கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த தோகைமலை பஞ்., தெலுங்குபட்டி கிராமத்தில், ஹிந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில், பகவதி அம்மன் கோவில் உள்ளது. சோளம், கம்பு தட்டைகளால் மேற்கூரை கட்டப்பட்டு, அதில் அம்மன் அருள்புரிகிறார். இங்கு, 4 டியூப் லைட்டுகள் மாலை, 6:00 மணி முதல் 9:00 மணி வரை தானாக எரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணியளவில் கோவில் மேற்கூரை தீப்பற்றி எரிந்தது. அப்பகுதி மக்கள் கொடுத்த தகவல்படி, மணப்பாறை தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜா சேர்வை, எஸ்.ஐ., பாலசுப்பிரமணியன், தடய அறிவியல் உதவி இயக்குனர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் தடயங்களை பதிவு செய்தனர். நள்ளிரவில் கோவில் மேற்கூரை தீப்பற்றி எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.