மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கருவாழக்கரை மகா சதாசிவ பீடமலாகத்தில் எழுந்தருளியுள்ள அஷ்டா தச புஜ மகாலட்சுமி துர்கா தேவிக்கு 9 நாட்கள் நவராத்திரி விழா நடந்தது. அதனை முன்னிட்டு காலை சத சண்டி ஹோமமும், மாலையில் நவசக்தி அர்ச்சனையும் நடைபெற்றது. 9ம் நாள் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை தினமான நேற்று சத சண்டி ஹோமம் பூர்ணாஹுதி நடந்தது. அதனை முன்னிட்டு கோ பூஜை, அஸ்வ பூஜை, சுமங்கலி பூஜை, கன்னிகா பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. தொடர்ந்து யாக குண்டத்தில் பட்டுப்புடவை, மங்களப் பொருட்கள், மூலிகைகள், நெய் ஆஹுதி, வஷோத்திர பூர்ணாஹுதி செய்து வைத்த மகா சதாசிவ பீடாதிபதி சுவாமிநாத சிவாச்சாரியார் தேவி மகாத்மியம் சிறப்பு குறித்து எடுத்துரைத்தார். யாக பூஜைகளை மகா சதாசிவ பீட மேலாண் இயக்குனர் ஸ்ரீகண்ட சிவாச்சாரியார் செய்து வைத்தார். தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த மகாலட்சுமி துர்கா தேவிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் தஞ்சை மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் வினோத், மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் சசிகலா உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் ஹோம பிரசாதம், நைவேத்திய பிரசாதம் வழங்கப்பட்டது.