திருப்பதி; திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சென்னையைச் சேர்ந்த பக்தர், 6 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளதாக, அதன் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆந்திராவின் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். இந்நிலையில், ஏழுமலையானை தரிசிக்க வந்த சென்னையைச் சேர்ந்த வர்த்தமான் ஜெயின் என்ற பக்தர், தேவஸ்தானத்திற்கு 6 கோடி ரூபாய் நேற்று முன்தினம் நன்கொடை அளித்து உள்ளார். இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னையைச் சேர்ந்த வர்த்தமான் ஜெயின் என்ற பக்தர், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் நிர்வாகத்துக்கு 5 கோடி ரூபாய், கோசாலைக்கு ஒரு கோடி ரூபாய் என மொத்தம் 6 கோடி ரூபாய்க்கான காசோலையை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கூடுதல் நிர்வாக அலுவலர் வெங்கய்யா சவுத்ரியிடம் வழங்கினார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.