சீதையை அசோகவனத்தில் சந்தித்து வந்த அனுமன், ராமனிடம் கண்டேன் சீதையை என்று சொல்லியபடி தெற்கு நோக்கி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். கைகளில் சூடாமணியை பெற்றதும் ராமரின் கண்களில் கண்ணீர் மல்கியது. பிரபு! தேவி கஷ்டப்படுவதாக எண்ணி நீங்கள் கவலைப்பட வேண்டாம். தங்களின் திருநாமத்தை மறந்தால் தான் கஷ்டம் வரும். பிராட்டியோ எப்போதும் தங்கள் பெயரையே, (ராமநாமம்) ஜெபித்துக் கொண்டிருக்கிறார். அதனால் அவருக்கு கஷ்டம் என்பதே கிடையாது, என்று அனுமன் அவருக்கு ஆறுதல் அளித்தார். ராமர் அவரை ஆரத்தழுவி, அனுமான்! உன்னிடம் நான்பட்ட கடனை எப்படித் தீர்ப்பேன்?, என்றார். அனுமனின் உடல் அப்படியே சிலிர்த்துப் போனது. பகவானே! என்ன சொல்லிவிட்டீர்கள்? என்னைக் காப்பாற்றுங்கள்! என்று ராமரின் திருவடிகளில் சரணடைந்தார். அப்போது கருணையுடன் அனுமன் தலையை கோதியபடி ராமர் ஆசி வழங்கினார். துளசிதாசர் ராமாயணத்தில் இந்நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது.