மறைமலைநகர்: தேவநாத பெருமாள் கோவிலில் நேற்று, வன்னி மர பாரி வேட்டை விமரிசையாக நடந்தது. சிங்கபெருமாள் கோவில் அடுத்த செட்டி புண்ணியம் கிராமத்தில் தேவநாத பெருமாள் கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் விஜயதசமியையொட்டி, அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், செட்டி புண்ணியம், சிங்கபெருமாள் கோவில், தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள், நேற்று தங்கள் குழந்தைகளுக்கு நெல் மணியில் அனா ... ஆவன்னா ... அரிச்சுவடி எழுத பழகி கொடுத்தனர்.
தொடர்ந்து நேற்று மாலை வன்னி மர பாரி வேட்டை விழா விமரிசையாக நடைபெற்றது. கோவிலில் இருந்து புறப்பட்ட வரதராஜ பெருமாள், ஏரியில் அம்பு விட்டு பாரி வேட்டை நிகழ்வு நடந்தது. பின் நான்கு மாட வீதியில் உலா வந்தார். அதே போல சிங்கபெருமாள் கோவில் உள்ள பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு சுவாமி கரும்பூர், கருநிலம், செங்குன்றம் உள்ளிட்ட கிராமங்களுக்கு நகர்வலம் செல்லும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.