புரட்டாசி சனிக்கிழமை; கோவை பெருமாள் கோயில்களில் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20செப் 2025 05:09
கோவை; புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால், எல்லாவித கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. புரட்டாசி முதல் சனி உற்சவத்தை முன்னிட்டு இன்று கோவையில் உள்ள பெருமாள் கோயில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.
பெரிய கடை வீதியில் உள்ள லட்சுமி நாராயண வேணுகோபால சுவாமி, உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோயில்களில் இன்று அதிகாலை சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. 19 வகையான வாசனை திரவியங்கள் சேர்க்கப்பட்ட புனிதநீரால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பெண்கள், விளக்கேற்றி வழிபட்டனர். பக்தர்கள் சிரமமின்றி வழிபாடு செய்ய, கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கோவை கொடிசியா அருகில் உள்ள ஸ்ரீ வேங்கடாசலபதி கோயிலில் சுவாமிக்கு, சர்வ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விளாங்குறிச்சி ரோடு விநாயகபுரம் ஸ்ரீ வாமன பெருமாள் கோயிலில் திருப்பதி வெங்கடாசலபதி அலங்காரத்தில் காட்சியளித்தார். பாப்பநாயக்கன்பாளையம் சீனிவாச பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் காட்சியளித்தார்.
ராம்நகர் ஸ்ரீ கோதண்டராமசுவாமி கோயிலில், ராமபிரான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். சித்தாபுதுார் ஜெகன்நாத பெருமாள், சலீவன் வீதி வேணுகோபால சுவாமி, கோட்டைமேட்டில் உள்ள கரிவரதராஜ பெருமாள், பேரூர் பச்சாபாளையத்தில் உள்ள தசாவதார பெருமாள், கோவைப்புதுாரில் உள்ள பெருமாள் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தொண்டாமுத்துார்; தொண்டாமுத்துார் அரங்கநாதர் கோயிலில், இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. அதிகாலை 5 மணிக்கு, கோ பூஜையுடன் நடை திறக்கப்பட்டு, திருமஞ்சனம், அபிஷேக ஆராதனை நடந்தது. பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. தொடர்ந்து 12.30 மணிக்கு, அரங்கநாத பெருமாள் வீதி உலா நடந்தது. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்தனர். வடவள்ளி கரிவரதராஜ பெருமாள் கோயில், பொம்மணம்பாளையம் ஸ்ரீநிவாச பெருமாள் கோயில், சுண்டபாளையம் வரதராஜ பெருமாள் கோயில், கொங்கு திருப்பதி கோயில் என, அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.