பதிவு செய்த நாள்
15
அக்
2026
12:10
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளில், மலையப்ப சுவாமி தனது தேவியர்களுடன் கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பீமன், பகாசுரனை வதம் செய்த நிகழ்வை நினைவுபடுத்தும் வகையில், ‘பகாசுர வதம்’ அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார்.
திருமலை முழுவதும் பக்தி முழக்கங்களும், பஜனைப் பாடல்களும், கோலாட்ட நிகழ்ச்சிகளும் நிறைந்து ஆன்மிகச் சூழல் நிலவியது. அலங்கரிக்கப்பட்ட யானைகள் முன்னே செல்ல, பாரம்பரிய கோயில் இசை முழங்க, பஜனைக் குழுவினர் மற்றும் கோலாட்டக் கலைஞர்கள் பங்கேற்க வாகன சேவை கோலாகலமாக நடைபெற்றது. ஜீயர்கள் திவ்ய பிரபந்தங்களைப் பாராயணம் செய்தனர். ஊர்வலப் பாதையின் பல்வேறு இடங்களில் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து மலையப்ப சுவாமியை வழிபட்டனர்.
கற்பக விருட்ச வாகனம்: புராணங்களின்படி, பாற்கடலைக் கடைந்தபோது கற்பக விருட்சம் தோன்றியது. பக்தர்கள் வேண்டியவற்றை வழங்கும் விருட்சமாக இது போற்றப்படுகிறது. இந்த விருட்ச வாகனத்தில் பெருமாள் எழுந்தருள்வது, பக்தர்களுக்கு உலகியல் வளங்களையும் நலன்களையும் அருள்வதுடன், அவர்களின் விருப்பங்கள் நிறைவேறுவதைக் குறிக்கும் தெய்வீக அடையாளமாகக் கருதப்படுகிறது.
மாலையில் சர்வ பூபால வாகன சேவை!
இன்று வியாழக்கிழமை மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை, மலையப்ப சுவாமி தனது தேவியர்களுடன் சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளிக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் திருமலை பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள், திருமலை திருப்பதி தேவஸ்தானத் தலைவர் பி.ஆர். நாயுடு, செயல் அலுவலர் முட்டாடா ரவிச்சந்திரா, மாவட்ட ஆட்சியர் வெங்கடேஸ்வர், கூடுதல் செயல் அலுவலர் சி. வெங்கையா சௌத்ரி உள்ளிட்ட தேவஸ்தான நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். பக்தி, பாரம்பரியம், புராணப் பெருமை ஆகியவை சங்கமிக்கும் திருமலை நவராத்திரி பிரம்மோற்சவம், பக்தர்களிடையே ஆன்மிக உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது.