மகரிஷி வசிஷ்டர், ஞானம் பெற ஆர்வம் கொண்டு பல தலங்களுக்கு யாத்திரை சென்றார். அவரது விருப்பத்தை அறிந்த பிரம்மதேவர், அறச்செயல் ஒன்றைச் செய்தால், பலன் பத்தாக பெருகும் தலம் பூலோகத்தில் உள்ளது. அங்கு சென்றால் ஞானம் கிடைக்கும் என்றார். அந்தத் தலமே மயிலாடுதுறை அருகிலுள்ள தலைஞாயிறு. பிரம்மாவின் அறிவுரையை ஏற்ற வசிஷ்டர், அத்தலத்தில் சிவலிங்கம் ஸ்தாபித்து பூஜை செய்து ஞானம் பெற்றார். இத்தல இறைவனின் மகிமையை அறிந்த இந்திரன், அத்தலம் வந்து தான் செய்த ஒரு குற்றத்தைப் பொறுத்தருள வேண்டினான். அவனது பாவம் தீர்ந்தது. இதனால் இறைவனுக்கு, குற்றம் பொறுத்த நாதர் என்ற பெயர் ஏற்பட்டது. அம்பிகை கோல்வளைநாயகி. மயிலாடுதுறையில் இருந்து 14 கி.மீ. தூரத்தில் உள்ளது. இத்தலம்கருப்பறியலூர் என்று தேவாரத்தில் குறிப்பிடப்படுகிறது. இங்கு சென்று வந்தால் படிப்பில் பின்தங்கிய குழந்தைகள் சிறப்பாக படிப்பர் என்பது ஐதீகம். குழந்தைகளின் கல்வி விருத்திக்காக சம்பந்தர் பாடிய 11 தேவாரப் பாடல்களை இங்கு வந்து பாடலாம்.