பதிவு செய்த நாள்
22
நவ
2013
10:11
ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலின் உப கோவிலான, சேனைக்கல்ராயன் பெருமாள் கோவிலில், கார்த்திகை மாத மகா விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டது. கோவை மாவட்டம் ஆனைமலையின் மேற்குப்பகுதியில், பெருமாள்சாமி கரடு என அழைக்கப்படும், சேனைக்கல்ராயன் பெருமாள் கோவில் உள்ளது. மிக பழமையான இந்தக்குன்று 1,500 அடி உயரம் கொண்டது. இக்குன்றில் 701 படிகள் உள்ளன. இங்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத சேனைக்கல்ராயன் பெருமாள் காட்சியளிக்கிறார். இக்கோவிலில், ரோகிணி நட்சத்திரத்தில், மகா விஷ்ணுதீபம் ஏற்றப்பட்டது. இந்த தீபம் 6 அடி உயரம் கொண்ட கொப்பரையில், 300 கிலோவுக்கும் அதிகமான நெய் ஊற்றப்பட்டது. 400 மீட்டர் காடா துணியில் செய்யப்பட்ட திரியை, பரணி தீபத்தன்று நல்லெண்ணெய்யில் ஊற வைக்கப்பட்டது. பிறகு 60 லிட்டர் நெய்யில் நனைக்கப்பட்டு கொப்பரையில் வைக்கப்பட்டது. 6.30 மணிக்கு மூலவருக்கு தீபாராதனை காட்டி பெரிய அகல் (திருக்கோட்டி) தீபம் ஏற்றப்பட்டு, அதைக்கொண்டு மகா விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டது. அப்பொழுது பக்தர்களின் "கோவிந்தா ஹரி கோவிந்தா, சேனைக்கல்ராயா ஹரி கோவிந்தா என்ற கோஷம் விண்ணைப்பிளந்தது. முன்னதாக, மாலை 5.00 மணிக்கு கிரிவலமும், 6.00 மணிக்கு அன்னதானமும் நடந்தது. இவ்விழாவில், மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் அனிதா, கண்காணிப்பாளர் சேகர் மற்றும் ததேவானந்தா உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மிக பழமையான இந்தக்குன்று 1,500 அடி உயரம் கொண்டது. இக்குன்றில் 701 படிகள் உள்ளன.