ராமபிரான் ஆஞ்சநேயருக்கு ஞானோபதேசம் செய்திருக்கிறார். அதேபோல, ஒருமுறை சீதையும் உபதேசம் செய்திருக்கிறாள். அசோகவனத்தில் சீதையைக் கண்ட ஆஞ்சநேயருக்கு கோபம் கொப்பளித்தது. இத்தனை நாளாக இந்த அரக்கிகள் தாயாரை என்ன பாடு படுத்தியிருப்பார்கள்? என்று ஆத்திரம் கொண்டு தண்டிக்கப் புறப்பட்டார். ராமதூதனே! அஞ்சனை மைந்தா! கருணை தான் உயர்ந்தவர்களின் இலக்கணம். உலகில் தப்பு செய்யாதவர் யார்? மன்னனின் ஆணைப்படி நடப்பது தானே இவர்களின் கடமை. அதைத்தான் செய்கிறார்கள், என்றாள். அன்று முதல் ஆஞ்சநேயர் தன்னைத் திருத்திக் கொண்டார். பிறர் மீது வெளியில் கோபித்துக் கொள்வது போல காட்டிக் கொண்டாலும், உள்ளுக்குள் அன்பும் கருணையும் மிக்கவராக மாறிவிட்டார்.