பதிவு செய்த நாள்
29
ஏப்
2024
05:04
கோத்தகிரி; கோத்தகிரி பில்லிக்கம்பை கோயில்மேடு அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் திருக்கோயில் 68ம் ஆண்டு திருவிழா, மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கடந்த, 22ம் தேதி காலை, 9:30 மணிக்கு, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நாள்தோறும் ஐயனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. நேற்று முன்தினம், (28ம் தேதி) நள்ளிரவு, 12:00 மணிக்கு, சக்தி அழைப்பு மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. முக்கிய திருவிழா நாளான இன்று (29ம் தேதி) காலை, 11:00 மணிக்கு, கங்கையில் இருந்து, ஐயனின் கரக ஊர்வலம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, பகல், 2:00 மணிக்கு, அய்யனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், பில்லிக்கம்பை கோயில் மேடு, ஒன்னதலை உட்பட, சுற்றுவட்டார கிராம பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் ஒரு நிகழ்வாக, நாளை காலை, 10:00 மணிக்கு, பொங்கல் பூஜை, பகல், 12:00 மணிக்கு, சிறப்பு பூஜை தொடர்ந்து, தாரை தப்பட்ட கச்சேரி இடம்பெறுகிறது. மாலை, 6:00 மணிக்கு, கரகம் கங்கை சேர்த்தல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. மே., 1ம் தேதி சிறுவர்களுக்கான போட்டிகள் நடைபெறும். வரும், 6ம் தேதி, மறு பூஜையுடன், விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோயில்மேடு ஊர் பொதுமக்கள், ஸ்ரீ முனீஸ்வரர் இளைஞர் சங்கம், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.