ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் திருக்கோயிலில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கு ஆடித் திருக்கல்யாணம் விமரிசையாக நடந்தது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாண விழா ஜூலை 13ல் கொடி ஏற்றத்துடன் விழா துவங்கியது. 12ம் நாள் விழாவான நேற்று மாலை 7 மணிக்கு கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் பூக்களால் அலங்கரித்த மணமேடையில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் எழுந்தருளினர். இதனைத்தொடர்ந்து திருமாங்கல்யத்தை கோயில் யானை ராமலட்சுமி மூலம் ரதவீதியில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, இரவு சுவாமி ஆசியுடன் கோயில் குருக்கள் அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவித்து, ஆடித் திருக்கல்யாணம் விழா விமரிசையாக நடந்தது. இதன்பின் சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் நாசர்கான், ராமேஸ்வரம் காஞ்சி மடம் மேலாளர் ஆடிட்டர் சுந்தரம், நிர்வாகி சாச்சா, யாத்திரை பணியாளர் சங்க தலைவர் பாஸ்கரன், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு யாத்திரை பணியாளர்கள் சங்கம் சார்பில் திருமாங்கல்யம் கயிறு, மஞ்சள் அடங்கிய பிரசாத பாக்கெட் வழங்கினர்.