பதிவு செய்த நாள்
08
ஜூன்
2013
03:06
கிருஷ்ணா ! நான் ஏன் உன்னிடம் பேச வேண்டும் ? என் ஊருக்குள் வந்தால், முதலில் என் வீட்டுக்கல்லவா வந்திருக்க வேண்டும் ? நீ விதுரனின் மாளிகைக்கு சென்று விட்டாயே. அதனால் தான் உன்னிடம் பேசாமல் இருக்கிறேன். என்றான் துரியோதனன். துரியோதனா ! எனக்கு உன் வீடு, என் வீடு, பிறர் வீடு என்ற பேதமில்லை. எனக்கு எல்லாருமே வேண்டியவர்கள் தான். நான் வரும் வழியில் விதுரர் என்னை எதிர்கொண்டு வரவேற்று அழைத்தார். அதனால், அவர்வீட்டுக்கு போனேன். இதையெல்லாம் விட, நான் உன் வீட்டிற்கு வராததற்கு மற்றொரு முக்கிய காரணமும் உண்டு. நான் பஞ்ச பாண்டவர்களின் தூதனாக உனது ஊருக்கு வந்திருக்கிறேன். உன் வீட்டிற்கு வந்தால் நீ விருந்து உபசாரம் செய்வாய். யார் வீட்டிலாவது சாப்பிட்ட பிறகு அவர்களுடன் சண்டை போட்டாலோ, அந்த வீட்டிலுள்ள பெரியோர்கள் சொல்லும் உபதேசங்களை அலட்சியம் செய்தாலோ, பிறர் செய்த உபகாரத்தை மறந்தாலோ அவர்களுக்கு சூரியனும் சந்திரனும் உள்ள வரை நரகம்தான் கதி. இதை புரிந்துகொள், என்றார் கிருஷ்ணர்.
கிருஷ்ணரின் அந்த பதிலை பொருட்படுத்தாத துரியோதனன், சரி, நீ வந்த விபரத்தை என்னிடம் விளக்கமாகச் சொல், என் கேட்டான். பகவான் கிருஷ்ணர், துரியோதனா ! பாண்டவர்களுக்கு நீ நியாயமாக கொடுக்க வேண்டியதை தந்து விடு. அது அவர்களுடைய பூமி தான். அவர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையின்படி வனவாசம் முடித்து விட்டார்கள். இனியும் நீ அவர்களுக்கு அவர்களது ராஜ்ஜியத்தை ஒப்படைக்காவிட்டால் எவ்வகையிலும் தர்மம் இல்லை. மேலும் அது உன் வீரத்திற்கும் புகழுக்கும் இழுக்கைத்தரும், என்றார். துரியோதனன் அது கேட்டு சிரித்தான். கண்ணா ! நீ மிகவும் தந்திரமாக எனது நாட்டை பிரித்து பாண்டவர்களிடம் ஒப்படைக்க நினைத்து வந்திருக்கிறாய். அவர்கள் சூதாட்டத்தில் நாட்டை விட்டது விட்டதுதான். தொடர்ந்து அவர்களை வனத்திலேயே இருக்கச் சொல். எக்காரணம் கொண்டும் ஒரு ஊரைக்கூட அவர்களுக்கு நான் தரமாட்டேன், என சொல்லிவிட்டான்.
பகவான் கிருஷ்ணருக்கு போர் அறிவிப்பை வெளியிடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது. துரியோதனா! பாண்டவர்களுக்குரிய பூமியை அவர்களிடம் கொடுக்காவிட்டால் குரு÷க்ஷத்திர யுத்தத்திற்கு நீ தயாராகிவிடு. யுத்தம் செய்வதற்கு தயார் என என் கையில் அடித்து சத்தியம் செய் என்றார். துரியோதனன் இது கேட்டு மிகுந்த ஆத்திரம் அடைந்தான். கண்ணா ! உனது பிறப்பே கேவலமானது. நீ பசுக்களை மேய்க்கின்றவன். நெய்யும், வெண்ணெயும் திருடியதற்காக இடையர்குல பெண்கள் உன்னை உரலோடு சேர்ந்து கட்டி வைத்தார்கள். அதை எல்லாம் மறந்துவிட்டு, குருவம்சத்து அரசனிடம் இப்படி தைரியமாக பேசிக் கொண்டிருக்கிறாய். பஞ்ச பாண்டவர்கள் என்னை எதிர்த்தால் மதயானை போல் அவர்கள் முன்னால் நிற்பேன். பாண்டவர்கள் மானங்கெட்டவர்கள். அவர்களது மனைவியை இந்த சபையிலே கூந்தலை பிடித்து இழுத்துவந்து தான் அவமானப்படுத்தியபோது கையைக் கட்டிக்கொண்டு இருந்த வீரர்கள். அப்படிப்பட்டவர்களுக்காக நீ தூது வந்திருக்கிறாய். அந்த பாண்டவர்களிடம்தான் என்ன ஒழுக்கம் இருக்கிறது ? ஒரே பெண்ணை அவர்கள் ஐந்து பேரும் மணந்து கொள்வார்களாம் ! ஆனால் அவளது கற்பு எவ்வகையிலும் கெட்டுப் போகாதாம். அப்படிப்பட்ட குலத்தில் பிறந்தவர்களுக்காக நீ தூது வந்திருக்கிறாய். இது ஆச்சரியமாக இல்லையா ? அவர்களுக்காக நீ தூது வந்ததில் என்ன நியாயம் இருக்கிறது, எனக்கேட்டான்.
அவனது ஆணவத்தை எண்ணி கிருஷ்ணபரமாத்மா சிரித்தார். ஆணவம் மிக்கவர்கள் தோல்வியை தழுவுவது உறுதி என்பது கண்ணபிரானின் சித்தாந்தம். இனிமேல் நிச்சயமாக பாண்டவர்கள் வெற்றி பெற்று விடுவார்கள் என கிருஷ்ணருக்குப் புரிந்துவிட்டது. துரியோதனனிடம் சொல்லிக் கொள்ளாமல் கண்ணன் கிளம்பிவிட்டார். அவர் சென்றபிறகு விதுரரிடம் துரியோதனன் கோபத்துடன், சித்தப்பா ! நீங்கள் என்ன காரணத்திற்காக கண்ணனுக்கு விருந்து கொடுத்தீர்கள் ? நீங்கள் நான் கொடுக்கும் உணவில் வாழ்கிறீர்கள். ஆனாலும் பாண்டவர்களுக்காக தூது வந்தவனுக்கு விருந்து கொடுத்திருக்கிறீர்கள். ஒரு தாசியின் மகனான உங்களுக்கு இப்படிப்பட்ட புத்தி தானே இருக்கும், என்று கேட்டான். இதைக்கேட்டு விதுரர் மிகுந்த வருத்தமடைந்தார். பெற்ற தாயைப்பற்றி பேசிய துரியோதனன் மீது அவருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. துரியோதனா ! என் தாயையப்பற்றி பேசிய உன்னை இப்போதே வெட்டி வீழ்த்தியிருப்பேன். ஆனால் அது குருவம்சத்திற்கு இழுக்கு. குருவம்சத்தில் பிறந்த ஒருவன் தனது சகோதரனின் புதல்வனை கொன்றான் என்ற பழிசொல் காலம் காலமாக என்மீது நிலைத்திருக்கும். இனியும் இப்படி பேசாதே. பேசினால் நாக்கு இருக்காது. நான் கண்ணனுக்கு மட்டுமல்ல. அந்த பாண்டவர்களுக்கே கூட உதவி செய்தாலும்கூட உலகத்திலுள்ள அரசர்கள் என்னை பழிக்கமாட்டார்கள். எனது குணம் அவர்களுக்கு தெரியும். இனியும் உனக்காக நான் போரில் இறங்கினால் அது என் தாயை அவமதித்தது போல் ஆகும். எனவே என்னிடம் உள்ள யாரையும் அழிக்கும் சக்தி வாய்ந்த விஷ்ணு தனுசை வெட்டி எறிகிறேன். இது இனிமேல் யாருக்கும் பயன்படாது. என சொல்லிவிட்டு விஷ்ணுதனுசை ஒடித்து எறிந்தார்.
அர்ச்சுனனின் கையில் உள்ள காண்டீப வில்லிலிருந்து புறப்படும் அம்புகளை முறிக்கம் சக்தி விஷ்ணுதனுசுவிற்கு இருந்தது. இப்போது அது இல்லாமல் போனதால் துரியோதனனுக்கு அழிவுகாலம் நெருங்கிவிட்டதை அந்த சபையில் வீற்றிருந்த அரசர்களெல்லாம் கண்டார்கள். ஆனாலும் துரியேதனனை எதிர்த்து பேச முடியாததால் அவர்கள் அமைதியாக இருந்தனர். அப்போதும் துரியோதனனின் ஆணவம் அடங்கவில்லை. விதுரரின் வில் போனால் போகட்டும். என் நண்பன் கர்ணனிடம் இருக்கும் வில்லுக்கு அந்த அர்ஜுனனால் பதில் சொல்ல முடியுமா ? அவன் என்னுடன் இருக்கும் வரை என்னை யாராலும் வெல்ல முடியாது என சொல்லிவிட்டு அதிபயங்கரமாக சிரித்தான்.