பதிவு செய்த நாள்
23
அக்
2026
05:10
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாவடுதுறையில் கோமதீஸ்வரர் கோவில் உள்ளது. திருமந்திரம் அருளிய தலமான இங்கு திருமூலர் தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார். இக்கோவிலில் திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் 23வது திருமந்திரம் மாநாடு இன்று தொடங்கிய 3 நாட்கள் நடைபெறுகிறது. மாநாட்டை முன்னிட்டு இன்று காலை திருமூலருக்கு அபிஷேக ஆராதனை மற்றும் புறப்பாட்டுடன் மாநாடு தொடங்கியது. முதலில் திருமந்திரம் பாராயணம் செய்யப்பட்டது. திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள் வரவேற்றார்.
திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள், சூரியனார் கோவில் ஆதீனம் 30-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக பரமாசாரிய சுவாமிகள், தினமலர் இணை ஆசிரியர் இரா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் குத்துவிளக்கேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தனர்.
திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள் ஆசியுரையின்போது: திருமூலர் காட்டிய வாழ்வியல் நெறிமுறைகளை அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும். இறைவன் தான் பேராற்றல் மிக்கவர். இறை வழிபாட்டில் மனம் ஈடுபடும் போதுதான் ஆணவம் மறையும். திருமூலர் காட்டக்கூடிய நான்கு தர்மங்களான எளியோரும், உயர்ந்தோறும் இறைவனை வழிபட ஒரு பிடி பச்சிலையாக சிவனுக்கு வில்வம், விநாயகருக்கு அருகம்புல் போன்ற கொண்டு பூசிப்பது, பசுவுக்கு ஒரு பிடி புல் அல்லது உணவு கொடுப்பது, நாம் உணவு உண்ணும் போது அதில் இருந்து ஒரு கைப்பிடி அளவுக்கு ஏழைகளுக்கு அல்லது உயிர்களுக்கு எடுத்து வழங்குவது, மற்றவர்களிடம் பேசும் போது எப்போதும் அன்பாகவும் இனிமையாகவும் பேசுவது நற்செயலாகும் என்கிறார் திருமூலர். வேதம் ஓதினால்தான் மழை பெய்யும். இயற்கையை போற்ற வேண்டும். மழை நீரை சேமிக்க வேண்டும். எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துவது மிக முக்கியம். இதனை உணர்த்தும் வகையில் அன்பே சிவம் என்கிறார் திருமூலர் என பேசினார்.
திருமந்திரம் மாநாட்டில் தினமலர் இணை ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி பேசுகையில்: கடந்த 14 ஆண்டுகளிலே இந்த ஆதீனத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. என்னென்ன வழக்குகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. சைவ சித்தாந்தம் எப்படி மீண்டும் முன்னுக்கு தள்ளப்படுகிறது. ஆதீனம் அவர்களின் வழிகாட்டுதலிலே என்று நீங்கள் எல்லாம் பார்த்து வருகிறீர்கள். ஆதினம் சைவ சித்தாந்தத்தின் மறுமலர்ச்சியின் தொடக்கப் புள்ளியாக இருக்கிறார் என்றால் மிகை ஆகாது. ஒவ்வொரு ஆண்டும் இந்த திருமந்திரம் மாநாடு நடக்க வேண்டும். ஆதீனம் அவர்கள் வழிகாட்டுதலின் படி திருமந்திரத்தில் சொல்லப்பட்டுள்ள யோக பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சைவ சித்தாந்தம் தழைத்தோங்க அனைவரும் பாடுபட வேண்டும் என்றார். ஆதீனப்புலவர் குஞ்சிதபாதம், ஆதீனம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஞானமூர்த்தி ஆகியோர் மாநாட்டை தொகுத்து வழங்கினர். கோவில் கண்காணிப்பாளர் சண்முகம், கோவை அரண் பணி அறக்கட்டளை, மயிலாடுதுறை திருஞானசம்பந்தர் அறக்கட்டளை, புதுச்சேரி அக்சி சித்தர் யோகம் மெய் தத்துவ ஆய்வு அறக்கட்டளை நிறுவனர் அக்சி எழிலன், கோவை திருமூலர் குரு பீடம் அறக்கட்டளை நிர்வாக பொறுப்பாளர்கள், சித்தாந்த பேரறிஞர்கள், தமிழறிஞர்கள், தமிழ் புலவர்கள், சித்தாந்த பேராசிரியர்கள், ஓதுவார்கள் என பலரும் கலந்து கொண்டனர். முதல் அமர்வில் காரைக்குடி ராமசாமி தமிழ் கல்லூரி முன்னாள் முதல்வர் முருகசாமி திருமந்திரம் பாயிரம் எனும் தலைப்பிலும், மயிலாடுதுறை சிவபுரம் வேத சிவாகம பாடசாலை முதல்வர் சுவாமிநாத சிவாச்சாரியார் அறக்கருணையும், மரக்கருணையும் திருமந்திரத்தில் இரண்டாம் தந்திரம் குறித்து விளக்கமாக பேசினார்.