பதிவு செய்த நாள்
27
ஜூன்
2013
10:06
நாகர்கோவில்: கன்னியாகுமரியில், திருப்பதி கோயில் கட்டுவதற்கு அனுமதிக்க கூடாது, என்று வலியுறுத்தி, கிறிஸ்தவ முன்னேற்ற ஐக்கியம் சார்பில், நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம் இலவசமாக வழங்கிய ஐந்தரை ஏக்கர் நிலத்தில், திருப்பதி தேவஸ்தானம், 22.5 கோடி ரூபாய் செலவில், திருப்பதி மாடலில் கோயில் கட்டுகிறது. இதற்கான பூமி பூஜை, சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில், கோயில் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, கிறிஸ்தவ முன்னேற்ற ஐக்கியம் சார்பில், நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வேணுகோபால் கமிஷன் பரிந்துரையை மீறி, கோயில் கட்டக்கூடாது, கோயில் கட்டினால், கன்னியாகுமரியில் நெரிசல் அதிகரிக்கும், இங்குள்ள வருமானத்தை ஆந்திர அரசு கொண்டு சென்று விடும், என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, மனு கொடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கிறிஸ்தவ முன்னேற்ற ஐக்கியம் பொது செயலாளர் தியோடர்சேம், துணை தலைவர் விஜயகுமார், துணை செயலாளர் குழந்தைசாமி உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.