இது குறித்து, குக்கே சுப்ரமண்யா கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: தசரா பண்டிகை என்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. அக்டோபர் 18ம் தேதியன்று 35,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்தனர். கடவுளை தரிசித்து அன்ன பிரசாதம் பெற்றுக்கொண்டனர். பக்தர்கள் வருகை அதிகரிப்பதால் கோவில் சார்ந்த விடுதிகள், தனியார் விடுதிகளில் அனைத்து அறைகளும் நிரம்பியுள்ளன. பக்தர்கள் குமாரதாரா ஆற்றில் புனித நீராடிவிட்டு, தோஷ நிவர்த்தி பூஜைகளில் பங்கேற்கின்றனர். பக்தர்கள் அதிகம் இருந்தாலும், அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல், கோவில் நிர்வாகம், போலீசார், ஊர்க்காவல் படையினர் பார்த்து கொள்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக, டிஜிட்டல் முறையில் காணிக்கை செலுத்தும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. கோவிலின் இரண்டு இடங்களில், ‘கியூ ஆர் கோடு’ வழியாக காணிக்கை, சேவைகளுக்காண கட்டணம் செலுத்தி, ரசீது பெறும் வசதி, கடந்த மூன்று மாதங்களுக்கு முன் செய்யப்பட்டது. இது பக்தர்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது. கட்டணம் செலுத்த நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் கட்டாயம் இல்லை. இதற்கு முன் கோவிலில், சேவைகள், பூஜைகளுக்கு கட்டணம் செலுத்த, அன்னதான சீட்டு பெற கவுன்டர்களில் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதை கவனித்த கோவில் நிர்வாகம், கோவில் கோபுரத்தின் வலது புறம், தனி கவுன்டர்கள் அமைத்துள்ளது. பக்தர்கள் இந்த கவுன்டர்களில் கட்டணம் செலுத்தி, ரசீது பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.