பதிவு செய்த நாள்
12
ஆக
2013
10:08
கும்மிடிப்பூண்டி:சிறுவாபுரி கோவிலில், நேற்று நடைபெற்ற வள்ளி முருகன் திருக்கல்யாண மகோற்சவத்தில், திருமண வரம் வேண்டி ஏராளமான ஆண்கள், பெண்கள் திரண்டு வந்து முருகனை வழிபட்டனர். கும்மிடிப்பூண்டி அருகே, சின்னம்பேடு கிராமத்தில் உள்ளது சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில். திருமண தடை நீக்கும் ஸ்தலம் என்ற சிறப்பு இக்கோவிலுக்கு உண்டு. சிறப்பு அபிஷேகம் சென்னையில் உள்ள அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழுவினர் சார்பில், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைகளில் சிறுவாபுரி முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு வருகிறது. அந்த குழுவினர் சார்பில், நேற்று, சிறுவாபுரி கோவிலில் நான்காம் ஆண்டு திருக்கல்யாண மகோற்சவம் நடைபெற்றது. அதிகாலை முதலே, திருமணம் ஆகாத ஆண், பெண் தங்கள் பெற்றோருடன் கோவில் முன் கூடினர். கோவிலுக்கு எதிரே அமைக்கப்பட்டிருந்த பந்தலில், அவர்களுக்கான மாலை, விவரங்கள் நிரப்ப வேண்டிய குறிப்புகள், ஆன்மிக புத்தகங்கள் அடங்கிய பைல் மற்றும் குடிநீர், ஆகியவை குழுவினர் சார்பில், இலவசமாக வழங்கப்பட்டன. அதன் பின்னர், கோவில் கொடிமரம் அருகே சங்கல்பம் செய்யப்பட்டு, பிரார்த்தனைக்கு வந்த ஆண், பெண்கள் மட்டும் திருக்கல்யாணம் நடைபெற்ற கூடத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். திருமண வரம் வேண்டி, 750 பேர் கலந்து கொண்டனர். உடன் வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், திருக்கல்யாணத்தை காணும் வகையில், கோவில் வளாகத்தை சுற்றி வைக்கப்பட்டிருந்த "டிவிக்களில் வைபவங்களை கண்டனர். ஆன்மிக சொற்பொழிவு நாதஸ்வரம், மேள தாளங்கள், திருவல்லிக்கேணி சவுந்தர்ய ரத்னமாலா குழுவினரின் முருகன் பாமாலை இசை நிகழ்ச்சி, பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் இளம்பிறை மணிமாறனின் சிறுவாபுரி முருகன் குறித்த சிறப்பு சொற்பொழிவுடன், திருக்கல்யாண மகோற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. கோவிலின் செயல் அலுவலர் பிரகாஷ், மேற்பார்வையில், தலைமை குருக்கள் ஆனந்தன் தலைமையிலான அர்ச்சகர்கள் திருமண வைபவத்தை நடத்தினர். ஆரணி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.