குருவாயூரில் இன்று ஒரே நாளில் 354 திருமணம்; தரிசனத்திற்கு கூடுதல் கட்டுப்பாடுகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08செப் 2024 03:09
குருவாயூர்; கேரளாவில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் இன்று(செப்., 8) 354 ஜோடிகளுக்கு ஒரே நாளில் திருமணம் நடப்பதையொட்டி தரிசனத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
குருவாயூர் கோயிலில் முகூர்த்த நாட்களில் அதிக அளவில் திருமணம் நடக்கின்றன. இங்கு திருமணம் நடத்துவதை பலரும் சிறப்பாக கருதுகின்றனர். இன்று ஒரே நாளில் 354 ஜோடிகள் திருமணத்திற்கு பதிவு செய்துள்ளனர். இதனால் திருமணத்தை விரைந்து நடத்த கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு என்று குருவாயூர் தேவசம்போர்டு அதிகாரிகள் கூறுகின்றனர். இதற்கு முன்னர் 2022 ஆகஸ்ட் 21 -ல் ஒரே நாளில் 248 ஜோடிகளுக்கு இங்கு திருமணம் நடந்துள்ளது. இன்று அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் தரிசனத்துக்கு கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. வழக்கமாக முகூர்த்த நாட்களில் அதிகாலை 5:00 மணி முதலே தாலி கட்டும் சடங்குகள் தொடங்கும். ஆனால் இன்று அதிகாலை 4:00 மணி முதல் சடங்குகள் தொடங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தாலி கட்ட 6 மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு ஜோடிக்கு உறவினர்கள் வீடியோ மற்றும் போட்டோகிராபர்கள் உட்பட அதிகபட்சமாக 24 பேர் மட்டுமே மண்டபத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வழக்கமாக திருமணம் முடிந்த பின் மணமக்கள் கோயில் முன்புறம் உள்ள தீப கோபுரம் அருகே போட்டோ எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இன்று இதற்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மணமக்கள் மற்றும் உறவினர்கள் திருமணத்திற்கு செல்வதற்கு ஒரு வழியும், திருமணம் முடிந்த பின்னர் செல்வதற்கு வேறு வழியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயிலை சுற்றி கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.