கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடக இசை உலகிற்கு அவர் ஆற்றியுள்ள ஈடு இணையற்ற சேவையைப் பாராட்டி குருவாயூர் கிருஷ்ணர் கோவில் நிர்வாகம் இவ்விருதை அறிவித்துள்ளது. பத்மஸ்ரீ விருதாளரான இவர், தனது 103-வது வயதிலும் இசையுலகின் மூத்த வழிகாட்டியாகத் திகழ்கிறார். அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், செம்பை வைத்தியநாத பாகவதர், செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், பாலமுரளிகிருஷ்ணா, யேசுதாஸ், லால்குடி ஜெயராமன் உள்ளிட்ட இசை ஜாம்பவான்கள் பலருக்கும் பக்கவாத்தியம் வாசித்துப் பெருமை சேர்த்தவர் டி.கே. மூர்த்தி. மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருது, மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள இவர், தலைசிறந்த பல மிருதங்கக் கலைஞர்களை உருவாக்கிய ஆசானாகவும் விளங்குகிறார். கோவில் நிர்வாக தலைவர் கோபிநாத் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டது. மிருதங்க வித்வான்கள் திருவனந்தபுரம் சுரேந்திரன், கோட்டயம் சந்தோஷ்குமார், நிர்வாகக் குழு உறுப்பினர் பிரம்மஸ்ரீ மல்லிச்சேரி பரமேஸ்வரன் நம்பூதிரிப்பாடு ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழுவின் பரிந்துரையை ஏற்று இத்தேர்வு இறுதி செய்யப்பட்டது. இவ்விருது கிருஷ்ணரின் திருவுருவம் பொறித்த 10 கிராம் தங்கப் பதக்கம், 50,001 ரூபாய், பாராட்டுப் பத்திரம், நினைவுப் பரிசு மற்றும் பொன்னாடை ஆகியவற்றை உள்ளடக்கியது. குருவாயூர் ஏகாதசி விழாவையொட்டி கோவில் நிர்வாகம் நடத்தும் செம்பை சங்கீத விழாவின் தொடக்க நாளான நவ 6ம் தேதி மாலை 5 மணியளவில் நடைபெறும் விழாவில் இவ்விருது அவருக்கு வழங்கி கவுரவிக்கப்படும். 2005ம் ஆண்டு தொடங்கப்பட்டு இதுவரை வழங்கப்பட்டு வரும் இவ்விருதின் 22வது விருதாளராக டி.கே. மூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.