 8-7) என்புழியும் உருப்பு வெப்பமென்னும் பொருட்டாதலறிக. மாதுளம் - கொம்மட்டி மாதுளை என்க. மாதுளம் பசுங்காய் (14-25) எனச் சிலப்பதிகாரத்து வருந் தொடர்க்கு அடியார்க்கு நல்லார் கொம்மட்டி மாதுளங்காய் எனப் பொருள் கூறி மாதுளங்காய் கூறினார் புளித்த கறி பண்ணுதற்கு என்று கூறியதூஉம் காண்க.
போழ் - பிளப்பு; வகிர். கறி - மிளகுப்பொடி. கஞ்சகம் - கருவேம்பு. நறுமுறி - நறிய இலை. நெடுமரக் கொக்கு; பண்புத் தொகை. நெடிய மரமாகிய மா என்க. கொக்கு ஒரு பறவையுமாகலின், மரக் கொக்கு என்றார். வடி-வடு. தகை-அழகு. காடி - ஊறுகறி. ஊறுகாய் என்றிக்காலத்தார் வழங்குப. இங்ஙனம் பல கூறுபட உண்டி பெறுகுவிர் என்பான், வகைபடப் பெறுகுவிர் என்றான் என்க. இனி 311-முதல், 345-வரையில் ஒரு தொடர்; இதன்கண், பரதவர் வாழும் நீர்ப் பெயற்று என்னும் பட்டினத்தின் சிறப்பும். ஆண்டு வாழ்வோர் செயலும், அவர்தம் விருந்தோம்பற் சிறப்பும் பிறவும் கூறப்படும்.
நீர்ப்பெயற்று என்னும் துறைமுகப்பட்டினம்
311-319 : வண்டலாயமொடு ................. போகி
பொருள் : வண்டல் ஆயமொடு உண் துறை தலைஇய புனலாடும் மகளிர் இட்ட பொலங்குழை - விளையாட்டினையுடைய திரள்களோடே நீருண்ணும் துறையிலே கூடி நீராடுகின்ற மகளிர் போகட்டுப்போன பொன்னாற் செய்த மகரக்குறையினை, இரை தேர் மணிச்சிரல் இரை செத்து எறிந்தென - இரையைத் தேடுகின்ற நீலமணிபோலும் சிச்சிலி தனக்கு இரையாகத் துணிந் தெடுத்ததாக, புள் ஆர் பெண்ணைப் புலம்பு மடல் செல்லாது-பறவைகள் நிறைந்திருக்கின்ற பனையில் தனித்த மடலில் போகாமல், கேள்வி அந்தணர் அருங்கடன் இறுத்த வேள்வித் தூணத்து அசைஇ - நூற் கேள்வியையுடைய அந்தணர் செய்தற் கரிய கடனாகச் செய்து முடித்த வேள்விச் சாலையினிடத்தே நட்ட யூபத்தின்மேலே இருந்து, யவனர் ஓதிம விளக்கின் - சோனகர் கூம்பின் மேலேயிட்ட அன்னவிளக்குப் போலவும், உயர் மிசைக்கொண்ட வைகுறு மீனின் உயர்ந்த வானிடத்தே இடங்கொண்ட வைகறைப் போதிற் றோன்றும் வெள்ளிமீன் போலவும் பைபயத் தோன்றும் - ஒளி விட்டுவிளங்காது தோன்றும், நீர்ப்பெயற்று எல்லை போகி - நீர்ப்பாயற்றுறை என்னும் ஊரின் எல்லையிலே சென்று.
கருத்துரை : ஆயமாகிய திரளினோடே நீருண்ணுந் துறையிலே கூடி நீராடும் மகளிர் போகட்டுப் போன பொன்னாலாய மகரக் குழையைச் சிச்சிலி தனக்குரிய இரையாகக் கருதி எடுத்துக்கொண்டு, பறவைகள் நிறைந்த பனையினது தனித்த மடலிலே செல்லாமல் மறைக் கேள்வியையுடைய அந்தணர் வேள்விச்சாலையிலே கட்ட வேள்வித் தூணத்திலே தங்க அக்குழை யவனர் கூம்பின் மேலிட்ட அன்னவிளக்குப் போலவும் வானத்தே வைகறையிற் றோன்றும் வெள்ளி மீன்போலவும் ஒளிவிட்டு விளங்காது தோன்றாநின்ற நீர்ப்பாயற்றுறை என்னும் ஊரின் எல்லையிலே சென்று என்பதாம்.
அகலவுரை : வண்டல் - மகளிர் விளையாட்டு இளையோர் வண்டலயரவும் (187) என்றார் பொருநராற்றுப்படையினும். ஆயம் - திரள். உண்டுறை - நீருண்ணுந் துறை. தலைஇ - கூடி. பொலங் குழை - பொன்னாற் செய்த மகரக்குழை. உறுப்பிடைப் பூட்டுறப் புனையாது பெய்து வைத்தனவாதலால் புனலாடுங்கால் நீரின்கண் நழுவி விழுமென்று கரையில் வைத்துப் பின்னர் மறந்துவிட்டுப் போன மகரக்குழை என்க. மணிச் சிரல் - நீலமணிபோலும் நிறமுடைய மீன் கொத்திப் பறவை; சிச்சிலி என்றும் கூறுப. புலவுக் கயல் எடுத்த பொன் வாய் மணிச் சிரல், (சிறுபாண் - 181) என்றும்; செங்கயல் பாய்ந்து பிறழ்வன கண்டாங்கு எறிந்தது பெறாஅது இரையிழந்து வருந்தி மறிந்து நீங்கும் மணிச்சிரல் (மணி-4 : 22-4) என்றும் பிறரும் ஓதுதல் காண்க. இங்ஙனம் இரையல்லாதவற்றை இரையென மயங்கி எண்ணிப் பறவைகள் எடுத்தலை,
தீயி னன்ன வொண்செங் காந்தள்
தூவற் கலித்த புதுமுகை ஊன்செத்து
அறியா தெடுத்த புன்புறச் சேவல்
ஊனன் மையின் உண்ணா துகுத்தென (மலைபடு:145-48)
எனவரும் மலைபடுகடாத்தானும் உணர்க.
பெண்ணைப் புலம்பு மடற் செல்லாமைக்கும் புள்ளார்தல் குறிப்பேதுவாதலறிக. ஆண்டு இரை பெறாப் பறவைகள் இவ்விரையைக் கவருமென்று ஆண்டுச் செல்லாது வேள்வித் தூணத்தே சென்றிருந்த தென்றவாறு. மறை, கேட்கப் படுவதாகலான், கேள்வியந்தணர் என்றார். கேள்வி - சுருதி என்னும் பொருட்டு. அருங்கடன் - செய்தற்கரிய கடன்; அவை முனிவர் கடன், தேவர் கடன், தென்புலத்தார் கடன் என்பனவாம். அவற்றுள் ஈண்டுக் கூறியது தேவர் கடன் என்க. அது செயற்கருஞ் செயல் ஆதல்பற்றி அருங்கடன் என்றார். வேள்வித் தூணம் - வேள்விக்கண் நடப்படும் தறி. இதனை யூபத்தம்பம் என்பர் வடநூலார். அசைஇ - தங்கி.
யவனர் - சோனகர். ஓதிமவிளக்கு - அன்ன வடிவிற்றாய விளக்கு. எனவே, யவனர் தங்கள் மரக்கலக் கூம்பில் ஓதிமவிளக்கிடுதல் பெற்றாம். பறவை வாயில் ஒளிவிடுதலால், ஓதிமவிளக்கையும், உயரத்தே இருத்தலால், வெள்ளியையும் உவமையாக எடுத்தார். பைபய என்றது ஈண்டு மிக ஒளிராது மெல்ல ஒளிர்ந்தது என்றவாறு.
நீர்ப்பெயற்று என்பது நீர்ப்பாயற்றுறை என்பதன் மரூஉ என்க. இதனைக் கடன் மல்லைத் தல சயனம் என்று வைணவர் வழங்குப. சல சயனம் என்பதே தல சயனம் என்று மருவிற் றென்ப. எனவே, நீர்ப்பாயல் என்பதன் நேர் பொருளாகச் சலசயனம் என்பது அமைதல் காண்க. மல்லை, மாமல்லை, மாவலிபுரம், மகாபலிபுரம் என, இத்திருப்பதியின் பெயர் படிப்படியாய் மருவி இக்காலத்தே மகாபலிபுரம் என வழங்கும். வைகுறு - வைகறையாமம். இதனை, வைகுறு விடியன் மருதம் ஏற்பாடு (அகத்-8) என்னும் தொல்காப்பியச் சூத்திரத்திற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர், வைகுறுதலும், விடியலும், என உம்மைத் தொகையாகக் கொண்டு உரை கூறலானும் செவியறிவுறுத்தலைச் செவியறிவுறூஉ என்றாற் போல வைகுறுதலை வைகுறு என்றார் என விளக்கிச் சேறலானும் உணர்க.
நீர்ப்பாயற்றுறைப் பட்டினச் சிறப்பு
319-327 : பாற்கேழ் ................. நல்லில்
பொருள் : பால் கேழ் வால் உளைப் புரவியொடு வடவளந் தரூஉம் - பால் போலும் வெள்ளிய நிறத்தினையும் வெள்ளிய தலையாட்டத்தினையும் உடைய குதிரைகளுடனே வடதிசைக்கண் உளவாகிய நுகரப்படும் பொருள்களைக் கொண்டுவந்து தருகின்ற, நாவாய் சூழ்ந்த நளிநீர்ப் படப்பை - மரக்கலங்கள் சூழ்ந்து கிடக்கப்பட்ட பெருமையையுடைய கடற்பக்கத்தினையும், மாடம் ஓங்கிய மணல் மலிமறுகின் - மாடங்கள் உயர்ந்து நின்ற மணல் மிக்க தெருக்களையும், பரதர் மலிந்த பல்வேறு தெருவின் - நெய்தனிலமாக்கள் மிக்கு வாழ்கின்ற பலவாய் வேறுபட்ட தெருக்களையும், சிலதர் காக்கும் சேணுயர் வரைப்பின் - தொழில் செய்வோராற் காக்கப்பட்ட மிகவும் உயர்ந்த பண்ட சாலைகளையும், நெல்லுழு பகட்டொடு பறவை துன்னா - நெல்லிற்கு உழுகின்ற எருதுகளுடனே ஆன்கள் நெருங்காவாய், மேழகத்தகரோடு எகினம் கொட்கும் - மேழகக் கிடாயோடே நாயும் சுழன்று திரியும், கூழ் உடை நல் இல் - சோறுடைய நன்றாகிய வீடுகளையும்;
கருத்துரை : பால் போன்ற நிறத்தினையும் வெள்ளிய தலையாட்டத்தையுமுடைய குதிரைகளோடே, வடநாட்டின்கண் உள்ள நுகர்பொருள்களையும் கொணர்ந்து தருகின்ற மரக்கலங்கள் சூழ்ந்து கிடக்கப்பட்ட பெருமையையுடைய கடற்பக்கத்தினையும், மாடங்கள் உயர்ந்து நிற்கின்ற மணன் மிக்க தெருக்களையும், பரதவர் வாழும் பற்பல தெருக்களையும் தொழில் செய்வோராற் காக்கப்படும் மிகவும் உயர்ந்த பண்டசாலைகளையும், எருதுகளும் ஆன்களும் நெருங்கப்படாதனவாய் மேழகக்கிடாய்களும் நாய்களும் சுழன்று திரியாநின்ற நல்ல வீடுகளையும் என்பதாம்.
அகலவுரை : உடைய பட்டினம் என, 336 ஆம் அடிக்கட் சென்று இயையும். புரவிகளில் வெண்ணிறப் புரவியே சிறந்ததென்று புரவி நூல் ஓதுதலான், பாற்கேழ்ப் புரவி என்றார். பால் போலும் நிறமுடைய புரவி என்க. வால்உளை - வெள்ளிய தலையாட்டம்.
இப்புரவிகள் மேற்றிசையிலிருந்து நீரின் வந்தன என்பர் நச்சினார்க்கினியர். வடதிசைக்கண் உள்ள சிந்து நாட்டுப் புரவிகள் என்பாருமுளர். வடவளம் - வடநாட்டின்கண் விளையும் நுகர் பொருள். அவை வடமலைப்பிறந்த மணியும் பொன்னும் கங்கை வாரியும் பிறவுமாம். நாவாய் - மரக்கலம், நளி -பெருமை. தடவும் கயவும் நளியும் பெருமை (உரி.22) என்றோதுவர் தொல்காப்பியர். நளியென் கிளவி செறிவும் ஆகும். (தொல்-உரி-25) என்பவாகலின், செறிவுடைய நீர் எனினுமாம். மாடம் ஓங்கிய மணன் மலி மறுகு என்றது, வணிகர் தெருவை என்க. பரதர் - வணிகர் பட்டினமாகலின் பரதர் தெரு பற்பல வாயின என்க. சிலதர் - தொழில் செய்வோர். துன்னா என்னும் எச்சத்தைச் செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சமாகக் கொண்டு துன்னி என்பாரும் உளர். மேழகத்தகர் - ஆட்டுக்கிடாய். துறைமுகப்பட்டினத்தில் நாய்களும் ஆட்டுக்கிடாய்களும் திரிதலை இவரே பட்டினப் பாலையினும்,
ஞமலிக் கொடுந் தாளேற்றை ஏழகத்
தகரோடு உகளும் முன்றில் (140-1)
என ஓதுதல் காண்க. கொட்கும் - சுழலும். காக்கும் வரைப் பென்றதனாற் பண்டசாலை எனப் பொருள் கூறப்பட்டது. கூழுடைமையான் மட்டும் அன்று கொடுத்தலுடைமையானும் சிறந்த இல் என்பார் நல்லில் என்றார். என்னை?
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு (குறள்-81)
என்பவாகலான். இல்லிற்கு நன்மை என்பது விருந்தோம்பலே என்க.
நீர்ப்பாயற்றுறை மகளிர் இயல்பு
327-336 : கொடும்பூண் ...................... அசையின்
பொருள் : கொடும்பூண் மகளிர் -வளைந்த பேரணிகலன்களையுடைய மகளிர், கொன்றை மென்சினைப் பனி தவழ்பவை போல் பைங்காழ் அல்குல் நுண் துகில் நுடங்க -கொன்றை யிடத்து அரும்புகளையுடைய மெல்லிய கொம்புகளிலே பனி மாசு கிடந்து தவழ்பவை போலப் பசிய மணிகள் கோத்த வடங்களையுடைய அல்குலிற் கிடக்கின்ற மெல்லிய துகில் அசையா நிற்ப, மால்வரைச் சிலம்பின் மகிழ் சிறந்து ஆலும் பீலி மஞ்ஞையின் இயலி - பெருமையையுடைய பக்கமலையிலே மன வெழுச்சி மிக்கு ஆரவாரிக்கும் தோகையையுடைய மயில்போலே உலாவி, கால தமனியப் பொற்சிலம்பு ஒலிப்ப - கால்களிடத்தனவாகிய செம்பொன்னாற் செய்த சிலம்புகள் ஆரவாரிப்ப, உயர்நிலை வான் தோய் மாடத்து - மேனிலையாகிய வானத்தைத் தீண்டுகின்ற மாடத்தின்கண், வரிப் பந்து அசைஇ - நூலால் வரிதலையுடைய பந்தையடித்து இளைத்து, கைபுனை குறுந்தொடி தத்தப் பைபய கையிற் புனைந்த குறுந்தொடி அசையும்படி மெல்ல மெல்ல, முத்த வார்மணல் பொற் சுழங்கு ஆடும் - முத்தை ஒத்த வார்ந்த மணலிலே பொன்னாற் செய்த கழலைக் கொண்டு விளையாடும், பட்டின மருங்கின் அசையின் - பட்டினத்திடத்தே இளைப்பாறுவீராயின்;
கருத்துரை : வளைந்த அணிகலன் அணிந்த மகளிர்கள் அரும்பினையுடைய கொன்றைக் கொம்பிலே பனி மாசு தவழ்ந்தாற் போன்று பசிய மணிகள் கோத்த வடங்களையுடைய அல்குலிலே துகில் கிடந்து அசையாநிற்பவும், பெரிய மலையடுக்கத்தே மன வெழுச்சியாலே ஆரவாரிக்கும் மயில் போலே உலாவிக், காலிடத்தனவாகிய பொற் சிலம்பு ஒலிப்பவும். வானத்தைத் தீண்டும் மேனிலை மாடத்தின்கண்ணே பந்தாடுதலைச் செய்து இளைத்துப் பின்னர்க் கையிலணிந்த குறிய வளையல்கள் அசையும்படி மெல்ல மெல்ல முத்துப்போன்று வார்ந்த மணலிடத்தே பொன்னாலாய கழலை ஏந்தி ஆடாநின்ற பட்டினத்தே இளைப்பாறுவீராயின் என்பதாம்.
அகலவுரை : கொடும்பூண் - வளைந்த அணிகலன். இனித் தம் பாரத்தாலே மெல்லியல் மகளிரை வருத்தும் கொடிய பூண் எனினுமாம்.
கொன்றையின் அரும்புடைய கிளையிலே பனி மாசுபடர்ந்தமை மணி அணிகலன் அணிந்த மகளிர் அல்குலிடத்தே கிடந்து அசையும் நுண்ணிய ஆடைக்கு உவமை. பைங்காழ் - பசிய மணி. நுண்டுகில்- நுண்ணிய நூலானாய ஆடை. இழை மருங் கறியா - நுழைநூற் கலிங்கம் (மலைபடு-561) என்றும், நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்து அரவுரியன்ன அறுவை நல்கி (பொருநராற் - 82-3) என்றும், பிறரும் கூறுதல் அறிக. இவற்றால் பண்டைத் தமிழகத்தே ஆடை நெய்தற் றொழில் சிறப்புற்றிருந்தமை அறிக.
மலையடுக்கத்தே ஆடும் மயில், மேனிலை மாடத்தே ஆடும் மகளிர்க்கு உவமை என்க. மாதரை மகிழ்சிறந்து ஆடும் மயிலோடு உவமித்தல். அப்படினத்தே களிப்பாரன்றிக் கவல்வார் யாருமிலர் என்பதுபட நின்றது. கொடும்பூண் மகளிர் என, அவர் செல்வச் சிறப்பைத் தெரித்தோதியதற் கேற்ப உயர்நிலை வான்றோய் பாடம் என்றார். உயர்நிலை மாடம், வான்றோய் மாடம் எனத் தனித்தனி கூட்டுக. உயர்நிலை மாடம் என்றது, மேனிலை மாடம் என்றவாறு. வான்றோய் மாடம் என்றது, அம்மாடத்தின் உயரத்தைச் சிறப்பித்தவாறு. வான்றோய் மாடம் என்றதற்கு - தேவருலகத்தைத் தீண்டும் மாடம் என்பர் நச்சினார்க்கினியர். வானின்கண் நெடிதுயர்ந்த மாடம் என்றலே இயற்கையொடு பொருந்திய தமிழ்நெறி மரபு ஆகும். வரிப்பந்து - நூலால் வரியப்பட்ட பந்து : பந்து அசைஇ என்றதனைப் பந்தாடுதலிலே இளைத்து என விரித்துக் கொள்க. இளைத்தமை பின்னர்ப் பையப் பொற்கழங்காடற் கேதுவென்க. கழங்கு - கழற்காய் கொண்டு ஆடும் ஆட்டம்; செல்வ மகளிர் ஆதலின் பொன்னாலே கழற்காய் செய்து ஆடினர் என்க; முத்த வார்மணல் என்றது, முத்துப் போன்ற பருமணல் பரப்பிக் கழங்காடற்கமைத்த இடத்தல் என்றவாறு. இது வணிகர் இருப்புக் கூறிற்று.
பட்டினத்தே வல்சிச் சிறப்பு
336-345 : முட்டில் ................ பெறுகுவிர்
பொருள் : முட்டில்-முட்டுப்பாடில்லாத, பைங்கொடி நுடங்கும் பலர் புகு வாயில் - பசிய கொடிகள் அசைகின்ற கள்ளுண்பார் பலரும் புகுதும் வாயிலிடத்து; செம்பூத் தூய செதுக்குடை முன்றில்-சிவந்த பூக்கள் தூவப்பட்ட புல் முதலியவற்றைச் செதுக்குதலுடைய முற்றத்தில் கள்ளடு மகளிர் வள்ளம் நுடக்கிய வார்ந்து உகு சில் நீர் வழிந்த குழம்பின் - கள்ளைச் சமைக்கின்ற மகளிர் வட்டில் கழுவின வடிந்து சிந்தின சில நீர் பல கால் வடிதலில் நிறைந்து வழிந்த குழம்பிடத்து, ஈர்ஞ் சேறு ஆடிய இரும்பல் குட்டிப் பன்மயிர்ப் பிணவொடு பாயம் போகாது - ஈரத்தையுடைய சேற்றையளைந்த கரிய பலவாகிய குட்டிகளையுடைய பலவாகிய மயிர்களையுடைய பெண் பன்றிகளோடே புணர்ச்சியை விரும்பிப் போகாமல், நென்மா வல்சி தீற்றிப் பன்னாள் - நெல்லை இடித்த மாவாகிய உணவினைத் தின்னப் பண்ணிப் பற்பல நாளும், குழி நிறுத்து ஓம்பிய குறுந்தாள் ஏற்றை - குழியிலே நிறுத்திப் பாதுகாத்த குறிய காலையுடைய ஆண்பன்றியின்; கொழுநிணத்தடியொடு கூர் நறாப் பெறுகுவிர் - கொழுவிய நிணத்தையுடைய தசையோடே களிப்பு மிக்க கள்ளைப் பெறுகுவீர்;
கருத்துரை : முட்டுப்பாடில்லாத பசிய கொடியாடுகின்ற கள்ளுண்பார் பலரும் புகுதும், சிவந்த மலர்கள் சிதறப்பட்டதும் செதுக்கப்பட்டதுமாகிய வாயிலிடத்தே கள்ளைச் சமைக்கின்ற மகளிர்கள் வட்டிலைக் கழுவியதனால் வடிந்த, நீர் வழிந்த குழம்பிடத்தே ஈரமாகிய சேற்றின்கண் அளைந்த கரிய பல குட்டிகளையுடைய பெண்பன்றியுடனே புணர்ச்சியை விரும்பிப் போகாதபடி பாதுகாத்து நெல்லையிடித்த மாவாகிய உணவைத் தின்னப்பண்ணிப் பலநாளும் குழியிலே நிறுத்தி வளர்த்த குறிய காலையுடைய ஆண் பன்றியின் கொழுவிய நிணமுடைய தசையோடே களிப்புமிக்க கள்ளையும் பெறுவீர் என்பதாம்.
அகலவுரை : கள்ளுண்பார் சாலப் பலர் புகினும் கள்ளில்லை என்னாது வழங்கும் வாயில் என்பார், முட்டில் வாயில் என்றார் (334). முட்டில் என்னுமிதனை (345) பெறுகுவிர் என்பதோடியைப்பர் நச்சினார்க்கினியர். செம்பூத்தூவுதல், தெய்வத்தை வழிபடற் பொருட்டென்க. இவ்வழக்கமுண்மையை இவ்வாசிரியரே,
மணற்குவைஇ மலர்சிதறிப்
பலர்புகுமனைப் பலிப்புதவின்
நறவுநொடைக் கொடியோடு
பிறபிறவு நளிவிரைஇ (பட்டினப்-178-81)
என்றோதுதலானும் உணர்க. இதனாலே கள்விற்குமிடத்தே கொடி நடுதலும் அறிக. மேலும், கள்ளின் களிநவில் கொடி (மதுரைக்-372) எனவும், கட்கொடி நுடங்கும் ஆவணம் (பதிற்-98:10) எனவும், நெடுங்கொடி நுடங்கு நறவுமலி மறுகில் (அகம்.126:10) எனவும் பிற சான்றோரும் கூறுதலானும் அறிக.
செதுக்குடை முன்றில் என்றது, மண் வெட்டியாலே புல் முதலியவற்றைச் செத்தித் தூய்மை செய்யப்பட்ட முற்றம் என்றவாறு. செதுக்கு - பூவாடல், என்பர் நச்சினார்க்கினியர். கள்ளடுதல் - கள்ளைச் சமைத்தல். இதனால் மகளிர் முற்றத்தே கள்ளடும் வழக்கம் பண்டுண்மை உணர்க. வள்ளம்-வட்டில்; கிண்ணம். இது கள் பருகுதற்குரியது. நுடக்கி - கவிழ்த்த; வள்ளத்தைக் கழுவிக் கவிழ்த்த என்க. நுடக்கிய என்றற்குக் கழுவிய என்னும் பொருளுண்டாயினும் கொள்க. சிறிது சிறிதாய் உகுதலின், சில்நீர் என்றார். ஈர்ஞ் சேறு - ஈரமாகிய சேறு. ஆடுதல்-சேற்றிற் கிடந்து அளைதல். இவ்வாறு அளைதல் பன்றிகளின் இயல்பென்க. பன்றிகள் ஒரு கருவிற் பற்பல குட்டியீனுதல் இயல்பாகலின், பல்குட்டி என்றார். இருமை - கருமை மேற்று. பிணவு -பெண்பன்றி.
பன்றி புல்வாய் நாயென மூன்றும்
ஒன்றிய என்ப பிணவென் பெயர்க்கொடை
என்னும் விதியானே பன்றியிற் பெண்ணைப் பிணவென்னும் மரபுண்மையறிக.
பாயம் - மனவிருப்பம். பாசம் என்னும் வடமொழி பாயம் என நின்றது. ஈண்டுப் பாயம் என்பது இணைவிழைச்சின் மேற் றென்க. புணர்ச்சியின் மேற் சென்றால் கொழுப்பிராதென்று செல்லாமற் காத்து என்பது கருத்து. நளிபடு சிலம்பிற் பாயம் பாடி (58) என வரும் குறிஞ்சிப் பாட்டினும் பாயம் விருப்பம் என்னும் பொருட்டாதல் அறிக, பாசம் பரஞ்சோதிக் கென்பாய், (திருவெம்பாவை) என்றார் மணிவாசகமுடையாரும்.
நெல்மா - நெல்லை இடித்தியற்றிய மா. இது பன்றியைக் கொழுக்கச் செய்தற்கு இடும் உணவென்க. நுறுங்குபெய் தாக்கிய கூழாரவுண்டு, பிறங்கிரு கோட்டோடு பன்றியும் வாழும் (அறநெறிச்-78) என்றார் பிறரும். தீற்றி-தின்னச் செய்து யானைக்குக் கவளந்தீற்றி என்புழியும் காண்க. குழிநிறுத் தோம்புதல், பாயம் போகாமைக்குப் போலும். ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற் கெல்லாம் ஏற்றைக் கிளவி உரித்தென மொழிப (தொல்.மரபு-49) ஆகலின் கொடுந்தாளேற்றை என்றார். தடி-தசை. கூர்நறா-களிப்பு மிக்க கள். கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் (உரி-16) என்பர் தொல்காப்பியனார். நீர்ப் பெயற்று எல்லை போகிப் பட்டின மருங்கின் அசையின் தடியொடு நறாப் பெறுகுவிர் என இத் தொடரை இயைத்துக் காண்க. இனி, 346-வானம் என்பது தொடங்கி, 371-நாடுபல கழிந்த பின்றை என்னுந்துணையும் ஒரு தொடர். இதன்கண் நீர்ப்பாயற்றுறைப் பட்டினத்தினின்றும் இளந்திரையன் மூதூர் செல்லுந்துணையும் இடைக்கண் உள்ள ஆற்றினது இயல்பும், வல்சிச்சிறப்பும் நாடுபடு வளமும், பிறவும் கூறப்படும்.
ஓடு கலங்கரையும் துறை
346-351 : வானமூன்றிய .................... போகி
பொருள் : வானம் ஊன்றிய மதலை போல ஏணிசாத்திய ஏற்று அரும் சென்னி விண்பொர நிவந்த வேயா மாடத்து - வானம் வீழாதபடி முட்டுக் காலாக ஊன்றிவைத்த ஒரு பற்றுக் கோல் போன்ற ஏணி சாத்தியதாகியும் ஏறுதற்கரிய தலையினை யுடைய விண்ணைத் தீண்டும்படி உயர்ந்த கற்றை முதலியவற்றால் வேயாது சாந்திட்ட மாடத்திடத்தே, இரவின் மாட்டிய இலங்கு சுடர் - இராக்காலத்தே கொளுத்தின விளங்குகின்ற விளக்கு, ஞெகிழி உரவு நீர் அழுவத்து ஓடு கலம் கரையும் துறை பிறக்கு ஒழியப் போகி - நெகிழ்ந்து பெருநீர்ப் பரப்பாகிய கடலிலே திசைதப்பி ஓடும் மரக்கலங்களை அழைக்கும் நீர்ப்பாயற்றுறை பின்னே கிடக்கப் போய்;
கருத்துரை : வானம் வீழாதபடி முட்டுக் காலாக ஊன்றி வைத்த ஒரு பற்றுக்கோல் போல விண்ணைத் தீண்டும்படி உயர்ந்ததும், ஏணி சாத்தியும் ஏறற்கரிய தலையினையுடையதும் கற்றை முதலியவற்றால் வேயாது சாந்திட்ட அரமியத்தையுடையதுமாகிய, மாடத்துச்சியிலே இரவின்கண் ஏற்றிய விளக்கு நெகிழ்ந்து திசைதப்பிப் பெருங்கடற் பரப்பிலே ஓடாநின்ற மரக்கலங்களை அழையாநின்ற நீர்ப்பாயற்றுறைமுகம் பின்னே கிடக்க அவணின்றும் போய் என்பதாம்.
அகலவுரை : வானம் ஊன்றிய மதலைபோல விண்பொர நிவந்த மாடம் என்றும், ஏணிசாத்திய மாடம் என்றும், ஏற்றரும் சென்னி மாடம் என்றும், வேயாமாடம் என்றும் தனித்தனி கூட்டுக. மதலை - ஊற்றுக்கோல்.
சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்கு (நாலடி-197)
என்புழியும்,
முதலிலார்க் கூதிய மில்லை மதலையாம்
சார்பிலார்க் கில்லை நிலை (குறள். 446)
என்புழியும், அஃதப் பொருட்டாதல் காண்க.
ஏற்றருஞ் சென்னி - ஏறுதற்கரிய தலை. கலங்கரை விளக்கம் இடும் கட்டிடம் ஏனைக் கட்டிடங்களினும் காட்டில், இறப்ப உயர்ந்திருத்தலை இன்றுங் காண்க. நிவந்த - உயர்ந்த. இரவின் மாட்டிய என்றது, கலங்கரைதற் பொருட்டே இரவின்கண் ஏற்றப்பட்ட என்ற வாறு. மாட்டிய - கொளுத்திய. ஏனைய விளக்குகளைவிடப் பெரிதும் ஒளியுடையதென்பார், இலங்குசுடர் என்றார். வேயாமாடம் - தட்டோடிட்டுச் சாந்து வாரப்பட்ட மாடம் என்ப; அரமியமுமாம். ஞெகிழி என்பதனை கடைக் கொள்ளியெனக் கொண்டு அதனை எரித்துக் கொளுத்தின இலங்கு சுடர் என்பாருமுளர் என்பர் நச்சினார்க்கினியர். நெகிழி, ஞெகிழி என நகரத்திற்கு ஞகரம் போலியாய் வந்த வினையெச்சமாகக் கொண்டு திசை தப்பி ஓடும் மரக்கலத்திற்கு இரங்கி நெகிழ்ந்து கரையும் விளக்கம் என்பதன்கண் நயம் தோன்றுதல் உணர்க. இது நாம் சேரும் துறையன்றென்று நெகிழ்ந்து வேறொரு துறைக்கண் ஓடும் மரக்கலம் என நெகிழ்தலை மரக்கலத்திற்கேற்றினர் நச்சினார்க்கினியர்.
சுடர் கலங்கரையும் துறை என்க. எனவே கலங்கரைவிளக்கத்தையுடைய துறை என்றாராயிற்று. பண்டு இத்தகைய கலங்கரை விளக்கங்கள் இருந்தன்மையை இலங்கு நீர் வரைப்பின் கலங்கரை விளக்கமும் (6: 141) எனவரும் சிலப்பதிகாரத்தானும் அறிக. உரவுநீர் அழுவம் - பெருநீர்ப்பரப்பாகிய கடல். பிறக்கு - பின்னர். பிறக்கொழியப்போகி என்றது, அப்பட்டினத்தினின்றும் சென்று என்றவாறு.
தண்டலை உழவர் தனிமனைச் சிறப்பு
351-355 : கறையடி .................. சேப்பின்
பொருள் : கறையடிக் குன்று உறழ் யானை மருங்குல் ஏய்க்கும் வண் தோட்டுத் தெங்கின் வாடுமடல் வேய்ந்த - உரல் போன்ற அடியினையுடைய மலையோடு மாறுபடுகின்ற யானையின் உடம்பை ஒக்கும் வளவிய தோட்டினையுடைய தெங்கினது வற்றிய மடலினை வேய்ந்த மஞ்சள் முன்றில் மணநாறு படப்பை - மஞ்சளையுடைய முற்றத்தினையும் மணங் கமழ்கின்ற பூந்தோட்டங்களையும் உடைய, தண்டலையுழவர் தனிமனை சேப்பின் - தோப்புக் குடிகளுடைய தனித்தனியாக அமைந்த மனைகளிலே தங்கின்;
கருத்துரை : யானையின் உடம்புபோன்ற சருச்சரையுடைய தெங்கின் வாடிய மடலாலே வேயப்பட்டனவும், மஞ்சளையுடைய முற்றத்தை யுடையனவும், மணங்கமழ்கின்ற பூந்தோட்டங்களை யுடையனவும், தோப்புக்கடோறும் தனித்தனி இருப்பனவும் ஆகிய தோப்புழவர் மனைகளிடத்தே சென்று தங்குவீராயின் என்பதாம்.
அகலவுரை : கறையடி - உரல்போன்ற அடி. குன்றுறழ் -மலையை ஒத்த. யானையின் உடல் சருச்சரையுடைமையால் தெங்கின் வாடு மடலுக்கு உவமை என்க. தென்னைக்கே உவமை என்பர் நச்சினார்க்கினியர். வாடுமடல் யானைத் தோலின் நிறத்தோடே சருச்சரையும் உடைத்தாதலைக் கண்டறிக. வாடுமடல் என்றது, தெங்கம் பழுப்பினை, அப்பழுப்பைக் கிடுகாக வலந்து வீடு வேய்தல் இன்றுங் கண்டது. குடிகள் மருதநிலத்து உழவரல்லர் என்பார் தண்டலையுழவர் என்றார். இவர்கள் மனை தெருவாக இல்லாமல் தோப்புக்கடோறும் தனித்தனியாக உளதாதலை இன்றுங் காணலாம். தெருமனையின்றித் தனிமனையில் வாழ்வார் என்றதற்குத், தனிமனைச் சேப்பின் என்றார். நச்சினார்க்கினியர் தனிமனை என்றதற்கு ஒப்பில்லாத மனை என்று பொருள் கூறியுள்ளார். இவர்கள் தென்னந் தோப்புக்களை உழுது பண்படுத்தும் தொழிலுடையர் ஆதல்பற்றி மருதநில மாக்களாகிய உழவரல்லர் எனத் தெரித்தோதுவார், தண்டலையுழவர் என்றார். இத்தண்டலையுழவரின் தனிமனைகளைக் கடற்கரையருகே உள்ள தெங்கந் தோட்டங்களில் இன்றுங் காணலாம்.
தண்டலை உழவர் விருந்தோம்பற் சிறப்பு
356-342 : தாழ்கோட்பலவின் ................ ஆர்குவிர்
பொருள் : தாழ் கோள் பலவின் சூழ்சுளைப் பெரும்பழம் - தாழ்ந்த குலைகளையுடைய பலாவினது சக்கை சூழாது சுளையே சூழ்ந்த பெரிய பழத்தையும்; வீழ் இல் தாழைக் குழவித் தீநீர் - விழுதில்லாத தாழையாகிய தெங்கினது இளைதாய இனிய நீரையும், கவைமுலைக் குறும்பிடிக் கவுள் மருப்பு ஏய்க்கும் - கவைத்த முலையையுடைய குறிய பிடியினுடைய கவுளிடத்துக் கொம்புகளை ஒக்கும், குலைமுதிர் வாழைக் கூனி வெண்பழம் - குலையிடத்தே இருந்து முதிர்ந்த வளைந்த வெள்ளிய பழத்தையும், திரள் அரைப் பெண்ணை நுங்கொடு பிறவும் தீம்பல் தாரம்-திரண்ட அடியினையுடைய பனையினது நுங்கோடே வேறும் இனிய பல பண்டங்களையும், முனையின் - வெறுப்பின், முளைப்புற முதிர்கிழங்கு ஆர்குவிர் - முளையைப் புறத்தேயுடைய வள்ளி முதலிய கிழங்குகளைத் தின்பீர்;
கருத்துரை : தாழ்ந்த குலைகளையுடைய பலாவினது சக்கையின்றிச் சுளையே சூழ்ந்த பெரிய பழத்தையும், தெங்கிளநீரையும், பிடியின் கொம்மையொத்த குலையிலே இருந்து முதிர்ந்த வளைந்த வெள்ளிய வாழைப்பழத்தையும், பனையின் நுங்கையும் பிறவும் இனிய பண்டங்கள் பலவற்றையுந் தின்றுதின்று வெறுப்பீராயின் முளையைப் புறத்தே யுடைய முதிர்ந்த கிழங்குகளைத் தின்பீர்கள் என்பதாம்.
அகலவுரை : எனவே, பலாவும், தெங்கும், வாழையும், பனையும் இன்னோரன்ன பிறவும் முதிர்முளைக் கிழங்கும் அவர் தம் தண்டலைக் கண்ணுள்ளன என்பதும், விருந்தினரைக் கண்டபோது அவையிற்றைப் பெரிதும் வழங்குவர் அத்தண்டலையுழவர் என்பதும் கூறியவாறாதலறிக.
பலாமரம் அடிப்பகுதியினும் வேரினும் குலைவிடுதலால் தாழ் கோட்பலா என்றார். தாழ்கோள்குலை -தாழ்ந்த குலையுடைத்தாகலான் நீயிரே பறித்துண்ணலாம் என்றவாறுமாம். சூழ் சுளை என்பதனைச் சுளை சூழ் என மாறுக. உண்போர் விரும்பிச் சூழும் சுளை என்பர் நச்சினார்க்கினியர்.
விழுதுடைத் தாழையின் விலக்குதற்கு வீழில் தாழை என்றார். இவரே, மணன் முன்றில் வீழ்த்தாழை எனப் பட்டினப்பாலையில் வீழுடைத் தாழையை ஓதுதல் காண்க. வீழ்த்தாட் டாழை (நற்-78-4) என்றும், வீழ்தாழ் தாழை ஊழுறு கொழுமுகை (குறுந்-228:1) என்றும், பிறரும் ஓதுப.
பிள்ளை குழவி கன்றே போத்தெனக்
கொள்ளவும் அமையு மோரறி வுயிர்க்கே (தொல்-மர-24)
என்பதோத்தாகலான், தெங்கிளங்காயைக் குழவி என்றார். காயாக வெட்டிப் புதைத்துக் கனிவித்தலும் உண்டாகலான் இவை குலையிடத்தேயிருந்து முதிர்ந்தன வென்பார் குலைமுதிர் வெண்பழம் என்றார். கூனி -வளைவுடையது. வெண்பழம் என்றார், அவை நுமக்கு உரித்து வழங்கப்படும் என்பதுபட. உரித்த வெண்பழத்திற்கே பிடிமருப்பு உவமை என்க. முளையுடையதாய முதிர்ந்த கிழங்கு உண்ணற்கு இனிதாகலின் முளைப்புற முதிர்கிழங்கு என்றார். ஆர்குவிர் என்பது, வயிறு புடைக்கத் தின்பீர் என்னும் பொருள்பட நின்றது. சேப்பின் பழத்தையும் நீரையும் பழத்தையும் நுங்கோடே பல பண்டங்களையும் முனையிற் கிழங்கு ஆர்குவிர் என்க.
ஆற்றினது இயல்பு
362-371 : பகற்பெயல் ..................... பின்றை
பொருள் : பகற் பெயல் மழை வீழ்ந்தென்ன மாத்தாள் கமுகின் - பகற்பொழுதிலே பெய்தலையுடைய மழை கால் விழுந்தாலொத்த பெரிய தண்டினையுடைய கமுகுகளின், புடைசூழ தெங்கின் முப்புடைத் திரள்காய் - பக்கத்தே சூழ்ந்த தெங்கினுடைய மூன்று புடைப்பினையுடைய திரண்ட காய், ஆறு செல் வம்பலர் காய்பசி தீர-வழிச்செல்கின்ற புதியோருடைய மிக்க பசி தீரும்படியும், சோறு அடுகுழிசி இளக - அவர் சோற்றை ஆக்குகின்ற பானை அசையும்படியும், விழூஉம் வீயா யாணர் வளங்கெழு பாக்கத்து - வீழாநின்ற கெடாத புதுவருவாயினை யுடைய செல்வம் பொருந்தின பாக்கத்திடத்தே, பல் மரம் நீள் இடைப் போகி - பல மரங்கள் வளர்ந்த இடத்திலே போய், நன்னகர் விண்தோய் மாடத்து விளங்கு சுவர் உடுத்த -நல்ல நகரங்கள்தோறும் விண்ணைத் தீண்டும் மாடங்கட்கு விளங்கா நின்ற மதில்சூழப்பட்ட, வாடா வள்ளி வளம்பல தரூஉம் -வள்ளிக்கூத்தினை ஆடுதற்குக் காரணமான வளங்கள் பலவற்றையும் நாடாதே தருகின்ற, நாடு பல கழிந்த பின்றை - நல்ல நாடுகள் பலவற்றையும் போனபின்பு;
கருத்துரை : பகற்காலத்தே பெய்தலையுடைய மழை கால் விழுந்தாலொத்த பரிய தண்டினையுடைய கமுகுகளின் பக்கத்தே சூழ்ந்த தெங்கினது மூன்று புடைப்பினையுடைய திரண்டகாய், வழிச்செல்வாருடைய மிக்க பசி தீரும்படியும், அவர்கள் சோறடும் பானை அசையும்படியும், வீழாநின்ற இடையறாத புது வருவாயினையுடைய செல்வம் பொருந்தின பாக்கத்திடத்தே, பல மரங்களும் வளர்ந்த இடத்திலே சென்று, நல்ல நகரங்களிடத்து விண்ணுயர் மாடங்களை விளக்கும் மதில்கள் சூழப்பட்டனவும் வள்ளிக் கூத்தாடுதற்குக் காரணமான பல்வேறு செல்வங்களைத் தருவனவுமாகிய இடைக்கிடந்த நாடுகள் பலவற்றையும் போன பின்பு என்பதாம்.
அகலவுரை : மழை கால் வீழ்ந்திருத்தல் கமுகந்தண்டிற்கு உவமை. சேய்மையில் மழை வரிவரியாகக் கால் வீழ்த்திருத்தல் கமுகந் தோட்டத்தைப்போன்று காணப்படுதலை நோக்கியறிக. மழைக்கால் பகற்பொழுதிலே தோன்றுமல்லது இராப்பொழுதிற் றோன்றாமையால் பகற்பெயல் மழை என்றார். மாத்தாள் - பருத்த தண்டு. புடை-பக்கம். கமுகந் தோட்டத்தைச் சூழத் தெங்கந் தோட்டம் உளவாம் என்றவாறு.
தேங்காய் முதிர்ந்தால் அடிப்பகுதி மூன்றாகப் புடைத்தல் இயல்பாகலின் முப்புடைத் திரள்காய் என்றார். திரள்காய் என்றது, நிலவளந் தெரிக்கும் குறிப்பேதுவாய் நின்றது. ஆறுசெல் வம்பலர் - வழிப்போக்கர். வழிப்போக்கர் காய்பசி வந்துற்றபொழுது அக்கமுகந் தோட்டத்தே சோறடுவார் என்பதும், அவர் சோறட்டுப் பசிதீர்தற்கு முன்பே தெங்குகள் தம் முதிர்காயை வீழ்த்து அவர் பசியைப் போக்கும் என்பதும், அக்காய் வீழ்கின்ற அதிர்ச்சியாலே சோறடும்பானை அசையும் என்பதும் கூறியவாறு. எனவே ஆண்டுள்ள ஓரறிவுயிரும் தம்பால் வந்த விருந்தினரை ஓம்பும் மாண்புடையன என்பதாம்.
நச்சினார்க்கினியர், பசிதீர என்பதனைச் சோறடுதற்கு ஏதுவாக்கியும் குழிசி இளக என்றதற்குப் பானைவீழும்படி என்றும் கூறினர். வீயாத - இடையறாத; கெடாத. யாணர் - புதுவருவாய். பாக்கம் - ஊர்கள். இது, நீர்ப்பாயற்றுறையினின்றும் கச்சிக்குச் செல்லும் வழியியல்பு கூறி, அவ்வழியே போமின் எனக் குறித்தவாறாதல் காண்க. பன்மர நீளிடைப் போகி என்றது, அவ்வழிதானும் தருக்கள் நீண்டு நிழல் தரும் வழி என ஆற்றினிமை கூறியவாறாம். இப்பாக்கங்களின் இடையே நகரங்கள் பலவும் இருத்தலால், அவற்றின் ஊடேயும் போய் என்பார், நன்னகர், நாடுபலவும் என்றார். நல்ல நகரங்களின் அகத்தேயுள்ள மாடங்கள் தனித்தனி மதிலாற் சூழப்பட்டுள்ளன என்பார், விண்டோய் மாடத்து விளங்குசுவர் உடுத்த நாடு என்றார். வாடா வள்ளிவளம் என்றது, வள்ளிக் கூத்தாடி மகிழ்தற்குக் காரணமான வளம் என்றவாறு. வாடாவள்ளி - வள்ளிக் கூத்திற்கு வெளிப்படை. வாடா வள்ளி வயவர் ஏத்திய (புற-5) என ஆசிரியர் தொல்காப்பியனார் சூத்திரஞ் செய்தவாறே இவரும் வாடாவள்ளி என அச்சொற்றொடரை எடுத்தாளுலறிக. வாடும் கொடியல்லாத வள்ளி என்றவாறு. வளமிக்க நாட்டின்கண் மக்கள் பசியும் பிணியும் அறியாது மகிழ்ந்து ஆடுதல் இயல்பாகலின், மக்கள் கூத்தாடி மகிழ்தற்கேற்ற வளநாடு என்பார், வாடாவள்ளி வளம்பல தரூஉம் நாடு என்றார்.
தேடிவருந்தச் செல்வம் அடைவிக்கும் நாடுகள் நாடாகாமையின் இந் நாடுகள் தேடிவருந்தாவண்ணம் தங்கண் வாழ்வார்க்குச் செல்வம் சுரந்தளிக்கும் நன்னாடுகள் என்பார், வளந்தரூஉம் நாடு எனத் தருதற்றொழிலை நாட்டின் மேற்றாக்கிக் கூறினார். என்னை?
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு (குறள்.739)
என்பவாகலான். இனி, 349 முதல் 371 வரை, இத்தொடரை, சுடர் ஓடு கலம் கரையும் துறை பிறக்கொழியப் போகி, தண்டலை உழவர் தனிமனைச் சேப்பின், பழம் முதலியவற்றை முனையின், கிழங்கு ஆர்குவிர்; அவணின்றும் பன்மரம் நீளிடைப் போகி நாடு பல கழிந்த பின்றை என இயைத்துக் கொள்க இதன்கண் நீர்ப்பாயற்றுறையினின்றும் கச்சிக் கேகும் ஆற்றியல்பு கூறியவாறறிக. இனி 371-நீடுகுலை என்பது தொடங்கி, 192 - கழிமின் என்னுந் துணையும் ஒரு தொடர்; இதன்கண் திருவெஃகாவணை என்னும் திருமால் திருப்பதியின் சிறப்பு வியந்தோ தப்படும்.
திருவெஃகாவின் சிறப்பு
371-376 : நீடுகுலை .................. நீர்முகத்துறைப்ப
பொருள் : நீடு குலைக் காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்தாங்கு - நீண்ட பூங்கொத்துக்களையுடைய காந்தளையுடைய அழகிய பக்கமலையிலே யானை கிடந்தாற்போல, பாம்பு அணைப்பள்ளி அமர்ந்தோன் ஆங்கண் - பாம்பணையாகிய படுக்கையிலே துயில் கொண்டோனுடைய திருவெஃகாவிடத்து, வெயில் நுழைபு அறியாக் குயில் நுழை பொதும்பர் - ஞாயிற்றின் கதிர் தோன்றிய காலத்தும் படுகின்ற காலத்துமுட்படச் சிறிதும் செல்லுதல் அறியாத இலை நெருக்கத்தாலே குயில்கள் நுழைந்து செல்லும் இளமரக்காவில், குறுங்கால் காஞ்சி சுற்றிய நெடுங்கொடிப் பாசிலைக் குருகின் புன்புற வரிப்பூ - குறிய காலினையுடைய காஞ்சி மரத்தைச் சூழ்ந்த நெடிய கொடியினையும் பசிய இலையினையும் உடைய குருக்கத்தியினுடைய புற்கென்ற புறத்தினையும் வரிகளையும் உடைய பூக்கள், கார் அகல் கூவியர் பாகொடு பிடித்த இழை சூழ் வட்டம் பால் கலந்தவை போல் - கரிதாகிய சட்டியிலே அப்பவாணிகர் பாகுடனே வேண்டுவன கூட்டிச் சேர்க்கப்பட்ட நூல்போலச் சூழ்ந்துகிடக்கின்ற அபபம் பாலிலே கிடந்தவைபோல், நிழல் தாழ் வார்மணல் நீர் முகத்து உறைப்ப - நிழல் கிடந்த வார்ந்த மணலிடத்துக் குழிகளினின்ற நீரிடத்தே மிக விழும்படி;
கருத்துரை : நீண்ட பூங்கொத்துக்களையுடைய காந்தள் அடர்ந்த அழகிய மலையிடத்தே யானை கிடந்தாற் போன்று பாம்பணையிலே துயில்கொண்டோனுடைய திருவெஃகாவின்கண், ஞாயிற்றின் கதிர்கள் ஊடே சென்றறியாதனவும், குயில்கள் இலைநெருக்கத்தாலே நுழைந்து செல்லுவனவும் ஆகிய இளமரக்காவிடத்தே, குறிய காலையுடைய காஞ்சிமரத்தினைச் சூழ்ந்து படர்ந்த நெடிய கொடியினையும், பசிய இலையினையும் உடைய குருக்கத்தியின் பூக்கள். அப்பவாணிகர் பாகோடே பிறவும் கலந்து பிடித்த அப்பம் காரகலிற் பாலிற் கிடந்தாற் போன்று நிழலையுடைய வார்ந்த மணலிடத்துக் குழிகளில் நீரின்கண் உதிர்ந்து கிடவாநிற்ப என்பதாம்.
அகலவுரை : ஆயிரம் தலைகளையுடைய அரவப்பாயற்கு நீண்ட பூங்கொத்துக்களையுடைய காந்தளடர்ந்த பக்கமலை உவமை. அரவம் தன் தலைகளைப் படம் விரித்து உயர்த்து நீழல் செய்தலின் நீண்ட காந்தட் பூங் கொத்துக்களை உவமை ஓதினர். திருமாலுக்குக் களிறு உவமை; இது பெருமிதம்பற்றிப் பிறந்த வுவமை என்க. கண்டுயின்றில நெடிய கடல்துயின்றன களிறு என்றார் கம்பநாடரும்.
உறியார்ந்த நறுவெண்ணெய் ஒளியாற் சென்றங்
குண்டானைக் கண்டாய்ச்சி உரலோ டார்க்கத்
தறியார்ந்த கருங்களிறே போல நின்று
தடங்கண்கள் பனிமல்கும் தன்மை யானை (பெரிய திருமொழி - 2-10-6)
என்று இறைவனைத் திருமங்கையாழ்வாரும் கருங்களிறு என்றல் காண்க. என் ஆனை என் அப்பன் எம் பெருமான் என்பர் நம்மாழ்வாரும். இனிக் காந்தட்பூங் குலையினைப் பாம்பின்றலைக்கு ஒப்புக் கூறலை அணர்த்தெழு பாம்பின் றலைபோற் புணர்கோடல், பூங்குலை யீன்ற புறவு (கார்நாற்-11) என்றும், கடிசுனைக் கவினிய காந்தளங் குலையினை அருமணியவி ருத்தி அரவுநீ ருணல்செத்து (குறிஞ்சிக் கலி-9) என்றும், வருவனவற்றிற் காண்க. பள்ளியமர்தல் - அறிதுயில் கோடல். இனிப் பாம்பணையிற் பள்ளிகொள்ளலை விரும்பினோன் எனினுமாம். அமர்தல்-விரும்புதல். ஆங்கண் ஊர் திருவெஃகாவாகிய ஊர் என்க. திருவெஃகா என்பது காஞ்சியிலுள்ள திருமால் திருப்பதி. திருமாலின் நூற்றெட்டுத் திருப்பதிகளுள் இதுவும் ஒன்றாம். இத்திருப்பதியில் திருமால் அரவணையிற் பள்ளிகொண்ட திருக்கோலத்தோடு எழுந்தருளியுள்ளார்.
பாந்தட் பாழியிற் பள்ளி விரும்பிய
வேந்த னைச்சென்று காண்டும்வெஃ காவுளே (10-1:7.)
என்பது பெரிய திருமொழி.
ஆடவர்கள் எவ்வா றகன்றொழிவார் வெஃகாவும்
பாடகமு மூரகமும் பஞ்சரமா - நீடியமால்
நின்றான் இருந்தான் கிடந்தான் இதுவன்றோ
மன்றார் மதிட்கச்சி மாண்பு (யாப்-விருத்-மேற். 393)
என்பது ஒரு பழம்பாட்டு. வெயினுழைபறியா என்றது சோலைவளங் கூறியவாறு. இலைகள் அடர்ந்திருத்தலான் குயில்கள் நுழைந்து செல்லும் பொதும்பர் என்றார். பொதும்பர் - சோலை வெயிலொளியறியாத விரிமலர்த் தண்காவில் குயிலாலும் (கலி-10: 7-8) என்றும், வெயில்கண்போழாப் பயில்பூம் பொதும்பு, (பெருங்-1. 33:27) என்றும், பிறரும் ஓதுதல் காண்க. குருகு - குருக்கத்தி; மாதவி. மணற்பரப்பில் உள்ள குழிக்கண் நீரில் உதிர்ந்து கிடக்கும் குருக்கத்தி மலர்க்குப் பாலிற் போகட்ட அப்பம் உவமை. கூவியர் - அப்ப வாணிகர். காரகல் - கரிய சட்டி. வட்டம்: அப்பத்திற்கு ஆகுபெயர். உறைத்தல் - சிதறுதல்; உறைத்துக்கிடந்த என்க.
இதுவுமது
380-387 : புனல் ........................ விளையாடி
பொருள் : புனல் கால் கழீஇய பொழில் தொறும் - நீர் பெருகிய காலத்தே ஏறிய இடத்தைத் தூய்தாக்கிப்போன பொழில்கடோறும், திரள்கால் சோலைக் கமுகின் சூல் வயிற்றன்ன - திரண்ட தண்டினையுடைய சோலையிடத்து நிற்கும் கமுகினுடைய சூறகொண்ட வயிற்றை ஒத்த, நீலப் பைங்குடம் தொலைச்சி - பச்சைக்குப்பிகளை உண்டு போக்கி, நாளும் பெருமகிழ் இருக்கை மரீஇ - நாடோறும் பெரிய மகிழ்ச்சியையுடைய இருப்பை மருவி, சிறு கோட்டுக் குழவித் திங்கள் கோள் நேர்ந்தாங்கு - சிறிய கோட்டையுடைய இளைதாகிய பிறையைச் செம்பாம்பு தீண்டினாற் போல, சுறவுவாய் அமைத்த சுரும்பு சூழ்சுடர் நுதல்-மகர வாயாகிய தலைக்கோலத்தைச் சேர்த்தின சுரும்புகள் சூழும் ஒளியையுடைய நுதலினையும், நறவு பெயர்த்து அமைத்த நல் எழில் மழைக்கண் - தேனை உருப்பெயர்த்துக் கண் வடிவில் அமைத்தாலொத்த நன்றாகிய அழகினையுடைய குளிர்ச்சியை யுடைத்தாகிய கண்ணையும் உடைய, மடவரல் மகளிரொடு பகல் விளையாடி - மடப்பம் தோற்றுதலையுடைய மகளிரோடே பகற்பொழுது விளையாடி;
கருத்துரை : பண்டு நீர் பெருகிய காலத்தே ஏறிய இடத்தைத் தூய்தாக்கிப்போன பொழில்கடோறும், சோலையிடத்தே நிற்கும் திரண்ட தண்டினையுடைய கமுகின் சூற்கொண்ட வயிற்றை ஒத்த பச்சைக்குப்பிகளை உண்டு போக்கி, நாள்தொறும் பெரிய மகிழ்ச்சியைத் தரும் இருக்கைகளிலே மருவி, சிறிய கோட்டையுடைய இளைதாகிய பிறையைச் செம்பாம்பு தீண்டினாற் போல, மகரவாயாகிய தலைக் கோலத்தைச் சேர்த்தின கரும்புகள் சூழும் ஒளியுடைய நுதலினையும், தேனை உருப்பெயர்த்துக் கண்வடிவில் அமைத்தாலொத்த நன்றாகிய அழகும் குளிர்ச்சியும் உடைய கண்ணையுமுடைய மடப்பம் தோற்றுதலை யுடைய மகளிரோடே பகற்பொழுது விளையாடி என்பதாம்.
அகலவுரை : பொழிலின் தூய்மை கூறுவார், புனல் கால் கழீஇய பொழில் என்றார். புனல்-பண்டு மழைபெய்து பெருகிய நீர் என்க. கால் கழுவிய என்பதற்கு, மரங்களின் கால் வரையிற் பெருகித் தூய்மை செய்த எனினுமாம். புனல் கால் ஈழீஇய மணல்வார் புறவு (48) என்றார் மலைபடுகடாத்தினும் திரள்காற் கமுகு. சோலைக்கமுகு எனத் தனித்தனி இயைத்துக் கொள்க. கமுகின் சூழ்வயிறு என்றது, கமுகின் கண் சூல்முதிர்ந்த மடலையுடைய இடத்தை. இது கள்பெய்த பச்சைக் குப்பிக்கு உவமை. நீலப் பைங்குடம் நீலநிறம் அமைந்த பையாகிய குடம்; கள்ளின் இரும்பைக் கலம் (2-3) என, மதுரைக் காஞ்சியினும் வருதல் அறிக. இதனால் அக்காலத்திற் கள்ளினைத் தோற்பையிலிட்டு வைத்தல் தெளியப்படும். பை-தோற்பை. இதனைப் பச்சைக் குப்பி என்ப. தொலைச்சி என்றது, முழுதும் உண்டு தீர்த்து என்றவாறு. நாள்தோறும் பெருமகிழ் கொள்ளுதற்குக் காரணமான இருக்கை என்க. இதனை நாண்மகி ழிருக்கை என்று வழங்குப. வீயாது சுரக்கும் அவன் நாண்மகி ழிருக்கையும் (76) என, மலைபடு கடாத்தினும், நாட்கள் உண்டு நாண்மகிழ் மகிழும் (123) எனப் புறத்தினும் வருதல் காண்க.
சிறு கோட்டுக் குழவித்திங்கள் என்றது இளம்பிறையை. கோள்-கேது அல்லது இராகு. பிறையைப் பாம்பு தீண்டுதலின்மையால் இதனை இல்பொருள் உவமை என்றார் நச்சினார்க்கினியர். பிறை நெற்றிக்கும், மகரவாய் பாம்பிற்கும் உவமை என்க. சுரும்பு - வண்டு. நறவு-நறவம் பூவெனக் கொண்டு, நறவம்பூவினை உருப்பெயர்த்துக் கண் வடிவிலமைத்தாற் போன்ற நல்லெழில் மழைக்கண் எனினுமாம். என்னை? நறவின் சேயித ழனையவாகிக் குவளை மாயிதழ் புரையும் மலிர்கொளீரிமை (அகம்-19:9-11) என்றும், நயவரு நறவிதழ் மதருண்கண் (பரி-8: 75) என்றும் ஓதுப வாகலான், மடவரல் - மடப்பம்.
பொய்யா மரபிற் பூமலி பெருந்துறை
388-392 : பெறற்கரும் ...................... கழிமின்
பொருள் : பெறற்கு அரும் தொல் சீர்த் துறக்கம் ஏய்க்கும் - பெறுதற்கரிய பழமையுடைத்தாகிய புகழினையுடைய துறக்கத்தை ஒக்கும், பொய்யா மரபிற் பூமலி பெருந்துறை - தப்பாமல் நீர்வரும் முறைமையினையுடைய பூக்கள் மிகுகின்ற பெரிய துறையிடத்தே, செவ்வி கொள்பவரோடு அசைஇ - இளவேனிற் செவ்வியை நுகர்வாரோடு இளைப்பாறி, அவ்வயின் அருந்திறல் கடவுள் வாழ்த்தி - அத்திருவெஃகாவணையில் அரிய திறலினையுடைய திருமாலினை வாழ்த்தி, சிறிது நும் கருங்கோட்டு இன்னியம் இயக்கினிர் கழிமின் - சிறிதே நும்முடைய கரிய தண்டினையுடைய இனிய யாழை இயக்கி அவ்விடத்து நின்றும் போமின்;
கருத்துரை : பெறுதற்கரிய பழைய புகழையுடைய துறக்கத்தை ஒக்கும், தப்பாமல் நீர் பெருகுதலையுடைய பூக்கள் மிக்க பெரிய துறையிடத்தே இளவேனிலின்பத்தை நுகர்வாரோடே தங்கி இளைப்பாறிப் பின்னர் அத்திருவெஃகாவணையிற் பள்ளிகொண்டுள்ள அரிய திறலினையுடைய திருமாலை வாழ்த்திச் சிறிது நும் கருங்கோட்டியாழை இயக்கி அவ்விடத்து நின்றும் போமின் என்பதாம்.
அகலவுரை : மகளிரொடு பகல் விளையாடிப் பெருந்துறைக்கண் செவ்விகொள்பவரோடு அசைஇ என, இயைத்துக் கொள்க. நறவுபருகி எழில் மழைக்கண் மகளிரொடு விளையாடி இன்புறுதற் கிடமாதலின், அமிழ்துண்டு அரம்பையோ டின்புறும் துறக்கத்தை உவமை எடுத்தோதினர். நல்லறம் மிகச் செய்தாரன்றி, ஏனையோர் எய்தற் கரிதாதல் பற்றி, பெறற்கருந் துறக்கம் என்றார். வேதமுதலிய பழம் பனுவலாலும் புகழ்ந்தோதப்படுதல் பற்றித், தொல் சீர்த்துறக்கம் என்றார். ஏய்க்கும் : உவமவுருபு. துறக்கம் - நல்லறம் செய்தோர் எய்தும் உயர்நிலையுலகம். எனவே, திருவெஃகாவணையை எய்துதற்கே நல்வினை வேண்டும் என்றாராயிற்று.
பெறற்கருந் தொல்சீர்த் துறக்கம் ஏய்க்கும்
பொய்யா மரபிற் பூமலி பெருந்துறை (பட்டினப்-105-6)
என்னும் இவ்விரண்டு அடிகளும் இவரது பட்டினப்பாலையினும் வருதல் காண்க. அவ்வயின் - அத்திருவெஃகாவணையில் என்க. அறிதுயிலின்கட் கிடந்தே ஆக்கல், அளித்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் நிகழ்த்தலானும், இரணியன் முதலியோரை அழித்தலானும், கடலினின்றும் உலகினைக் கோட்டானுயர்த்துக் காத்தலானும் அருந்திறற் கடவுள் என்றார். அருந்திறற் கடவுளாகலின் இம்மை மறுமை இன்பங்களை நுமக்கும் அளிக்கும் ஆதலின், வாழ்த்துக் கூறுமின் என ஏதுக்காட்டினானுமாம். அவ்விறைவனைச் சிறிது வாழ்த்தினும் அருளும் என்பான், சிறிதே இயக்குமின் என்றான். கற்றதனால் ஆயபயன் வாலறிவன் நற்றாள் தொழ லேயாகலின் நீயிர் கற்ற யாழ்க்கலையானும், அவ்விறைவனை வாழ்த்துமின் என்பான் கருங்கோட்டு இன்னியம் இயக்கினிர் கழிமின் என்றான். இங்ஙனமே மலைபடுகடாத்தினும்,
பராவரு மரபிற் கடவுட் காணின்
தொழாநிர் (மலைபடு : 230-1)
கழிமின் என அறிவுறுத்தல் காண்க. கருங்கோட்டின்னியம் - யாழ் இயக்கினிர், இயக்க : முற்றெச்சம். இனி 393 - முதல், 410-வரை, தொண்டைமான் இளந்திரையனின் விழவு மேம்பட்ட பழவிறன் மூதூராகிய காஞ்சிநகரச் சிறப்பு ஓதப்படும்.
கோபுரவாயிற் சிறப்பு
393-401 : காழோர் ....................... படப்பை
பொருள் : காழோர் இகழ்பதம் நோக்கி - பரிக்கோலையுடையோர் நெகிழ்ந்த செவ்வியைப் பார்த்து கீழ் நெடுங்கை யானை நெய்ம்மிதி கவளம் கடுஞ்சூல் மந்தி கவரும் காவின் - கீழிடத்தே வைக்கப்பட்ட நெடிய கைகளையுடைய யானைக்கிடும் பொருட்டு நெய் வார்த்து மிதித்த கவளங்களைத் தலைச்சூலையுடைய மந்தி எடுத்துக் கொண்டுபோய்த் தின்னாநின்ற சோலையினையும், களிறு கதன் அடக்கிய வெளிறு இல் கந்தின் - களிற்று யானைகளின் சினத்தை அவித்த வெளிற்றுத்தன்மையற்ற தறிகளையும், திண்தேர் குழித்த குண்டு நெடுந் தெருவின் - திண்ணிய தேர்கள் பலகால் ஓடிக்குழித்த தாழ்ச்சியையுடைய நெடிய தெருவினையும், படை தொலைபு அறியா மைந்து மலி பெரும்புகழ்க் கடைகால் யாத்த பல்குடி கெழீஇ - படையின் கண்ணே கெடுதலை அறியாத வலிமிகுகின்ற பெரிய புகழின் எல்லையை மறைத்த பலவாகிய மறக்குடிகள் பொருந்தப்பட்டு, கொடையும் கோளும் வழங்குநர்த் தடுத்த - கொடுத்தலும் கொள்ளலுமாகிய வணிகத் தொழில் ஆண்டு இயங்குவாரை இயங்காமல் தடுத்தற்குக் காரணமான, அடையா வாயில் - பரிசிலர்க்கு அடைத்தலில்லாத வாயிலினையும், மிளைசூழ் படப்பை - காவற்காடு சூழ்ந்த பக்கத்தினையும் உடைய;
கருத்துரை : பரிக்கோற்காரர் நெகிழ்ந்திருக்கும் செவ்வி பார்த்துக் கீழே வைக்கப்பட்டனவாகிய பெரிய யானைக்குரிய நெய்வார்த்து மிதித்த கவளத்தை முதற் சூலையுடைய மந்தி எடுத்துப் போய்த் தின்னா நின்ற சோலையினையும், அக்களிற்று யானைகளைச் சின மவித் தடக்கற்குரிய வெளிறற்றுக் காழ்முற்றிய தறிகளையும், திண்ணிய தேர்கள் பலகாலும் ஓடுதலானே குழிந்த நெடிய தெருக்களையும், போர்ப்படை முகத்தே தொலைதலறியாத வலிமை மிக்கவரும் புகழின் எல்லையைக் கடந்தவருமாகிய மறவர்களின் பலவேறு குடியிருப்பினைப் பொருந்திக், கொள்வோரும் கொடுப்போரும் நிறைந்து இயங்குவாரைத் தடை செய்யும் அங்காடியினையும் உடைத்தாய்ப் பரிசிலர்க்கு எப்பொழுதும் அடைத்தலில்லாத வாயிலையும், காவற்காடு சூழ்ந்த பக்கத்தினையும் உடைய என்பதாம்.
அகலவுரை : உடைய (411) பழவிறன் மூதூர் என முடியும். காழோர் இகழ்பதம் நோக்கிக் கீழ நெடுங்கை யானை நெய்ம்மிதி கவளம் கடுஞ்சூன் மந்தி கவரும் கா, என்னுந் துணையும் திரைய வள்ளலின் நெடுநகர் வரைப்பின்கட் பூம்பொழில் வளங் கூறியபடியாம். காழ்-கழி; ஈண்டுப் பரிக்கோல் என்க. பரிக்கோலுடைமையின் பாகர் காழோர் எனப்பட்டனர். காழோர் கையற மேலோ ரின்றி (4:35) என மணிமேகலையினும் காழோர் சிறையருங் களிற்றின் (74:3-4) என நற்றிணையிலும் வருதல் காண்க. இகழ்பதம்-விழிப்பற்ற செவ்வி; சோர்வுற்ற நிலை. மந்தி பிறர் சோர்வுற்ற நிலையறிந்து அவர் பொருளைக் கவரும் வழக்கமுடைய இதனை,
................... மகளிர்
இருங்கல் வியலறைச் செந்தினை பரப்பிச்
சுனைபாய் சோர்விடை நோக்கிச் சினையிழிந்து
பைங்கண் மந்தி பார்ப்பொடு கவரும்
எனவரும் குறுந்தொகையானும் அறிக.
கீழ-கீழே வைத்துள்ளனவாகிய; கீழகவளம் என்க. கீழ் என்பதனை நெடுங்கைக்கேற்றிக் கீழே தாழ்ந்த நெடிய கை என்பாரும் உளர். நெய்ம்மிதி கவளம்-நெய்வார்த்து மிதிக்கப்பட்ட கவளம். இதனால் செல்வ மிகுதி கூறியவாறு காண்க. யானைக் கிடும் கவளத்திற்கு நெய்வார்த்து மிதித்தல் உண்மையை, நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ (புறம்-44) என்றும், அரும்பெறற் குரிசிற் கஞ்ஞான்று ஓடிய நாகம் நாணிக் கரும்பெறி கடிகையோடு நெய்ம்மலி கவளம் கொள்ள (சீவக-1076) என்றும் பிற சான்றோர் ஓதுமாற்றானும் உணர்க.
மதமிக்க யானைகளை யாத்து அவற்றின் சினத்தை அடக்க வேண்டுதலின் வெளிறின்றி வயிர மேறிய கந்து வேண்டிற்று. வெளிறு - மரத்தின் முதிரா இளந்தன்மை. குண்டு-குழி; பள்ளம். படை தொலைவு அறியா என்றது, பகைப்படையின் முன் ஊறஞ்சிக் கெட்டோடுதலறியாத என்றவாறு. மைந்து - வலிமை. பெரும்புகழின் இறுதியை மறைத்த என்க. இது மறவர் குடிச் சிறப்போதிற்று. யானை முதலிய நாற்படை மறவரும் வதிதலின் பல்குடி என்றார். கொடை-கொடுத்தற் றொழில்; கோள்-கோடற் றொழில். எனவே, இவை நிகழுமிடம் அங்காடி என்பதாயிற்று. அங்காடியின்கண் இயங்குவோரை மக்கட்குழு தடுக்கும் என்க. இனி, வழிச் செல்வோரையும் தன் புதுமையில் தடுக்கும் அங்காடி எனினுமாம். அடையா வாயில் என்றது,
பொருநர்க் காயினும் புலவர்க் காயினும்
அருமறை நாவின் அந்தணர்க் காயினும் (சிறுபா 203-4)
அடையா வாயில் என்றபடியாம். மிளை - காவற்காடு. படப்பை - பக்கம்.
காஞ்சிமாநகர மாண்பு
402-411 : நீனிறவுருவின் ................ பழவிறல் மூதூர்
பொருள் : நீல்நிற உருவின் நெடியோன் கொப்பூழ் - நீல நிறத்தை உடைத்தாகிய வடிவினையுடைய திருமாலுடைய திருவுந்தியாகிய, நான்முக ஒருவற் பயந்த பல் இதழ்த் தாமரைப் பொகுட்டின் காண்வரத் தோன்றி - நான்கு முகத்தையுடைய ஒருவனைப் பெற்ற பல இதழ்களையுடைய தாமரையினது கொட்டைபோலே அழகு விளங்கத் தோன்றி, சுடுமண ஓங்கிய நெடுநகர் வரைப்பின் - செங்கலாற் செய்யப்பட்டு உயர்ந்த புறப்படை வீட்டைச் சூழ்ந்த மதிலினையும், இழுமென் புள்ளின் ஈண்டு கிளைத்தொழுதி - இழுமென்னும் ஓசையையுடைய திரண்ட பறவையினங்களின் திரட்சியையுடைய, கொழுமென் சினைய கோளியுள்ளும் - கொழுவிய மெல்லிய கொம்புகளையுடையனவாகிய பூவாமற் காய்க்கும் மரங்களில் வைத்தும், பழம் மீக்கூறும் பலாஅப் போல - பழத்தின் பருமையானும் இனிமையானும் மேலாகச் சொல்லும் பலாமரத்தை ஒக்க, புலவுக் கடல் உடுத்த வானம் சூடிய மலர்தலை உலகத்துள்ளும் - புலால் நாற்றத்தையுடைய கடல் சூழ்ந்த வானங்கவிந்த அகன்ற இடத்தை யுடைய உலகத்து நகரங்களில் வைத்தும், பலர் தொழ விழவு மேம்பட்ட பழவிறல் மூதூர் - பல சமயத்தாரும் தொழும்படி எடுத்த விழாக்களாலே பழைமையுடைய மேலான சிறப்பை யுடைய பழைய ஊர்களையுடைய;
கருத்துரை : நீலநிறமுடைய வடிவினையுடைய திருமாலின் திருவுந்தியாகிய நான்முகனைப் பெற்ற பல இதழ்களையுடைய தாமரையினது கொட்டைபோல, அழகு விளங்கத் தோன்றிச் செங்கலால் இயற்றப்பட்ட உயர்ந்த புறப்படை வீட்டைச் சூழ்ந்த மதிலினையும், இழுமென்னும் ஓசையையுடைய பறவைகளின் திரள்கள் திரண்டுள்ள கொழுவிய மெல்லிய கொம்பையுடையனவாகிய கோளியாகிய மரங்களில் வைத்தும், பழத்தின் பருமையாலும் இனிமையாலும் மேலாகப் புகழ்ந்து கூறப்படும் பலாமரத்தை ஒக்க புலால் நாறும் கடலாற் சூழப்பட்டு வானங் கவிந்த இடமகன்ற உலகத்து நகரங்களில் வைத்தும் எல்லாச் சமயத்தாரும் தொழும்படி எடுத்த விழாவுடைமையானும் பழைய வெற்றிச் சிறப்பை யுடைமையானும் மேலாகக் கூறும் புகழமைந்த பழைய ஊர்களையுடைய என்பதாம்.
அகலவுரை : திருவெஃகாவணை முதலிய ஊர்களையுடைமையின் மூதூர்ச் கச்சியோன் என்றார். மூதூர்களைத் தன்னகத்தேயுடைய கச்சியோன் என்க திருமால் நீலமேனியுடையன் ஆதல்பற்றி நீனிற உருவின் நெடியோன் என்றார்.
நீல மேகம் நெடும்பொற் குன்றத்துப்
பால்விரிந் தகலாது படிந்தது போல
திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும் (சிலப்.11:35-40)
என்றார் இளங்கோவடிகளாரும். நெடியோன் - நீண்ட உருவினையுடையோன். மண்ணளந்த காலத்தே பேருருக் கொண்டு அளந்தானாகலின் நெடியோன் என்றார். திருமாலை, அபாஞ்சு என வடநூலார் வழங்கும் பெயரும் இப்பொருட்டு. கொப்பூழ் - உந்தி. திருமாலுடைய உந்தித்தாமரையில் பிரமன் றோன்றினான் என்பது புராண கதை; இதனை,
உந்தியில் அயனை ஈன்றும் அவனைக்கொண் டுலகுண் டாக்கி
அந்தநல் லுலக ழிக்க அரனையும் ஆக்கு வித்தும் (சிவ-சித்.பாஞ்ச.2)
என வருமாற்றாலுணர்க. இவ்வாறே திருமாலின் திருவுந்தித் தாமரையைச் சிறந்த நகரத்திற்கு உவமையாக எடுத்து ஓதுதலை,
மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும் சீரூர் பூவின்
இதழகத் தனைய தெருவம் இதழகத்து
அரும்பொகுட்டனையதே அண்ணல் கோயில் (பரி-மதுரை-2)
எனவரும் பரிபாடலானும் அறிக.
இவ்வுவமையால் பழமையும் பெருமையும் சிறப்பும் தூய்மையும் கூறப்பட்டன, என்பர் நச்சினார்க்கினியர். காண்வர - காணுதல் உண்டாக; அழகுண்டாக என்றவாறு. சுடுமண் - செங்கல். பண்டைக்காலத்தே செங்கலால் வீடியற்றும் வழக்கமுண்மையை இதனானும், சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனை (மணி-3: 127) சுடுமண் நெடுநிலை (பு-வெ.113) என வருவனவற்றானும் உணர்க. பலதிசை மாக்களும் காஞ்சி நகரத்தை விரும்பி ஆங்கே வந்து திரளுதலான் ஆரவாரமுடைய பறவையினங்கள் திரண்டிருக்கும் பழுமரத்தை உவமை எடுத்தோதினார். தொழுதி - திரள். ஈண்டுதல் - கூடுதல்.
கோளி - பூவாதே காய்க்கு மரம்; அவை ஆல் அத்தி பலா முதலியன கோளிப்பாகல் (சிலப். 16:24) எனவும் கோளியாலம் (மலைபடு-268) எனவும், கோளியாலத்துக் கொழுநிழல் (புறம் -58-2) எனவும் பிறரும் ஓதுதலறிக. பூவாது காய்க்கும் மரங்களுள்ளும் பலாமரம் பழத்தின் பெருமையானும் இனிமையானும் சிறத்தல் போன்று, காஞ்சியும் பெருமையானும் இனிமையானும் ஏனை நகரங்களினும் சிறந்ததென்க. உலகத்தே உள்ள எல்லா நகரங்களினும் காஞ்சி சிறந்த தென்பார் புலவுக் கடலுடுத்த வானஞ் சூடிய மலர் தலை யுலகம் என உலகத்தின் முழுமையை எடுத்தோதினார். நகரேஷு காஞ்சி என்னும் வடமொழி வழக்கும் காண்க. காவினையும், தறியினையும், தெருவினையும், வாயிலையும், படப்பையினையும் உடைத்தாய்க் காண்வரத்தோன்றிப் பலாப்போலப் பலர்தொழ மேம்பட்ட மூதூர் என்க. காஞ்சிநகரத்தே பல்வேறு சமயத்தினரும் அவர்களுடைய பல்வேறு திருக்கோயில்களும் உண்மையின் ஆண்டு நிகழும் திருவிழாக்களும் பல சமயத்தினரும் தொழப்படும் பலவாயின என்க. விறல்-வேறொன்றற்கில்லாத வெற்றி.
தொண்டைமான் இளந்திரையன்
412-420 : அவ்வாய் ..................... கைவண்தோன்றல்
பொருள் : அவ் வாய் வளர்பிறை சூடிச் செவ்வாய் அந்தி வானத்து ஆடுமழை கடுப்ப - அழகிய இடத்தையுடைய வளரும் பிறையைச் சூடிச் சிவந்த இடத்தையுடைய அந்திப்பொழுதின் செக்கர்வானத்தே அசையாநின்ற முகில்களை ஒப்ப, வெண்கோட்டு இரும்பிணம் குருதி ஈர்ப்ப - வெள்ளிய கொம்பினை யுடைய கரிய யானைப்பிணத்தைக் குருதியாகிய யாறு இழுத்துக் கொண்டுபோம்படி, ஈரைம்பதின்மரும் பொருது களத்தவிய - துரியோதனன் முதலிய நூற்றுவரும் போர்க்களத்தே படும்படி, பேர் அமர்க் கடந்த கொடுஞ்சி நெடுந்தேர் -பெரிய போரினை வென்று கடந்த கொடுஞ்சியை உடைய நெடிய தேரினையுடைய, ஆராச் செருவின் ஐவர்போல - தொலையாத போரினையுடைய தருமன் முதலிய பாண்டவரைப் போன்று, அடங்காத் தானையோடு உடனறு மேல்வந்த ஒன்னாத்தெவ்வர் உலைவிடத்து ஆர்த்து - ஓரெண்ணின்கண் அடங்காத படையுடனே சினந்து தன்மேல் வந்த தன் ஏவலைப் பொருந்தாத பகைவர் தோற்றவிடத்தே வெற்றிக்களிப்புத் தோன்ற ஆரவாரித்து, கச்சியோனே கைவண் தோன்றல் - காஞ்சிபுரத்தின் கண்ணே உளன் ஆவான், கையானே வழங்கும் வண்மையிற் றலைமை சான்ற தொண்டமானிளந்திரையன்;
கருத்துரை : அழகிய இடத்தையுடைய வளர்பிறையை அணிந்து செந்நிற மமைந்த அந்திக்காலத்துச் செக்கர் வானத்தே முகில்கள் உலாவினாற் போன்று, வெள்ளிய கோட்டையுடைய கரிய யானைப் பிணங்களைக் குருதியாறு இழுத்துச் செல்லும்படி, துரியோதனன் முதலியோர் போர்க்களத்தே பட்டொழியும்படி பெரிய போரை வென்று ஆரவாரித்த கொடுஞ்சித்தேர் ஐவர் போன்று, எண்ணிலடங்காத பெரும்படையோடே சினந்து தன்மேல் வந்த தன் பகைவர் கெட்டொழியாநிற்ப ஆரவாரஞ் செய்து காஞ்சிபுரத்தின் கண்ணேயுளன் அவன் யாரெனில் கையாலே வழங்கும் வண்மைத் தொழிலில் தலைமை பொருந்திய தொண்டைமான் இளந்திரையன் என்பதாம்.
அகலவுரை : மூதூரில் ஆர்த்துக் கச்சியின் உளன் தோன்றல் என்க.
அவ்வாய் - அழகிய இடம். வளர்பிறை - ஒளிப்பக்கத்துப் பிறை. செவ்வாய் - சிவந்த இடம். அந்திவானம் - செக்கர்வானம். ஆடுமழை - இயங்கும் முகில். பிறை - யானைக்கோட்டிற்கும், ஆடுமழை - இழுக்கப்பட்டியங்கும் கரிய யானைப் பிணத்திற்கும், அந்திவானம் - குருதியாற்றிற்கும் உவமையாகக் கொள்க.
ஈரைம்பதின்மர் - நூற்றுவராகிய துரியோதனன் முதலியோர். ஐவர் - தருமன் முதலிய பாண்டவர். பொருதுகளம் - போர்செய்கின்ற போர்க்களம். அவிய-மாளும்படி. ஆராச்செரு - தொலையாத போர். ஒன்னா - ஏவலிற் பொருந்தாத. தெவ்வர் - பகைவர். கடந்த ஐவர் ஆர்த்தாற் போல ஒன்னார் உலைவிடத்து ஆர்த்துக் கச்சியோன் என்க. கடம்பமர் நெடுவேளன்ன மீளி உடம்பிடித் தடக்கை ஓடா வம்பலர் (பெரும்பாண் - 75) என்புழி ஒருமை, பன்மையில் மயங்கினாற் போன்று, ஈண்டு ஐவர் என்னும் பன்மை தோன்றல் என்னும் ஒருமையில் மயங்கிற்று. இதனை,
முதலும் சினையும்என் றாயிரு பொருட்கும்
நுதலிய மரபின் உரியவை உரிய (தொல்.உவம-6)
என்னும் தொல்காப்பிய விதியின்கண் உரிய என்னாது உரியவை என்ற விதப்பாற் பேராசிரியர் அமைத்துக் கோடலறிக.
இனி ஐவர் என்னும் உவமையை ஒன்னாத் தெவ்வர்க்கு உவமையாக்கி, நூற்றுவரைக் கொன்ற ஐவர் அசுவத்தாமனுக்கு உலைவிடத்து அவன் ஆர்த்தாற்போல ஆர்த்தென்று வலிந்து பொருள் கூறி, இவன் அசுவத்தாமன் மரபினன் ஆதலின், இவன் குலவென்றிக்கியையக் கூறிற் றென்றும் கூறி இடர்ப்படுவாருமுளர்.
ஐவர்போல ஆர்த்து என்பதே ஆசிரியர் கருத்தென்க. ஐவர் ஒன்னார்க்குவமை எனின், ஐவர் நூற்றுவரைக் கொன்ற சிறப்போதுதல் மிகையென் றொழிக. மேலும், அசுவத்தாமன் தன்மேல் வந்த ஐவர் உலைவிடத்து ஆர்த்தானும் அல்லன். ஐவர் மறைந்திருந்துழி மேற்சென்று ஆர்த்தான் என்பதே பாரதக் கதை என்க. கச்சியோன் - கச்சியிடத்தோன். கைவண் தோன்றல் - கையால் வழங்கும் வண்மையிற் சிறந்தோன். இனி, 421-நச்சிச் சென்றோர் என்பது தொடங்கி, 446 - உரும்பில் சுற்றமொடிருந்தோன் என்னுந்துணையும் ஒரு தொடர். இதன்கண், தொண்டைமானிளந்திரையனின் அளியுந் தெறலும் தோன்ற அவனது சிறப்புக்கள் பல ஓதப்படும்.
இளந்திரைய வள்ளலின் நெடுநகர் முற்றம்
421-428 : நச்சி ..................... மன்னர்
பொருள் : நச்சிச் சென்றோர்க்கு ஏமமாகிய அளியும் - தன்னை விரும்பித் தன்பால் எய்தினோர்க்குப் பாதுகாவலாகிய அருளற்றொழிலும்; தெறலும் - தன்னை விரும்புதலில்லாப் பகைவர்க்குப் கேடாகிய தெறற்றொழிலும், எளியவாகலின் - தான் செய்தற்கு மிகவும் எளிய தொழில்களே ஆகலான், மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ்பட - தன்னுடனே போரிட்டோர் நாட்டினூர்களிலே மன்றுகள் மக்கள் இல்லையாம்படி பாழ்பட்டு அழியாநிற்பவும், நயந்தோர் தேஎம் நன்பொன் பூப்ப - தன்னை விரும்பியிருந்தோர் நாடுகள் நன்றாகிய பொன்பூத்துத் திகழா நிற்பவும் இவற்றைக் கண்டு, நட்புக் கொளல் வேண்டி நயந்திசினோரும் - மலையலாகாதென்று உறவு கொள்ளுதலை வேண்டி அவன்றாளை விரும்பினவர்களும், துப்புக் கொளல் வேண்டிய துணையிலோரும் - அவன் வலியைத் துணைக்கொள்ளக் கருதியவேறோர் உதவியில்லாதவர்களுமாய், கல் வீழ் அருவி கடல் படர்ந்தாங்கு - மலையினின்றும் விழுகின்ற அருவி அம் மலையிலுள்ள பண்டங்களை வாங்கிக்கொண்டு கடலுக்குக் கொடுப்பதாகச் சென்றாற் போல; பல்வேறு வகையில் பணிந்த மன்னர் - அன்பினாலாதல் அச்சத்தினாலாதல் தந்நலங்கருதியாதல் இன்னோரன்ன பல்வேறு வகைகளானும் திரையனுக்குக் கீழ்ப்படிந்த அரசர்கள்;
கருத்துரை : தன்னை விரும்பி வந்தோருக்குப் பாதுகாவலாகிய அளியுடைமையும், தன்னைப் பகைத்தோரை அழித்தற்குரிய தெறலுடைமையும், தனக்கு மிக எளிய செயல்களாகலானே, தன்னை எதிர்ந்தோர் நாட்டின்கண் மன்றங்கள் மக்கள் வழக்கற்று அழியாநிற்றலையும், தன்னை விரும்பியவர் நாட்டின்கண் செல்வம் மிக்குத் திகழாநிற்றலையும் கண்டு தாமும் அவனது நட்புப் பெற வேண்டி விரும்பினவர்களும், தமக்குத் துணையாக அவனருளைப் பெற வேண்டியவர்களும் ஆகி, மலையின்கண் அருவி ஆண்டுள்ள பொருள்களை வாங்கிக் கொண்டு கடல்மிசைச் சென்றாற்போன்று திறைப் பொருளுடன் பல்லாற்றானும் திரையனைப் பணிந்த மன்னர்கள் என்பதாம்.
அகலவுரை : மன்னர்கள் செவ்விபார்க்கும் செழுநகர் முற்றம் என 435 ஆம் அடிக்கட் சென்றியையும்.
நச்சிச் சென்றோர்க் கேமமாகிய அளி என்றதற்கேற்ப நச்சாதிருந்தார்க்குப் கேடாகிய தெறல் என்பதும் கொள்க. அளித்தற் றொழிலும் தெறற் றொழிலும் எளியவாதலான், நயந்தோர் தேஎம் பொன்பூப்பவும் மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ்படவும் என எதிர் நிரல் நிறையாகக் காண்க. நட்புக்கொள வேண்டுதற்கும், துப்புக்கொளவேண்டுதற்கும், மன்றம் பாழ்படுதலும் பொன் பூத்தலும் ஏதுக்கள் என்க. இவ்வடிகளுடன், நீ உடன்று நோக்கும் வாய் எரி தவழ, நீ நயந்து நோக்கும் வாய் பொன் பூப்ப, (38; 5-6) என வரும் புறப்பாட்டடிகளை ஒப்புக் காண்க. அளி - பாதுகாத்தற்குரிய அருட்பண்பு. தெறல் - அழித்தற்குரிய மறப்பண்பு : இவ்விரண்டும் அரசர்க்கு இன்றியமையாப் பண்புகள் என்க. இதனை,
அளியும் தெறலும் உடையோய். (2:8) என வரும் புறத்தானும் உணர்க. மலைந்தோர் - தன்னோடு போர் செய்த பகைவர். நயந்தோர் - தன்னை விரும்பி நட்டோர். தலைமைபற்றி மன்றம் பாழ்பட என்றார். வீடில்லாதவரும் வதிதற்குரிய மன்றங்களினும் மக்கள் இல்லையாம்படி என அழிவைச் சிறப்பித்தோதியவாறு. பொன்பூப்ப என்றது, எல்லாச் செல்வமும் சிறந்து திகழ என்றவாறு. பூத்தல் - ஈண்டு விளங்கித் தோன்றல். பொன் பூப்ப என்றதற்குத் திருமடந்தை பொலிவு பெற்றிருப்ப என்றார் நச்சினார்க்கினியர். துப்பு - வலிமை. துப்புக்கொளல் வேண்டுதலாவது திரையனின் வலிமையைத் தமக்குத் துணையாகக் கோடல். அங்ஙனம் கொள்ளாவழி அவர்க்கு நிலையின்மை கூறுவார், துணையில்லோரும் என்றார். எத்திறத்தாரும் சென்று புகல் புகுதற்கிடனாவான் இளந்திரையன் என்பார் கடலை உவமை எடுத்தோதினர். அவன்பாற் புகல் புகுதலன்றிப் பிறிதொரு வழியும் ஏனை மன்னர்க்கின்மை காட்டுவார், அவரை மலையருவியோடுவமித்தார் மலையருவி ஆண்டுள்ள பொருளைச் சுமந்து கொண்டு கடல் நோக்கி வருதல்போல, இம்மன்னரும் திறைப்பொருள் சுமந்து வந்தனர் என்பதைக் குறிப்பாற் பெற வைத்தார். பணிந்த மன்னர் - கீழ்ப்படிந்த மன்னர் என்க.
இதுவுமது
429-435 : இமையவர் ................ முற்றத்து
பொருள் : இமையவர் உறையும் சிமையச் செவ்வரை - தேவர்கள் இருக்கும் உச்சியையுடைய செவ்விய இமயத்தின் கண், வெண்டிரை கிழித்த விளங்கு சுடர் நெடுங்கோட்டு -தனது வெள்ளிய திரையையுடைய நீர் கிழித் தோடுதலாலே விளங்குகின்ற ஒளியையுடைய நெடிய சிகரத்தின்கண் நின்றும் பொன் கொழித்து இழிதரும் போக்கருங் கங்கை - பொன்னைக் கொழித்துக் கொண்டு குதிக்கும் மக்கள் கடத்தற்கரிதாகிய கங்கையாகிய யாற்றிலே, பெருநீர்ப் போகும் இரியன் மாக்கள் - பெரிய நீரைக் கடந்துபோம் கெடுதலையுடைய மாக்கள், ஒரு மரம் பாணியில் தூங்கி யாங்கு - ஆண்டு விழுகின்ற தோணி ஒன்றே யாதலால் அது வருங்காலம் பார்த்திருந்து தூங்கினாற் போல; தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழீஇ - கெடாத யானை முதலிய செல்வங்களோடே நெருங்காநின்று திரண்டு, செவ்வி பார்க்கும் செழுநகர் முற்றத்து - காலம் பார்த்திருக்கும் வளவிய நகரத்து முற்றத்தினையுடைய;
கருத்துரை : தேவர்கள் உறைகின்ற உச்சியையுடையதும், யாற்று நீர் கிழித்தோடுதலானே விளக்கமுடைய ஒலியுடையதும் ஆகிய நெடிய இமயமலைச் சிகரத்தின்கண் உள்ள பொன்னைக் கொழித்துக்கொண்டு குதிக்கும் மக்களாற் கடத்தற்கரிய கங்கையாற்றிலே பெரிய நீரைக் கடந்து செல்லாநின்ற கெட்டோடும் மாக்கள் ஆண்டுவிடும் தோணி ஒன்றே யாதலால், அதுவரும் காலம் பார்த்து உறங்கிக் கிடந்தாற் போன்று கெடாத திறைப்பொருளோடே நெருங்கித் திரண்டு உள்ளே நுழைதற்குக் காலம் பெறாமையால் அதனை எதிர்பார்த்துக் கிடவாநின்ற செழித்த அரண்மனை முற்றத்தையுடைய என்பதாம்.
அகலவுரை : முற்றத்தையுடைய (440) பொன்றுஞ்சு வியனகர் எனச் சென்றியையும்.
இமையவர் - இமைத்தலில்லாத இமையினையுடைய தேவர்கள். இமய மலையின் உச்சியில் தேவர்கள் உறைவர் என்பது மரபு. செவ்வரை என்றதன்கண் செம்மை ஈண்டுத் தலைமை குறித்து நின்றது. என்னை? உலகில் உள்ள மலைகளில் எல்லாம் சிறந்த மலை அதுவே யாகலான், கங்கையாற்றின் வெண்டிரை கிழித்தல், விளங்கு சுடர் உடைத்தாதற்குக் குறிப்பேதுவாதலறிக. இமயத்தின் நெடுங்கோட்டுமிசை நின்றும் இழிதரும் என்றது, கங்கையாற்றின் பிறப்புயர்வைச் சிறப்பித்தவாறாம். நெடுங்கோட்டுப் பொன் கொழித்தெனவே அக் கங்கையின் வெள்ளச் சிறப்பை விதந்தவாறாதலும் அறிக. பொன் கொழித்து என்றது, ஏனை இழி பொருளினின்றும் சிறந்த பொன்னைமட்டும் கொழித்தெடுத்து என்றவாறாம். எனவே உவமேயத்தின் கண்ணும், மன்னர்கள் தம்பால் உள்ள பொருள்களுள் வைத்தும் ஆராய்ந்து சிறந்த பொருள்களையே திறைப்பொருளாகக் கொணர்ந்தனர் என்பதூஉம் கொள்க. ஒருமரம், ஒன்றாகிய தோணி, அல்லது ஒரே மரத்திற் குடைந்து செய்யப்பட்ட சிறு தோணியுமாம். பாணி - காலம்; ஈண்டு அத்தோணியில் தமக்கு இடம் கிடைக்கும் காலம் என்க. நீந்துதல் முதலியவற்றாற் கடத்தற்கருமை கூறுவார், பெருநீர் என்றார். இரியன் மாக்கள் - பகைப்படை வருகையாற் கெட்டோடும் மாக்கள் என்க.
இரியல் போவார் தாம் தாம் முந்துதற்கு விரைதல் இயல்பாகலின் உவமேயத்தினும் மன்னர்கள் தாம் தாம் முந்தும் கருத்துடையார் ஆகிக் கிடத்தலும் கொள்க. நகர் - அரண்மனை. அளியும் தெறலும் எளிய வாகலின் நயந்திசினோரும் துணையிலோரும் ஆகிப் பணிந்த மன்னர் குழீஇச் செவ்வி பார்க்கும், செழுநகர் முற்றம் என்க.
அரண்மனைச் சிறப்பு
436-440 : பெருங்கையானை ............... வியனகர்
பொருள் : பெருங்கை யானைக் கொடுந்தொடி படுக்கும் கருங்கைக் கொல்லன் - பெரிய கையினையுடைய யானைக்கு வளைந்து கிடக்கும் பூணைச் சேர்க்கும் வலிய கையினையுடைய கொல்லன், இரும்பு விசைத்து எறிந்த கூடத் திண்ணிசை வெரீஇ - சம்மட்டியை உரத்துக் கொட்டின கூடத்தெழுந்த திண்ணிய ஓசையை அஞ்சி, மாடத்து இறை உறை புறவின் செங்காற் சேவல் இன்துயில் இரியும் பொன் துஞ்சு வியன் நகர் - மாடத்தின் இறப்பின்கண்ணே உறைகின்ற சிவந்த காலையுடைய புறவினது சேவல் இனிய துயிலை நீங்காநின்ற திருத்தங்கும் அகன்ற அரண்மனை யிடத்தே;
கருத்துரை : பெரிய கையினையுடைய யானைக்குக் கோட்டின்கண் பூணைச் செறிக்கும் வலிய கையினையுடைய கொல்லன், சம்மட்டியை விசைத் தெறிந்தமையாலே கூடத்தினின் றெழுந்த திண்ணிய ஓசையை அஞ்சி, மாடத்தின் இறப்பிலே உறையும் செங்காற் புறாச் சேவல், இனிய உறக்கத்தை நீங்குதற் கிடமானதும், திருத்தங்குவதும் ஆகிய அகன்ற அரண்மனையிடத்துத் திருவோலக்க மண்டபத்தே என்பதாம்.
அகலவுரை : திருவோலக்கத்தே (447) இருந்தாற் குறுகி எனக் கூட்டுக. பகைவருடைய மதிலைப் பாய்தலால் யானையின் கோட்டிற் செறித்த பூண்கள் சிதைதல் இயல்பாகலின், அப் பூணைத்திருத்தக் கொல்லன் சம்மட்டியை விசைத் தெறிந்தான் என்க; எனவே இதனால் இளந்திரையன் படையின் போர்த்தொழின் மிகுதியைக் குறிப்பாற் கூறியவாறு காண்க.
நீண்மதில் அரணம் பாய்ந்தெனத் தொடிபிளந்து
வைந்நுதி மழுகிய தடங்கோட் டியானை (ஐங். 444)
என்றார் பிறரும். கொடுந்தொடி - வளைந்த பூண், இதனைக் கிம்புரி என்ப. படுத்தல் - கோட்டின்கண் செறித்தல். கருங்கை - வன்றொழில் செய்த கை என்க. கருமை - வன்மையின் மேற்று; கருந்தொழில் மாக்கள் (சிறுபாண். 258) என்புழியும் அஃதப் பொருட்டாதலறிக.
இரும்பு - சம்மட்டி. விசைத்தெறிதல் - உரத்தடித்தல். கூடம் - பட்டடை. திண்ணிசை - மிக்க ஓசை. இன்றுயில்-பேட்டுடன் உறைந்து கொள்ளுந்துயில். இவ்வாறே இவ்வாசிரியர் தம் பட்டினப்பாலையினும்,
அவிர்சடை முனிவர் அங்கி வேட்கும்
ஆவுதி நறும்புகை முனைஇக் குயில்தம்
மாயிரும் பெடையோ டிரியல் போகும் (54-56)
என்றும்,
இருஞ்செருவி னிகன் மொய்ம்பினோர்
கல்லெறியும் கவண்வெரீஇப்
புள்ளிரியும் புகர்ப்போந்தை (72-74)
என்றும் கூறுதல் காண்க. சேவல் துயில் இரியவும், பொன் துஞ்சவும் இடமாகிய நகர் என்றதன்கண் நயமுணர்க. பொன்றுஞ்சுதல் என்றது, பயன்படுத்தப்படாமல் செல்வம் மிக்குக் கிடக்கும் என்றவாறு. நிதியந் துஞ்சு நிவந்தோங்கு வரைப்பு என மலைபடுகடாத்தினும், துஞ்சு நீணிதியது சுரமை (நாடு-1) எனச் சூளாமணியினும் வருதல் காண்க. வியல் நகர் - அகன்ற அரண்மனை; வியலென் கிளவி அகலப் பொருட்டே (உரி: 66) என்பர் தொல்காப்பியனார்.
இளந்திரையனின் அரசிருக்கைச் சிறப்பு
441 - 447 : குணகடல் ................ குறுகி
பொருள் : குணகடல் வரைப்பின் முந்நீர் நாப்பண் பகல் செய்மண்டிலம் பாரித்தாங்கு - கீழ்கடலாகிய எல்லையிடத்து நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய மூன்று தொழிலையுடைய நீர்க்கு நடுவே பகற்பொழுதைச் செய்யும் ஞாயிறு தன் கதிர்களைப் பரப்பித் தோன்றினாற் போல, முறை வேண்டுநர்க்கும் குறை வேண்டுநர்க்கும் வேண்டுப வேண்டுப வேண்டினர்க்கு அருளி - முறையிரந்தார்க்கும் குறையிரந்தார்க்கும் வேண்டியவற்றை வேண்டியவற்றை வேண்டினர்க்கு அருள் செய்து, இடை தெரிந்து உணரும் இருள்தீர் காட்சி - தன்னால் விரும்பப்பட்டார் தனக்குக் கூறாமலே அவருளந்தெரிந்து உணராநின்ற மயக்கமற்ற நற்காட்சியை உடையனாய், கொடைக் கடன் இறுத்த கூம்பா உள்ளத்து - கொடை என்னும் கடப்பாட்டினைச் செய்து முடித்த குவியாத உள்ளத்துடன், உரும்பில் சுற்றமோடு இருந்தோற் குறுகி - கொடுமையில்லாத அமைச்சுச் சுற்றத்தோடே இருந்தோனை அணுகி;
கருத்துரை : கீழ்கடலாகிய எல்லையாகிய நீரின் நடுவே ஞாயிற்று மண்டிலம் கதிர்பரப்பித் தோன்றினாற் போன்று விளங்கித் தன்பால் குறை வேண்டி வந்தார்க்கும், முறைவேண்டி வந்தார்க்கும், யார் யார் எதனை எதனை வேண்டினர், அவ்வவர்க்கு அவ்வவற்றை அருளிச் செய்து, பிறர் கூறாமலே குறிப்பாற் பிறர் உளத்தை உணர்கின்ற மயக்கற்ற நற்காட்சியுடையனாய், கொடைக் கடனைச் செய்து முடித்துக் குவியாத உள்ளமுடையனாய்க் கொடுமையில்லாத மந்திரச் சுற்றத்தோடே வீற்றிருந்த அத்திரைய வள்ளலை அணுகி என்பதாம்.
அகலவுரை : குணகடல் - கீழ்த்திசைக் கடல். வரைப்பு - எல்லை. முந்நீர் - மூன்று நீர்மையையுடைய கடல்; நிலததைப் படைத்தலும், காத்தலும், அழித்தலுமாகிய முத்தொழிலும் வல்லது கடல் ஆதலின், முந்நீர் என்று வழங்கப்படும். முந்நீர் : ஆகுபெயர். இனி முந்நீர் என்பது ஆற்று நீர் ஊற்றுநீர் மேனீர் என மூன்று நீரானும் நிறைந்தது என்பாருமுளர் இதுபற்றிச் சிலப்பதிகாரத்தே (17-உள்வரி-3) அடியார்க்கு நல்லார். கூறுமாறு : முந்நீர் - கடல். ஆகுபெயர்; ஆற்றுநீர் ஊற்றுநீர் மேனீரென இவை என்பார்க்கு, அற்றன்று: ஆற்றுநீர் மேனீராகலானும், இவ்விரண்டுமில்வழி ஊற்றுநீரும் இன்றாதலானும் இவற்றை முந்நீர் என்றல் பொருந்தியதன்று; முதிய நீரெனின், நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும், (குறள்-17) என்பதனால், அதுவும் மேனீரின்றி அமையாமையின் ஆகாது; ஆனால் முந்நீர்க்குப் பொருள் யாதோ எனின் முச்செய்கையுடைய நீர் முந்நீரென்பது; முச்செய்கையாவன மண்ணைப் படைத்தலும், மண்ணை யழித்தலும், மண்ணைக் காத்தலுமாம் எனவரும்.
நாப்பண் - நடுவே. பகல் செய் மண்டிலம் - ஞாயிற்று மண்டிலம். பகற் செய்யும் செஞ்ஞாயிறும் (7) என்பது மதுரைக்காஞ்சி; பாரித்தல் - கதிர்பரப்பித் தோன்றுதல். இளந்திரையன் முன்னோனொருவன் தாயாகிய நாககன்னி பீலிவளை யென்பாள் அவனைப் பெற்ற பொழுது தொண்டையை அடையாளமாகக்கட்டிக் கடலிலே விட, அக்கடலின் திரைகொணர்ந்து தருதலாலே அவனைக் கடலிற்றோன்றியவன், கடலின் மகன் எனச் சான்றோர் வழங்குவர். அவன் மரபிற் பிறந்தோன் என்னும் இவ்வழக்கிற் கியையவே குணகடலிற் கதிர் விரித்தெழும் ஞாயிற்று மண்டிலத்தை இவனுக்கு உவமை எடுத்தோதுதல் அறிக. இவ்வுவமை சிறப்பு நிலைக்களனாகப் பிறந்த பெருமிதவுவமை என்க. முறை வேண்டினார் வலியரான் நலிவெய்தினார் என்றும், குறைவேண்டினார் வறுமையுற்றிரந்தார் (திருக்குறள். 386.உரை) என்றும் பரிமேலழகர் கூறுவர். வேண்டுப வேண்டு வேண்டினர்க் கருளி என்றது, யார் எதை வேண்டினும் அதை அவர்க்கு அருளிச் செய்து என்றவாறு. வேண்டுவார் வேண்டுவன ஈவான் கண்டாய் என்றார் பெரியாரும். இடை தெரிந்துணர்தல் என்றதற்கு, நடுவு நிலைமையை ஆராய்ந்தறிதல் என்று பொருள் கூறினர் நச்சினார்க்கினியர். இருள் - மயக்கம், அஃதாவது பழுதையைப் பாம்பென்றுணர்தற்கு ஏதுவாகிய பேதைமை.
கொடைக் கடனிறுத்தலாவது - போர் மறவர் புலவர் பாணர் கூத்தர் முதலியோர்க்குக் களிறு முதலியன வழங்குதல். இதனை.
பெருநல் யானை போர்க்களத் தொழிய
விழுமிய வீழ்ந்த குரிசிலர்த் தம்மின்
புரையோர்க்குத் தொடுத்த பொலம்பூந் தும்பை
நீர்யார் என்னாது முறைகருதுபு சூட்டிக்
காழ்மண் டெஃகமொடு கணையலைக் கலங்கிப்
பிரிபிணை யரிந்த நிறஞ்சிதை கவயத்து
வானத் தன்ன வளநகர் பொற்ப
நோன்குறட் டன்ன வூன்சாய் மார்பின்
உயர்ந்த உதவி ஊக்கலர்த் தம்மின்
நிவந்த யானைக் கணநிரை கவர்ந்த
புலர்ந்த சாந்தின் விரவுப்பூந் தெரியல்
பெருஞ்செய் ஆடவர்த் தம்மின் பிறரும்
யாவரும் வருக ஏனோரும் தம்மென
வரையா வாயிற் செறாஅ திருந்து
பாணர் வருக பாட்டியர் வருக
யாணர்ப் புலவரொடு வயிரியர் வருகென
இருங்கிளை புரக்கும் இரவலர்க் கெல்லாம்
கொடுஞ்சி நெடுந்தேர் களிற்றொடும் வீசி (735-752)
எனவரும் மதுரைக் காஞ்சியானும் உணர்க.
கூம்பாவுள்ளம் - நன்றாற்றுதலில் எப்போதும் மலர்ந்து ஒரு தன்மைத்தாய உள்ளம். கூம்புதல் - குவிதல் உரும்பு-கொடுமை. உயர்ந்த கட்டில் உரும்பில் சுற்றத்து என்றார் கூத்தராற்றுப் படையினும். கொடுமையில்லாத சுற்றத்தோடே என்றது, இளந்திரையனின் பெரியோர் கேண்மை நலங் கூறியவாறு. இருந்தோற் குறுகி என்றது, அவன் அவ்வாறு திருவோலக்கத்தே வீற்றிருக்கும் செவ்வியே அவனைக் காண்டற் கேற்ற செவ்வி என அறிவுறுத்தவாறு. இனி 421-நச்சிச் சென்றோர் என்பது முதல் 447-இருந்தோற்குறுகி என்னுந் துணையும் தொடர்ந்த இத் தொடர்ப் பொருளை, அளியும் தெறலும் எளியவாகலின் பொன்பூப்பவும் பாழ்படவும் கண்டு நயந்திசினோரும் துணையிலோருமாய்ப் பணிந்த மன்னர் வெறுக்கையொடு துவன்றுபு குழீஇச் செவ்விபார்க்கும் முற்றத்து வியனகரில் அருளி இருந்தோற் குறுகி என அணுகக் கொண்டு காண்க. இனி, 448-பொறிவரி என்பது தொடங்கி, 454-நன்னிலை தெரியா அளவை என்னுந் துணையும் ஒரு தொடர்; இதன்கண், அவ்வள்ளலைக் கண்டுழிப் பாணர் நடந்து கொள்ளவேண்டிய முறையை ஓதுகின்றார்.
திரைய வள்ளலின் சீர்த்தி
448-454 : பொறிவரி ....................... மருக
பொருள் : பொறி வரிப் புகர்முகம் தாக்கிய வயமான் - பொறிகளையுடைய வண்டுகள் மொய்க்கும் புள்ளிகளுடைய முகத்தையுடைய யானையைப் பாய்ந்த அரிமா, கொடுவரிக் குருளை கொளவேட்டாங்கு - பின்னர்ப் புலிக்குட்டியைப் பாய்ந்து கொள்ள விரும்பினாற் போன்று, புலவர் பூண்கடன் ஆற்றி - புலவர்க்குப் பேரணிகலன்களையும் பிற கடமைகளையும் வழங்கி, பகைவர் கடிமதில் எறிந்து குடுமி கொள்ளும் - தன் பகைவருடைய காவலமைந்த மதில்களை அழித்து ஆண்டிருந்த அரசருடைய முடிக்கல முதலியவற்றை வாங்கிக்கொண்டு, வென்றியல்லது வினையுடம்படினும் ஒன்றல் செல்லா - வீரமுடி புனையும் வெற்றியையே விரும்புவதல்லது அம்மதிலரசர் பொருந்துதற்கு உடம்பட்டாராயினும் அதற்கு மனம் பொருந்துதல் நிகழாமைக்குக் காரணமான, உரவு வாள் தடக்கைக் கொண்டி உண்டித் தொண்டையோர் மருக - வலிய வாளையுடைய தடக்கையினையும் பகைப்புலத்துக் கொள்ளையாகிய உணவினையும் உடைய தொண்டையோருடைய குடியில் உள்ளவனே!
கருத்துரை : பொறிகளையுடைய வண்டுகள் மொய்க்கும் முகத்தையுடைய யானையைக் கொன்ற அரிமா பின்னர் அவ்வியானையினும் மிக்க புலிக்குட்டியைப் பாய்ந்துகொள்ள எண்ணினாற்போன்று முற்படப் புலவர் முதலியோர்க்கு அணிகலன் முதலிய கொடுக்கும் கொடைக் கடன் ஆற்றிப் பின்னர்த் தன் பகைவருடைய மதில்களை அழித்து அவ்வரசர் முடிக்கலன் முதலியவற்றைக் கொண்டு இவ்வாறே மேலும் மேலும் வலிய அரசர் முடியைக் கொள்ளும் வெற்றியையே விரும்புவதல்லது பகையரசர் சந்து செய்வித்துக்கொள்ள உடன்பட்டு முயன்ற விடத்தும் அதற்கு மனம் பொருந்துதல் செல்லாத வலிய வாளையுடைய கையினையும் பகைப்புலத்துக் கொள்ளையாகிய உணவினையும் உடைய தொண்டையோர் குடியிற் றோன்றியவனே என்பதாம்.
அகலவுரை : யானையைப் பாய்ந்த அரிமாப் பின்னர்ப் புலியைப் பாய நினைத்தாங்கு என்றது, முன்னர் வென்ற அரசரினும் வலிய அரசரையே நாடி அவர் தம் மதிலெறிந்து குடுமிகொள்ள நினைதற்கு உவமை என்க. இனி ஈண்டு யானை புலி என்பன யானைக் கொடியுடைய கங்கரையும் புலிக்கொடியுடைய சோழரையும் குறித்துக் கூறியவா றென்பாரும் உளர். வயமான் கொடுவரி என இயைத்துச் சிங்கத்தினுடைய வளைந்த வரியினையுடைய குட்டி என்பர் நச்சினார்க்கினியர். சிங்கக் குட்டிக்குக் கொடுவரியும் உளதுகொல்? பொறி - ஒளியுமாம். வரி - வண்டு; வரியே வண்டெனப் படுமே என்பது பிங்கலம் - (விலங்கு).
இரும்புலி கொன்று பெருங்களிறு அடூஉம்
அரும்பொறி வயமான் அனையை (பதிற்-75)
என்றார் பிறரும். தெறலினும் அளிச்சிறப்பையே மிகுத்துக் கூறுவார், பூண்கடனாற்றிப் பின்னர்க் குடுமிகொள்ளும் வென்றி என்றார். எனவே புலவர் பூண்கடன் ஆற்றி வயமான் போலக் குடுமிகொள்ளும் என மாறிக்கொள்க. கடிமதில் - காவலமைந்த மதில். குடுமிகொள்ளும் வென்றி எனவே இகன் மதிற்குடுமிகொண்ட மண்ணுமங்கலம் என்னும் துறை கூறியவாறாயிற்று. அஃதாவது, தான் இகல் செய்த மதிற்கண் தன் பகையரசனைக் கொன்று அவன் முடிக்கலம் முதலியன கொண்டு பட்ட வேந்தன் பெயரானே முடிபுனைந்து நீராடும் மங்கலம் என்ப. இதனை,
மழுவாளன் மன்னர் மருங்கறுத்த மால்போற்
பொழிலேழும் கைக்கொண்ட போழ்தின் - எழின்முடி
சூடாச்சீர்க் கொற்றவனும் சூடினான் கோடியர்க்கே
கூடார்நா டெல்லாங் கொடுத்து (புறத்திணை:13)
எனவரும் தொல்காப்பிய நூற்பா உரை மேற்கோளானும் உணர்க. வினையுடம்படுதல்-சந்து செய்தற்கு உடன்படுதல்; தன்னை வணங்குதற் றொழிற்கு உடன்பட்ட வழியும் என்றுமாம். ஒன்றல் - ஒத்துப்போதல். உரவுவாள் - வலிய வாள். கொண்டி - கொள்ளை, ஈண்டுப் பகைப்புலத்தே கொள்ளையிட்ட பொருள் என்க. இதனால் இளந்திரையனின் ஆள்வினையுடைமையும் தெறலும் சிறப்பித்தோதப்பட்டன.
இதுவுமது
455-461 : மள்ளர் ................ வாழியநெடிதென
பொருள் : மள்ளர் மள்ள - போர் மறவர் நன்கு மதிக்கும் சிறந்த போர்மறவனே! மறவர் மறவ - கொடியோர்க்குக் கொடியவனே! செல்வர் செல்வ-செல்வரும் மேம்பட மதிக்கும் செல்வமானவனே! செரு மேம்படுந - போர்த்தொழிலிலே மிக்கவனே! வெண்டிரைப் பரப்பில் கடுஞ்சூர் கொன்ற பைம்பூண் சேஎய் பயந்த மாமோட்டுத் துணங்கையம் செல்விக்கு அணங்கு நொடித்தாங்கு - வெள்ளிய திரையினையுடைய கடலிலே சென்று கடிய சூரனைக் கொன்ற பசிய பூணினையுடைய முருகனைப் பெற்ற பெருமையுடைய வயிற்றினையும் பேய்களாடும் துணங்கைக் கூத்தினையும் அழகினையும் உடைய இறைவிக்குப் பேய் மகள் சில நொடி சொன்னாற் போல, தண்டா ஈகை நின் பெரும் பெயர் ஏத்திவந்தேன் பெரும - அமையாக் கொடையினையுடைய நின் பெரிய பெயருட் சிலவற்றைச் சொல்லிப் புகழ்ந்து வந்தேன் பெருமானே, வாழிய நெடிது என - நீ நெடுங்காலம் வாழ்வாயாக என்று சொல்லி;
கருத்துரை : வீரர் மதிக்கும் வீரனே! கொடியோர்க்குக் கொடியவனே! செல்வர்க்குச் செல்வமானவனே! போர்த்தொழிலில் மிக்கவனே! கடலிற்சென்று கடிய சூரனைக் கொன்ற முருகனைப் பயந்த இறைவிக்குப் பேய்மகள் சில நொடி சொன்னாற் போன்று, அமையாத ஈகையினையுடைய நின்னுடைய பெயருட் சிலவற்றைப் புகழ்ந்து வந்தேன்; பெருமானே! நீ நீண்டகாலம் வாழ்வாயாக! எனச் சொல்லி என்பதாம்.
அகலவுரை : மள்ளர் - வீரர். மறவர் : ஈண்டு மறச் செயலுடைய கொடியோர். வேந்தமை வில்லாக்கடை பிற அமை வெய்தியக் கண்ணும் பயனின்றாகலான், இளந்திரையனைச் செல்வர் செல்வ என்றார். செல்வர்க்கு அவர் செல்வங்களினும் தலைசிறந்த செல்வமாகத் திகழ்பவன் என்றபடி. செருமேம்படுதலாவது - போர்த்தொழிலின்கண் எல்லோரும் புகழப்படுதல். கடுஞ்சூர் - கடிய சூரன். முருகக் கடவுள் கடுஞ்சூர் கொன்றமையை,
பார்முதிர் பனிக்கடல் கலங்கவுள் புக்குச்
சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்
............................. சேஎய் (45-61)
எனவரும் திருமுருகாற்றுப் படையானும்,
............................... மாக்கடன் முன்னி
அணங்குடை அவுண ரேமம் புணர்க்கும்
சூருடை முழுமுதல் தடிந்த பேரிசைக்
கடுஞ்சின விறல்வேள் (11:3.6)
எனவரும் பதிற்றுப் பத்தானும்,
கடுஞ்சூர் மாமுதல் தடிந்தறுத்தவேல்
அடுபோ ராள (9-70-71)
என்றும்,
நீர்நிரந் தேற்ற நிலந்தாங் கழுவத்துச்
சூர்நிரந்து சுற்றிய மாதபுத்த வேலோய் (18:3-4)
என்றும், வரும் பரிபாடலானும்,
பாரிரும் பௌவத்தி னுள்புக்குப் பண்டொருநாள்
சூர்மாதடிந்த சுடரிலைய வெள்வேலே (குன்றக்-பாட்டுமடை)
எனவரும் சிலப்பதிகாரத்தானும் இன்னும் பண்டைத்தமிழ் இலக்கியங்களிற் சான்றோர் பன்னூலிடத்தும் ஓதுவனவற்றானும் கந்தபுராண முதலியவற்றானும் உணர்க.
பைம்பூண் சேஎய் என்றது, முருகக் கடவுளின் இளமைச் சிறப்பைக் குறித்து நின்றது. சேஎய் - முருகன். மாமோடு - பெருமைமிக்க வயிறு. மோட்டெருமை முழுக் குழவி (பட்டினப்-14) என்புழியும் மோடு இப்பொருட்டாதல் காண்க. முருகக் கடவுளைப் பயந்தமையான் மாமோடு என்றார். துணங்கை - ஈண்டுக் காளிக்கு முன்னர்க் கூளிகள் ஆடுங் கூத்தென்க. அம்செல்வி - அழகிய இறைவி. எல்லாப்பொருளும் அவளுடைமையே யாகலான் அம்செல்வி என்றார். அணங்கு -பேய். நொடித்தல் - நொடி கூறுதல்: அஃதாவது: விருந்து மொழிவிளம்பல். பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு (கலி-89:8) என்றும், காடு கெழுசெல்விக்குப் பேய் கூறும் அல்லல் போல (தொல்.மெய்ப்.12,பேர்.) என்றும் வருவனவற்றானும், பரணி நூல்களில் காளிக்குக் கூளி கூறும் பகுதியானும் இதனை உணர்க. மெய்யுணர்வுடைய சான்றோரானும், அறிதற்கரிய பெரும் புகழுடைய காடு கெழு செல்வியை மயக்கமுடைய பேய் புகழ்ந்தாற்போன்று யான் நின்னைப் புகழ்ந்து வந்தேன் என்றவாறு.
இதுவுமது
462-464 : இடனுடைப் பேரியாழ் ................. தெரியாவளவை
பொருள் : இடன் உடைப் பேரியாழ் முறையுளி கழிப்பி - இடப்பக்கத்தே தழுவுதலுடைய பேரியாழை இயக்கு முறையிலே இயக்கி, கடன் அறி மரபின் கைதொழூஉ பழிச்சி - யாழ்த் தெய்வத்திற்கு இயற்றும் கடப்பாடறிந்த முந்தையோர் முறைப்படியே இயற்றிக் கையாற் றொழுது நாவாற் புகழ்ந்து, நில் நிலை தெரியா அளவை - நீ நிற்கின்ற நிலையினைத் தெரிதற்கு முன்னரே;
கருத்துரை : இடப்பக்கத்தே தழுவுதலுடைய பேரியாழை இயக்கு முறையானே இயக்கி முந்தையோர் யாழ்த் தெய்வத்தை வழிபடுமாற்றானே வழிபட்டுக் கையாற் றொழுது நாவானேத்தி நீ நின்ற பொழுது, நீ நிற்கின்ற நிலையினை அவ் விளந்திரைய வள்ளல் அறிதற்கு முன்பே என்பதாம்.
அகலவுரை : யாழ் இடப்பக்கத்தே தழுவி இயக்குதல் மரபாகலின் இடனுடைப் பேரியாழ் என்றார். இன்குரற் சீறியாழ் இடவயிற் றழீஇ எனச் சிறுபாணாற்றுப்படையினும் வருதல் அறிக. இதனை,
அல்லியம் பங்கயத்து அயனினிது படைத்த
தெய்வம் சான்ற தீஞ்சுவை நல்யாழ்
மெய்பெற வணங்கி மேலொடு கீழ்புணர்த்து
இருகையின் வாங்கி இடவயி னிரீஇ
மருவிய வினய மாட்டுதல் கடனே
என்பதனானும் அறிக.
இடனுடைப் பேரியாழ் என்றதற்கு, தனக்குக் கூறுகின்ற இலக்கணங்களைத் தன்னிடத்தேயுடைய பெரிய யாழ் என்பர் நச்சினார்க்கினியர். இனி, பேரியாழ் மகரயாழ் சகோடயாழ் செங்கோட்டியாழ் என்னும் நால்வகை யாழ்களுள் ஈண்டுப் பேரியாழ் கூறப்படுதலால் இதனை இயக்கும் பாணர் பெரும்பாணர் எனப்பட்டார்; இதனால், இப்பாட்டும் பெரும்பாணாற்றுப்படை எனப்பட்டது. சீறியாழ், இடவயிற் றழீஇ எனச் சிறுபாணாற்றுப்படையிற் கூறப்படுதலும் அறிக. பேரியாழ் இருபத்தொரு நரம்புடைத்தென்ப; இதனை,
ஒன்றும் இருபதும் ஒன்பதும் பத்துடனே
நின்றபதி னான்கும் பின்னேழும் - குன்றாத
நால்வகை யாழிற்கு நன்னரம்பு சொன்முறையே
மேல்வகை நூலோர் விதி (சிலப்.அரங்.உரைமேற்)
என்னும் வெண்பாவான் அறிக. முன்னர் வாழிய நெடிதெனக் கூறிப் பின்னர்க் கைதொழுஉப் பழிச்சி என்றதனால் ஈண்டு வாழ்த்துவது யாழ்த் தெய்வத்தை என்க. யாழ்த் தெய்வம் - மாதங்கி என்ப. இனி முழுமுதற் கடவுளை வாழ்த்தி என்றுமாம். என்னை?
கடவ தறிந்த இன்குரல் விறலியர்
தொன்றொழுகு மரபிற் றம்மியல்பு வழாஅது
அருந்திறற் கடவுட் பழிச்சிய பின்றை (மலைபடு - 536-8)
என்பவாகலான். நில்நிலை - நிற்கும் நிலை; வாழ்த்தி நிற்கின்ற நிலை என்க. மருக ! மள்ள ! செல்வ மேம்படுந ! செல்விக்கு அணங்கு நொடித்தாங்கு நின் பெயர் ஏத்தி வந்தேன்; பெரும! வாழிய என்று, யாழ் கழிப்பிப் பழிச்சி நில்நிலை தெரியா அளவை என்றியைத்துக் கொள்க. இனி 444-அந்நிலை என்பது தொடங்கி 493. அன்றே விடுக்கும் அவன் பரிசில் என்னுந் துணையும் ஒரு தொடர்; இதன்கண் தொண்டைமான் இளந்திரையன் பரிசிலர்க்குச் செய்யும் உபசாரங்களும் பரிசில்களும் விளக்கமாகக் கூறப்படும்.
தொண்டைமான் இளந்திரையனின் விருந்தோம்பற் சிறப்பு
464-470 : அந்நிலை ..................... உடீஇ
பொருள் : அந்நிலை - நீ நின்ற அந்த நிலையின்கண்ணே, நாவலந் தண் பொழில் வீவின்று விளங்க - நாவலாற் பெயர் பெற்ற அழகினையுடைய குளிர்ந்த உலகமெல்லாம் கேடின்றாக விளங்கும்படி, நில்லா உலகத்து நிலைமை தூக்கி - யாக்கை செல்வம் முதலிய நிலையுதலில்லாத உலகத்தே நிலைபேறுடையது புகழ் ஒன்றே என்பதனை ஆராய்ந்து, அந் நிலை அணுகல் வேண்டி - ஆண்டு நீ நிற்கின்ற சேய்த்தாய நிலையினின்றும் தன்னை அணுகுதற்கு விரும்பி யழைத்து, நின் அரைப்பாசி அன்ன சிதர்வை நீக்கி நின்னுடைய அரையிற் கிடந்த கொட்டைப் பாசியின் வேரை ஒத்த சிதறின சீரையை அகற்றி, ஆவியன்ன அவிர்நூற் கலிங்கம் இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடல் உடீஇ - பாலாவியை ஒத்த விளங்குகின்ற நூலாற் செய்த துகில்களைக் கரிய பெரிய சுற்றத்தோடே சேர உடலுக்கியைய உடுக்கச்செய்து;
கருத்துரை : நீ அவ்வாறு நின்ற அந்நிலையின்கண்ணே நாவலாற் பெயர் பெற்ற அழகிய குளிர்ந்த இவ்வுலகம் எல்லாம் கேடின்றாக விளங்கும்படி யாதொன்றும் நிலையுதலில்லாத இவ்வுலகத்தே புகழொன்றுமே நிலைக்கும் பொருளாதலை ஆராய்ந்தறிந்து, நீ முற்படச் சிறிது சேய்மைக் கண்ணின்ற அந்நிலையினின்றும் தன்னை அணுகும்படி விரும்பி யழைத்து, நின் அரையிலே யாக்கப்பட்ட பாசிவேரை யொத்த கந்தையை அகற்றித் தன் அரசவைச் சுற்றத்தோடே நீயும் வேற்றுமையின்றித் தோன்றும்படி உடலுக்கியையப் பாலாவியன்ன நூலாற் செய்த துகில்களை உடுக்கச் செய்து என்பதாம்.
அகலவுரை : நீ நின்ற நிலையே அவன் நில்லாவுலகத்து நிலைமை தூக்குதற்கு நிலைக்களனாகக் கொண்டென்பார், நிலையின் என இடப்பொருளாக்கிக் கூறினார். அவ்விளந்திரையன் இப்பேருலகத்தே வாழ்வோரெல்லாம் நன்கு வாழவேண்டும் என்னும் குறிக்கோளுடனே வழங்குமியல்பினன் என்பார், நாவலந் தண்பொழில் வீவின்று விளங்க என்றார்.
தீங்கனி நாவல் ஓங்குமித் தீவினுள் (மணி 9: 17) எனவரும் மணிமேகலையான் நாவலந் தண்பொழில் என்னும் பெயர்க்காரணம் உணர்க. நாவலந் தண்பொழில் வடபொழி லாயிடை (பரி-5:8) என்றும், நாவலந் தண்பொழின் மன்னர் (சிலப்-17:3) என்றும், நாவலந் தண்பொழில் நண்ணார் ஒற்றும் (சிலப்-25-173) என்றும், நாவலந் தண்பொழில் நண்ணாற் நடுக்குற (மணி 22:29) என்றும், பூமலி நாவற் பொழில் (புற-வெண்: 208) என்றும் சான்றோர் பிறரும் பிறாண்டும் ஓதுதல் காண்க. அந்நிலை அணுகல் வேண்டி என்றற்கு, அவ்வாறு நீ முற்பட நின்ற நிலையினின்றும் தன்னை அணுக விரும்பி என்க. தன்னுழைக் குறுகல் வேண்டி (புறம்-390) என்றார் பிறரும். பாசி - பாசியின் வேர்க்கு ஆகுபெயர். இதனைக் கொட்டைப் பாசி என்பர் நச்சினார்க்கினியர். பாசிவேர் புரையும் சிதார் என்றார் புறத்தினும்; நும் கையது கேளா அளவை ஒய்யெனப், பாசிவேரின் மாசொடு குறைந்த, துன்னல் சிதாஅர் நீக்கி (152-4) எனப் பொருநராற்றுப்படையினும் வருதல் காண்க.
சிதர்வை - சிதர்ந்தழித்த கந்தை. இது பாணனது முன்னைய வறுமை நிலைக்கு அறிகுறியாதல் அறிக. ஆவி - பாலாவி. இஃது ஆடையின் நுண்மைக்கு உவமை. புகைவிரிந் தன்ன பொங்கு துகில் (புறம்-388: 20) என்றும் ஆவியன்ன பூந்துகில் என்றும், ஆவி யந்துகிலார் அமர்ந்தார்களே என்றும், பாலா ராவிப் பைந்துகில் என்றும், (சீவக: 67.873, 1094) ஆவி நுண்டுகில் அணிகலம் (பெருங்க - 1. 40 : 228) என்றும், பிற சான்றோரும் ஓதுதல் காண்க. அணியெல்லாம் ஆடையிற் பின் என்பவாதலான் முன்னர் உடுத்தற் றொழிலை ஓதினார். பாணனது வறுமை நிலையை எல்லோர்க்கும் விளங்கக் காட்டி அவ்வரசவைச் சுற்றத்தினின்றும் அவனை வேறு படுப்பது ஆடையே ஆகலான், முற்படத் தன் சுற்றத்தார்க்கும் பாணர்க்கும் உள்ள வேற்றுமை தீர அணிந்தென்பார், இரும்பேரொக்கலொடு ஒருங்குடல் உடீஇ என்றார். கேளிர் போலக் கேள்கொளல் வேண்டி என்றார் பொருநராற்றுப் படையினும். இவ்வாறே புரலவர்கள் இரவலரைக் கண்டவுடன் முதலாவதாக அவர் வேற்றுமையுறத் தோன்றுதற்கு ஏதுவான அவருடைய கந்தையை அகற்றிச் சிறந்த ஆடை உடுக்கச் செய்தலை ஏனைய ஆற்றுப்படையுள்ளும் காணலாம்.
ஒன்றியான் பெட்டா அளவையின்...
வேரொடு நனைந்து வேற்றிழை நுழைந்த
துன்னற் சிதாஅர் துவர நீக்கி
நோக்கு நுழை கல்லா நுண்மைய பூக்கனிந்து
அரவுரி அன்ன அறுவை நல்கி (பொருந.73-83)
என்றும்,
நும், கையது கேளா அளவை ஒய்யெனப்
பாசி வேரின் மாசொடு குறைந்த
துன்னற் சிதாஅர் நீக்கித் தூய
கொட்டைக் கரைய பட்டுடை நல்கி (பொருந.152-5)
என்றும்,
நீசில மொழியா அளவை மாசில்
காம்புசொலித் தன்ன அறுவை உடீஇ (சிறுபாண். 235-6)
என்றும்,
சென்றது நொடியவும் விடாஅன்...
இழைமருங்கு அறியா நுழைநூற் கலிங்கம்
எள்ளறு சிறப்பின் வெள்ளரைக் கொளீஇ (மலைபடு. 545-562)
என்றும் வருவனவற்றால் புரலவர் முற்பட உடுப்பித்தற்கே விரைதல் உணர்க.
இளந்திரையன் இரவலரை ஊட்டுதற் சிறப்பு
471-479 : கொடுவாள் .............. ஊட்டி
பொருள் : கொடுவாள் கதுவிய வடுவாழ் நோன்கை வல்லோன் அட்ட பல்லூன் கொழுங்குறை -வளைந்த அரிவாளைக் கொண்ட வடுவழுந்தின வலியை உடைத்தாகிய கையினையுடைய மடையன் ஆக்கின பல இறைச்சியிற் கொழுவிய தசைகளும், அரி செத்து உணங்கிய பெருஞ்செந்நெல்லின் - அரிக்குவை நீர் செத்துப்போம்படி உலரவிட்ட பெரிய செந்நெல்லினுடைய, தெரிகொள் அரிசி - ஆராய்ந்து பொறுக்கிக்கொண்ட அரிசியாலாக்கின, திரள் நெடும் புழுக்கல் - திரண்ட நெடிய சோறும், அருங்கடித் தீஞ்சுவை அமுதொடு பிறவும் - அரிய காவற்கண் வைத்துப் போற்றிய இனிய சுவையுடைய அமிழ்தம் போன்ற வண்டிகளும் பிறவும் ஆகிய, விருப்புடை மரபிற் காப்புடை அடிசில் - கண்டோர் விரும்பும் முறைமைத்தாகிய மூடிவைத்தலையுடைய அடிசில்களை, மீன்பூத்தன்ன வான்கலம் பரப்பி - வான மீன்கள் இரவின்கண் மலர்ந்தாற்போன்று வெள்ளிக் கலங்களைப் பரக்க இட்டு, மகமுறை மகமுறை நோக்கி - நுங்களில் ஒவ்வொருவரையும் தாய் மகவினைப் பார்க்குமாறுபோலப் பிள்ளை முறை பிள்ளை முறையாகப் பார்த்து, முகன் அமர்ந்து - முகம் இனிது காட்டி, ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி - அமையாத விருப்பத்துடனே தான் எதிர்நின்று இன்சொல்லாலே மேலும் நும்மை உண்ணச் செய்து;
கருத்துரை : அரிவாளைக் கொண்ட வடுக்கிடந்த வலிய கையை யுடைய மடையன் ஆக்கின பல இறைச்சியிற் கொழுவிய தசைகளும் அரிக்குவை ஈரம் வற்றும்படி உலரவிட்ட பெரிய செந்நெல்லினுடைய பொறுக் கரிசியாலாக்கின திரண்ட நெடிய சோறும், அரிய காவலமைந்த இனிய சுவையாலே அமிழ்தத்தை ஒக்கும் உண்டிகளோடு பிறவும் ஆகிய மூடுதலையுடைய அடிசிலை விண்மீன்போன்ற வெள்ளிக் கலங்களைப் பரப்பி நுங்களைத் தாய் பிள்ளையைப் பார்க்குமாறு போலே பார்த்து முகத்தான் அமர்ந்து நீங்காத விருப்பத்தோடே தானே எதிர்நின்று உபசரித்து நும்மை உண்ணச் செய்து என்பதாம்.
அகலவுரை : கொடுவாள் - அரிவாள். எப்பொழுதும் இறைச்சிகளையும் காய் முதலியவற்றையும் அரிதலாலே அரிவாள் பிடித்தவிடத்தே வடுப்பட்ட கையையுடைய மடையன் என்க. இது மடைத்தொழில் மிகுதி கூறியவாறாம். கதுவுதல் - பிடித்தல். மிக்க இறைச்சி முதலியவற்றை அரியவேண்டுதலானும் அடிசில் மிகவும் ஆக்கவேண்டுதலானும் நோன்கை மடையன் எனல் வேண்டிற்று. வல்லோன் என்றார் மடை நூல்கற்று அடிசில் அமைத்தலில் வல்லவன் என்றற்கு. மான் முதலிய விலங்கிறைச்சியும் கோழி முதலிய பறவை யிறைச்சியும் ஆக, ஊன்பல வேறாகலின் பல்லூன் என்றார். கொழுங்குறை என்றது, ஆராய்ந்தெடுத்த கொழுப்புடைய இறைச்சி என்றவாறு. குறைக்கப்படுதலால் இறைச்சி குறை எனப்பட்டது. குறைத்தல் - துண்டு செய்தல்; வெட்டுதல். கைகுறைத்தான் என்புழிப்போல.
அரி-நெற்கதிரை அரிந்திட்ட குவை. அஃது இக் காலத்தும் அரி என்றே வழங்கப்படுதலுணர்க. நெல்லின்பசுமை தீரும் பொருட்டு அரியை வெய்யிலிற் காய விடும் வழக்கம் இன்றுமுளது. அரி செத்துணங்கிய என்றது அரிக்குவை ஈரஞ் செத்துப் போம்படி உலர்ந்த என்றவாறு. அரிசெத் துணங்கிய என்றதற்கு, நிறத்தால் ஞாயிற்றை ஒத்து உலர்ந்த என்றார் நச்சினார்க்கினியர். மேலும், உவமையின்றாக வென்றுமாம் என்றும் கூறினர். அரி செய்தென்றும் பாடம். அப்பாடத்திற்கு அரிதலைச் செய்தென்று பொருள் கூறிக் கொள்க.
பெருஞ் செந்நெல் என்றது, வளவிய கழனிக்கண் நீர்வளம் எரு முதலியன பெற்றுப் பரியவாகிய செந்நெல் என்றவாறு. கொழுப்புடைய நெல் என்க. பிற நெல் கலப்புறாதபடி பொறுக்கிய நெல் என்பார்தெரிகொள் அரிசி என்றார். திரள் நெடும் புழுக்கல் என்றது, அரிசி முனை முரிவின்றித் திரண்டிருத்தலின் அங்ஙனமே பருக்கைகள் முனை முரிவின்றித் திரண்டன என்றவாறு. இனித் திரண்ட சோறெனக் கொண்டு மிக்க சோறென்றலுமாம். புழுக்கல்-சோறு. ஈ, எறும்புகள் ஆகிய நுண்ணுயிர்களும் மொய்க்காதபடியும், துகள்படியாதபடியும் மூடிக் காவல் செய்யப்படுதலின் அருங்கடி அடிசில் என்றார். அருங்கடி - அரிய காவல்; தீஞ்சுவையானே அமுதமனைய உண்டி என்க. பிற என்றது, பல்வேறு பண்ணிகாரங்களையும். அவற்றைக் கண்டோர் பெரிதும் விரும்புதற்குக் காரணமான உண்டி என்பார், விருப்புடை அடிசில் என்றார், கரப்பு - மூடியிடல்.
தூய்மையானும், ஒளியுடைமையானும், பலவாதலானும் உண்கலன்களை விண்மீன்களோடு உவமித்தார்.
வாணிற விசும்பின் கோண்மீன் சூழ்ந்த
இளங்கதிர் ஞாயி றெள்ளுந் தோற்றத்து
விளங்கு பொற்கலம் (242-4)
எனச் சிறுபாணாற்றுப் படையினும்,
கோண்மீ னன்னபொலங்கலத் தலைஇ (372:17)
எனப் புறத்தினும் வருதல் காண்க. தொடிக்கை மகடூஉ மகமுறை தடுப்ப (சிறுபாண்-192) என்றும், அகமலி உவகை ஆர்வமொடளைஇ, மகமுறை தடுப்ப மனைதொறும் பெறுகுவிர் (மலைபடு, 184-5) என்றும், பிறசான்றோரும் கூறுதல் காண்க. ஆனா விருப்பம் - இவர் மேலும் மேலும் உண்டு மகிழ வேண்டும் என எழும் அமையாத ஆசை. இஃது அன்பு மிகுதி கூறியவாறு. இவ்வன்பில்லா வழி விருந்தோம்பல் சிறவாமையும் அறிக. இவ்வடி இவ்வாறே சிறுபாணாற்றுப் படையினும் (245) வருதல் காண்க. தான் நின்று ஊட்டுதலாவது, அவ்வரசனே அவர் உண்ணுங்கால் எதிர்நின்று முகமன் மொழிந்து மேலும் உண்ணச் செய்தல். விருந்தோம்பற்கண் தலைசிறந்த செயல் இஃதென்க.
முகத்தா னமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம் (குறள் . 93)
என்றோதுபவாகலான், முகனமர்ந்து .... ஊட்டி என்றார்.
பரிசிற் சிறப்பு
480-486 : மங்குல் .................... விறலியர் மலைய
பொருள் : மங்குல் வானத்துத் திங்கள் ஏய்க்கும் ஆடுவண்டு இமிரா அழல் அவிர் தாமரை - இருண்ட வானத்தின் கண் திங்களைப் போன்ற உலாவும் வண்டுகள் ஒலியாத தீயிடத்தே கிடந்து மலர்ந்த வெண்பொற்றாமரையை, நீடு இரும் பித்தை பொலியச் சூட்டி - நீண்ட கரிய மயிரிடத்தே அழகு பெறச் சூட்டி, உரவுக் கடன் முகந்த பருவ வானத்துப் பகற் பெயல் துளியின் மின்னு நிமிர்ந் தாங்கு - வலியுடைய கடலின்கண் நீரை முகந்துகொண்ட பருவ காலத்து முகிலினின்றும் பகற்காலத்தே பெய்கின்ற துளியின்கண் மின்னல் ஓடினாற் போன்று, புனை இரும் கதுப்பகம் பொலிய - கைசெய்த கரிய மயிரிடம் அழகு பெறும்படி, பொன்னின் தொடை அமை மாலை விறலியர் மலைய - பொன்னாற் செய்து சேரக் கட்டின மாலையை ஆடும் மகளிர் சூடாநிற்ப.
கருத்துரை : இருள் வானத்துத் திங்கள் போன்று வண்டு மூசாத தீயிற் பிறந்த வெண் பொற்றாமரை நெடிய கரிய மயிர் அழகுறச் சூட்டி வலிய கடலின் நீரை முகந்து கொண்ட முகிலினின்றும் பகற்காலத்தே பெய்யும் துளியூடே மின்னல் ஓடினாற்போன்று கை செய்யப்பட்ட கூந்தலிடம் அழகுறும்படி பொன்னாற் செய்து தொடுத்தலமைந்த மாலையை விறலியர் சூடா நிற்ப என்பதாம்.
அகலவுரை : மங்குல் - இருள் திசையுமாம். இருள் வானம், நீடிரும் பித்தைக்கும் திங்கள் பொற்றாமரைக்கும் உவமைகள் என்க. திங்களை உவமை கூறுதலானே இது வெள்ளியாற் செய்த தாமரைப்பூ என்க. திங்கள் பொற்றாமரைக்கு உவமையாகாதெனக் கருதி நச்சினார்க்கினியர், மங்குல் வானத்து மீன்பூத் தன்ன வான்கலம் திங்கள் ஏய்க்கும் வான் கலம், என 477 ஆம் அடியோடே மாட்டேற்றினர்.
இனி, திங்கள், இது தாமரை என்று நினைத்துக் குவிக்க முயலும் படி அதனை மருட்டும் பொற்றாமரை எனக் கொண்டு செம் பொற்றாமரையே எனக் கோடலுமாம். இப் பொருட்கு ஏய்க்கும், என்றதற்கு ஏமாற்றும், அல்லது மருட்டும் என்று பொருள் கொள்க. காப்பாரே போன்றுரைத்த பொய் குறளை - ஏய்ப்பார் (193) என வரும் பழமொழியுள்ளும், ஏய்த்தல், இப் பொருட்டாதலறிக. பொற்பூ வாதலின் ஆடுவண்டிமிராத் தாமரை என்றார். ஆடும் வண்டிமிராத் தாமரை சூடாயாதல் அதனினும் இலையே (69:20-1) என்றார் புறத்தினும். பண்டை நாள் பாணர் முதலியோர்க்குப் பொற்பூச் சூட்டும் வழக்கமுண்மையை,
எரியகைந் தன்னவேடில் தாமரை
சுரியிரும் பித்தை பொலியச் சூட்டி
நூலின் வலவா நுணங்கரின் மாலை
வாலொளி முத்தமொடு பாடினி யணிய (பொருந.159-62)
என்றும்,
பாணர் தாமரை மலையவும் (புறம். 12:1)
என்றும்,
அழல் புரிந்த அடர்த் தாமரை
ஐதடர்ந்த நூற் பெய்து
புனைவினைப் பொலிந்த பொலனறுந் தெரியல்
பாறுமயிர் இருந்தலை பொலியச் சூடிப்
பாண்முற் றுகநின் நாண்மகி ழிருக்கை
என்றும்,
ஒன்னார் யானை ஓடைப்பொன் கொண்டு
பாணர் சென்னி பொலியத் தைஇ
வாடாத் தாமரை சூட்டிய விழுச்சீர் (புறம். 126:1-3)
என்றும், வரும் பிறர் கூற்றானும் உணர்க.
உரவுக் கடல் - வலிய கடல். பருவ வானம் - பருவ காலத்து முகில்: ஆகுபெயர். மழை கால் வீழ்த்திருத்தல் பகற் பொழுதிலே மட்டும் தோன்றுதலின் பகற்பெயர் றுளி என்றார். எனவே மழை கால் வீழ்த்தமை என்பதாயிற்று. இது விறலியர் கூந்தற்கும் அதனிடை மின்னல் உயர்ந்தோடல் பொன்மாலைக்கும் உவமைகள் என்க. புனைதல் - கை செய்தல். கதுப்பு - கூந்தல். விறலியர் - விறல்பட ஆடும் மகளிர்.
இளந்திரையன் பரிசில்தரும் தேர்ச்சிறப்பு
487-490 : நூலோர் .................. அமையான்
பொருள் : நூலோர் புகழ்ந்த மாட்சிய - குதிரை நூல் கற்றோர் புகழ்ந்த மாண்புடையனவாய், மால் கடல் வளைகண்டன்ன வால் உளைப் புரவி - திருமாலினுடைய பாற்கடலிடத்தே சங்கைக் கண்டாற் போன்ற வெள்ளிய பிடரிமயிரையுடைய குதிரைகள், துணை புணர் தொழில் - இனத்தோடு ஒத்துத் தொழில் செய்வன, நால்குடன் பூட்டி - நான்கினை ஒரு சேரப்பூட்டி, அரித்தேர் நல்கியும் அமையான் - பொன்னாற் செய்த தேரைத் தந்தும் கொடைமேல் விருப்பந் தவிரானாய்;
கருத்துரை : குதிரைநூல் கற்றோரானே நல்லன இவை என்று புகழப்பட்ட மாண்புடையனவும், திருப்பாற் கடலிடத்தே சங்கைக் கண்டாற் போன்ற வெள்ளிய பிடரிமயிரையுடையனவும், தம்மினத்தோடே இயைந்து தொழில் செய்வனவும், ஆகிய சிறந்த குதிரைகள் நான்கனை ஒரு சேரப் பூட்டிய பொன்னாற் செய்த தேரினைத் தந்தும் கொடை விருப்பம் தவிரப்பெறாதவனாய் என்பதாம்.
அகலவுரை : நூல் - ஈண்டுக் குதிரை நூல் என்க. உன்னயம் முதலாம் குதிரை நூலறிவோன் (வில்லி பாரதம்-நாடுகரந்-21) எனப் பிறர் கூறுமாற்றான் குதிரைநூல்கள் பல இருந்தமை அறிக. மாட்சிய - மாண்புடையன. வெண்ணிறப் புரவியாகலான் மால் கடல் என்றதற்குக் கருங்கடல் என்பதினும், திருமாலின் பாற்கடல் எனப் பொருள் கோடலே சிறப்பாதலறிக. ஏனைக் கடற்சங்கினும் பாற்கடற் சங்கு மிகவும் வெள்ளிதாதலும் உணர்க. புரவிகளில் வெண்ணிறப் புரவியே உயரிய வென்ப: வளை-சங்கு. உளை - பிடரிமயிர். நால்கு - நான்கு என்பதன் திரிசொல், பால்புரை புரவி நால்குடன் பூட்டி எனப் பொருநராற்றுப் படையினும் நால்குப்பண்ணினர் நால்வரும் ஏறினர் (1774) எனச் சீவக சிந்தாமணியினும் வருதல் காண்க. நான்கு புரவிகளும் தம்முண் மாறுபாடின்றி ஒத்தியங்குவன என்பார், துணைபுணர் தொழில் என்றார். அரித்தேர் என்றதற்குக் காற்றை ஒத்த தேர் என்பாருமுளர். உடுத்தும் உண்ணச் செய்தும் தாமரை சூட்டியும் மாலை சூடச் செய்தும் தேர் நல்கியும் கொடைமேல் விருப்பந் தவிரானாய் என்க. இதனால் அவ்விளந்திரைய வள்ளலின் கொடைக்குண மிகுதி குறித்தார். இதனை, புகழுநர்க்கு அரசு முழுது கொடுப்பினும் அமரா நோக்கம் (73-4) என்பர் மலைபடுகடாத்தினும்.
தன்னறி பளவையிற் றரத்தர யானும்
என்னறி யளவையின் முகந்து கொண்டு
இன்மை தீர வந்தனன் (பொருந.127-9)
என்புழியும் வள்ளலின் ஆராமைப் பண்புணர்க.
திரையவள்ளலின் பரிசில் நீட்டியாப் பண்புடைமை
490-493 : செரு .................... பரிசில்
பொருள் : செருத்தொலைத்து - தன்னுடன் வந்து பொருதோருடைய போர்களை மாளப்பண்ணி, ஒன்னாத் தெவ்வர் உலைவிடத்து ஒழித்த விசும்புசெல் இவுளியொடு - தன் ஏவலைப் பொருந்தாத பகைவர் முதுகிட்ட விடத்தே விட்டுப்போன விண்ணிலே விரைகின்ற குதிரைகளுடனே, பசும்படை தந்து - பசிய சேணமுந் தந்து, அன்றே அவன் பரிசில் விடுக்கும் - நீ சென்ற அற்றை நாளே அவ்வள்ளல் நினக்கு ஏனைய பரிசிலும் தந்து விடுவான்;
கருத்துரை : மேலும் தன்பால் வந்து எதிர்ந்த பகைவர்களைப் போர் மாளப் பண்ணிய பொழுது அவர் விட்டுப் போன ஏறுகுதிரைகளையும் பசிய சேணங்களையும் பிற பரிசில்களையும் தந்து நீ சென்ற அற்றை நாளிலேயே உனக்கு விடைதந்து போக்குவான் என்பதாம்.
அகலவுரை : ஒன்னார் யானை ஓடைப் பொன் கொண்டு பாணர் சென்னி பொலியத் தைஇ (புறம் - 126) என்பதனானும்,
புரலவராகிய வேந்தர்கள் தம்பகைவர் பொருளைக் கவர்ந்து பரிசிலர்க்கு வழங்கும் வழக்கமுடையர் என்பதை,
ஏற்றுக உலையே ஆக்குக சோறே
கள்ளும் குறைபடல் ஓம்புக ஒள்ளிழைப்
பாடுவல் விறலியர் கோதையும் புனைக
அன்னவை பிறவும் செய்க என்னதூஉம்
பரியல் வேண்டா வருபதம் நாடி
ஐவனங் காவலர் பெய்தீ நந்தின்
ஒளிதிகழ் திருந்துமணி நளியிருள் அகற்றும்
வன்புல நாடன் வயமான் பிட்டன்
ஆரமர் கடக்கும் வேலும் அவனிறை
மாவள் ளீகைக் கோதையும்
மாறுகொண் மன்னரும் வாழியர் நெடிதே (புறம்-172)
என வருவதனானும் அறிக. செரு - போர் ஒன்னா - ஏவல் கேளாத. தெவ்வர் -பகைவர். உலைவிடம் - முதுகு காட்டி ஓடியவிடம். முதுகிட்டோடுவோர் தம் யானை குதிரை தேர் முதலியவற்றை விட்டோடுதல் இயல்பு. இசும்பு செல் இவுளி எனக் கொண்டு ஏற்றிழிவுகளிற் செல்லும் குதிரை என்பாருமுளர். அன்றே விடுக்கும் என்றது, பரிசில் நீட்டியான் என்றவாறு. அவன் - அவ்வள்ளலாகிய இளந்திரையன்.
தொண்டைமான் இளந்திரையன்
493-500 : இன்சீர் ............... மலைகிழவோனே
பொருள் : இன்சீர்க் கின்னர முரலும் அணங்குடைச் சாரல் - இனிய தாளத்திலே கின்னரம் என்னும் பறவைகள் பாடும் தெய்வங்கள் உறையும் சாரலிடத்தே, மஞ்ஞை ஆலும் மரம்பயில் இறும்பில் - மயில்கள் ஆடும் மரம் நெருங்கின இள மரக்காட்டினையும், கலைபாய்ந்து உதிர்த்த மலர்வீழ் புறவின் - முசுக்கலைகள் பாய்ந்து உதிர்த்த மலர்கள் சிந்தின காட்டினையும் உடைய மந்தி, சீக்கும் மா துஞ்சும் முன்றில் - மந்திகள் அவ்விடத்துக் கிடந்த துராலை வாரும் மானும் புலியும் துயில் கொள்ளும் முற்றத்தே, செந்தீப் பேணிய முனிவர் - சிவந்த தீயைக் கைவிடாமற் காத்துப் போந்த முனிவர்கள், வெண்கோட்டுக் களிறு தரும் விறகின் வேட்கும் -வெள்ளிய கொம்பினையுடைய களிற்றியானைகள் முறித்துக் கொண்டு வந்து தந்த சமிதையாலே வேள்வியைச் செய்யாநின்ற, ஒளிறு இலங்கு அருவிய மலை கிழவோன் - புகழானே ஒளிறுகின்ற விளங்கும் அருவிகளையுடையவாகிய வேங்கடமலையை ஆளும் உரிமையுடையோன்.
கருத்துரை : இனிய தாளத்திற் கேற்பக் கின்னரப்புட் பாடுவதும், தெய்வங்கள் உறையும் சாரலையுடையதும், மயில்கள் ஆடும் இளமரக் காடுகளையுடையதும், முசுக்கலை பாய்தலானே உதிரும் மலர்களையுடைய காட்டினையுடையதும், மந்திகள் துராலை வாருகின்ற மானும் புலியும் துயில் கொள்ளும் தந் தவப்பள்ளியின் முற்றத்தே செந்தீயோம்பும் முனிவர்கள் வெண்கோட்டுக் களிறுகள் முறித்துக் கொணர்ந்து தருகின்ற விறகாலே வேள்வி செய்யப் பெற்றதும், புகழானே ஒளிறுவதும் அருவிகளை உடையதுமாகிய இவ்வேங்கடமலையை ஆளும் உரிமையுடையோன் என்பதாம்.
அகலவுரை : அவன் யாரெனில் மலைகிழவோன் என்க. இன்சீர் - இனிய தாளம். கின்னரம் - ஒருவகைப் பறவை. இஃது இசையின் சிறப்பிழிபுகளை அறியவல்லதொரு பறவை என்ப; இதனை,
மாதர் யாழ் தடவர வந்த மைந்தர்கைக்
கீதத்தான் மீண்டன கேள்விக் கின்னரம்
போதரப் பாடினாள் புகுந்த போயின
தாதலர் தாரினார் தாங்கள் பாடவே
எனவரும் சீவக சிந்தாமணியானும் உணர்க. இப்பறவைகள் தாமே இன்னிசைப்பாடல் பாடவல்லன என்பதை,
ஆடுகின்றமா மயிலினும் அழகிய குயிலே
கூடுகின்றிலர் கொடிச்சியர் தம்மனம் கொதிப்ப
ஊடுகின்றிலர் கொழுநரை உருகினர் நோக்கப்
பாடுகின்றன கின்னர மிதுனங்கள் பாராய் (சித்திர - 12)
எனவரும் இராமாவதாரத்தானும் உணர்க. அணங்கு - தெய்வம். ஆலும்-ஆடும்; ஆரவாரிக்கும் எனினுமாம். இறும்பு - இளமரக்காடு. கலை -முசுக்கலை; குரங்கு.
முனிவர்களுடைய தவப்பள்ளி முன்றிலை நாள்தோறும் மந்திகள் துராலை வாரித் தூய்தாக்கும் என்றும், அம்முன்றிலிலே ஒன்றற்கொன்று பகைக்குணமுடைய மானும் புலியும் அப்பகைக் குணமொழிந்து அன்புடையவாய் உறங்கும் என்றும், அப்பள்ளியில் வாழும் முனிவர்கள் இடையறாது தீயோம்புதற் றொழிலாகிய வேள்வியைச் செய்வர் என்றும், அவ்வேள்விக்காம் விறகுகளைக் களிற்று யானைகள் முறித்துக் கொணர்ந்து அம்முனிவர்கட்கு அளிக்கும் என்றும் கூறி இந்நிகழ்ச்சிகளானே அம்மலையின் தெய்வத்தன்மையும் ஆண்டுவாழும் முனிவர்களின் தவச் சிறப்பும், அம்மலையின் தெய்வத்தன்மையானும் அம்முனிவரின் தவச்சிறப்பானும்; குரங்கு முதலிய விலங்குகளும் தம்முள் இகல்தீர்ந்து அன்புகூர்ந்து வாழ்தலும் முனிவர்கட்கு உதவுதலும். இவையிற்றிற் கெல்லாம் காரணமாகிய திரையமன்னனின் செங்கோன்மைச் சிறப்பும் இனிதின் ஓதியவாறு உணர்க. என்னை?
மாதவர் நோன்பும் மடவார் கற்பும்
காவலன் காவல் இன்றெனின் இன்றால் (மணி - 22:208-9)
என்பவாகலான், ஈண்டு மாதவர் நோன்பின் சிறப்புக் கூறவே அதற்கேதுவாகிய செங்கோண்மைச் சிறப்பே கூறியவாறாமாகலின் என்க. இனி இவ்வாறு தவச்சிறப்புடைய முனிவர்கட்கு, விலங்குகளும் பணிபுரிந்துதவுதலை, ஈண்டுக் கண்ட கம்ப நாடர், இதன் இனிமையிற்றிளைத்துத் தமது பெருங்காப்பியத்தினும் இக் கருத்தை விரித்தமைத்துக் கொண்டமையை,
வளைகள் காந்தளிற் பெய்தன அனைய கைம்மயிலே!
தொளைகொள் தாழ்தடக் கைநெடுந் துருத்தியிற் றூக்கி
அளவின் மூப்பினர் அருந்தவர்க் கருவிநீர் கொணர்ந்து
களப மால்கரி குண்டிகை சொரிவன காணாய்
என்றும்,
வடுவின் மாவகி ரிவையெனப் பொலிந்தகண் மயிலே!
இடுகு கண்ணினர் இடருறு மூப்பினர் ஏக
நெடுகு கூனல்வால் நீட்டின உருகுறு நெஞ்சக்
கடுவன் மாதவர்க் கருநெறி காட்டுவ காணாய்
என்றும்,
பாந்தள் தேரிவை பழிபடப் பரந்தபே ரல்குல்!
ஏந்து நூன்மணி மார்பினர் ஆகுதிக் கியைந்த
கூந்தன் மென்மயில் குறுகின நெடுஞ்சிறை கோலிக்
காந்து குண்டத்தின் வயங்கெரி எழுப்புவ காணாய்
என்றும்,
அலம்பு வார்குழல் ஆய்மயிற் பெண்ணருங் கலமே!
நலம்பெய் வேதியர் மார்பினுக் கியைவுற நாடிச்
சிலம்பி பஞ்சினிற் சிக்கறத் தெரிந்தநூல் தேமாம்
பலம்பெய் மந்திக ளுடன் வந்து கொடுப்பன பாராய்
என்றும்,
தெரிவை மார்க்கொரு கட்டளை எனச்செய்த திருவே!
பெரிய மாக்களிற் பலாக்களிற் பிறங்கிய வாழை
அரிய மாக்கனி கடுவன்கள் அன்புகொண் டளிப்பக்
கரிய மாகிழங் ககழ்ந்தன கொணர்வன காணாய்
என்றும்,
ஐவ னக்குரல் தினைக்கதிர் இறுங்கவை யவரை
மெய்வ ணக்குறு வேயினம் ஈன்றமெல் லரிசி
பொய்வ ணக்கிய மாதவர் புரைதொறும் புகுந்துன்
கைவ னத்தவாய்க் கிள்ளைதந் தளிப்பன காணாய்
என்றும்,
இடிகொள் வேழத்தை எயிற்றொடும் எடுத்துடன் விழுங்கும்
கடிய மாசுணங் கற்றறிந் தவரென வடங்கிச்
சடைகொள் சென்னியர் தாழ்விலர் தாமிதித் தேறப்
படிகள் தாமெனத் தாழ்வரை கிடப்பன பாராய்
என்றும்,
(இரா-சித்திரகூடம்) அழகாக விரித்தோதுதல் அறிக. இதனால் பண்டைத் தமிழிலக்கியங்களே பிற்கால இலக்கியங்கட்கு முதலாய் நிற்றலும் அறிக. வேட்கும் - வேள்வி செய்யும். மலைகிழவோன் - மலையை ஆளும் உரிமையுடையோன். இவ்வாறு தெய்வத்தன்மை கூறியதனால் இம்மலை திருவேங்கடம் என்க. திருவேங்கடம் பல மலைக்குழுவாதலான் அருவிய எனப் பன்மை கூறினார். ஒளிறுதல் - புகழாற் றிகழ்தல் என்க. இனி, நாவலந் தண்பொழில் வீவின்று விளங்க நிலைமை தூக்கி உடீஇ ஊட்டிச் சூட்டி மலையத் தேர்நல்கியும் அமையான் இவுளியொடு பசும்படை தரீஇ அன்றே அவன் பரிசில் விடுக்கும்; அவன் யாரெனில் மலைகிழவோன் என்க. இனி, இப்பாட்டின் தொடக்கமுதல் இறுதிவரை கொண்டு கூட்டும், மாட்டேறும் வேண்டாது பின்வருமாறு யாற்றொழுக்காகப் பொருண்முடிவு காண்க.
புலவுவாய்ப் பாண! பெருவளன் எய்தி முகந்துகொண்டு யாம் அவணின்றும் வருதும், நீயிரும் திரையற் படர்குவிராயின், கேள் அவனிலையே; கெடுக நின் அவலம்; கொடியோரின்று அவன் புலம் உருமும் உரறாது; அரவும் தப்பா; மாவும் உறுகண் செய்யா; ஆதலின், அசைவுழி அசைஇச் சென்மோ; அங்ஙனம் செல்லுங்கால்; வில்லுடை வைப்பின் இயவின் செவ்வரை நாடன் சென்னியம் எனினே, தேக்கிலை குவைஇக் கடும்பொடு பதமிகப் பெறுகுவிர். அருஞ்சுரம் இறந்த அம்பர், எயினக் குறும்பிற் சேப்பின், சொன்றி உடும்பின் வறைகால் யாத்தது வயின்றொறும் பெறுகுவிர். முரண்டலை கழிந்த பின்றைக் கோவலர் குடிவயிற் சேப்பின் மூரல் பாலொடும் பெறுகுவிர். பின்னர்ப் பறவை ஓர்க்கும் புலம் போகிக் கவின் குடிச் சீறூர்களில் வரகின் சொன்றி புழுக்கை அட்டி மூரற் பெறுகுவிர்; பின்னர் ஞாங்கர் வன்புலம் இறந்த பின்றை மல்லற் பேரூர் மடியின், வல்சி வாட்டொடும் பெறுகுவிர்.
பின்னர்க் கரும்பின் தீஞ்சாறு விரும்பினிர் மிசைமின் பின்னர் வலைஞர் குடிவயிற் சேப்பின், பிழி, சூட்டொடு பெறுகுவிர், பின்னர்க் கடவுள் ஒண்பூ அடைதல் ஓம்பிக், குறுநரிட்ட பன்மலர் பிணையினிர் கழிமின், பின்னர் மறைகாப்பாளர் உறைபதிச் சேப்பின், அத்தம் காடியின் வகைபடப் பெறுகுவிர் பின்னர் நீர்ப்பெயற் றெல்லை போகிப் பட்டின மருங்கின் அசையின், நிணத் தடியோடு நறாப் பெறுகுவிர். பின்னர் துறை பிறக்கொழியப் போகித் தனிமனைச் சேப்பின், ஆண்டுத் தீம்பஃறாரம் முனையில், முதிர் கிழங்கு ஆர்குவிர். பின்னர்ப் பன் மர நீளிடைப் போய், நாடுபல கழிந்த பின்றை, பள்ளி அமர்ந்தோன் ஆங்கண், பெருந்துறைச் செவ்வி கொள்பவரோடு அசைஇ, அவ்வயின் கடவுள் வாழ்த்தி இன்னியம் இயக்கினிர் கழிமின், இங்ஙனம் சென்று இப்பொழுது கச்சியோனே கைவண்டோன்றல், ஆண்டுப் பணிந்த மன்னர் செவ்விபார்க்கும் முற்றத்துப் பொன் றுஞ்சு வியன கரகத்தே பகல் செய் மண்டிலம் பாரித்தாங்கு, அருளி, சுற்றத்தோடிருந்தாற் குறுகித் தொண்டையோர் மருக! மள்ளர் மள்ள! செல்வ! மேம்படுந! பெருமானே! செல்விக்கு அணங்கு நொடித்தாங்கு நின்பெரும் பெயர் ஏத்தி வந்தேன் வாழிய எனச் சொல்லிக் கழிப்பிப் பழிச்சி நின்ற நின்னிலை தெரியா அளவை,
அந்நிலை நில்லாவுலகத்து நிலைமை தூக்கி அணுகல் வேண்டிச் சிதர்வை நீக்கி உடீஇ, கொழுங்குறை, புழுக்கல் அமுதொடு பிறவும் அடிசில் கலம்பரப்பித் தானின்று ஊட்டி, நுமக்குத் தாமரை சூட்டி, விறலியர் மலையாநிற்பத் தேர்நல்கியும் அமையான், இவுளியொடு பசும்படை நல்கி, அவன் அன்றே பரிசில் விடுக்கும். அவன் யாரெனில் சாரலையும், இறும்பினையும், புறவினையும் உடையதும், முனிவர் களிறு தரும் விறகில் வேட்பதும் ஆகிய, ஒளிறு இலங்கு அருவிய மலைகிழவோன் என்பதாம்.
வெண்பா
கங்குலும் நண் பகலும் துஞ்சா இயல்பிற்றாய்,
மங்குல் சூழ் மாக் கடல் ஆர்ப்பதூஉம் வெஞ் சின வேல்
கான் பயந்த கண்ணிக் கடு மான் திரையனை
யான் பயந்தேன் என்னும் செருக்கு.
தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய பெரும்பாணாற்றுப்படைக்குப் பெருமழைப்புலவர் பொ.வே, சோமசுந்தரனார் எழுதிய உரை முற்றிற்று.
பெரும்பாணாற்றுப்படை முற்றிற்று.