திருநெல்வேலியில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள சீவலப்பேரி கிராமத்தில், விஷ்ணு துர்கைக்கு ஒரு ஆலயம் உண்டு. இங்கே வழக்கத்துக்கு மாறாக... ஆயுதங்கள் எதுவும் இல்லாமல், சாந்த சொரூபிணியாக அருள்பாலிக்கிறாள் விஷ்ணு துர்கை. தாமிரபரணிக் கரையில் உள்ள இந்த ஸ்தலம், அகத்திய மாமுனிவர் வழிபட்டது என்று போற்றுகிறார்கள். இந்தத் திருக்கோயிலுக்கு வந்து தூய பக்தியோடு முறைப்படி வலம் வந்து, அம்பாளை மனதார வழிபட, நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
மேலும் இக்கிராமத்தில் சுடலைமாட சுவாமிக்கும் கோயில் அமைந்துள்ளது. இப்பகுதி மக்கள் பலருக்கு சுடலைமாடன்தான் குலதெய்வம். ஏவல், பின்னி, சூனியம் போன்றவற்றால் அவதிப்படுவோர், வழக்குகளில் சரியான தீர்ப்பு கிடைக்க விரும்புவோர், இவரது சன்னதிக்குச் சென்று வழிபட, நல்ல பலன் கிடைக்கும். சுடலைமாட சுவாமி கோயிலில் கொடுக்கப்படும் விபூதியைத் தண்ணீரில் கலந்து குடித்தால் நாள்பட்ட வியாதிகளும் குணமாகும் என்பது நம்பிக்கை. இவ்வூரின் காவல் தெய்வமும் இவரே.