பழநி மலையடிவாரத்தில் பிரசித்தி பெற்ற திருஆவினன்குடி கோயில் உள்ளது. இந்தக் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 1998-ம் ஆண்டு கடைசியாக நடைபெற்றது. அதன்பின் திருஆவினன்குடி கோயில் கும்பாபிஷேக விழா 15 ஆண்டுகளுக்குப் பின் தற்போது விரைவில் நடைபெற உள்ளது. கடந்த காலங்களில் பல காரணங்களால் இந்தக் கோயில் கும்பாபிஷேக விழா தள்ளிப்போனது. தற்போது தேதி முடிவாகாத நிலையில் கும்பாபிஷேக விழா நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. கும்பாபிஷேக விழா, புனரமைப்புப் பணிகளுக்காக ரூ.99 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து திருஆவினன்குடி கோயிலில், புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொழிலாளர்கள், இரவுபகலாக பழமை வாய்ந்த திருஆவினன்குடி கோயில் கோபுரம், கற்தூண்கள், சுவர்கள் மற்றும் சுவாமி சன்னதி உள்பிரகாரம், வெளிப்பிரகாரத்தில், அவற்றின் பழமை தன்மை மாறாமல் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பழங்காலத்து சுவர்களில் தொழிலாளர்கள் ரசாயனக் கலவை கலந்த சுண்ணாம்பு அடித்து வர்ணம் தீட்டி வருகின்றனர். சேதமடைந்த சுவர்களுக்கு மராமத்து செய்யும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.