பதிவு செய்த நாள்
20
அக்
2026
12:10
உடுப்பி: பிரசித்தி பெற்ற கொல்லுார் மூகாம்பிகை கோவில் அருகில் ஓடும் முக்கியமான ஆறுகள் அசுத்தம் அடைந்து உள்ளதால், பக்தர்கள் புனித நீராட முடியாமல் அவதிப்படுகின்றனர்.
உடுப்பி மாவட்டம், பைந்துார் தாலுகாவின் கொல்லுாரில் உள்ள மூகாம்பிகை கோவில், பிரசித்தி பெற்ற திருத்தலமாகும்.
இவ்வளவு பிரசித்தி பெற்றிருந்தும், பக்தர்களுக்கு சரியான அடிப்படை வசதிகள் இல்லை. கோவிலின் முன் ‘அக்னி தீர்த்தம்’ மற்றும் ‘சவுபர்ணிகா’ என்ற, இரண்டு புனித ஆறுகள் ஓடுகின்றன. பக்தர்கள் இந்த ஆறுகளில் குளித்து மூகாம்பிகையை தரிசனம் செய்தால் வாழ்க்கை வளமாகும்; தீய சக்திகள் விலகும்; நன்மைகள் நடக்கும் என்பது ஐதீகம். இதனால் பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர்.
ஆனால், இரண்டு ஆறுகளிலும் கழிவு நீர் கலப்பால் அசுத்தம் அடைந்துள்ளன. ஆறுகளை சார்ந்த நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் நீர் பாய்வதற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், ஆறுகளில் கலக்கிறது. நீர் அசுத்தமடைந்துள்ளதை பார்த்து, அதிருப்தி அடைந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பக்தர்கள் ஆறுகளை பாதுகாக்கும்படி, பலமுறை போராட்டம் நடத்தினர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
கோவில் முன் ஓடும் அக்னி தீர்த்தம், சவுபர்ணிகா ஆறுகளில் தண்ணீர் அசுத்தமாக இருப்பதால், இவற்றில் நீராட பக்தர்கள் தயங்குகின்றனர்.
வெறும் வாயால் கோவில் மேம்பாடு, ஆறுகள் சீரமைப்பு குறித்து பேசாமல், செயலில் காட்ட வேண்டும். ஆறுகளை துாய்மையாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி, பலரும் வலியுறுத்துகின்றனர்.