பதிவு செய்த நாள்
09
நவ
2013
01:11
நெஞ்சு விடு தூது என்னும் இந்நூல், ஆசிரியர் உமாபதி சிவத்தால் அருளிச் செய்யப்பட்டது. மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கினுள் இது பன்னிரண்டாவதாக வைத்து எண்ணப் பெறும்.
சாத்திர நூல்களுள் இது ஒன்றே சிற்றிலக்கிய வகையில் அமைந்தது. தூது என்ற சிற்றிலக்கியம் பெரும்பாலும் தலைவி ஒருத்தி கிளி, குயில், தன் நெஞ்சு இவை போன்றவற்றுள் ஏதாவது ஒன்றைப் பாட்டுடைத் தலைவனிடத்துத் தூது அனுப்பித் தன் காதலை அவனுக்கு எடுத்துரைத்துத் திரும்புமாறு விடுப்பதாக அமையும். இந்த நூல், உமாபதி சிவம் தம்முடைய ஞான ஆசிரியர் ஆகிய மறைஞானசம்பந்தரிடம் தமது நெஞ்சைத் தூதாக விடுத்து அவரிடத்திலிருந்து திருக்கொன்றை மாலையை வாங்கி வருமாறு கேட்பதாக அமைந்துள்ளது.
இந்நூலுள் உலகாயதம், சமணம், ஏகான்மவாதம், பவுத்தம் முதலிய சமயங்களில் ஈடுபட்டு நில்லாமல், ஒப்பற்ற தனி முதல்வனாகிய சிவபெருமானிடம் சென்று பூங்கொன்றை மாலையை வாங்கி வருமாறு வேண்டுகிறார் ஆசிரியர். நூலுள் மறைஞானசம்பந்தர் சிவபெருமானாகவே போற்றப் படுகிறார்.
இறைவனின் இயல்பு, உயிரின் சிறுமை, உயிரைப் பற்றியிருக்கும் தளைகள், நெஞ்சுக்கு அறிவுறுத்தல், சிவபெருமானின் தசாங்கம், சிவனே குருவாக வருதல், குருவருள், சிவபெருமானின் ஒப்பற்ற தன்மை, நெஞ்சு சேரக் கூடாத இடங்கள், இறைவனின் திரு ஓலக்கச் சிறப்பு ஆகியன நூற்று இருபத்து ஒன்பது கண்ணிகளால் விளக்கப்படுகின்றன. ஆசிரியர் மறைஞானசம்பந்தரைச் சிவபெருமானாகவே கருதி வழிபடும் உமாபதி சிவத்தின் பேரன்பு, போற்றிப் பஃறொடையில் காணப்படுகிறது போலவே இந்நூலிலும் காணப்படுகிறது.
இந்நூல் கலிவெண்பா யாப்பில் அமைந்துள்ளது.
பூமேவும் உந்திப் புயல் வண்ணன் பொற்பதுமத்
தார் மேவும் மார்பன் சதுமுகத்தோன் தாம் மேவிப்
பன்றியும் அன்னமுமாய்ப் பார் இடந்தும் வான் பறந்தும்
என்றும் அறியா இலயபினான் அன்றியும்
இந்திரனும் வானோரும் ஏனோரும் எப்புலியும்
மந்தர வெற்பும் மறிகடலும் மந்திரமும்
வேதமும் வேத முடிவும் விளை விந்துவுடன்
நாதமும் காணா நலத்தினான் ஓத
அரியான் எளியான் அளவிறந்து நின்ற
பெரியான் சிறியான் பெண்பாகன் தெரியா
அருவான் உருவான் அருவுருவு மில்லான்
மரியான் மரிப்பார் மனத்தான் பரிவான
மெய்யர்க்கு மெய்யன் வினைக்கு வினை யாயினான்
பொய்யர்க்குப் பொய்யாய பொய்யினான் ஐயன்
படநாகம் பூண்ட பரமன் பசுவின்
இடமாய் நிறைந்த இறைவன் சுடர் ஒளியான்
என்றும் உளன்
கார் மேகம் போன்ற நிறத்தினையும் உந்திச் சுழியிலிருந்து தோன்றுகின்ற தாமரை மலரையும் உடைய திருமாலும், நான்கு முகங்களையும் பொற்றாமரை மாலை தாங்கிய மார்பினையும் உடைய அயனும், சிவபெருமானின் அடி முடி காண்பதற்கு முற்பட்டுப் பன்றி வடிவோடு நிலத்தை அகழ்ந்தும், அன்ன வடிவம் கொண்டு விண்ணில் பறந்தும், அவர்கள் இருவராலும் ஒரு காலத்தும் காண முடியாத இயல்பினை உடையவன். அல்லாமலும் வானோரும், வானோர் தலைவனான இந்திரனும், பிறரும் வேறு உலகத்து வாழ்வாரும் மந்தர மலையின் உச்சியிலும், மறித்துச் சுழல்கின்ற கடலின் ஆழத்திலும், வாழ்வாரும் உணர்தற்கு அரியவன். மந்திரங்கள், நான்மறைகள், அம் மறையின் முடிவு எனப்படும் உபநிடதங்கள் உயிருக்கு அறிவை விளைவிக்கும் விந்து நாதம் ஆகிய இவற்றின் அதிதெய்வங்கள் என்ற இவற்றினால் எல்லாம் எட்டுதற்கு அரியவன். அன்புடைய அடியவர்களுக்கு எளியவன். பெரியவற்றிற்கு எல்லாம் பெரியவன். அணுவிலும் நுண்ணியவன். உமையம்மையைத் தன்னுடைய இடப்பாகத்திலே கொண்டருளியவன்.
கண்ணுக்குத் தெரியாத அருவாகவும், அடியார்க்குக் காட்சி தரும் உருவாகவும் அரு உருவாகவும் இம் மூன்று திறமும் அல்லாதவனாகவும் விளங்குபவன். தான் என்றும் இறவாதவன். உலகில் தோன்றி மறையும் உயிர்களின் மனத்திலே நீங்காது குடிகொண்டவன். தன் மீது அன்பு செலுத்துவாருக்குப் பரிவு காட்டும் மெய்ம்மையாளன். துன்புறுத்தும் வினை அடியாரைத் துயர் செய்யாது ஓட்டும் ஆற்றலுடையவன். பொய்ம்மை உடையவர்களால் காண இயலாததனால் அவர்க்குப் பொய்யானவன். உயிர்களுக்கெல்லாம் தலைவன். படமெடுத்து ஆடும் பாம்பினை அணிந்த பரமன். உயிர்களை இடம் கொண்டு அவற்றுள் நிறைந்த இறைவன். பேரொளிப் பிழம்பு வடிவானவன். என்றேன்றும் உள்ளவன்.
சிவபெருமான் தொழுவார்க்கே அருள்கின்ற கருணையாளன். வழுவான மனத்தோடு தேடலுற்ற மாலுக்கும் அயனுக்கும் அவனுடைய திருவடியும் காண்பதற்கு அரிதாயின. பிரமன் அரி யென்று இருவரும் தம் பேதைமையால் பரமம் யாம் பரமம் என்றவர்கள் பதைப்பு ஒடுங்க அரனார் அழலுருவாய் அங்கே அளவிறந்து பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடோமோ என்ற திருவாசகமும் காண்க. மரியான் இறவாதவன். மரிப்பார் இறப்பவர்கள். தோன்றி நின்று அழியும் உயிர்கள். இதனை ஸ்மரிப்பார் என்ற வட சொல்லின் திரிபாகக் கொண்டு நினைப்பார் என்று பொருள் கொள்ளுவதும் உண்டு. இறைவன் வினைத் தொடக்கு அற்றவன். ஆதலால் உயிர்களைப் பற்றும் வினைகளை அவன் ஒருவனே நீக்குதல் கூடும் என்று விளக்குதற்கு வினைக்கு வினையாயினான் எனக் குறித்தார்.
அன்றளவும் யானும் உளனாகி
நின்றநிலை யில்தரித்து நில்லாமல் சென்று சென்று
தோற்றியிடும் அண்டம் சுவேதசங்கள் பாரின் மேல்
சாற்றும்உற் பீசம் சராயுசங்கட்கு ஏற்ற பிறப்பு
எல்லாம் பிறந்தும் இறந்தும் இருவினையின்
பொல்லாங்கு துய்க்கும் பொறியிலியேன்
இறைவன் என்று முதல் உள்ளானோ அன்றே உயிராகிய நானும், உள்ளேன். ஆயினும் இறைவன் நிலை வேறுபாடு அடையாதவன். நானோ ஒரு நிலையில் நிலைத்து நிற்க அறியாது மாறி மாறிப் பிறப்பினுட் பட்டுவருபவன். முட்டையுள் பிறப்பன. வேர்வையுள் பிறப்பன, வித்தினில் முளைப்பன. கருப்பையில் பிறப்பன என்று இவ்வாறு நால்வகைத் தோற்றங்களிலும் வினைக்கேற்ற பிறப்பில் பறந்தும் இறந்தும் நல்வினை, தீவினைகளை நுகரும் பொல்லாங்கு உடைய அறிவற்றவன் ஆயினேன்.
உயிர்கள் தோற்றுவிக்கப்படாதவை, என்றும் அழியாதவை, எண்ணில் அடங்காதவை என்பன சைவ சித்தாந்தத்தின் கொள்கை. எனவே இறைவன் என்றைக்கு உளனோ அன்றைக்கே உயிர்களும் உள என்றார். இறைவன் நிலையில் திரியாதவன். ஆனால் உயிர்களோ வினைகளில் அழுந்தி மாறி மாறிப் பிறந்து இறந்து துயர் உறும் இயல்பு உடையன.
இவ் உயிர்கள் நால்வகைத் தோற்றமும் எழு வகைப் பிறப்பும் எண்பத்து நான்கு நூறாயிரம் பிறவி வேறுபாடுகளும் உடையன என்பர். நால் வகைப் பிறப்புக்கள் அண்டம் அண்டசம் என்பதன் திரிபு முட்டையில் பிறப்பன சுவேதசம் வேர்வையில் தோன்றுவன. உற்பீசம் வித்தில் இருந்து மேல் நோக்கி வளர்வன. சராயுசம் கருப்பையில் தோன்றுவன என்பன. பொறியிலியேன் என்பதற்கு நல்லூழ் அற்றவன் என்று பொருள் கொள்ளினும் அமையும். இப்பகுதியில் உயிரின் சிறுமையை அசிரியர் எடுத்துரைக்கிறார்.
கல்லா
உணர்வின் மிசையோடு உலகா யதனைப்
புணர்வதொரு புல்லறிவு பூண்டு கணையில்
கொடிதெனவே சென்று குடிப்பழியே செய்து
கடிய கொலை களவு காமம் படியின்மிசைத்
தேடியுழன்று தெரிவைத் தெரியாமல்
வாடி இடையும் மனந்தனக்கும் நாடிஅது
போன வழி போகும் புந்திக்கும் புந்தியுடன்
ஆன திறலார் அகந்தைக்கும் மேனி
அயர அயர அழிய அழியும்
உயிரின் துயரம் உரையேன்
அருள் நூல்களைக் கல்லாத காரணத்தால் உலகாயதனோடு உறவாடிச் சிற்றறிவின் வயப்பட்டு, வில்லிலிருந்து விடுபட்ட அம்பினை விடவும் வேகமாகச் சென்று, கொடு வினைகள் செய்து பிறந்து குடிக்குப் பழி தேடிக் கொடியதாகிய கொலை களவு காமம் இவற்றிலே ஈடுபட்டு வருந்தி, தெரிந்து கொள்ள வேண்டியவற்றைத் தெரிந்து கொள்ளாமல் உலகத்துப் பொருள்களில் மயங்கி அதனாலே வாட்டமடைந்து தளரும் மனத்துக்கும், அம் மனம் செல்லும் வழியே போகும் புத்திக்கும் புத்தியினால் தோன்றுகின்ற அகந்தைக்கும் ஆட்பட்டு அந்த முயற்சியிலே உடல் அயர அதனால் அழியும் உயிரின் துயரத்தை இன்னதென உரைக்க அறியேன்.
அருள் நூல்களைக் கல்லாது வறிதே காலம் கழித்தமையால், கல்லா உணர்வின் என்றார். உலகாயதர் காட்சியளவை ஒன்றே கொண்டு நடையை மெய்யென்று நாத்திகம் பேசுவர். இறைவனும் ஆன்மாவும் இல்லை என்பர். வீடு பேற்றை உடன்படார். இவ்வுலகத்து இன்பமே உயர்ந்த இன்பம் எனக் கொள்ளுவர். இவர்களோடு உறவு பூண்டதால் மெய்யுணர்வைப் பெற முயலும் முயற்சி தோன்றாது. ஆகையினாலே புல்லறிவு பூண்டு எனக் கூறினார். நில்லாதவற்றை நிலையின என்று உணரும் புல்லறிவாண்மை என்ற வள்ளுவப் பெருந்தகையின் திருவாக்கும் கருதத்தக்கது.
கணை- வேகத்துக்கும், துன்பம் விளைவிப்பதற்கும் உவமையாயிற்று. உலகியல் ஆர்வம் பிறந்த குடிக்கு ஏற்ற பெருமையைக் குறைக்கும் என்பதனால் குடிப் பழியே செய்து என்றார். தெரிய வேண்டிய பொருளைத் தேடாமல் உலகத்துப் பொருள்களை நுகர்வதாகிய தோட்டத்தில் மனம் வாடிற்று என்றார். இடையும் வருந்தும் மனம் போன வழி புத்தியும், அதன் வழி யான், எனது என்னும் செருக்கும் இவ்விரண்டு பற்றுக்களாலும் உடல் தளர்வும், தளர்வின் விளைவாக உடம்பினின்று உயிர் நீங்கலும் ஆகிய துயரங்களை எடுத்துரைக்க இயலாது என்பதனால் உயிரின் துயரம் உரையேன் என்று கூறினார்.
கொண்டதொரு காமனுக்கும் கோபனுக்கும் மோகனுக்கும்
மண்டு மதமாச் சரியனுக்கும் திண்திறல்சேர்
இந்திரியம் பத்துக்கும் ஈரைந்து மாத்திரைக்கும்
அந்தமிலாப் பூதங்கள் ஐந்துக்கும் சிந்தை கவர்
மூன்று குற்றம் மூன்று குணம் மூன்று மலம் மூன்று அவத்தை
ஏன்று நின்று செய்யும் இரு வினைக்கும் தோன்றாத
வாயுஒரு பத்துக்கும் மாறாத வல்வினையே
யாய கிளைக்கும் அருநிதிக்கும் நேயமாம்
இச்சை கிரியை இவைதரித்தங்கு எண்ணிலா
அச்சம் கொடுமை யவைபூண்டு கச்சரவன்
சீரில்நிலை நில்லாது திண்டாடும் பல்கருவி
வாரில் அகப்பட்டு மயங்கினேன்
விளைந்து முதிர்ந்த காமத்துக்கும் சினத்திற்கும் மோகத்திற்கும் மண்டிக் கிடக்கிற மதத்திற்கும் பொறாமைக்கும் ஆட்பட்டேன். வலிமை பொருந்திய அறிவுப் பொறி, செயற் பொறிகள் ஐந்து ஐந்துக்கும், பொறிகளின் வழியும் பூதங்களின் வழியும் அறியத் தக்க தன் மாத்திரைகள் பத்திற்கும் ஐம்பெரும் பூதங்களுக்கும் சிந்தையைக் கவர்ந்து எழுகின்ற காமம் வெகுளி மயக்கம் என்னும் முக்குற்றங்களுக்கும் சாத்துவிதம் இராசதம் தாமதம் ஆகிய மூன்று குணங்களுக்கும் ஆணவம் கன்மம் மாயை ஆகிய மும்மலங்களுக்கும் கேவலம் சகலம் சுத்தம் ஆகிய மூன்று நிலைகளுக்கும், என்னைப் பற்றி விடாத இரு வினைகளுக்கும் கண்ணுக்குப் புலனாகாத பிராணன் முதலான வளிகள் பத்துக்கும், வல்வினைக்குக் காரணமாக விளங்குகின்ற உறவினர்க்கும், பொருள் மேல் கொண்ட ஆசைக்கும் என்னுடைய அறிவு விழைவு ஆற்றல்களைச் செலுத்தி அச்சத்துக்கும் கொடுமைக்கும் இடம் கொடுத்துப் பாம்பினைக் கச்சாக அணிந்து விளங்கும் இறைவனின் சீரில் நிலை பெற்று நில்லாது என்னை ஆட்டுவிக்கும் கருவி கரணங்களின் கடலனைய துன்பத்தில் அகப்பட்டு மயங்கினேன்.
காமம் கோபம் மோகம் மதம் மாச்சரியம் ஆகிய தீய பண்புகளை ஆண்பால் ஒருமையாகக் கூறி இகழ்ச்சிக் குறிப்பாக அவற்றை உயர்த்துவது போலப் பழித்தார். இப்பகுதியில் உயிர்கள் தத்துவங்களால் கட்டுண்டு நிற்பதையும் உலகியல் வயப்பட்டு மயங்குவதையும் அல்லல் உறுவதையும் பொதுவாகக் கூறுகின்ற நோக்கத்தில் ஆசிரியர் தம்மேல் ஏற்றிக் கூறினார்.
-தேருங்கால்
உன்னை ஒழிய உறவில்லை என்னுமது
தன்னை அறிவைத் தனியறிவை முன்னம்
தலைப்பட்டார் தீரத்துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றையவர் என்று நிலைத் தமிழின்
தெய்வப் புலமைத் திருவள்ளுவர் உரைத்த
மெய் வைத்த சொல்லை விரும்பாமல் ஐவர்க்கும்
ஆவதுமே செய்து அங்கு அவர் வழியைத் தப்பாமல்
பாவமெனும் பவுவப் பரப்பழுந்திப் பூவையர்தம்
கண்வலையிற் பட்டுக் கலவிக்கலை பயின்று அங்கு
உண்மை நிலையுணர்ச்சி ஓராமல் திண்மையினால்
நாவில் கொடுமை பல பிதற்றி நாள்தோறும்
சாவில் பிறப்பில் தலைபட்டு இங்கு ஆவி நிலை
நிற்கும் வகை பாராய் நிலையான நெஞ்சமே
பொற்பினுடன் யானே புகலக் கேள்
நுணுகி ஆராய்ந்தால் ஒப்பற்ற தலைவனாகிய உன்னைத் தவிர உறவு வேறு இல்லை என்னும் உண்மையையும், தன்னையும் அறிந்து தலைவனாகிய உன்னையும் அறியும் நிலை கைவரப் பெற்றவர்களே விடுதலை பெற்றவர்கள் என்பதை நிலை பெற்ற தமிழில் தெய்வப் புலமைத் திருவள்ளுவர் தலைப்பட்டார் தீரத்துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றையவர் என்று அருளிய மெய்ம்மை மிக்க சொல்லைக் கைக் கொள்ளாமல் ஐம்பொறிகளின் வழியே சென்று அவை காட்டும் இன்பத்தில் மயங்கி அதனால் பாவமாகிய கடற் பரப்பில் மூழ்கிப் பெண்களின் கண் வலையில் அகப்பட்டு அவரோடும் கூடி, மெய்யுணர்தலைத் தலைப்படாது செருக்கினாலே நாவினால் இன்னாத சொற்களைக் கூறி, ஒவ்வொரு நாளும் இயற்றும் வினையினால் இறப்பும் பிறப்பும் தரும் வினைகளைச் செய்து உயிர் நிற்கும் நிலையை நெஞ்சமே காண்பாயாக. இந்தத் துயரக் கடலினின்றும் விடுபட்டு உய்வினை அடைவதற்குரிய வழியை நான் புகலுவேன் கேட்பாயாக.
உலகியல் உறவு நிலையானதன்று உயிருக்கு உண்மையான உறவாக விளங்குவது இறைவனைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதனை அருளாளர்கள் வலியுறுத்தி யுள்ளார்கள். உற்றார் யார் உளரோ உயிர் கொண்டுபோம் பொழுது என்ற அப்பர் பெருமான் திருவாக்கு உலகியல் வாழ்க்கையில் இறைவன் ஒருவனே நீடித்த உறவாவான் என்பதை வலியுத்துகிறது. அறிவை என்ற சொல் உலகியல் அறிவை உணர்த்தாமல் உண்மை அறிவாகிய சிவஞானத்தை உணர்த்திற்கு. கருவி கரணங்களின் துணை இல்லாமல் வரையறைக்கு உட்படாமல் அறிய வல்ல சிவபெருமான் தனி அறிவு என்ற சொல்லால் குறிப்பிடப் பெறுகிறார்.
திருக்குறள் நீதி நூல் என்ற அளவில் கொள்ளப் படாமல் மெய் உணர்தலுக்கும் துணை செய்யும் என்று சைவச் சான்றோர்கள் கொண்டார்கள் என்பதனைத் தலைப்பட்டார் தீரத் துறந்தார் என்று தொடங்கும் திருக்குறளை இவ்வாசிரியர் முழுமையான எடுத்தாண்டிருப்பது புலப்படுத்தும், இதுபோலவே திருக்குறளின் சொல்லும் பொருளும் மற்றைய சாத்திர நூல்களில் பயின்று வருவதையும் காணலாம். திருவள்ளுவ நாயனாரிடத்து ஆசிரியர் உமாபதி சிவம் கொண்டிருந்த மதிப்பு, நிலைத் தமிழின் தெய்வப் புலமைத் திருவள்ளுவர் உரைத்த மெய் வைத்த சொல் என்று அவர் பாராட்டுவதிலிருந்து விளங்குகிறது.
ஐம்புலன்களையும் ஐவர் என்று சொல்லும் வழக்கு திருநாவுக்கரசு நாயனார் தனித்திருநேரிசையில் புள்ளுவர் ஐவர் கள்வர் என்று கூறுவதிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் அறியலாகும்.
பெண்ணாசையில் பட்டு உயிர்கள் அல்லலுறுவதைப் பொதுமையில் கடிகிறார். இங்குக் கூறப்பட்டது அறம் சாராச் சிற்றின்ப வேட்கையே
- வெற்பின் மிசை
வந்திருக்க வல்லான் மதியாதார் வல் அரணம்
செந்தழலில் மூழ்கச் சிரித்தபிரான் அந்தமிலா
வேத முடிவில் விளைவில் விளைவில் ஒளி
ஆதியமலன் நிமலன் அருள் போத
அறிவில் அறிவை அறியு மவர்கள்
குறியுள் புகுதும் குணவன் நெறி கொள்
வெளியில் வெளியில் வெளியன் வெளியில்
ஒளியில் ஒளியில் ஒளியன் ஒளியில்
அளியில் அளியில் அளியன் அளியில்
அளவில் அளவில் அளவன் அளவிறந்து
நின்றான் அனைத்தும் நிறைந்தான் நினைப்பவர் பால்
சென்றான் தெரியத் தெரியாதான் குன்றா
விளக்காய் நிறைந்த விரி சுடரான் விண் மேல்
துளக்காமல் நின்ற பெருஞ் சோதி உளக் கண்ணுக்கு
அல்லாது தோன்றா அமலன் அகிலமெலாம்
நில்லாமல் நின்ற நிலையினான் சொல் ஆரும்
ஈசன் பெருமை இருவினையேன் இன்று உனக்குப்
பேசும் தகைமை யெலாம் பேணிக் கேள்
திருக்கயிலாய மலையிலே எழுந்தருளியிருக்கும் பெருந்தகை. தம் செருக்கினால் பிறரை மதியாத முப்புரத்து அசுரர்கள் மூவரையும் அவர்களது மூன்று கோட்டைகளையும் நெருப்பிலே மூழ்கி அழியுமாறு சிரித்து எரித்த பிரான். எல்லையற்ற வேதத்தின் முடிவிலும் அதன் பொருளிலும், பொருளால் விளையும் பயனிலும் ஒளிர்கின்ற முன்னைப் பழம் பொருளாகவும் குற்றமற்றவனாகவும் இல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கியவன் ஆகவும் திகழ்பவன். அறிவினுக்கு அறிவாக விளங்குகின்ற மெய்யறிவை அறியும் ஆற்றலுடைய அருளாளர்களின் மனத்துக்குள் புகுந்து கோவில் கொண்ட பண்பாளன். ஐம்பூதங்களில் ஒன்றாகிய விண்வெளிக்கும். வெளியாகிய மூலப்பகுதியின் வெளிக்கும் அதற்குக் காரணமாகிய கலை வெளிக்கும் இடம் கொடுத்து நிலைபேறாக விளங்குபவன். இத்தகையோன் இவை எவற்றிலும் தோய்வற்று நிற்பவன். கலை ஒளிக்கும் மேலான ஒளியாகிய தூவா மாயையின் ஒளிக்கும். அதற்கு மேலதாகிய சுத்த வித்தையின் ஒளிக்கும். அதற்கும் மேம்பட்ட விந்துவின் ஒளிக்கும் ஒளி தருகின்ற பேரொளி. அவ்விந்துவுக்கு மேம்பட்ட சதாசிவத்துக்கும், அதற்கும் மேலான பராசத்திக்கும் காரணமாக விளங்கும் பரமசிவம். அப்பெருமான் அளவைகளால் அளந்தறியப் படாதவன் ஆயினும் திருவருளைத் தலைப்பட்டார்க்குத் தன் கருணையால் எட்டுதற்கு உரியவன். தன்முனைப்பாலும், உலகியல் அறிவாலும் அளந்தறியப் படாத பெருமையன். எங்கும் நீக்கமற நிறைந்தவன். அவனை நினைவார் திருவுள்ளத்தில் குடிகொண்டு நிறைந்தவன். யாவற்றையும் ஒருங்கே உணர்தல் அவனது இயல்பு குன்றாத பேரொளியாய் நின்று யாவற்றையும் விளக்குபவன். விண்ணிற் சுழலும் ஞாயிறும் மதியும் போல அல்லாமல் அசைவற்ற சோதி. குறைந்தும் கூடியும் மாறுபடாது நிலை பெற்று நிற்கும் பெரும் சோதி. அகக் கண்ணால் காண்பாருக்கல்லது புறக்கண்ணால் காண்பார்க்குக் காட்சிப்படாதவன். உலக மெல்லாம் நிறைந்திருப்பினும் உலகப் பொருட்களால் தொடக்குறாதவன், சொற் பதம் கடந்த ஈசன் பெருமையை இருவினை ஆழியில் அகப்பட்ட நான், நெஞ்சமே, இன்று உனக்கு எடுத்துரைப்பேன் கவனமாகக் கேட்பாயாக.
-பாசம்
பலவும் கடந்து பரிந்தருள் சேர் பண்பாற்
குலவி விளங்கும் குணக் குன்றோன் இலகவே
செய்ய தருமச் செழும் கிரியின் மீது இழிந்து
வையம் பரவ மகிழ்ந்து எழுந்து அங்கு ஐயம்
களவு பயம் காமம் கொலை கோபம் காதி
அளவில் வினையெல்லாம் அழித்து இங்கு உளம் மகிழத்
தொம்மெனவே எங்கும் முழங்கிச் சுருதி பயில்
செம்மை தரும் ஆகமங்கள் சேர்ந்து ஓடி மும்மலத்தின்
காடு அடங்க வேர் பறித்துக் கல்விக் கரை கடந்து அங்கு
ஓடுபல் பூதத்து உணர்வு அழிந்து நீடு புகழ்
மெய் வாய் கண் மூக்குச் செவி யென்னப் பேர் பெற்ற
ஐவாய வேட்கை யவா அகற்றி நையும் இயல்
வாக்குப் பாதம் பாணி பாயுரு உபத்தம் பலவும்
நீக்கிச் செறிந்து நிறைந்து ஓடிப் போக்கரிய
பந்தம் எனும் சோலை பறித்துப் பரந்து அலைக்கும்
அந்த மனம் புத்தியுடன் ஆங்காரம் சிந்தி விழ
மோதி அருள் நீர்மை ஓங்கி விறல் முக்குணமும்
காதி உரோமம் எலாம் கை கலந்து சீதப்
புளகம் அரும்பப் புலன் மயக்கம் போக்கி
விளைவில் புலன் முட்ட மேவிக் களபதன
மாதர் மயக்கம் அறுத்துவளர் மண்டலத்துச்
சோதி யொரு மூன்றினையும் சோதித்து நீதியினால்
ஆதாரம் ஆறினுஞ் சென்று ஆறி அடல் வாயுக்கள்
மீதான பத்தும் மிகப் பரந்து காதிப்
பிருதிவி அப்புத்தேயு வாயு ஆகாய
உறுதி நிலம் ஐந்தும் ஓடி மறுவிலா
நான் முகன் மால் ஈசன் மகேசன் நலம் சிறந்த
தான் முகம் ஐந்தாம் சதாசிவமும் ஆனதொரு
விந்து நாதம் கடந்து சுத்த வெறு வெளியில்
அந்தமிலாப் பாழ் அடங்கித் தேக்கிய பின் முந்தி வரும்
அவ்வறிவுக்கு அப்பாலும் சென்று அண்டம் உள்ளடக்கிச்
செவ்வறிவே யாகித் திகைப்பு ஒழிந்திட்டு எவ்வறிவும்
தானாயவீடு அளித்துத் தன்னில் பிறிவிலா
ஊனாகி எவ்வுயிர்க்கும் உள் புகுந்து மேனியிலாத்
அஞ்சு அவத்தையுங் கடந்து ஆய பெரும் பேரொளிக்கே
தஞ்சம் எனச் சென்று தலைப்பட்டு வஞ்ச மறத்
தான் அந்தம் இல்லாத தண்ணளியால் ஓங்கி வரும்
ஆனந்தம் என்பதோர் ஆறுடையான்
இயல்பாகவே பாசங்களைக் கடந்து, உயிர்களிடத்துக் கொண்ட பரிவினால் அருள் மிகுந்து, அதனால் விளைந்த பண்புகள் எல்லாம் மிகுந்து விளங்குகின்ற குணம் அவனுக்குரிய திருமலை. விளங்கித் தோன்றும் அறம் என்னும் செழுமை மிக்க மலையிலிருந்து தோன்றிச் சம வெளியில் இறங்கி, உலக மக்கள் மகிழ்ச்சி கொள்ளும்படி பொங்கிப் பரந்து, தன் வெள்ளப் பெருக்கால் ஐயம் களவு அச்சம் காமம் கொலை சினம் ஆகியவற்றை எல்லாம் அழித்து அளவற்ற வினைக் காட்டை வேரறுத்து தொம் என முழங்கி, வேதங்களும் செம்மையான ஆகமங்களும் சேர்ந்து தன்னோடு ஓடி வர, மும்மலத்தின் காட்டை வேரொடு களைந்து, கல்வி ஆகிய கரையைக் கடந்து, ஐம் பூதங்களின் வழி வரும் உணர்வை அழித்து மெய் வாய் கண் மூக்கு செவி என்ற பொறிகளின் வழியே செல்லும் ஆசையையும் அழிக்கும். துன்பத்துக்குக் காரணமாகின்ற நா, கால், கை, எருவாய், கருவாய் இவற்றை நீக்கி நிறைந்தும் செறிந்தும் ஓடி, போக்குவதற்கரிய கட்டுகள் என்ற சோலைகளைப் பறித்து, எங்கும் பரந்தோடி, உயிரைத் துன்பத்தில் ஆழ்த்தும் மனம் புத்தி ஆங்காரம் சித்தம். இவற்றின் செயல் எல்லாம் சிந்தி விழ மோதி, அருள் என்னும் தண்மை நிறைந்து, முக்குண வயப்படல் ஒழித்து மயிர்க் கூச்செறிந்து புளகம் அரும்ப ஐம் புல மயக்கத்தைப் போக்கி, அறிவு நிறையுமாறு மேவி சந்தனம் அணிந்த மகளிர் மீது உண்டாகும் மயக்கத்தினை ஒழித்தும். கதிர் மதியம் நெருப்பு என்னும் மும்மண்டலங்களையும் நெறிப்படுத்தி, மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களிலும் முறையே சென்று பத்து வகை வளிகளுக்கும் மேற்பட்டு ஐம்பூதங்களையும் செம்மை நிலையிலே நிறுத்தி, குற்றமற்ற நான்முகன், திருமால், ஈசன், மகேசன், சதாசிவன் ஆகியவர்களுக்கு உட்பட்ட கலைகளையும் அவற்றின் அடிப்படையான விந்து நாதம் ஆகியவற்றையும் கடந்து தூய பெரு வெளியிலே சென்று அதனையும் தன் மயமாக்கித் தனக்குள் அடக்கி, செம்மையான அறிவுடன் கூட்டி, உயிர்களின் திகைப்பினை ஒழித்திட்டு, எல்லா அறிவினையும் தானேயாய் நிற்குமாறு வீடு பேற்றை அளித்து உடலை விட்டு நீங்காத உயிர் போல எவ்வுயிர்க்கும் உள்ளே புகுந்து உடம்பின் ஐந்து நிலைகளையம் கடந்து அதற்கு மேலாக விளங்கும் பேரொளிக்கே தஞ்சம் என்று சென்று தலைப்பட்டு வஞ்சமற வழங்கும் முடிவில்லாப் பேர் அருளாய்ப் பொங்கிப் பரவி வரும் மகிழ்ச்சி என்னும் ஆற்றினை உடையவன்.
இறைவனுடைய பெருமையை மேலும் எடுத்து விளக்கத் தொடங்குகின்ற ஆசிரியர் அவனுக்கு உரியதாகிய திருத்தசாங்கத்தைக் கூறத் தொடங்குகிறார். முதலில் அவனது மலையைப் பாசங்களைக் கடந்து உயிர்கள் மீது கொண்ட பரிவினால் அருட் குன்றம் ஆக விளங்குவது அவனுடைய மலை ஆகும் என்று உரைத்தார். அதனை அடுத்து அவனுக்குரிய ஆறு ஆனந்தம் என்னும் ஆறு எனக் குறிப்பிட்டு அதனை விரிவாகச் சொல்லுகிறார். அவனது ஆறு அறமாகிய மலையிலிருந்து புறப்பட்டுக் காடுகளையும் சோலைகளையும் மோதிக் கொழித்துப் பரந்து பாய்வதை வருணிக்கிறார்.
இந்தப் பகுதி, திருவாசகத்தின் திருஅண்டப் பகுதியில், அண்டத்து அருள் திறல் மேகம் என்ற இறைவனின் கருணைப் பெருமையை திருவார் பெருந்துறை வரையில் ஏறி மழையாய்ப் பொழிந்து வெள்ளமாய் ஓடி வரும் தன்மையை மாணிக்கவாசகப் பெருமான் விரித்துரைத்த பகுதியோடு ஒப்பிட்டு உணரத் தக்கது.
மெய்வாய் கண் மூக்கு செவி என்னப் பெயர் பெற்ற, ஐவாய் வேட்கை அவாவினை என்னும் நாலடியார்ச் செய்யுளின் பகுதியை எடுத்தாண்ட நயம் நினையத் தக்கது. அது போலவே உண்மை விளக்கத்தை நினைவூட்டும் வண்ணம் அந்த மனம் புத்தியுடன் ஆங்காரம் என்ற சொற்றொடரும் ஆசிரியரால் பயன் படுத்தப்பட்டுள்ளது.
ஆனந்தம்
பண்ணும் பயன்சுருதி ஆகமங்கள் பார்த்துணர்ந்து
நண்ண அரிய தொரு நாடுடையான் எண்ணெண்
கலையால் உணர்ந்து கருத்தழிந்து காம
நிலையான தெல்லாமும் நீத்து அங்கு அலைவு அறவே
தேட்டற்ற சிந்தை சிவஞான மோனத்தால்
ஓட்டற்று வீற்றிருக்கும் ஊருடையான்
இன்பப் பயனை விளைவிப்பதற்காக எண்ணரிய ஆகம நூற்களைப் படித்து உணர்ந்தாலும் சென்றடைதற்கு அரிதான நாடு அவனுடைய நாடாகும். ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் கற்றுத் துறை போனாலும் அவை யெல்லாம் மன ஒருமைப் பாட்டிற்கு வழி காட்டா என்பதனை அறிந்து அவற்றை நீத்து, இன்ப வேட்கை முதலிய உலகியல் தேட்டங்களையும் துறந்து, அலை பாயும் சிந்தையை அடக்கி அதனால் தேடுதற்கரிய சிவஞானத்திலே தோய்ந்து அதிலேயே ஒடுங்கி ஓட்டத் தவிர்ந்த நிலையில் விளங்கின்ற ஊர் அவனுடைய தலைநகர் ஆகும்.
அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற் பயனே என்பர் இலக்கண நூலார். எனவே நூல்களின் பயனாகக் கருதப்படுவது எல்லையற்ற இன்பமாகிய வீடு பேறு. சிவஞான சித்தியாருள் ஆசிரியர் அருள் நந்தி சிவம்.
வேதநூல் சைவ நூல் என்று இரண்டே நூல்கள்
வேறு உரைக்கும் நூல் இவற்றின் விரிந்த நூல்கள்
என்று அருளிச் செய்ததை மனதில் கொண்டு இங்கே ஆகமங்கள் என்று குறிக்கப்பட்டதை வேதங்களையும் உள்ப்படுத்தியதாகக் கொள்ளுதல் வேண்டும். வேதங்களையும் ஆகமங்களையும் கற்பதன் மூலமே இன்பப்பயன் கிட்டாது என்பார் ஆகமங்கள் பார்த்துணர்ந்து நண்ண அரியதொரு நாடுடையான் என்றார். நூலறிவு பேசி நுழைவிலாதார் திரிக என்று திருவாக்கும் இதனையே வலியுறுத்தும்.
கலைகள் அறுபத்து நான்கு எனப்படும். இவை யாவும் உயிர்களை வீட்டு நெறிக்கு இட்டுச் செல்ல வல்லனவல்ல. எனவே அவை யாவற்றிலும் பயின்று எல்லை கண்டாலும் நிறைவு கிடைப்பதில்லை. ஆதலால் கருத்தழிந்து என்று குறித்தார் காமம் முதலிய குற்றங்களிலிருந்து நீங்கி, மன ஒருமை கைவரப் பெற்றுச் சிவஞான மோன நிலையில் திருவருளில் தோய்ந்திருந்தாலே சிவஞானம் விளையும் அதுவே இறைவனின் திரு நகரமாகும்.
திரு உந்தியாரில் ஓட்டு அற்று நின்ற உணர்வு பதி முட்டித் தேட்டு அற்ற இடம் சிவம் உந்தீபற, தேடும் இடம் அது அன்று உந்தீபற (தாழிசை 13) எனவரும் பகுதியின் சொல்லும் பொருளும் இங்கு எடுத்தாளப்பட்டிருப்பது கருதத் தக்கது.
நாட்டத்தால்
தெண்ணீர் அருவி விழச் சிந்தை மயக்கந் தெளிந்து
உண்ணீர்மை எய்தி உரோமெலாம் நண்ணும்
புளகம் புனை மெய்யர் பொய்யிற் கூடாமல்
உளகம்பம் கொண்டு உன் உருகி அளவிலா
மாலாயிருக்கு மவர் மனத்தை வாங்க அருள்
மேலாய் விளங்கு அலங்கல் மெய்யினாள் தோலாத
வானம் புவனம் மலை கடல் ஏழ் பாதளம்
ஊன் ஐந்து பூதத்து உயிருணர்ச்சி ஞானமாய்
எல்லாமாய் அல்லவாய் எண்ணுவார் எண்ணத்துள்
நில்லாமல் நிற்கும் நீள் வாசியான்
கண்களிலிருந்து கண்ணீர் அருவி போலக் கொட்டத் திருவருள் இன்பத்தில் திளைத்திருப்பதனாலே சிந்தையின் மயக்கம் தெளிந்து, உள்ளும் புறம்பும் ஒரு தன்மைக் காட்சியராய் மயிர்க்கால்கள் சிலிர்க்கப் புளகம் எய்தி வழிபடுகின்ற மெய்யடியார்கள் பொய்யினைத் தவிர்த்து மெய்ப் பொருளையே பற்றி விதிர்விதிர்த்து உள்ளுருகி இறைவனிடத்து அளவற்ற அன்பினால் தம்மை இழந்திருக்கும் அடியவர்களுடைய மனத்தைத் தன்னிடத்து ஈர்க்கும் பேரருளையே மாலையாய்க் கொண்டவன். அருளே அவனது திருத்தார். இருளால் தோற்கடிக்கப் படாத ஒளி நிறைந்த வானம் பல்வேறு புவனங்கள் மலைகள் கடல்கள் ஏழு பாதாள உலகங்கள் எண்ணற்ற உடல்கள் ஐம்பெரும் பூதங்கள் உயிர்கள் உயிர்களின் உணர்ச்சி இவை யாவற்றிலும் நிறைந்து நிற்கும் பேர் அறிவாளன் ஆயினும் அவற்றினின்று வேறாகவும் தன்முனைப்பால் எட்ட நினைப்பார் தம் எண்ணத்தில் அகப்படாது நிற்கும் நிலையையே தான் ஊர்ந்து செல்லும் குதிரையாக உடையவன்.
-சொல் ஆரும்
பாதாளம் ஊடுருவிப் பார் ஏழும் விண் ஏழும்
ஆதாரமாகி அகண்டம் நிறைந்து ஓத
அரிதாய் எளிதாய் அருமறை ஆறு அங்கத்து
உருவாய் உயிராய் உணர்வாய்ப் பெரிதாய
வெய்யதுயர்ப் பாசம் அற வீசியே வெம்பிறவித்
துய்ய கடலைத் துகள் எழுப்பி ஐயமுறும்
காமக் குரோத லோப மோக மதம் காய்ந்து அடர்த்துச்
சாம் அத் தொழிலின் தலை மிதித்து நாமத்தால்
கத்தும் சமயக் கணக்கின் விறற் கட்டு அறுத்துத்
தத்தம் பயம் கொலைகள் ஆங்கழித்தே தத்தி வரும்
பாசக் குழாத்தைப் பட அடித்துப் பாவையர் தம்
ஆசைக் கருத்தை அறவீசி நேசத்தால்
ஆனவே கம்கொண்டு அருள் மும் மதத்தினால்
ஊனையார் சதத்துவங்களுள் புகுந்து தேனைப்
பருகிக் களித்து உயர்ந்து பன் மறை நாற்கோட்டால்
மருவித் திகழ் ஞான ஆனையான்
பெரியோரால் சொல்லப்படுகின்ற பாதாள உலகங்கள் எழும் பாருலகங்கள் ஏழும் விண்ணுலகங்கள் ஏழும் ஆகிய அனைத்திலும் நீக்க மின்றி நிறைந்தும், அவற்றுக்கு ஆதாரமாகியும், வரையறைக்கு உட்படாமலும், சொல்லால் உணர்த்துவதற்கு அரியதாகவும், திருவருளால் உணர்பவர்களுக்கு எளிமை உடையனவாகவும், அரியமறைகளும் அவற்றின் ஆறு அங்கங்களும் தனக்கு வடிவாகவும், அவற்றை உணரும் உயிர்களையே தனக்கு உயிராகவும் உணர்வாகவும் மிகப் பரந்த கொடிய துயரை விளக்கின்ற பாசத்தை வேரோடு அறுத்துப் பிறவிப் பெருங் கடலைப் புழுதி கிளம்புமாறு வற்றச் செய்து, ஐயமும் காமமும் வெறுப்பும் பொருளாசையும் செருக்கும் ஆகிய இழிமிதித்தும் வெவ்வேறு பெயர்களால் விளங்கித் தாம் தாம் கூறும் கொள்கைகளே ஏற்புடையன மற்றையோர் கொள்கைகள் பொருந்தாதன என்று தமக்குள் பூசலிடும் சமயங்களின் வலிய கட்டுகளை அறுத்து, அச்சம் உயிர்க் கொலை முதலிய தத்தம் தீவினையை அடியோடு அழித்துப் பாசக் குழாங்கள் அனைத்தையும் அடித்துத் துரத்தி மகளிர் மேற் செல்லும் ஆசைக் கருத்தை அறவே களைந்து உயிர்கள் மீது வைத்த அன்பினால் அருளாகிய மும்மதம் பொழிய உடம்பெனும் தத்துவக் காட்டின் உள்ளே புகுந்து மகிழ்ச்சி என்னும் தேனைப் பருகி மறைகள் என்னும் நான்கு கொம்புகளுடன் விளங்குகின்ற ஞானம் எனும் யானையைத் தனக்கு உரிமையாக உடையவன்.
சமயம் கடந்து தனக்கு ஒப்பிலாது
சுமை துன்ப நீக்கும் துவசன் கமையொன்றித்
தம்மை மறந்து தழல் ஒளியுள் ளேயிருத்தி
இம்மை மறுமை இரண்டு அகற்றிச் செம்மையே
வாயுவை ஓடா வகை நிறுத்தி வானத்து
வாயுவையும் அங்கே யுற அமைத்துத் தேயுவால்
என்றும் ஒரு தகைமை யாயிருக்கும் இன்பருளே
நின்று முழங்கும் நெடுமுரசோன் அன்றியும்
மாலும் அயனும் வகுத்தளித்த வையமெலாம்
சாலும் அதற்கப்பாலும் எப்பாலும் மேலை
உலகும் உலகால் உணர வொண்ணா ஊரும்
இலகி நடக்கும் எழில் ஆணையான்
ஆறு சமயங்களையும் கடந்து தனக்கு ஒப்பில்லாத முதன்மை கொண்டு, உயிர்களுக்கு உறுகின்ற துன்பங்களை நீக்குவதற்காக உயர்த்தப்பட்ட விடைக் கொடியை உடையவன். புலனடக்கி, அதன் வழிச் செல்லும் தன் உணர்வுகளையும் அடக்கித் தம்மையே மறந்து மூலாதாரத்து மூண்டெழு கனலைத் தம்முள் இருத்தி, அதனால் இம்மை மறுமைத் துன்பங்கள் இரண்டையும் அகற்றி வளிகளைத் தறிகெட்டு ஓடாத வகை நிறுத்தி, யோக நிலையிலே நின்று கனல் போன்று என்றும் ஒரு தன்மையராய் இருக்கும் இனிய அன்பர்களின் உள்ளத்தே முழங்குகின்ற நெடிய முரசினை உடையவன். நான்முகனால் படைக்கப்பட்டுத் திருமாலால் காக்கப் பெறும் எல்லா உலகங்களிலும் அவற்றின் அப்பாலுக்கு அப்பாலும் எவ்விடத்தும் இவற்றின் மேம்பட்டு விளங்கும் உலகிலும் அருள்வெளியாகிய ஊரிலும் இறைவனின் ஆணை தடையின்றிச் செல்லும். இது வரை இறைவனுக்குரிய தசாங்கங்கள் விவரித்துக் கூறப்பட்டன.
-அலகிறந்த
காட்சியான் காட்சிக்கும் காணாக் கலைஞான
ஆட்சியான் ஆட்சிக்கும் ஆயினான் சூட்சியான்
பாரும் திசையும் படரொளியாலே நிறைந்தான்
தூரும் தலையும் இலாத் தோன்றலான் வேராகி
வித்தாகி வித்தின் விளைவாகி மேவுதனுச்
சத்தாகி பூதங்கள் தானாகிச் சுத்த
வெறு வெளியாய்ப் பாழாய் வெறும் பாழுக்கு அப்பால்
உறுபொருளாய் நின்ற ஒருவன் பொறியிலியேன்
வெம்பும் பிறவியலை வீழாமல் வீடளித்த
சம்பந்த மாமுனியென் தம்பிரான் அம்புவியோர்
போற்றும் திருவடியென் புன் தலை மேலே பொறித்தோன்
ஏற்றின் புறத்தமைந்த எங்கோமான் சாற்றுவார்
சாற்றும் பொருளான் தனி முதல்வன் தான் அல்லான்
வேற்றின்பம் இல்லா விளங்கொளியான் போற்றும்
குருவேடமாகிக் குணம்குறி ஒன்று இல்லாப்
பெரு வேட மாய் நிறைந்த பெம்மான் கருவேடம்
கட்டும் உருக் கட்டறுத்தான் கற்றவர் வாழ் தில்லையான்
எட்டு மவர்க்கு எட்டா இயல்பினான் மட்டவிழ்தார்
வானோன் பவனி வரக் கண்டு வல்வினையேன்
ஏனோரும் ஏத்துதல் கண்டு ஏத்தினேன்
எண்ணற்ற உயிர்களுக்கு அவ்வவற்றின் விருப்பததிற்கு இணங்க இரங்கிக் காட்சி தரும் இறைவன். தன்முனைப்போடு காணப் புகுவார்க்குக் காண்பதற்கு அரியவன். பல வகைப்பட்ட கலைஞானங்களையும் தன் ஆட்சிக்கு உட்படுத்தியவன். எவ்வுயிரையும் ஆண்டருளும் தலைவன் அவற்றின் உயிருக்கு உயிராக நின்றே அவற்றால் உணரப்படாத சதுரப்பாடு உடையவன். அவற்றில் தோய்வு இன்றி இருப்பவன். உலகும் எட்டுத் திசைகளும் தன் பேரொளியாலே நிறைவித்தவன் அடியும் முடியும் இல்லாத பெருமை உடையவன். எல்லாப் பொருள்களுக்கும் வேராகியும், வித்து ஆகியும், வித்தில் இருந்து விளையும் விளையு ஆகியும். உடல் கருவி உலகு நுகர்ச்சி பொருள்கள் ஆகியும் ஓசை ஊறு உருவம் சுவை மணம் முதலியவை ஆகியும் ஐம்பூதங்களாகியும் விளங்குபவன். அபர விந்து அபர நாதம் பர விந்து பர நாதம் ஆகியவற்றை எல்லாம் கடந்து அப்பாலாய் உயிர்கள் சென்றடைவதற்குரிய பரம்பொருளாய் ஒப்பற்றவனாய் நிலை பெற்றவன். நல்லூழ் இல்லாத நான் பிறவிக் கடலில் விழுந்து அழுந்தாமல் எனக்கு வீடு பேறு அளித்த சம்பந்த மாமுனிவன் என்ற திருப்பெயர் தாங்கிய என் தலைவன். உலகத்தவர் போற்றும் தன் திருவடிகளை என் புன்மை நிறைந்த தலை மீது பதித்தவன். அற வடிவாகிய விடையின் மீது வீற்றிருக்கின்ற எங்கள் அரசன். அறிவுடையார் அவன் பெருமைகளைச் சொல்லிச் சொல்லிப் புகழும் தன்மையாளன். திருவருள் வயப்பட்டார்க்குத் தன்னை யன்றி வேறு இன்பம் இல்லாத வண்ணம் விளங்குகின்ற பேரொளியாய் விளங்குபவன். அத்தகையவன் குரு வேடம் தாங்கி என்னை ஆட்கொள்ளுவதற்கு எழுந்தருளி வந்தான். ஆயினும் மற்றை உயிர்களுக்குரிய குணங்களோ அடையாளங்களோ யாதுமற்ற அருள் உருவம் கொண்டு, எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்ற பெருமகன். எண்ணற்ற உயிர்கள் கருவுட் புகுந்து உருவைப் பெறும் பிறவிக் கட்டினை அறுத்தவன். மெய்ந் நூற் பொருளை ஆழக் கற்றவர்கள் வாழ்கின்ற தில்லைப் பதியைத் தன் இருப்பிடமாகக் கொண்டவன். அத்தகைய பெருமானை எட்டிப் பிடிப்பேன் என்று தன்முனைப்போடு முயல்கிறவர்களுக்கு அவன் எட்டாத இயல்பினை உடையவன். தேன் சொரியும் கொன்றை மாலையை அணிந்து அப்பேரருளாளன் திருஉலா வருதலைக் கண்டு மெய்யடியார் பலரும் அவனை வழிபட்டனர். வலிய வினையுடைய அடியேனும் மற்றவர்கள் ஏத்துதலைக் கண்டு ஏத்தி வணங்கினேன்.
-தான் என்னைப்
பார்த்தான் பழைய வினைப் பஞ்ச மலக் கொத்தை யெல்லாம்
நீத்தான் நினைவுவே றாக்கினான் ஏத்தரிய
தொண்ணூற்று அறுவர் பயில் தொக்கின் துவக்கு அறுத்தான்
கண்ணாறு தேன் அமுதம் காட்டினான் வெண்ணீறும்
வேடமும் பூசையுமே மெய்யென்றான் பொய்யென்றான்
மாடையும் வாழ்க்கை மனையுமே நாடரிய
அஞ்செழுத்தின் உள்ளீடு அறிவித்தான் அஞ்செழுத்தை
நெஞ்சழுத்தி நேய மயலாக்கி அஞ்செழுத்தை
உச்சரிக்குங் கேண்மை யுணர்த்தி அதில் உச்சரிப்பு
வைச்சிருக்கும் அந்த வழியாக்கி அச்ச மறச்
சென்று விளக்கை எழுத்தூண்டிச் செஞ்சுடரின்
ஒன்றி ஒரு விளக்கின் உள்ளொளியாய் நின்ற
பெரு விளக்கின் பேரொளியாய் உள்ளே பிரசம்
மருவும் மலர் போல் மதித்து அங்கு அருவினுருக்
கொள்ளா அருளைக் கொளுத்திக் குணங்குறியொன்று
இல்லா இடத்தே இளைப்பாற்றி விள்ளாத
உள்ளம் முதலாக உள்ளதெலாம் வாங்க அருள்
வெள்ள மயலளித்து மேவினான் கள்ளம்
மறப்பித்தான் மெய்ஞ்ஞான மாக்கி மன மெல்லாம்
இறப்பித்தான் என் பிறவி யீர்த்தான் விறற் சொல்லுக்கு
எட்டானை யார்க்கும் எழுதா இயல் குணங்கள்
எட்டானை ஆற்றா எழுத்தினான்
இத்தகைய பெருமையுடைய தலைவன் என்னைத் தன் திருக்கண் கண்களால் நோக்கினான். என் பழ வினைகளோடு கூடிய பஞ்ச மலக் கொத்தை அடியோடு அறுத்தான். அதனால் என் முன்னைய நினைவுகளை மடை மாற்றித் தூய்மைப் படுத்தினான். சொல்லற்கரிய தொண்ணூற்று ஆறு தத்துவங்களுக்கும் இடமாகிய உடலின் மீது உள்ள தொடக்கினை அறுத்தான். இப்பேரின்பத்தினாலே மகிழ்ந்து உளம் கனிந்து என் கண்களிலிருந்து இன்பக் கண்ணீர் மல்குமாறு செய்தான். தூய வெண்ணீறும் சிவனடியார் திருவேடப் பொலிவும் சிவ பூசையுமே நிலையான இன்பம் தரும் என்ற மெய்யினை அறிவுறுத்தினான். உலகியல் செல்வங்களும் உலக வாழ்க்கையும் மனையும் நிலையற்றன என்று உணர்த்தினான். நாடுதற்கரிய திருவைந்தெழுத்தின் உட்பொருளை எனக்கு அறிவித்தான்.
திருவைந்தெழுத்தை நெஞ்சத்தில் பதித்து உள்ளமெல்லாம் அன்பால் நிறையுமாறு அதனை ஓதி அதன் விளைவாகப் பேரின்பத்தை அடையும் நெறியைக் காட்டினான் திருவைந்தெழுத்தை மானதம் உரைகளால் உச்சரிக்கின்ற முறைமையும் அதன் விளைவுகளையும் அதனால் அச்சத்தை நீக்கி உள் ஒளியைப் பெருக்கி அந்தப் பேரொளியோடு ஒன்றி இருக்கும் வகையையும் எனக்கு அருள் செய்தான். பெரு விளக்கின்ற பேரொளியாய் நின்ற தன்னைத் தேன் சொட்டும் மலராக அறிந்து மகிழ்ந்து மீண்டும் ஒரு பிறப்பில் உட்படாமல் விடுபடுகின்ற திருவருளை எனக்கு வழங்கிக் குணமும் குறியும் அற்ற இடத்திலே என் களைப்பெல்லாம் கழியுமாறு என்னை இளைப்பாற்றினான். சொல்லாம் விளக்க இயலாதபடி என் உயிர் உடல் ஆகியவற்றை எல்லாம் தனது அருள் வெள்ளத்திலே அழுந்துமாறு என்னை இயைவித்தான். உள்ளத்தின் கள்ளத்தை மறப்பித்தான். அஞ்ஞானத்தின் அழுந்திக் கிடந்த என்னை மெய்ஞ்ஞானத்திலே அழுந்து வித்தான் மனம் முதலிய கருவிகளைக் கடந்து அருளை உணருமாறு செய்தான். என் பிறவியை அறுத்து அருளினான் அத்தகைய பெருமான் சொல்லுக்கு எட்டாதவன். இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் என்று எழுதி உணர்த்துவதற்கு அரியவன். எண் குணங்களை உடையவன் உணர்தற்கரிய பிரணவ எழுத்தாகிய ஓங்காரமாய் நின்றவன்.
-மட்டாரும்
பாடலார் ஆடலார் பண்பலார் நண்பலார்
ஆடலார் ஆடல் அகன்பதியாம் கூடலார்
காணக் கிடையாதான் காண்பார்க்கும் காட்சியான்
பாணர்க்கு இலகு பலகை யிட்டான் சேணில்
சிறந்த உருவான் திருமாலுக்கு எட்டான்
நிறைந்த திருவுருவாய் நிற்போன் கறங்குடனே
சூறை சுழல் வண்டு சுழல் கொள்ளி வட்டமென
மாறில் கருணையினால் மாற்றினான் நீறணிந்த
மெய்யன் அமலன் நிமலன் அருள் வீடளிக்கும்
ஐயன் அறிவுக்கறி வாயினான் பொய்யர் பால்
பொய்ம்மையாய் நின்றான் புரிந்தவர் தம் நெஞ்சத்துள்
மெய்ம்மையாய் நின்று விளங்கினான் கைம்மழுவன்
அத்தன்பால் நீ சென்று அடையும் இடத்தையெலாம்
சித்தஞ்சேர் நெஞ்சமே செப்பக் கேள்
தேனினும் இனிய இசை பாடும் இசைக் கலைஞர்களும் ஆடற் கலைஞர்களும் பண்பற்றவர்களிடம் நட்புக் கொள்ளாதவர்களும் ஆகிய சான்றோர்கள் வாழுகின்ற விரிந்து பரந்த நகரமாகிய மதுரைப் பெருநகரில் வீற்றிருக்கின்றவன். எங்கள் பெருமான் ஊனக் கண்ணால் காண்பதற்கு அரியவன். அகத்தில் கண் கொண்டு காண்கின்ற அடியவர்களுக்குக் காட்சிப் படுபவன். பாணபத்திரர்க்குப் பொற் பலகை யிட்டு அவருடைய யாழிசையைச் செவி மடுத்து மகிழ்ந்தவன். சேய்மையிலே காணுகின்ற அந்தி வானம் போன்ற திருவுருவமுடையவன். திருமாலுக்கும் எட்டாது நிற்பவன். ஆயினும் எங்கும் நிறைந்தவன். காற்றாடி, சுழற் காற்று, மலரைச் சுற்றும் வண்டு, சுழற்றும் கொள்ளி வட்டம் ஆகிய இவை போன்று மாறி மாறிப் பிறக்கும் என் இழிந்த தன்மையைத் தன் பேரருளால் மாற்றினான் தூய வெண்ணீறு அணிந்த திருமேனியை உடையவன். தூய்மையே வடிவானவன். இயல்பாகவே பாசங்களின் நீங்கியவன். உயிர்களுக்குத் தன் பேரருளால் வீடு பேறு அளிக்கும் தலைவன். உயிர்களின் அறிவுக்கு அறிவாக நிற்பவன் பொய்யர்க்குப் பொய்ம்மையாய் நிற்பவன். அவன் மீது அன்பு கொண்டு வழிபடுவார்களுடைய நெஞ்சத்தில் மெய்ம்மையாக விளங்கி நின்று அருள்புரிபவன். திருக்கையிலே மழு ஒன்று ஏந்தியவன். எந்தையாகிய பெருமானிடத்து நீ சென்று அடைவதற்குரிய வழியையும் வழியில் நீ தவிர்க்க வேண்டிய செயல்களையும் நான் கூற நெஞ்சமே, நீ கேட்பாயாக
-நித்தலுமே
பூசி முடித்து உண்டு உடுத்துப் பூங்குழலார் தங்கலவி
ஆசைதனில் பட்டு இன்ப ஆர்கலிக்குள் நேசமுற
நின்று திளைக்கும் இது முத்தியல்லது வேறு
ஒன்று திளைக்கும் அது முத்தி அன்று என்று
இலகா இருளலகை போல் இகலே பேசும்
உலகாயதன் பால் உறாதே பலகாலும்
தாம்பிரமம் கண்டவர் போல் தம்மைக் கண்டு ஆங்கதுவே
நான் பிரமம் என்பவர் பால் நண்ணாதே ஊன் தனக்குக்
கொன்றிடுவதெல்லாம் கொலையல்ல என்று குறித்து
என்றும் அறவே தெய்வம் என்று என்று வென்றிப்
பொறையே யெனும் புத்தன் பொல்லாத புன்சொல்
மிறையே விரும்பி விழாதே நிறைமேவி
வாழ்பவர் போல் மன்னுடம்பில் மன்னும் உரோமம் பறித்துத்
தாழ்வு நினையாது துகில் தான் அகற்றி ஆழ்விக்கும்
அஞ்சும் அகற்றும் அது முத்தி என்று உரைக்கும்
வஞ்சமணன் பாழி மருவாதே செஞ்சொல் புனை
ஆதி மறை ஓதி அதன் பயன் ஒன்றும் அறியா
வேதியர் சொல் மெய் யென்று மேவாதே ஆதியின் மேல்
உற்ற திருநீறும் சிவாலயமும் உள்ளத்துச்
செற்ற புலையர்பால் செல்லாதே நற்றவம் சேர்
வேடமுடன் பூசை அருள் மெய்ஞ்ஞானம் இல்லாத
மூடருடன் கூடி முயங்காதே நீட
அழித்துப் பிறப்பது அறியாது அரனைப்
பழித்துத் திரிபவரைப் பாராதே
நாள்தோறும் நறுமணமிக்க சந்தனம் முதலியவற்றைப் பூசி, பூச்சூடி இன்சுவை உணவினை உண்டும், பட்டாடை உடுத்தும் அழகிய கூந்தலை உடைய மங்கையரைத் துய்க்கின்ற ஆசையுள் பட்டுச் சிற்றின்பமாகிய கடலுள் திளைத்து மகிழ்வதே முத்தி என்றும், அதுவல்லாது இறைவன் அருளிலே தோய்ந்து பேரருள் வெள்ளத்திலே திளைக்கும் வீடு பேறு என்பதாக ஒன்றில்லை என்றும் பிதற்றிக் கரிய ஆணவமாகிய இருட்டிலே திரியும் பேயைப் போல அலையும் உலகாயதர் பால் சென்று விடாதே. தாங்கள் பிரமப்பொருளைக் கண்டு விட்டவர்கள்போல் பல காலும் தருக்கிப் பேசித் தம்மையே கண்டு தாமே பிரமம் என்று கூறுகின்ற அகம் பிரமவாதிகளிடம் அணுகாதே. உயிர்களைக் கொலை செய்வது குற்றம் என்றும் ஆனால் கொல்லப்பட்ட உயிரின் ஊனைத் தின்பது குற்றமல்ல என்றும் வாதிட்டு இறைவனை மறுத்து அறம் ஒன்றே தெய்வம் என்றும் பொறுமையே வெல்லும் என்றும் நெறியில்லாத நெறி பேசுகிற புத்த சமயத்தைச் சார்ந்தவர்கள் கூறுகிற இழிந்த கொள்கைகளில் அகப்பட்டு அலையாதே. உயர்ந்த வாழ்க்கை வாழ்வது போல் கருதிக் கொண்டு தன் தலையில் வளர்கின்ற மயிர்களைப் பறித்தும் ஆடையின்றித் திரிவது நாணமற்ற செயல் என்று கூட எண்ணாமல் மானம் காக்கும் ஆடையும் துறந்து, பிறவிக்கு ஆட்படுத்தும் ஐந்து கந்தங்களையும் அகற்றி வாழ்வதே முத்தி என்று உரைக்கும் வஞ்சமனம் கொண்ட சமணர்களின் பாழியில் சென்று சேராதே. பழமையான வேதங்களை நாள் தவறாமல் ஓதினாலும் அம்மறைகளின் பயன் சிவ பரம் பொருளே என்று அறியாத வேதியர்களின் சொல்லை உண்மை என்று கருதி ஏமாறாதே. சிவபெருமானின் திருமேனியில் திகழ்கின்ற திருநீற்றையும் அப்பெருமான் உறைகின்ற திருக்கோயில்களையும் நெஞ்சார எண்ணி வழிபடாத இழிந்தவரிடத்துச் சேராதே. நல்ல தவத்துக்குரிய சிவனடியார் திருவேடமும் சிவ பூசையும் அருள் உடைமையும் மெய்யுணர்தலும் அற்ற அறிவற்றோர் இடத்துச் சென்று சேராதே. மாறி மாறிப் பிறந்தும் இறந்தும் வருகின்ற சிறு தெய்வங்களை வணங்கி ஆதியும் அந்தமும் அற்ற சிவபெருமானைப் பழித்துத் திரிபவர்கள் ஏறெடுத்தும் பாராதே.
-விழித்து அருளைத்
தந்து எம்மை ஆண்டருளும் சம்பந்த மாமுனிவன்
அந்தம் கடந்து அப்பா லாய் நின்றோன் எந்தை பிரான்
வீற்றிருக்கும் ஓலக்கம் எய்தி அடி வீழ்ந்து இறைஞ்சிப்
போற்றி சயசய போற்றியென ஆர்த்தகரி
அன்று உரித்தாய் நின் பவனி ஆதரித்தார் எல்லாரும்
வென்றி மதன் அம்புபட வீழ்வரோ நின்றிடத்து
நில்லாத செல்வம் நிலை என்று நீங்கிப்
பொல்லா நரகிற் புகுவரோ பல்லோரும்
கத்துஞ் சமயக் கணக்கிற் படுவரோ
சித்தம் பலகால் திகைப்பரோ முத்தம்
பொருத நகை மடவார் புன்கலவி யின்பம்
மருவி மயங்கி வருவரோ இருபொழுதும்
நாள் இருபத் தேழும் நவக்கிரகமும் நலியும்
கோள் இது வென்று எண்ணிக் குறிப்பரோ வேளை
எரித்த விழியாய் நின் இன்பக் கடற்கே
தரித்து மதி மறந்த தையல் வருத்த மெலாம்
தீராய் என உரைத்துச் செங்கமலப் பூந்திருத்தாள்
தாராய் எனப் பலகால் தாழ்ந்திறைஞ்சி ஏர் ஆரும்
பூங்கொன்றை வாங்கிப் புகழ்ந்து புரி நெஞ்சமே
ஈங்கொன்ற வாராய் இனி
தனது திருக்கண் நோக்கத்தினால் எங்கள் மீது அருளைப் பொழிந்து எங்களை ஆண்டு கொண்டருளும் சம்பந்த மாமுனிவன். முடிவு என்ற ஒன்றை அறியாது யாவற்றுக்கும் அப்பாலாய் நின்றவன். எமது தந்தையும் தலைவனுமான பேரருளாளன். அவன் கொலு வீற்றிருக்கும் திரு ஓலக்க மண்டபத்தை என் நெஞ்சமே. நீ சென்று அடைவாயாக அவன் திருவடிகளில் விழுந்து வணங்கி வெல்க! போற்றி! எனப் பணிந்து. அந்த நாள் ஆரவாரித்து வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்தாய். நீ உலாப் போன காட்சியைக் கண்டு வணங்கிய யாவரும் மன்மதன் விடுக்கும் அம்பு பட்டு வீழ்வாரோ? நிலையற்ற பொருட் செல்வத்தை நிலையென்று கருதி உன்னை விட்டு நீங்கிக் கொடுநரகத்தில் புகுவாரோ? தத்தம் மதங்களே உயர்ந்தனவெனக் கத்தும் புறச் சமயக் கூட்டத்துடன் சேர்வாரோ? அல்லது பன்முறை சித்தம் கலங்கிப் பலகாலும் திகைப்பாரோ? முத்துப் பல் நகை காட்டி மயக்கும் மங்கையர் இன்பத்தில் மயங்குவாரோ? பகலும் இரவும் ஆகிய பொழுதுகளும், இருபத்து ஏழு நாள் மீன்களும் ஒன்பதுகோள்களும் தமக்குத்தீங்கு விளைவிக்கும் என்று நினைத்து அஞ்சுவரோ? காமனை எரித்த விழியுடையாய்! உன்னைக் கண்டது முதல் உன்னைச் சேர்ந்து இன்புறுவதே வாழ்கையின் குறிக்கோள் என்று கருதி மற்றவற்றில் மனம் செலுத்தாது உன்னையே நினைத்திருக்கும் உன் அடியாளின் வருத்தத்தை யெல்லாம் தீர்த்தருளுவாயாக! செங்கமலப் பூப்போல விளங்குகின்ற உன்னுடைய திருவடிகளைத் தந்து அருளுவாயாக என்று பல முறை தாழ்ந்து வணங்கி அழகு மிக்க அவனது கொன்றை மாலையை வாங்கி அவன் அருளையே மறவாது போற்றி, என் நெஞ்சமே, மீண்டும் என்னிடத்தில் பொருந்த வருவாயாக!
வெம்பும் பிறவியலை வீழாமல் வீடளித்த
சம்பந்த மாமுனிவன் தார்வாங்கி அம்புந்தும்
வஞ்சமே வும்விழியார் வல்வினையெல் லாம்அகல
நெஞ்சமே வாராய் நினைந்து
நெஞ்சமே, வருத்தும் பிறவிக் கடலில் விழாமல் வீட்டின்பத்தை அருளிய மறைஞான சம்பந்த மாமுனிவனது கொன்றை மாலையை வாங்கி, அம்பினைப் போன்ற கொடிய கண்களைக் கொண்ட மகளிர் வழி வருகின்ற வல்வினை எல்லாம் அகலுமாறு அம்மாலையுடன் வருவாயாக.
நன்றி: சி.சு.மணி