திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளான சனிக்கிழமை காலை, அனுமந்த வாகனத்தில் கோதண்டராமர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வில், அம்பு ஏந்திய ராமபிரானாகக் காட்சியளித்த பெருமாளை, அவரது பரம பக்தரான அனுமன் தாங்கி வந்த காட்சி பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது.
வாகன சேவையின்போது பக்தர்கள் குழுக்களாகப் பங்கேற்று இறைவனின் திருநாமங்களைப் பாடினர். செக்கை பஜனை, கோலாட்டம் மற்றும் மங்கள இசை முழங்க, நான்கு மாட வீதிகளிலும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து மலையப்ப சுவாமியை வழிபட்டனர்.
அனுமந்த வாகன சேவையின் சிறப்பு: ஸ்ரீராமரின் மீது அசைக்க முடியாத பக்தி கொண்ட அனுமன், பக்தி, வீரம் மற்றும் ஞானத்தின் அடையாளமாகப் போற்றப்படுகிறார். நான்கு வேதங்களிலும் தேர்ச்சி பெற்றவராகவும், இணையற்ற வீரராகவும் விளங்கும் அனுமனின் மீது மலையப்ப சுவாமி எழுந்தருளிய காட்சி பக்தர்களுக்கு ஆன்மிகப் பரவசத்தை அளித்தது. ராமருக்கும் அனுமனுக்கும் இடையிலான ஆழமான பக்திப் பிணைப்பையும், குரு–சிஷ்ய உறவின் மகத்துவத்தையும் இந்த வாகன சேவை நினைவூட்டுகிறது. பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளான இன்று சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 5 மணி வரை புஷ்பக விமான வாகனத்திலும், இரவு 7 மணிக்கு கஜ வாகனத்திலும் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். காலை நடைபெற்ற வாகன சேவையில் திருமலை பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள், திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் முத்தடா ரவிச்சந்திரா, கூடுதல் செயல் அலுவலர் சி. வெங்கையா சௌத்ரி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நரேஷ் குமார், சாந்தாராம், ரங்கஸ்ரீ, ஜானகி தேவி, சதாசிவம் மற்றும் கண்காணிப்பு, பாதுகாப்புப் பிரிவு அதிகாரி முரளி கிருஷ்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.