பதிவு செய்த நாள்
30
ஜன
2014
11:01
உடுமலை: தை அமாவாசையை ஒட்டி, திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், இன்று சிறப்பு பூஜை நடக்கிறது. உடுமலை அடுத்த தளி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில், சுற்றுலா தலமாக விளங்குகிறது திருமூர்த்திமலை. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுள்களும் ஒரே சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். சிறப்புமிக்க இக்கோவிலுக்கு, அமாவாசை நாட்களில் உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வழிபட வருகின்றனர். குறிப்பாக, ஆடி மற்றும் தை மாத அமாவாசையன்று கிராம மக்கள், தங்கள் குடும்பத்தினருடன் சவாரி வண்டிகளில் இங்கு வந்து வழிபடுகின்றனர். தை அமாவாசையான இன்று அதிகாலை 5.00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, அமணலிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. தொடர்ந்து, இன்று இரவு 7.00 மணி வரை, சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடக்கின்றன. அதிகாலையில் நடக்கும் பூஜையில் பங்கேற்க, நேற்று இரவு முதலே ஏராளமான பக்தர்கள் இங்கு வரத்துவங்கி விட்டனர்.