திருவெண்ணெய்நல்லூர்:கிருபாபுரீஸ்வரர் கோவிலுக்கு வரவேண்டிய வரிபாக்கியை வசூலிக்க முடியாததால் பணியாளர் களுக்கு மூன்று மாதங்களாக சம்பளம் வழங்காத நிலை ஏற்பட்டுள்ளது. திருவெண்ணெய்நல்லூரில் பிரசித்தி பெற்ற மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவில் உள்ளது. சுந்தரரை தடுத்தாட்கொண்டு அருளாசி வழங்கிய சிறப்புடைய இக்கோவிலுக்கென சொத்துக்கள், நிலங்கள், காலிமனைகள் உள்ளன. இவற்றை பயன்படுத்துவோர் பாக்கிகளை செலுத்தாமல் உள்ளதால், உண்டியல் காணிக்கையை எதிர் பார்க்க வேண்டியுள்ளது. இத்துடன் நிரந்தர செயல்அலுவலர் இல்லாததால் வரிபாக்கியை வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குருக்கள், துப்புரவு பணியாளர், கணக்கர், இரவு காவலர்களுக்கு ஊதியத்தை மூன்று மாதங்களாக வழங்க முடியவில்லை. இக்கோவிலுக்கென நிரந்தர செயல் அலுவலர் இல்லாததால் பல கோவிலுக்கு பணியாற்றுபவரை நியமித்துள்ளதால் கூடுதல் பணிசுமை ஏற்பட்டு வரிபாக்கியை வசூலிக்க முடியவில்லை. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கிருபாபுரீஸ்வரர் கோவிலுக்கு திறமையான செயல் அலுவலரை நியமித்து வரிபாக்கிகளை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.