திருப்பதி – திருமலை மலைப்பாதையில் ரோபோ’ நாய் ரோந்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஆக 2026 08:08
திருப்பதி: ஆந்திராவின் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலின் மலைப்பாதையில், வனவிலங்குகளின் தாக்குதலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க, ரோபோ நாய்களை பயன்படுத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
இந்த ரோபோ நாய்களில், ‘ஆப்டிக்கல், தெர்மல் இமேஜிங்’ கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கும். அடர்ந்த பனிமூட்டம், இரவு நேரங்களிலும் வனவிலங்குகளின் நடமாட்டத்தை இந்த கேமராக்கள் துல்லியமாக கண்டறியும். சிறுத்தை போன்ற வனவிலங்குகளை கண்டதும் உடனே கட்டுப்பாட்டு அறைக்கு நேரடி வீடியோ மற்றும் அதன் இருப்பிட தகவல்களை அனுப்பும்.
இதுதவிர, பக்தர்கள் உள்ள பகுதிகளுக்கு வன விலங்குகள் வந்தால், இந்த ரோபோவின் ஒளி மற்றும் ஒலி அமைப்புகள் மூலம் அவற்றை காயப்படுத்தாமல் மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட முடியும். தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்த, ‘ஸ்டார்ட்- – அப்’ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ரோபோ நாய்களை, 20 நாட்கள் சோதனை செய்தபின், பிரம்மோத்சவ விழாவின் போது முழுமையாகப் பயன்படுத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.