நம் தேசம் முழுவதும் சக்தி பீடங்கள் பல உள்ளன. அதில் காந்திபீடம் திருநெல்வேலியில் அமைந்துள்ளது. கயிலையில் சிவபார்வதிக்கு திருமணம் நடந்தது. அப்போது பூபாரத்தைச் சமப்படுத்த அகத்தியர் பொதிகை வந்தார். அவருக்காக பாபநாசம் என்னும் திருத்தலத்தில் சுவாமி மணக்கோல தரிசனம் தந்தனர். பின் நெல்வயல் வேலியாக அமைந்த திருநெல்வேலிக்கு அகத்தியர் வந்தார். அங்கு மணமக்கள் தங்க வேண்டும் என அகத்தியர் விடுத்த வேண்டுகோளை சிவன் ஏற்றார். அது காந்திபீடம் எனப்பட்டது. காந்தி என்றால் ஒளி. இங்கு அம்பிகையின் முகம் மதியைப் (நிலா) போல் ஒளிமிக்கதாய் இருப்பதால் காந்திமதி என பெயர் பெற்றாள். பதினான்கு ஏக்கர் பரப்பு கொண்ட இங்கு மூன்று தெப்பம், நான்கு கோபுரம் உள்ளன. சுவாமி கோயிலுக்கும், அம்பாள் கோயிலுக்கும் தனித்தனி வாசல், ராஜகோபுரம் உண்டு. சுவாமி, அம்பாள் சந்நிதிகளை கோயிலுக்குள் இருந்தபடியே கடக்க சங்கிலி மண்டபம் உள்ளது. காந்திமதி அம்மனின் பாத கமலங்களை சரணடைந்தால் மனதை வருத்தும் துன்பங்கள் நீங்கி, மனசாந்தி பெற்று வாழலாம்.