எதிரிகளை வீழ்த்த முருகன் கோவிலில், ‘சத்ரு சம்ஹார திரிசதி’ அர்ச்சனை செய்து வழிபட்ட இபிஎஸ்
பதிவு செய்த நாள்
23
அக் 2026 10:10
சேலம்: எதிரிகளை வீழ்த்த, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, ‘சத்ரு சம்ஹார திரிசதி’ அர்ச்சனை செய்து, முருகன் கோவிலில் வழிபட்டார். சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில், புதிதாக ராஜகோபுரம், விஸ்வரூப ஜோதிர் லிங்கம், அருணகிரிநாதர், இடும்பன் சிலைகள் பிரதிஷ்டை செய்து, 25ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதையொட்டி, இன்று 2ம் கால யாக பூஜையின்போது, சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை, திரவ்யாஹூதி நடந்தது. காலை, 9:50 மணிக்கு, கோவிலின் கிழக்கு பகுதியில், 61 அடி உயரத்தில் புதிதாக கட்டப்பட்ட ராஜகோபுரம் வழியே, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, அழைத்து வரப்பட்டார். பின், 146 அடி உயர முருகன் சிலை அருகே, 108 அடி உயர வேலுக்கு, ‘லிப்ட்’ வழியே சென்று, பன்னீர் அபிஷேகம் செய்தார். அவருக்கு, எதிரிகளை வீழ்த்தி, வெற்றி பெறும் ‘சத்ரு சம்ஹார திரிசதி’ அர்ச்சனையை, சிவாச்சாரியார்கள் செய்தனர். தொடர்ந்து, புதிதாக பிரதிஷ்டை செய்துள்ள ஆறு அடி உயர ஜோதிர் லிங்கம் முன், 12 நிமிடம் மவுனமாக அமர்ந்து பழனிசாமி வழிபட்டார். பின், கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
|