மகாபலியை ஆட்கொள்ள பெருமாள் வாமனராக வந்து, திரிவிக்ரம மூர்த்தியாக வளர்ந்தார். தன் திருவடியால் உலகை அளந்தார். அவரது பாதம் சத்தியலோகத்தை எட்டியது. அங்கிருந்த பிரம்மா, தன் கமண்டல தீர்த்தத்தால் பெருமாளின் திருவடிக்கு அபிஷேகம் செய்தார். அது கங்கையாக மாறியது. பகீரதன் என்பவன் கங்கையை அவனுடைய முன்னோர் சாபம் தீர்க்க பூமிக்கு கொண்டு வந்தான். அவனது பெயரால் அவள் பாகீரதி என அழைக்கப்படுகிறாள். மேலோகம், பூலோகம், பாதாளம் ஆகிய மூவுலகிலும் ஓடுவதால் திரிபதகா என்று பெயர் ஏற்பட்டது. ஜன்னு என்னும் மகரிஷியின் செவி வழியாக வெளிப்பட்டதால் ஜானவி என்றும் அழைப்பர். வடமாநிலங்களில் பெண்களுக்கு ஜானவி என்று பெயரிடுவது வழக்கம்.