பதிவு செய்த நாள்
13
ஆக
2013
10:08
நாமக்கல்: "மக்கள் வழிபாடு செய்யும் வகையில், காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு வைத்த சீலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஒடுவங்குறிச்சியை சேர்ந்த ஏழு சமூகத்து மக்கள், நாமக்கல் மாவட்ட எஸ்.பி., கண்ணம்மாளிடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த ஒடுவன்குறிச்சியில், காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. பல ஆண்டுகளாக, எங்களது முன்னோர்கள், அமைதியான முறையில் வழிபாடு மற்றும் சுபகாரியங்களை செய்து வந்தனர். இக்கோவிலில், குறிப்பிட்ட ஏழு சமூகத்தினர் மட்டும்தான், இதுவரை வரி வசூல் செய்து, ஆலயத்தை தோற்றுவித்து, பராமரிப்பு செலவு மற்றும் இதர செலவுகளையும், விசேஷங்களையும் சிறப்பாக நடத்தி வந்தோம். ஆனால், மற்றொரு சமூகத்தினர் மற்றும் அமைப்பினர், இந்த கோவிலில் உள்ளே வழிபாடு மற்றும் திருமணம் செய்வதாக கூறி, இருதரப்பினரிடையே பிரச்னை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த, 8ம் தேதி கோவிலுக்கு, "சீல் வைத்து மூடப்பட்டது. அதனால், எங்கள் சமூகத்தினர் மிகுந்த வேதனையும், மன நிம்மதியின்றியும் வாழ்ந்து வருகின்றனர். எங்கள் சமூகத்தினரின் நலனை கருத்தில் கொண்டு, காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு வைத்த சீலை அகற்றி, எங்களுக்கு உண்டான உரிமையை மீட்டு, நாங்கள் எப்போதும் போல் வழிபாடு மற்றும் திருமணம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.