பதிவு செய்த நாள்
03
நவ
2012
10:11
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவிற்கு 125 சிறப்பு பஸ்களும்,10 மொபைல் டாய்லெட்டுகளும் இயக்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா இம்மாதம் 13ம் தேதி தொடங்கி 18ம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. கந்த சஷ்டி திருவிழாவிற்கு வருகைதரும் பக்தர்கள் வசதிக்காக தேவையான போக்குவரத்து, குடிநீர், பாதுகாப்பு, மின்சாரம், மருத்துவம் மற்றும் பொது சுகாதாரம் உள்ளிட்ட வசதிகள் குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஆஷீஷ் குமார் தலைமை வகித்தார். ஆர்டிஓ கொங்கன், கோயில் இணை ஆணையர் சுதர்சன் டிஎஸ்பி ஞானசேகரன், தக்கார் கோட்டை மணிகண்டன், டவுன் பஞ்.,தலைவர் சுரேஷ்பாபு, யூனியன் சேர்மன் ஹோமலதாலிங்ககுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பக்தர்களுக்கு தேவையான வசதிகள் குறித்து துறைவாரியாக கலெக்டர் அறிவுரை வழங்கினார். திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவுக்கு பல்வேறு வழித்தடங்களில் இருந்து 125 சிறப்பு பஸ்கள், சிறப்பு ரயில்கள் இயக்குவது குறித்து ரயில்வேத்துறையிடம் அனுமதி கேட்கப்படும். பொதுசுகாதாரப்பணிக்காக கூடுதலாக டவுன் பஞ்.,இருந்து 25பேரும், கோயிலிருந்து 50 பணியளார்களும் பயன்படுத்தப்படுவர். பக்தர்கள் வசதிக்காக பகத்சிங் பஸ் ஸ்டாண்ட் பாளையங்கோட்டை ரோடு, பரமன்குறிச்சி சாலை உள்ளிட்ட இடங்களில் 10 தற்காலிக மொபைல் டாய்லட்கள் அமைக்கப்பட உள்ளது. பாதுகாப்பு பணியில் 1500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்படுவர் எனவும் அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் திருச்செந்தூர் டவுன் செயலர் அலுவலர் மரியஎல்சி, திருக்கோயில் கண்காணிப்பாளர் ரோஷினி, மருத்துவ அதிகாரி நல்லதம்பி ஞான திவாகரன், மருத்துவர் பொன்ரவி, போலீஸ் ஆய்வாளர் பிரதாபன், மாவட்ட சுகாதார இயக்குநரின் நேர்முக உதவியாளர் காதாஷா, போக்குவரத்து பணிமனை மேலாளர் பாஸ்கர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.