பதிவு செய்த நாள்
06
நவ
2013
11:11
அரியலூர்: பாலசுப்ரமணிய ஸ்வாமி கோவிலில் கந்தசஷ்டி மகோற்சவம் துவங்கியது. அரியலூர் பெரிய கடைவீதியில் உள்ள, பாலசுப்ரமணிய ஸ்வாமி கோவிலில் கந்தசஷ்டி மகோற்சவம் ஆண்டுதோறும், எட்டு நாட்கள் நடைபெறும். ஆண்டுதோறும் ஐப்பசி வளர்பிறை முதல்நாள் முதல், நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் பாலசுப்ரமணிய ஸ்வாமியின் திருவீதி உலா உற்சவமும், ஆறாம் நாள் சூரசம்ஹாரமும், ஏழாம் நாள் திருக்கல்யாண உற்சவமும், எட்டாம் நாள் விடையாற்றி உற்சவமும் நடைபெறுவது வழக்கம். அதன்படி நடப்பு ஆண்டு, அரியலூர் பாலசுப்ரமணிய ஸ்வாமி கோவிலின், கந்தசஷ்டி உற்சவத்தின் முதல் நாளான, 3ம் தேதி இரவு, ஆட்டுகிடா வாகனத்தில், பாலசுப்ரமணிய ஸ்வாமி எழுந்தருளினார். இரண்டாம் நாளான நேற்று முன்தினம், யானை வாகனத்தில் பாலசுப்ரமணிய ஸ்வாமி எழுந்தருளினார். வரும், 8ம் தேதி சூரசம்ஹாரமும், 9ம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. உற்சவத்துக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் சுந்தரலிங்கம் செய்துள்ளார்.