பதிவு செய்த நாள்
18
ஜன
2025
05:01
திருக்கோவிலூர்; மணலுார்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை, அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி நடந்தது.
தை மாதத்தில் முதல் 5 நாட்கள் அனைத்து நதிகளும் தத்தம் தீவினையை போக்கிக் கொள்ள புண்ணிய நதியான தென்பெண்ணையில் சேர்கிறது என்பது ஐதீகம். அதனையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலுார் பேட்டை, தென்பெண்ணை ஆற்றில் தை மாதம் 5ம் தேதி நடைபெறும் ஆற்றுத் திருவிழாவில் திருவண்ணாமலை, அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையார் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம். அதன்படி நேற்று திருவண்ணாமலையில் இருந்து அண்ணாமலையார் புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு மணலூர்பேட்டையை வந்தடைந்தார். மணலூர்பேட்டை மாவடி விநாயகர், பிரயோக வரதராஜ பெருமாள், அகஸ்தீஸ்வரர், கெங்கையம்மன், மாரியம்மன், சித்தப்பட்டினம் லட்சுமி நாராயண பெருமாள் உள்ளிட்ட சுவாமிகள் ஆஞ்சநேயர் கோவில் அருகில் இருந்து அண்ணாமலையாரை மேளதாளம் முழங்க வரவேற்று தென்பெண்ணை ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த பந்தலுக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். தென்பெண்ணையில் தீர்த்தவாரி முடிந்து, சிறப்பு பந்தலில் சுவாமி எழுந்தருளி, சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க அண்ணாமலையாருக்கு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்காரத்தில் மகாதீபாராதனை நடந்தது. தொடர்ந்து திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.