குருவாயூர் கோவிலில் நவ. 1 முதல் விர்ச்சுவல் வரிசை முறை: தேவஸ்வம் நிர்வாகம் அதிரடி முடிவு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22அக் 2026 01:10
பாலக்காடு: பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக, வரும் நவ. 1-ம் தேதி முதல் அனைத்து நாட்களிலும் ‘விர்ச்சுவல் வரிசை’ (Virtual Queue) முறையை முழுமையாக நடைமுறைப்படுத்த கோவில் நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது.
இது குறித்து கோவில் நிர்வாக குழு தலைவர் கோபிநாத் கூறியதாவது: கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக, வரும் நவ. 1-ம் தேதி முதல் அனைத்து நாட்களிலும் ‘விர்ச்சுவல் வரிசை’ (Virtual Queue) முறையை முழுமையாக நடைமுறைக்கு வருகிறது. விர்ச்சுவல் வரிசை முறைக்கான ஒவ்வொரு முன்பதிவிற்கும் ரூ. 25 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பலர் உரிய நேரத்தில் தரிசனத்திற்கு வராததால், மற்ற பக்தர்களின் தரிசன வாய்ப்பு வீணடிக்கப்படுவது நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. இத்தகைய தேவையற்ற, போலி முன்பதிவுகளைத் தடுக்கும் நோக்கிலேயே இக்கட்டணம் விதிக்கப்படுகிறது. ஒரு முன்பதிவின் மூலம் அதிகபட்சமாக 6 பக்தர்கள் வரை இணைத்து பதிவு செய்துகொள்ளலாம். ஒவ்வொரு மாதமும் 25-ம் தேதி முதல், அடுத்த மாதத்திற்கான தரிசன முன்பதிவு தொடங்கும். கோவிலில் சிறப்பு ‘உதயஸ்தமன பூஜை’ நடைபெறும் தினங்களில், மாலை வேளையில் மட்டுமே விர்ச்சுவல் வரிசை தரிசனம் அனுமதிக்கப்படும். அத்தகைய நாட்களில் மாலை 4:00 மற்றும் 5:00 மணி ஆகிய இரு நேரக் கட்டங்களில் (Slots) மொத்தம் 600 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். கோவிலின் அதிகாலை ‘நிர்மால்ய தரிசனத்தை’யும் ஆன்லைன் முன்பதிவு முறைக்குக் கொண்டுவருவது குறித்து நிர்வாகம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அத்துடன், கலை நிகழ்ச்சிகளுக்காகக் கோவில் மண்டபங்களை முன்பதிவு செய்வதையும் முழுமையாக இணையவழிக்கு மாற்றுவது குறித்து, வரவிருக்கும் அடுத்த நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.