திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய, 1.05 டன் வெள்ளி பொருட்களை உருக்கும் பணி நேற்று துவங்கியது. இந்த பணி, ஐந்து நாட்கள் நடைபெறும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சில பக்தர்கள், தங்கம், வெள்ளி மற்றும் பணம் ஆகியவற்றை காணிக்கையாக உண்டியலில் செலுத்துகின்றனர். ஏழு ஆண்டுகளில், 1,055 கிலோ வெள்ளி பொருட்கள் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது. இந்த வெள்ளி பொருட்களை உருக்கி, வெள்ளி கட்டிகளாக மாற்ற, ஹிந்து அறநிலையத் துறை ஆணையருக்கு, முருகன் கோவில் நிர்வாகம் பரிந்துரை கடிதம் எழுதியிருந்தது. இதற்கு, ஹிந்து அற நிலையத் துறை ஆணையர் ஒப்புதல் அளித்து, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி துரைசாமிராஜுவையும் நியமித்தார். இதையடுத்து, நீதிபதி தலைமையில் நேற்று, கோவில் வளாகத்தில் வெள்ளி பொருட்கள் உருக்கும் பணி துவங்கியது. இப்பணிகள் ஐந்து நாட்கள் நடைபெறும் என, இணை ஆணையர் ரமணி தெரிவித்தார். வெள்ளி உருக்கும் பணி, சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் துவக்கியுள்ளது.