பதிவு செய்த நாள்
08
செப்
2024
04:09
பல்லடம்; பல்லடம் அருகே, அரசு- வேம்பு விருட்சங்களுக்கு நடந்த திருக்கல்யாணத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
பல்லடத்தை அடுத்த, காரணம்பேட்டை, சங்கோதிபாளையம் கிராமத்தில் உள்ள மாகாளியம்மன் கோவில் திடலில், அரசு- வேம்பு திருக்கல்யாண உற்சவம் நடத்தது. முன்னதாக, நேற்று அரசு வேம்பு மரங்களுக்கு உப்பு, புளி, தண்ணீர் மற்றும் விளக்கு வைத்து வழிபாடு நடந்தது. தொடர்ந்து, உப்பு, ஜவுளி, மாங்கல்யம் வைத்து நிச்சயம் செய்யப்பட்டது. மாலை 5.00 மணிக்கு, மாப்பிள்ளை அழைப்பு மற்றும் பெண் அழைப்பு வைபவங்கள் நடந்தன. இதையடுத்து, பட்டினி சீர், உருமால் கட்டுதல், முகூர்த்தக்கால் நடுதல் ஆகிய நிகழ்வுகள் நடந்தன. இன்று காலை, 9.00 மணிக்கு, தேவர்கள் புடை சூழ, சகல மங்கள இசையுடன், தேவ பாராயணம், திருமுறைகள் ஓதி திருமாங்கல்யம் தரும் நிகழ்வு நடந்தது. புடவை வேட்டி, மஞ்சள், குங்குமம், பூ, பழம், வெற்றிலை பாக்கு, வளையல் உள்ளிட்ட பல்வேறு சீர்வரிசைகள் வழங்கப்பட்டு சிவபெருமான் பார்வதிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதையடுத்து, திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பேரு இல்லாதவர்களுக்கு பரிகார பூஜைகளும் நடந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். கோடங்கிபாளையம் ஆனந்தபுரி ஆதீனம் பழனிசாமி அடிகளார் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார். திருக்கல்யாண உற்சவத்தை தொடர்ந்து, பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் கல்யாண விருந்து வழங்கப்பட்டது.