*உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொள்வதால் வாழ்க்கை நரகமாக மாறிவிடும். எனவே யாரைக் கண்டும் பொறாமைப்படத் தேவையில்லை. *உங்களிடம் என்ன இருக்கிறதோ, நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அதை எண்ணி பெருமிதம் கொள்ளுங்கள். உங்களின் தனித்தன்மை உலகில் வேறு யாருக்கும் கிடையாது. *தீமையே உலகத்தில் இல்லை என்று கூறுவது உண்மைக்குப் புறம்பானது. அதற்காக, தீமையைக் கண்டு அஞ்சி ஓடக்கூடாது. எதிர்த்துப் போரிடும் மனோதிடம் வேண்டும். *மனதில் எழும் எதிர்மறை எண்ணங்களைக் கண்டு பயப்படாதீர்கள். விவேகத்தைப் பயன்படுத்தி தவறான எண்ணங்களை உற்று நோக்குங்கள். அவை இருந்த இடம் தெரியாமல் மறையத் தொடங்கும். *சூழ்நிலைகளை உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதித்தால், உங்களை நீங்களே இழந்து விட நேரிடும். வெற்றி கொள்வதற்காகவே இந்த மண்ணில் மனிதராகப் பிறந்திருக்கிறீர்கள். *ஒருவன் எத்தனை முறை தோல்வியுற்றாலும், மனதிற்குள் தோல்வியடையாமல் இடைவிடாமல் முயற்சிப்பான். அவனே உண்மையாக வெற்றிச் சரித்திரத்தை எழுதுகிறான். உலகமே அவனைத் தோல்வியாளனாக கருதினாலும் கூட அவன் சிறந்த வெற்றியாளனே. *கவலைப்பட்டு காலத்தை வீணாக்காதீர்கள். பிரச்னை தீர்வதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்குங்கள். அதற்கான நடவடிக்கையில் துரிதமாக ஈடுபடுங்கள். *தன்னலமற்ற மனிதர்களிடம் செல்வம் சேர்ந்தால் அது ஒரு வரப்பிரசாதம். ஆனால், சுயநலமானவர்களிடம் பணம் சேரும்போது சாபக்கேடாக மாறுகிறது. *மனதில் எப்போதும் ஆக்கபூர்வமான எண்ணத்தை நிரப்புங்கள். கவலைப்படுவதால் காலமும், மனோசக்தியும் விரயமாகிறது என்பதை உணர்வது அவசியம். *சோம்பேறியை யாரும் விரும்ப மாட்டார்கள். இறைவனும் கூட கைவிட்டு விடுவான். மனிதன் வாழ்வில் எதையாவது சாதிக்க முயற்சித்தபடி இருக்க வேண்டும். *விடாமுயற்சி உள்ளவர்கள் வாழ்வில் எத்தனையோ சாதனைகளைப் படைத்திருக்கின்றனர். அதற்காக வெறும் பணத்தை மட்டுமே உங்களின் வெற்றிக்கு அளவுகோலாக ஆக்கி விடாதீர்கள். *முயற்சிக்காமல் உலகை விட்டுத் தப்பி ஓட நினைப்பது முட்டாள்தனம். எங்கு சென்றாலும் மனம் நம்முடன் தான் இருக்கும். அதனால் மனதை ஆளக் கற்றுக் கொள்ளுங்கள். *நான் ஒருவருக்கும் மனதாலும் தீங்கு இழைக்கவில்லை என்ற நிலையை எட்டுபவன், இந்த பூமியிலேயே மகிழ்ச்சி மிக்க மனிதனாக இருப்பான். -பரமஹம்ச யோகானந்தர்