கலியுக அதிசயமாக உருவெடுத்த திருமலை சீனிவாசர் அருங்காட்சியகம்! நாளை முதல் பொதுமக்கள் பார்வைக்கு!
பதிவு செய்த நாள்
15
நவ 2026 06:11
திருமலை: கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான ஸ்ரீ வெங்கடேசப் பெருமான் எழுந்தருளியுள்ள திருமலையில், பக்தி, வரலாறு, கலை, கலாசாரம் மற்றும் நவீனத் தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வகையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அருங்காட்சியகம் (SV Museum) நவீனமயமாக்கப்பட்டுள்ளது. சுமார் 1 லட்சம் சதுர அடி பரப்பளவில், நான்கு தளங்களுடன் 14 பிரம்மாண்டக் காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில், 8,000-க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருட்கள், சிற்பங்கள், வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் அரிய கலைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பெருமாளின் திருவுருவம், திருமலைக் கோயில் வரலாறு, இந்தியச் சிற்பக்கலை, கோயில் கட்டடக்கலை, இசை, நடனம், வழிபாட்டு முறைகள், பழங்கால நாணயங்கள், ஆயுதங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தனித்தனி அரங்குகளில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, தாளப்பாக்கம் அன்னமாச்சாரியாரின் சங்கீர்த்தனைகள், பாரம்பரிய இசைக்கருவிகள் மற்றும் இந்தியக் கலை மரபுகளை விளக்கும் காட்சிகள் பார்வையாளர்களைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. பிரபஞ்சத்தின் ரகசியங்களை விளக்கும் பிரம்மாண்டம் அரங்கம் இந்த அருங்காட்சியகத்தின் முக்கியச் சிறப்பம்சமாகும். ஹாலோகிராம், 360 டிகிரி ஒலியமைப்பு மற்றும் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் பிரபஞ்சத்தின் தோற்றம், இயற்கையின் அதிசயங்கள் மற்றும் அண்டத்தின் விரிவை நேரடியாகக் காணும் அனுபவம் வழங்கப்படுகிறது. திருமலைக் கோயிலின் வரலாறு, சிற்பங்கள், கட்டடக்கலை மற்றும் சனாதன தர்மத்தின் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் நோக்கில் இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் பக்தர்களுக்கு இது சிறந்த அறிவுக் களஞ்சியமாக அமையும். இந்த நவீன அருங்காட்சியகத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த செப்டம்பர் 16-ம் தேதி திறந்து வைத்தார். நவம்பர் 16 முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படுகிறது. நுழைவுக் கட்டணம் ரூ.50. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிடலாம். மாலை 4 மணி வரை நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படும். பெருமாளைத் தரிசிக்க திருமலை செல்லும் பக்தர்கள், இனி அவரது திருத்தலத்தின் ஆயிரமாண்டு வரலாறு, இந்தியப் பண்பாடு மற்றும் பிரபஞ்சத்தின் அதிசயங்களையும் ஒரே இடத்தில் கண்டு ரசிக்கும் அரிய வாய்ப்பைப் பெற உள்ளனர். பக்தியையும் அறிவியலையும், வரலாற்றையும் நவீனத் தொழில்நுட்பத்தையும் இணைக்கும் இந்த அருங்காட்சியகம், திருமலையின் மற்றொரு முக்கிய ஆன்மிகச் சுற்றுலாத் தலமாக உருவெடுக்க உள்ளது.
|