பதிவு செய்த நாள்
26
செப்
2013
11:09
திருவள்ளூர்:செடிகள் வளர்ந்து, புதராக மாறி வரும், வாசீஸ்வரர் கோவில் குளத்தை, சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருவள்ளூர் அடுத்த, திருப்பாச்சூரில் வாசீஸ்வரர் கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படும் இக்கோவில், திருத்தணி முருகன் கோவில் கட்டுப்பாட்டில் உள்ளது. சமயக் குரவர்களான, அப்பர், சுந்தரர் மற்றும் திருஞானசம்பந்தர், ஆகிய மூவரால் பாடல் பெற்ற தலம் இது. இக்கோவில் எதிரில், பரந்து, விரிந்த திருக்குளம் அமைந்துள்ளது. தற்போது, இக்குளம், தூர்ந்து போய், சுற்றிலும், மரம், செடி, கொடிகள் வளர்ந்து, புதராக காட்சியளிக்கிறது. மேலும், பாம்பு, பூரான் போன்ற விஷ பூச்சிகளின் இருப்பிடமாக இருந்து வருகிறது. இக்கோவில் குளத்தை தூர்வாரி, சீரமைத்தால், மழை நீர் சேமிக்க முடியும். குளமும் சுத்தமாகி, பக்தர்கள் நீராட வசதியாக இருக்கும். எனவே, கோவில் நிர்வாகம், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்களும், பக்தர்களும் எதிர்பார்க்கின்றனர்.