பதிவு செய்த நாள்
20
அக்
2026
01:10
ஜம்பு சவாரி ஊர்வலத்தில், தங்க அம்பாரிக்குள் வைக்கப்பட்டிருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையை சுமந்தபடி, ஒரு யானை ஊர்வலமாக செல்லும்.
அதனை பின் தொட ர்ந்து மற்ற 13 யானைகள் செல்லும். மைசூரு அரண்மனை வளாகத்தில் இருந்து பன்னி மண்டபம் தீ பந்து விளையாட்டு மைதானம் வரை, ஐந்து கி.மீ., துாரத்திற்கு நடக்கும், இந்த ஊர்வலம் கண்களுக்கு விருந்தாக அமைகிறது.
தங்க அம்பாரியில் உள்ள அம்மனை யானை சுமந்து செல்கிறது என்பது தான் நமக்கு தெரியும். ஆனால் அந்த அம்பாரியின் வரலாற்றை பற்றியும் சற்று தெரிந்து கொள்ளலாமா...
மன்னர்கள் விஜயநகர பேரரசின் வீழ்ச்சிக்கு பிறகு, கி.பி., 1610ம் ஆண்டில் மைசூரை ஆண்ட ராஜா உடையார், ஸ்ரீரங்கப்பட்டணாவில் தசரா கொண்டாட்டங்களை துவக்கினார். ஆரம்ப காலத்தில் தங்க அம்பாரிக்குள், சாமுண்டீஸ்வரி சிலை வைக்கப் படவில்லை. மன்னர்கள் தான் தங்க அம்பாரியில் அமர்ந்து ஊர்வலமாக வந்தனர்.
தங்க கலசங்கள்
தங்க அம்பாரியை வடிவமைத்தவர் மைசூரு மன்னரவையின் தலைமை பொற்கொல்லர் ‘சுவர்ணகலா நிபுணர்’ என்ற பட்டம் பெற்ற சிங்கணாச்சார்யா ஆவார்.
ஒட்டுமொத்தமாக 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியின் முழுமையான உட் பகுதி மற்றும் சட்டகம், தேக்கு மரத்தால் செதுக்கப்பட்டது. இதன் மீது 85 கிலோ எடையுள்ள தங்க தகடுகள் போர்த்தப்பட்டு, மிக மெல்லிய கலை வேலைப்பாடுகளும் செய்யப்பட்டன. அம்பாரியின் நான்கு பக்கங்களிலும் தலா மூன்று வீதம் என, நேர்த்தியாக செதுக்கப்பட்ட 12 சிறிய துாண்கள், அம்பாரி உச்சியில் தங்க கலசங்கள் செதுக்கப்பட்டன. இது தவிர வைரம், ரத்தினம், மாணிக்க கற்கள், வைதுர்யம் கொண்டும் அம்பாரி அலங்கரிக்கப்பட்டது.
கடந்த 1972 ம் ஆண்டு மன்னராட்சி முடிந்து மக்களாட்சி நடைமுறைக்கு வந்த பின், தசரா நின்று போகும் சூழ்நிலை ஏற்பட்டது.
ஆனால் பாரம்பரிய நிகழ்ச்சி நின்று விட கூடாது என்பதில் உறுதியாக இருந்த அரசு, தங்க அம்பாரிக்குள், சாமுண்டீஸ்வரி அம்மனை வைத்து ஊர்வலம் செல்லும் புதிய வழக்கத்தை கொண்டுவந்தது. அப்போது இருந்து தற்போது வரை, தங்க அம்பாரியில், சாமுண்டீஸ்வரி அம்மன் சிலை வைக்கப்பட்டு, ஜம்பு சவாரி ஊர்வலம் நடக்கிறது.
ஜம்பு சவாரி நடக்கும் அன்று, மைசூரு அரண்மனையில் உள்ள பாதுகாப்பு அறையில் இருந்து எடுக்கப்படும் தங்க அம்பாரி, ஊர்வலம் முடிந்ததும் மீண்டும், பாதுகாப்பு அறைக்கே கொண்டு வரப்படுகிறது.