தாயை காத்த சிவனுக்கு 8,000 கிலோமீட்டர் ஓடியே 12 ஜோதிர்லிங்க தலங்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் 19 வயது மகன்!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16அக் 2026 12:10
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக இந்தியா முழுவதும் ஓடி 12 ஜோதிர்லிங்கங்களையும் தரிசிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள 19 வயது இளைஞர் மோனு மெடுர்பாலா பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தைச் சேர்ந்த மோனு, தனது தாயார் கடுமையான உடல்நலப் பாதிப்பிலிருந்து மீண்டால், சிவபெருமானின் புனிதத் தலங்களுக்குச் சென்று வழிபடுவதாக வேண்டிக்கொண்டார். அவரது தாயார் உடல்நலம் தேறியதைத் தொடர்ந்து, தனது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் இந்த ஆன்மிகப் பயணத்தைத் தொடங்கினார். தினமும் 50 கி.மீ. ஓட்டம்: கடந்த 2026 மார்ச் 15-ம் தேதி தனது பயணத்தைத் தொடங்கிய மோனு, தினமும் சுமார் 50 கிலோமீட்டர் தூரம் ஓடிச் செல்கிறார். இதுவரை சுமார் 8,000 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்துள்ளதாகவும், 12 ஜோதிர்லிங்கங்களில் ஐந்து தலங்களைத் தரிசித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது பயணத்தை ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பாபா பைத்யநாத் தாம் கோயிலில் இருந்து தொடங்கிய அவர், சிவபெருமானின் புனிதத் தலங்களைத் தொடர்ந்து தரிசித்து வருகிறார். இதனுடன், சார்தாம் யாத்திரையையும் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் வைரலான இளைஞர்: மோனுவின் வித்தியாசமான ஆன்மிகப் பயணம் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. பயணத்தின்போது அவரைச் சந்தித்த காவல்துறையினர், அவரது பயணம் குறித்து விசாரித்ததாகக் கூறப்படுகிறது. பல இடங்களில் பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். சிலர் அவரது கால்களைத் தொட்டு மரியாதை செலுத்தி ஆசி பெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மகாராஷ்டிர மாநிலத்தின் பர்பானி மற்றும் திரிம்பகேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றபோதும் அவருக்கு உள்ளூர் மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.
கலியுக சிரவண குமாரன்: தாயின் மீது கொண்ட அன்பையும், சிவபெருமான் மீதான பக்தியையும் வெளிப்படுத்தும் மோனுவின் முயற்சியைப் பலரும் பாராட்டி வருகின்றனர். பெற்றோருக்காகத் தியாகம் செய்ததாகப் போற்றப்படும் புராணக் கதாபாத்திரமான சிரவண குமாரனுடன் அவரைச் சிலர் ஒப்பிட்டு வருகின்றனர். தாயின் உடல்நலம் தேற வேண்டும் என்ற வேண்டுதலுடன் தொடங்கிய இந்தப் பயணம், தற்போது நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றி 12 ஜோதிர்லிங்கங்களையும் தரிசிப்பதே மோனுவின் இலக்காக உள்ளது.